உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்றுத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாற்றுத்திறனாளிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம்.

ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதக்கூடும். இதனால், அத் தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயல்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நோக்கு ஊனத்துக்கான மருத்துவ மாதிரி என்பதுடன் தொடர்புபட்டது. மாற்றாக, ஊனம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற்றுக்குமான தொடர்புகளுக்கு முதன்மை அளிக்கக்கூடும்.

இது, மனப்பாங்கினாலும், தேவைகளை அடைவதற்கு வேண்டிய தர அளவுகளை ஊனமற்ற பெரும்பான்மையினருக்குச் சார்பாக வைத்திருப்பதனாலும் ஊனமுற்றோருக்கு இயலாமையை ஏற்படுத்திக்கொண்டு அல்லது அதனைப் பேணிக்கொண்டு அவர்களை இயலாதவர்கள் என்று முத்திரை குத்தும் சமூகத்தின் பங்கு குறித்துக் கவனம் செலுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இந்த நோக்கு, மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பதோடு தொடர்புடையது.மாற்றுத் திறனாளிகளை உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.[1]

மாற்றுத்திறன் வகைகள்

[தொகு]

"மாற்றுத்திறனாளி" என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிற காரணத்தினால் அவர்களை நாம் அவ்வாறு அழைக்கிறோம். அது பின்வரும் வழிகளில் வகைப்படுத்தபடுகிறது:

  • மரபனுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்
  • தாயின் கருவில் இருக்கும் பொழுதோ அல்லது பிறந்த உடனே ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள்
  • நோயினாலோ அல்லது விபத்திலோ ஏற்படுத்திக்கொண்டது
  • தெரியாத காரணங்களால்

உடல் ஊனம்

[தொகு]

மூட்டுகள், நுண்ணிய எலும்புகள் அல்லது மொத்த மோட்டார் திறன் குறைவாக கொண்டு பாதிக்கப்படும்போது அது உடல் ஊனம் எனப்படுகிறது.

புலன் குறைபாடு

[தொகு]

ஏதேனும் ஒரு புலனின் வலுக்குறை புலன் குறைபாடு ஆகிறது. இது பொதுவாக பார்வை மற்றும் காது கேளாமை குறைபாடுகளை கொண்டிருக்கிறது, ஆனால் வேறு சில புலன்களும் குறைபடலாம்.

பார்வை குறைபாடு

[தொகு]

வழக்கமான வழிமுறையாகளை கொண்டு சரி செய்ய இயலாத பார்வை வலுக்குறைகளை இருக்கும் ஒரு நபருக்கும் இருக்கும் பார்வை செயளிலப்புக்களை நாம் பார்வை குறைபாடு எனக் கூறலாம்.

கேள்விக் குறைபாடு

[தொகு]

கேள்விக் குறைபாடு என்பது பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒலியை உணரும் அல்லது புரிந்து கொள்ளும் வல்லமையை இழத்தல் ஆகும். பல வகையான உயிரியல் காரணங்களினாலும் சூழல் காரணங்களினாலும் ஏற்படக்கூடிய இக் குறைபாடு ஒலியை உணரும் தன்மை கொண்ட எல்லா உயிரினங்களிலும் ஏற்படலாம்.

நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடு

[தொகு]

நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடுகள் பொதுவாக வயது முதிர்ச்சியின் காரணமாக வருவதுண்டு. ஆனால் இளைய வயதினருக்கும் இது போன்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மனவளர்ச்சிக் குறைபாடு

[தொகு]

மனவளர்ச்சிக் குறைபாடு என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு. 1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது ”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல; வளர்ச்சி நின்றுவிடும் நிலை” என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர் ”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை” என்று கூறினார். மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு வேறு; மன நோய் வேறு.

உளப் பிறழ்ச்சி

[தொகு]

உளப் பிறழ்ச்சி (Mental disorder) அல்லது உள நோய் அல்லது மன நோய் என்பது தனிப்பட்ட மனிதரில் உண்டாவதும், வழமையான பண்பாட்டு வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படாத துன்பத்தை அல்லது இயலாமையை உண்டாக்கும் உளவியல் அல்லது நடத்தைக் கோலம் ஆகும். உளப் பிறழ்ச்சியை அடையாளம் காணலும், அது தொடர்பான புரிதலும் காலத்துக்குக் காலமும், பண்பாட்டுக்குப் பண்பாடும் மாற்றமடைந்து வந்திருக்கிறது. உளப் பிறழ்ச்சி என்பதன் வரைவிலக்கணம், மதிப்பீடு, வகைப்பாடு என்பன மாறுபட்டாலும் நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு, உளப்பிறழ்ச்சி தொடர்பான நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேடு போன்றவற்றிலும் இவை போன்ற பிற கையேடுகளிலும் தரப்படும் வழிகாட்டல்கள் உளநல வல்லுனர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை

[தொகு]

இந்தியாவில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.[2] வளர்ந்த நாடுகளைவிட இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011 ஆண்டின் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய முதல் உலக அறிக்கை குறிப்பிடுகிறது.2006 ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. சாசனம் விதிகளை இந்தியாவும் கையொப்ப மிட்டு ஏற்றுள்ளதோடு, தற்போது அது அமலிலும் உள்ளது.“மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில் பார்க்கக்கூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்பதும் ஐ.நா. சாசன விதிகளாகும்.[3]

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம்

[தொகு]

ஊனமுற்றோர் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1955 நிறைவேற்றப்பட்டது.நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1996-இல்தான் நடைமுறைக்கு வந்தது.இச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி தேசிய பார்வையற்றோர் கழகம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உயர்நீதிமன்றமும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு , நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய சட்ட அமைச்சகம், அந்த உத்தரவை எதிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுப் பங்கேற்பு அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது . உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை.[1]

தேசிய நிறுவனம்

[தொகு]

ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு , சேவையாற்றி வருகிறது.இங்கு, மறுவாழ்வு மருத்துவம் , மறுவாழ்வு உளவியல் , ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி , பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புப் பயிற்சி , சிறப்புக் கல்வி , கண் பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை, இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம், 0-3 வயதில் தொடக்கக் கால பயிற்சி , செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல் , உணர்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி , சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.[2]

கல்வி

[தொகு]

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.8 சதவீதம்பேர் கல்வி கற்றவர்களாக உள்ள நிலையில், வெறும் 49 சதம் மாற்றுத்திறனாளிகளே கற்றவர்களாக உள்ளனர். 44 சதவீத பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதவைகளாக உள்ளதாக அரசு தகவல்கள் உள்ளன. பார்வையற் றோருக்கான பிரெயில் வடிவிலான ஆவணங்களும் காதுகேளாத வாய் பேசாதோருக்கான செய்கைமொழி பெயர்ப்பாளர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு பள்ளிகள் மற்றும் சிறப்பாசிரியர்கள் போதிய அளவில் இல்லாததும் இவர்களின் கல்விக்குத் தடைகளாக உள்ளன.[4]

வேலை வாய்ப்பு

[தொகு]

வேலைவாய்ப்பில்லாமல் அவதியுறும் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 66 சதவீத மாக உள்ளது.[4] மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னின்ன வேலைகள் ஒதுக்கப்படலாம் என்று இனம் காணும்படி சட்டம் வழிகாட்டுகிறது.அரசுத்துறைகளில் உள்ள C மற்றும் D பிரிவு ஊழியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை 1977 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு 1996 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த சமவாய்ப்புச் சட்டத்திலும் வழிவகை செய்யப்பட்டது.[4] அரசோ, வெறும் நூறு வேலைகளை மட்டும் பட்டியலிட்டுள்ளது .தேசிய ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மையத்தின் புள்ளிவிவரப்படி, அரசு வேலைவாய்ப்பில் 0.5 விழுக்காடும், தேசிய அளவில் எடுத்துக்கொண்டால் 0.4 விழுக்காடும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.[1]

சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்

[தொகு]

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

[தொகு]

ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசு ஆணைப்பிறப்பித்துள்ளது.[5]

மேலும் காண்க

[தொகு]

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிலையங்கள்

[தொகு]

வெளிஇணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Disabled people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "போதுமிந்த போலித்தனம்!". பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2013.
  2. 2.0 2.1 எஸ். கல்யாணசுந்தரம் (4 திசம்பர் 2013). "மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் மத்திய அரசு நிறுவனம்". தி ஹிந்து. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2013.
  3. "மாற்றுத் திறனாளிகளுக்கு எப்போதும் துணை நிற்போம்: சிபிஎம்". தீக்கதிர்: pp. 1. 2 திசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 4 திசம்பர் 2013. 
  4. 4.0 4.1 4.2 "அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் மோசமான தேர்ச்சி: முதல்வர் நடவடிக்கை அவசியம்" (in தமிழ் மொழியில்). தி இந்து. 9 மே 2014. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 1, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  5. மாற்றுத் திறனாளிகளுக்கு டிசம்பர் 3-ந் தேதி ஊதியத்துடன் விடுமுறை http://www.thinaboomi.com/2011/07/22/5089.html

மேலதிக வாசிப்பிற்கான நூல்கள்

[தொகு]

நூல்கள்

ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்றுத்திறன்&oldid=4015920" இலிருந்து மீள்விக்கப்பட்டது