உள்ளடக்கத்துக்குச் செல்

லியொனார்டோ டா வின்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியொனார்டோ டா வின்சி
பிறப்புLeonardo di ser Piero da Vinci
15 ஏப்பிரல் 1452
Anchiano
இறப்பு2 மே 1519 (அகவை 67)
Clos Lucé
பணிஓவியர், பொறியாளர், வானியல் வல்லுநர், மெய்யியலாளர், உடற்கூறுநர், கணிதவியலாளர், சிற்பி, கட்டடக் கலைஞர், புத்தாக்குனர், இசையமைப்பாளர், தாவரவியலாளர், வேதியியலாளர், விலங்கியலார், caricaturist, அறிவியலாளர், architectural draftsperson, வரைகலைஞர், எழுத்தாளர், visual artist
வேலை வழங்குபவர்
  • Ludovico Sforza
சிறப்புப் பணிகள்இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
பாணிportrait, religious painting, religious art
கையெழுத்து
ஏ ழயூழட மற்றும் பழுது
லியொனார்டோ டா வின்சி

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோன லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் [1] உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.[2]

லியனார்தோ டா வின்சி அடிப்படையில் ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.[3]

இலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.[4]

இவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்���ார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.[5]

வாழ்க்கை

[தொகு]

இளமை

[தொகு]
டா வின்சி வரைந்த தற்படம், ca. 1513

இவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார்.

இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "இலியனார்தோ" என்றோ அல்லது "நான் இலியனார்தோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "தா வின்சிகள்" என்றில்லாமல், "இலியொனார்தோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இலியொனார்தோவினதாக அறியப்பட்ட மிகப் பழைய ஓவியம், ஆர்னோ பள்ளத்தாக்கு, (1473) - உஃபிசி

லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் விற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது.

வெரோச்சியோவின் பணிக்கூடம், 1466-1476

[தொகு]
கிறிஸ்துவின் ஞானஸ்நானம் (1472–1475)—உஃபிசி, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் வரைந்தது.

1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

வெரோக்கியோவின் பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது.

1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது.

தொழில் புரிந்த காலம்

[தொகு]
The Adoration of the Magi, (1481)—உஃபிசி, புளோரன்ஸ், இத்தாலி. லியொனார்டோ மிலானுக்குச் சென்றிருந்தபோது இந்த முக்கியமான வேலை தடைப்பட்டது.

நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.

1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.

புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார்.

பிற்காலம்

[தொகு]

1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.

1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.

1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புகளும் செல்வாக்குகளும்

[தொகு]

புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி

[தொகு]

லியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர்.

லியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை.

கலை

[தொகு]
லியோனார்டோ டா வின்சி: கடைசி விருந்து (1498)

லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனா லிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.

லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.

மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது.

லியோனார்டோ டா வின்சி:
மோனா லிசா (1503-6)

புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது சுவரோவியம் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் சுவரோவியம் பூர்த்திசெய்யப்படவில்லை.

அறிவியலும், பொறியியலும்

[தொகு]

இவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.

அறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்.

விட்ருவியன் மனிதன்: இலியொனார்தோ தா வின்சி
மாந்த உடலை வரைதல்

உடற்கூற்றியலும் உடலியக்கவியலும்

[தொகு]
கையின் உடற்கூற்றியல் ஆய்வு(1510)

இவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார்.[6] ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார்.

ஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார்.[7] இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது.[8] இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து.[8] மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன.[8]

மாந்த மூளை, மண்டையோட்டின் தா வின்சியின் உடலியக்கவியல் உருவரை (1510)

பொறியியலும் புதுமைப் புனைவுகளும்

[தொகு]
பறக்கும் எந்திர வடிவமைப்பு (1488), இன்சுத்தியூத் தெ பிரான்சு, பாரீசு

புகழும் வெற்றியும்

[தொகு]

இவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார்.

அம்பாயிசேவில் உள்ள இலியனார்தோ தா வின்சியின் கல்லறை இருப்பிடம்

இவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.

[[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய கலைஞர்களின் வாழ்க்கைகள், 1568 எனும் நூலில்,[9] இலியனார்தோ தா வின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்:

இயல்பாகவே பல ஆண்களும் பெண்களும் உயர்ந்த திறமைகளோடு பிரக்கின்றனர்; சிலவேளைகளில் மட்டுமே, இயற்கையைக் கடந்த நிலையில், தனியொருவர் வானகம் தந்த அழகு, அறிவு, அருள், திறமை செறிய மற்ர வர்களை எங்கோ பின்தள்ளிவிட்டு அரிதாகப் பிறக்கின்றார். இவருக்கு எல்லா வல்லமைகளும் மாந்தத் திறத்தால் ஆற்ற்ப்படுவன அல்ல, மாறாக கடவுளிடம் இருந்தே வருகின்றன. இது இலியனார்தோ தா வின்சியைப் பொறுத்தவரையில் உண்மையென அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். அவரது பேரழகும் பேரருளும் அவர் செய்யும் அனைத்திலும் மிளிர்கின்றன. இவர் தான் எடுத்த சிக்கல்களுக்கெல்லாம் மிக எளிமையாக தீர்வுகளும் காணும் வகையில் தன் அறிவு த் திறனை அருமையாக வளர்த்துகொண்டார்.

— ஜியார்ஜியோ வாசரி
பிரான்சின் பிராங்காயிசு I இலியனார்தோ தா வின்சியின் கடைசி மூச்சின்போது, இங்கிரசு வரைந்த ஓவியம், 1818

பல்வகைத் தகவல்கள்

[தொகு]

தாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.[10]

கலைச் சந்தை

[தொகு]
இலியனார்தோ தா வின்சி, அண்.1500, சaல்வதார் முண்டி, வாதுமையில் நெய்வன ஓவியம், 45.4 செமீ × 65.6 செமீ

சால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது. முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் இலெசு பெம���மெசு தா அல்கர் (Les Femmes d'Alger) எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் இடைமாற்றம் எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும்.[11]

இலியனார்தோ தா வின்சி வரைந்த பல்கோணகம்.

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gardner, Helen (1970). Art through the Ages. pp. 450–456.
  2. See the quotations from the following authors, in section Fame and reputation: Vasari, Boltraffio, Castiglione, "Anonimo" Gaddiano, Berensen, Taine, Fuseli, Rio, Bortolon.
  3. John Lichfield, The Moving of the Mona Lisa பரணிடப்பட்டது 2015-10-15 at the வந்தவழி இயந்திரம், The Independent, 2005-04-02 (accessed 2012-03-09)
  4. Modern scientific approaches to metallurgy and engineering were only in their infancy during the Renaissance.
  5. Capra, pp.5–6
  6. Davinci, Leonardo (2011). The Notebooks of Leonardo Da Vinci. Lulu. p. 736. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-105-31016-4. பார்க்கப்பட்ட நாள் 16 September 2016.
  7. Alastair Sooke, Daily Telegraph, 28 July 2013, "Leonardo da Vinci: Anatomy of an artist", accessed 29 July 2013.
  8. 8.0 8.1 8.2 Keele Kenneth D (1964). "Leonardo da Vinci's Influence on Renaissance Anatomy" (PDF). Med Hist 8: 360–70. doi:10.1017/s0025727300029835. பப்மெட்:14230140. பப்மெட் சென்ட்ரல்:1033412. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1033412/pdf/medhist00157-0072.pdf. 
  9. Vasari, p. 255
  10. "Davinciite, Na12K3Ca6Fe 3 2+ Zr3(Si26O73OH)Cl2, a New K,Na-Ordered mineral of the eudialyte group from the Khibiny Alkaline Pluton, Kola Peninsula, Russia". Geology of Ore Deposits 55: 532–540. doi:10.1134/S1075701513070076. Bibcode: 2013GeoOD..55..532K. https://link.springer.com/article/10.1134%2FS1075701513070076. 
  11. Leonardo da Vinci painting 'Salvator Mundi' sold for record $450.3 million, Fox News, 16 November, 2017

நூல்தொகை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியொனார்டோ_டா_வின்சி&oldid=4105535" இலிருந்து மீள்விக்கப்பட்டது