பழவேற்காடு ஏரி
பழவேற்காடு ஏரி | |
---|---|
அமைவிடம் | சோழமண்டல கடற்கரை |
ஆள்கூறுகள் | 13°33′57″N 80°10′29″E / 13.56590°N 80.17478°E |
வகை | உவர்நீர் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 60 கி.மீ |
அதிகபட்ச அகலம் | 17.5 கி.மீ |
மேற்பரப்பளவு | 250 கிமீ² முதல் 460 கிமீ² வரை |
பழவேற்காடு ஏரி (ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி, Pulicat Lake) இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.
பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளை��் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது. இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.
பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ2 ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ2 ஆகவும் வேறுபடும்.
வரலாறு
[தொகு]வரலாற்றில் பழவேற்காடு ஏரியினைப் பற்றிய முதல் குறிப்பு பொ.ஊ. முதலாம் (பிளாக் டெவில் )நூற்றாண்டில் எழுதப்பட்ட 'எரிதேரியன் கடல்பயண குறிப்புகள்' என்கிற நூலில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த ��ூலின் (Periplus of the Erthraean Sea) ஆசிரியர் பெயர் தெரிய வரவில்லை. இந்நூல் பழவேற்காட்டினை இந்தியாவின் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்களில் ஒன்று என்று வரிசைப்படுத்துகிறது. இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த கிரேக்க அறிஞர் டோலெமி (ஆங்கிலத்தில் Ptolomey) தொகுத்த துறைமுகங்களின் பட்டியலில் பழவேற்காடும் இருக்கிறது. அதில் பழவேற்காடு Podouke emporion என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ள துறைமுகங்கள் தூர கிழக்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனைப் பொருட்களை மேற்கிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன என டோலெமி குறிப்பிடுகிறார். மசாலா பொருட்கள், சந்தனம், முத்து, கற்பூரம், பட்டு ஆகியவை இங்கு வணிகம் செய்யப்பட்டன.[1]
பதிமூன்றாம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் பிறகு இந்தப் பகுதிக்கு நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்தனர். இந்த அரேபியர்கள் அப்போது வசித்த வீடுகளின் மிச்சங்களை இப்போதும் இந்தப் பகுதியில் காண முடியும். தற்போது அங்கு வசிக்கும் முஸ்லீம்கள் சிலர் இந்த குடியேற்றத்தின் வரலாற்றை நிரூபிக்க தங்களிடம் அரேபிய மொழியில் ஆவணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
பொ.ஊ. 1515-ம் ஆண்டு இங்குக் குடி வந்த போர்த்துகீசியர்கள் ஒரு கிருஸ்துவ வழிபாட்டுத் தலத்தினை உருவாக்கினார்கள். இன்று அந்த கட்டிடம் பாழடைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டச்சு மக்கள் பயணித்த கப்பல்கள் சில பழவேற்காடு ஏரியின் முகப்பிற்கு எதிரே உள்ள கரிமணல் கிராமத்தின் கரையோரம் கரைத் தட்டின. இதன் காரணமாக அக்கப்பல்களில் இருந்த டச்சு மக்கள் இங்கே தங்க நேரிட்டது. இதன் நீட்சியாக டச்சு வணிகர்களும் அவர்களது கப்பல்களும் இப்பகுதிக்கு அடிக்கடி வர தொடங்கின. அவர்கள் 1606-ம் ஆண்டு முதல் 1690-ம் ஆண்டு வரை பழவேற்காட்டினைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு இப்பகுதியினை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். டச்சு காலத்தில் பழவேற்காடு பழைகட்டா என்றும் அழைக்கப்பட்டது. இக்காலத்திலே ஜெல்டீரியா கோட்டை இங்குக் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டச்சு வணிகர்கள் மற்ற நாடுகளுடன் வணிகம் புரிவதற்கான தளமாக மாறியது. தற்போது டச்சு கால சான்றுகளாக பாழடைந்த டச்சு கோட்டையும் டச்சு தேவாலயமும், 1631-ம் ஆண்டு தொடங்கி 1655-ம் ஆண்டு வரை உருவான இருபத்தி இரண்டு கல்லறைகளும் வேறு சில இடிபாடுகளும் உள்ளன. இவை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் பராமரிப்பில் தற்போது உள்ளன.
நீரியல்
[தொகு]பழவேற்காடு ஏரி கடலுக்கும் ஏனைய நீர் ஆதாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியாக விளங்குகிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் இங்கே கலக்கிறது. ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் வட முனையிலும் தென்முனையிலும் இக்கலப்பு நிகழ்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது. [2]
இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது. கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும். இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிர்னங்களின் தன்மையையும் உருவாக்குகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- பாழாகிவரும் பழவேற்காடு - கட்டுரை பரணிடப்பட்டது 2010-06-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ஓ.கே நம்பியார் எழுதிய “AN ILLUSTRATED MARITIME HISTORY OF INDIAN OCEAN” நூலில் 'HIGHLIGHTING THE MARITIME HISTORY OF THE EASTERN SEA BOARD' என்கிற பகுதி
- ↑ ""Holocene sea-level and climatic fluctuations: Pulicat lagoon – A case study" (pdf)" (PDF). Archived from the original (PDF) on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.