உள்ளடக்கத்துக்குச் செல்

திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°47′33″N 78°46′03″E / 10.792434°N 78.767438°E / 10.792434; 78.767438
பெயர்
புராண பெயர்(கள்):திருஎறும்பூர், திருவெறும்பூர், மணிக்கூடம், இரத்னகூடம், பிப்பிலீசுவரம், திருவெறும்பிரம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம், குமாரபுரம், தென்கையிலாசநகரம் (கைலாஷ் நகர்), எறும்பீசம்
அமைவிடம்
ஊர்:திருவெறும்பூர்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:எறும்பீஸ்வரர், மதுவனேசுவரர், மாணிக்கநாதர், மணிகூடாசலதேஸ்வரர், திருஎறும்பூர் ஆழ்வார், திருமலைமேல் மகாதேவர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:நறுங்குழல்நாயகி, சௌந்திரநாயகி, இரத்னம்மாள், மதுவனவிஸ்வதி, நறுங்குழல் நாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம், குமார தீர்த்தம்
ஆகமம்:காமீகம்
சிறப்பு திருவிழாக்கள்:பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.

திருத்தல வரலாறு

[தொகு]

தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் இழைத்த கொடுமைகளினால் தாங்கொணாத் துயருற்ற தேவர்களும் முனிவர்களும், நாரத முனிவரின் அறிவுரையின்படி திருச்சியை அடுத்துள்ள இம்மலையில் எழுந்தருளிய ஈசனைத் தொழச் செல்கையில், அவ்வரக்கன் அறியாத வண்ணம் எறும்பின் வடிவினை மேற்கொண்டு வழிபட்டனராம். மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை அடைந்து அதில் சிவ லிங்கத்தைத் தொழ எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என இத்தல நாதர் அழைக்கப்படலானார்.

பெயர்ச் சிறப்பு

[தொகு]

எறும்புகளுக்கும் அருள் தந்து ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால் இத்தலம் எறும்பூர் எனப்பட்டது.

திருத்தலச் சிறப்புகள்

[தொகு]
  • முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம்.
  • மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது எனவே நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது.
  • வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.
  • இத்தலம், மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம்.
  • இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வ���ிபட்டனர்.
  • இது ஒரு பாடல் பெற்ற தலம். சிறப்பு மிக்க சிவனடியாரான திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புக்களை ஐந்தாம் திருமுறையில் பாடியருளியுள்ளார்.
  • இக்கோயிலில் சூரியானரின் திருவுரு நவக்கிரக சந்நிதியில் தமது இரு மனைவியரோடும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
  • திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போன்று, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டதாகக் கூறுவதுமுண்டு.

வரலாற்றுச் சிறப்புகள்

[தொகு]
  • இத்தலம் சோழ மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்று விளங்கியது. முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் ஆகியோர் திருப்பணிகளை விளக்கும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் இறைவனார் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலை மேல் மகாதேவர் என்னும் பெயர்கள் கொண்டு குறிப்பிடப்படுகிறார்.
  • கல்வெட்டுத் துறையாளரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும். கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஷ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளனர்.
  • கி. பி. 1752ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினருக்கு இடையில் நிகழ்ந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது.
  • திருச்சி மலைக்கோட்டையிலிருந்து திருவெறும்பூர் எம்பீசுவரர் கோயில் வரையும் திருவெறும்பூர் எழும்பீசுவரர் கோயிலிலிருந்து தஞ்சாவூர் பெரிய கோயில் வரையும் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

திருத்தலப் பாடல்கள்

[தொகு]

63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும் இக்கோயில் பெருமானை பற்றி பாடல்கள் பாடியுள்ளார்:

5.074 திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை (741 -750)

6.091 திருஎறும்பியூர் திருத்தாண்டகம் (898-907)


படத்தொகுப்பு

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]


குறிப்புதவிகள்

[தொகு]

http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_5_74.html

வெளி இணைப்புகள்

[தொகு]