உள்ளடக்கத்துக்குச் செல்

சோ. தேவராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்டத்தரணி சோ.தேவராஜா

சோ.தேவராஜா சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் சத்திய ஆணையாளரும், நாடக நடிகர்,எழுத்தாளர், கவிஞர். 1968இலிருந்து மேடைநாடகங்களில் நடித்து வருபவர். செவ்வானத்தில் ஒரு நாடகத்தில் சிறந்த நடிகருக்கான ஜனாதிபதிப் பரிசு பெற்றவர். பல கவியரங்கங்களில் பங்கெடுத்தவர். இவரது 'ஆச்சி' கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளராகவும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் திகழ்ந்திருக்கின்றார். தாயகம் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் உள்ளார். பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் நிறுவகர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

காலையடி, பண்டத்தரிப்பில் 1953.11.17 இல் சோமசுந்தரம், சற்குணம் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தனது எட்டாவது வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கையில் தந்தையை இழந்தார். திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டம் பெற்றார். அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவாசகர் கலாலக்ஷ்மியை திருமணம் புரிந்தார். மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக தனது பணியைத் தொடர்ந்த இவர் 1990களில் கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கு தனது பணியைத் தொடர்ந்தார். ஜனமகன், அபிலாஷா ஆகிய இரு பிள்ளைகளை பெற்ற இவர் மீண்டும் 2010களில் யாழ்ப்பாணம் மீண்டு வந்து தனது பணியைத் தொடர்கின்றார்.

கலைத் துறையில்

[தொகு]

சிறுவயதில் பேச்சாற்றலும் நடிப்பாற்றலும் கைவரப்பெற்ற இவர் தனது நண்பர்களுடன் இணைந்து 1968இல் காலையடி தேவ கோபால கிருஷ்ண நாடகமன்றம் உருவாக்கினார். சாம்பிராட் அசோகன், நட்பு போன்ற நாடகங்கள‍ல் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம், காலையடி ஆகிய இடங்களில் நாடங்கள் மேடையேறின.பின் 1972இல் காலையடி முருகன் விளையாட்டுகழகத்துடன் இணைந்து மறுமலர்ச்சி மன்றம் உருவாக்கப்பட்டது. நட்பு, வாழ்வின் வழி போன்ற நாடகங்களில் கதாநாயகன் பாத்திரத்தில் நடித்து பார்ப்போர் மனதை கொள்ளை கொண்டார். 1975இல் தூங்காத தூண்கள் எனும் முழுநீள நாடகம் கதைவசனம் எழுதி கதாநாயகன் பாத்திரத்தில் நடித்து அந்நாடகம் பண்டத்தரிப்பு மகளிர் உயர் கல்லூரியில் மேடையேறியது. அதே ஆண்டில் காலைக்கவிஞன் அழ.சந்திரஹாசன் கதைவசனத்தில் மகாதேவர் நெறியாழ்கையில் 'காகிதப் புலிகள்' நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இந்நாடகம் 70 மேடையேற்றங்களை கண்டு சிறந்த நாடகமாக தேர்ந்து 'மீண்டும் பாரதி' எனப் பெயர் மாற்றப்பெற்றது. வியர்வைத் துளிகள், வீரம் விளைந்த‍து போன்ற பல நாடகங்களி்ல் நடித்தார்.

கொழும்பில் செவ்வேள் எழுதி இயக்கிய 'செவ்வானத்தில் ஒரு' என்ற நாடகத்தில் நடித்த‍தன் மூலம் அரச நாடக விழாவில் சிறந்த நடிகருக்கான ஜனாதிபதிப் பரிசு பெற்றார். வானொலியில் கே.எம். வாசகரின் 'வாழப்பிறந்தவர்கள்' நாடகத்தில் நடித்தார். வீ. எம். குகராஜாவின் 'கதை இதுதான்' வீடியோ திரைப்படத்திலும் நடித்தார். நெறியாளராக குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'கூடிவிளையாடு பாப்பா' 'காட்டுராஜா' 'மாதொருபாகம்' நாடகங்களை மன்ற சிறுவர், இளம் பெண்கள் நடிக்க மறுமலர்ச்சி மன்றத்தில் மேடையேற்றினார். 'தாலியம்' நாடகத்தினை எழுதி இயக்கினார். 1978 இல் உருவாகிய நாடக அரங்கக் கல்லூரியில் நாடகப் பயிற்சி பெற்றதோடு அக் கல்லூரியின் தயாரிப்பான கோடை, உறவு��ள், பொறுத்த‍து போதும், கந்தன் கருணை போன்ற நாடகங்களில் நடித்து சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்து அதன் இணைச் செயலாளராக இருந்து மகாகவி பாரதி நூற்றாண்டு விழா ஆய்வரங்குத் தொடரை ஒழுங்கு செய்து 1982 இல் நடத்தியதி்ல் முதன்மை வகித்தார். தாயகம் இதழ் 1983 இல் மீள வெளிவந்தபோது அதன் ஆசிரியர்குழுவில் ஒருவராக இருந்து தாயகம் வெளியீட்டில் தனது கணிசமான பங்களிப்பை வழங்கிவருகிறார். 90களில் பேரவையின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று செயற்பட்டார். செண்பகன் என்ற புனைபெயரில் கவிதைகள் பல எழுதியதோடு பல கவியரங்கங்களில் பங்கேற்று சிறப்பான முறையில் கவிதைகளை உரைப்பதில் பிரசித்திபெற்றார். கவிதைகளை தொகுத்து 'ஆச்சி' என்ற நூல் வெளிவந்த‍து. வெளிவராத கவியரங்க‍க் கவிதைகளும் பிறகவிதைகளும் ஏராளம். நடிப்பில் சிறு இடைவெளி இருந்தாலும் முதிய வயதிலும் மக்கள் களரியின் 'வெண்கட்டி வட்டம்', செம்முகம் குழுவின் 'அன்பமுதூறும் அயலார்' நாடகங்களில் பல பாத்திரங்களில் நடித்து தனது குணசித்திர நடிப்பால் இளையோரையும் கவர்ந்து வருகின்றார்.

நூல் வெளியீட்டாளராக

[தொகு]

தேசிய கலை இலக்கியப் பேரவையின் நூல்வெளியீட்டுப் பொறுப்பாளராக செயற்பட்டு தமிழகத்தில் சென்னையிலும் கொழும்பிலும் ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளிக்கொணர்வதில் முன்னின்று நூறு நூல்களுக்கு மேல் வெளியிட்டு தேசிய கலை இலக்கியப் பேரவை சாதனை படைப்பதில் காரண கர்த்தாவாகத் திகழ்ந்தவர். பிரபலமான எழுத்தாளர்களது நூல்களை வெளியிட்டதோடு நின்றுவிடாது வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு விநியோகத்தை விரிவு படுத்தும் வகையில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பிரிவாக புத்தகப் பண்பாட்டுப் பேரவையினையும் உருவாக்கியவர். யாழ்ப்பாணத்தில் வசந்தம் புத்தக நிலையத்தை பொறுப்பெடுத்து கொழும்பில் வசந்தம் புத்தக நிலையம் உருவாக்கி தென்னிந்திய இலக்கிய நூல்கள், ஈழத்து நூல்களை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பெற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்.

சமூக சீர்திருத்த வாதியாக

[தொகு]

1973 இல் மறுமலர்ச்சி மன்றம், பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம், சாந்தை இந்து இளைஞர் மன்றம் ஆகிய கிராமிய அமைப்புகளை ஒன்றிணைத்து மது ஒழிப்பு இயக்கத்தினை உருவாக்கி திபாவளி தினத்தில் சாந்தையிலிருந்து காலையடி வரை மது ஒழிப்பு ஊ்ர்வலத்தை முன்னின்று நடாத்தினார். இன்றும் தனது கொள்கையின் வழி விலகாது குடிப்பழக்கம், போதை எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். சின்னமேளம் என்ற சதுர்ஆட்டத்தினை நிறுத்துவதற்கான பணிப்புலம் அம்பாள் ஆலயத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் பங்குகொண்டார். அதனைத் தொடர்ந்து மிகவும் பின்தங்கிய கிராமத்தின் குறிச்சியாகிய பன்னமூலையில் அந்த ஊரின் இளைஞர்களை ஒன்றுதிரட்டி காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் உருவாக்கி நல்வழியில் இளைஞர்களை வழிநடுத்துவதில் வெற்றிபெற்றார்.

சமூக, அரசியல் தளங்களில்

[தொகு]

மாக்சிய நெறியினை தனது மார்க்கமாக வரித்துக்கொண்டு தோழர் மணியத்தின் வழிகாட்டலில் தற்போதைய புதிய ஜனநாயக மாக்சிய- லெனினிய கட்சியில் (இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி(இடது)) இணைந்து அதன் அரசியல் குழு உறுப்பினர், பொருளாளர் பதவிகளில் இருந்து அரசியல் பணிகளைத் தொடர்பவர். நூற்றுக்கணக்கான மேடைகளில் பேச்சாளர். 85 இல் மனித உரிமைகள் இயக்கத்தில் செயலாளராக இருந்து மனித உரிமையை வற்புறுத்தி ஊர்வலங்களை அதன் தலைவர் இராச‍சுந்தரம் அவர்களுடன் இணைந்து நடாத்தினார். யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் சனநாயக இடதுசாரி முன்னணியிலும் சுயேட்சைக் குழுவிலும் இருமுறை போட்டியிட்டார். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபடுத்தலுக்கெதிரான மக்கள் போராட்டங்களிலும்[1] நீதிமன்றத்தில் தொடக்கப்பட்ட வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்திற்கெதிரான வழக்கில் சுன்னாகம் மக்களுக்கு நீதிவேண்டி குரல் கொடுத்தார்.

அரசியல் ஏடான 'புதிய பூமி' இதழில் செண்பகன் என்ற புனைபெயரில் 'தமிழ் தேசியமும் குறுநலப் பித்தும்' என்ற தொடர் கட்டுரையினை எழுதிவந்தமையானது 2000களில் தமிழ் தேசிய போராட்டம் முனைப்புப் பெற்ற காலத்தில் குறிப்பிடக்கூடிய அவரது அரசியல் கண்ணோட்டமாக கொள்ளலாம்.

வெளிவந்த நூல்கள்

[தொகு]
  • ஆச்சி கவிதைத் தொகுப்பு- 2001
  • என்ர அப்பு என்ர அம்மா கவிதை தொகுப்பு 2023
  • கூவிப் பிதற்றலன்றி... கவியரங்க கவிதைகள் 2023
  • நிற்க அதற்குத் தக - கவியரங்க கவிதைகள் 2023
  • அன்புள்ள தோழனுக்கு - அரசியல் கடிதங்கள் 2023
  • வானம் வசப்படும் சிறார் பாடல்கள் (யானைத் தாத்தா தேவன் பூதனார்) 2023
  • சாதனா ஆடுறா - சிறார் பாடல்கள் (யானைத் தாத்தா தேவன் பூதனார்) 2023
  • நான் நானல்ல - கவிதை தொகுப்பு 2023
  • தமிழ் தேசியமும் குறுநலப் பித்தும் -அரசியல் கட்டுரைகள் 2023
  • பிள்ளைகள் இசைப்பா - சிறார் பாடல்கள் (யானைத் தாத்தா தேவன் பூதனார்) 2023

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._தேவராஜா&oldid=4013607" இலிருந்து மீள்விக்கப்பட்டது