பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்
உலக மக்கள் அ��ைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நோக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
ஊனமுற்றோர் வகைப்பாடு(இந்திய அளவில்)
1 . பார்வை குறைபாடுடையோர். 2 . கை,கால் குறைபாடுடையோர். 3 . செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர் 4 . மனவளர்ச்சி குன்றியவர்கள். 5 . தொழுநோய் பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள். - என்று ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
ஊனமுற்றோர் மறுவாழ்வு முயற்சிகள்
- 1957 -ம் ஆண்டு ஊனமுற்றோருக்கான முதல் வேலைவாய்ப்பு மையம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து 22 நிலையங்கள் மத்திய அரசால் பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 55 உப அலுவலகங்கள் பல்வேறு கிராமப்பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.
- 1968 -ம் ஆண்டு மத்திய அரசால் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 17 இல்லங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.
- 1981 -ம் ஆண்டு சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது.
- 1969 -ம் ஆண்டு முதல் வேலை பார்க்கும் ஊனமுற்றோர்களுக்கு வகைக்கு இரண்டு பேராக 10 நபர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 5 நபர்களுக்கும் தேசிய விருதுகள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் அன்று, குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது.
- 1995 -ம் ஆண்டின் ஊனமுற்றோர்(சம வைப்புகள்,உரிமைகள்,பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு)சட்டமும்,1992 -ம் ஆண்டின் மறுவாழ்வு குழுமச் சட்டமும், 1999 -ம் ஆண்டின் ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டமும் அவர்கள் நலனுக்காக இந்திய அரசால் இயற்றப்பட்டவை ஆகும்.
- இந்தியாவில் மத்திய அரசால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 183 ஊனமுற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இவை போக அனைத்து மாநில அரசுகளும் ஊனமுற்றோர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
வெளியிணைப்புக்கள்
- புன்னியமீனின் கட்டுரை
- சர்வதேச ஊனமுற்றோர் தினம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 3
- 2007 - அனைத்துலக ஊனமுற்றோர் நாள் - (ஆங்கில மொழியில்)
- 2006 - ஐநா அனைத்துலக ஊனமுற்றோர் நாள் - (ஆங்கில மொழியில்)