உள்ளடக்கத்துக்குச் செல்

ம. சண்முகலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தை ம. சண்முகலிங்கம்
குழந்தை ம. சண்முகலிங்கம்
பிறப்புமயில்வாகனம் சண்முகலிங்கம்
(1931-11-15)15 நவம்பர் 1931
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புசனவரி 17, 2025(2025-01-17) (அகவை 93)
யாழ்ப்பாணம், இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்கொழும்புப் பல்கலைக்கழகம்
பணிஆசிரியர்
பணியகம்கொழும்புப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநாடகக் கலைஞர்

குழந்தை ம. சண்முகலிங்கம் (15 நவம்பர் 1931 – 17 சனவரி 2025) ஈழத்தின் நாடக எழுத்தாளரும், நாடகப் பயிற்சியாளரும், நாடக நடிகரும், நாடக அரங்க கல்லூரியின் நிறுவனரும் ஆவார். ஈழத்து சிறுவர் நாடகத் தந்தை எனப் போற்றப்பட்டவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

குழந்தை ம. சண்முகலிங்கம் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1931 நவம்பர் 15 இல் பிறந்தார்.[1] சண்முகலிங்கம் நீர்கொழும்பு பகுதியில் உள்ள போலவத்தையில் சிங்களவர்களிடையே வளர்ந்தார். பிறந்து மூன்று மாதங்கள் முதல் பத்து வயது வரை போலவத்தையில் வளர்ந்தார். இவரது தந்தை போலவத்தையில் பணியாற்றினார்.[2] சிங்கள மக்களுடனான தொடர்பு காரணமாக, அவர் சிங்கள மொழியையும் கற்றுக்கொண்டார், போலவத்தையில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தபோது ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். பத்து வயதிற்குப் பிறகு இவர் யாழ்ப்பாணம் சென்றார்.[2]

1953 முதல் 1957 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல், வரலாறு, அரசியல் கற்று இளங்கலைப் பட்டம் பெற்றார். இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து யாழ்ப்பாணம் திரும்பி, செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியிலமர்ந்தார். பின்னர் 1972 இல் பளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1976 இல் நாடகத்துறைக்கான டிப்புளோமா பட்டப்படிப்பை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு மீண்டும் பளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். 1981 இல் மீண்டும் செங்குந்த இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்று, 1986 முதல் 2004 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடகக் கற்பித்தல் பணியில் முழுநேரமாக ஈடுபட்டார்.[3]

கலை இலக்கிய பணிகள்

[தொகு]

இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1978 சனவரி 23 இல் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.

1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் ராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இவர் எழுதி இயக்கிய மண் சுமந்த மேனியர் என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை. இவரது ஆர்கொலோ சதுர‍ர் நாடகம் எல்லா நாடகங்களிலும் உச்சமானது.யுத்த‍த்தில் வெற்றி அல்லது முடிவு ஒன்றில்லை. தோற்பது மனிதம் தான் என்பதை பாரதப் போரின் 14ம் நாள் போரை மையப்படுத்திக் காட்டுகின்றார். இவர் மொழிபெயர்த்த வெண்கட்டி வட்டம் மக்கள்களரி தயாரிப்பில் 2016இல் தமிழ் சிங்கள மலையக முஸ்லிம் கலைஞர்களின் சங்கமிப்பில் யாழ்ப்பாணத்திலும் பண்டத்தரிப்பிலும் கொழும்பிலும் மேடையேறியமை குறிப்படத்தக்கது. நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பாக உறவுகள் நாடகம் 2017இல் மீளவும் இரதிதரன் இயக்கி பண்டத்தரிப்பு, காரைநகர், புத்தூர், வ‍வுனியா ஆகிய இடங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் மேடையேற்றப்பட்டுவருகின்றது. அதேபோல் அவரது மொழிபெயர்ப்பில் தான் விரும்பாத் தியாகி நாடகமும் பல மேடையேற்றங்களைக் கண்டு வருகின்றது. 1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

இவர் மொழிபெயர்த்த கவிதை��ள் சில தாயகம் இதழில் பிரசுரமானதுடன் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகிக்கின்றார். ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். கூடிவிளையாடு பாப்பா, காட்டுராஜா, முயலார் முயல்கிறார் போன்ற நாடகங்கள் அவர் எழுதிய சிறுவர் நடாகங்களில் சில.

கௌரவப் பட்டம்

[தொகு]

நாடகத்துறைக்கு இவர் ஆற்றிய பணிக்காக 2001 இல் கிழக்குப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியிருந்தது.

இறப்பு

[தொகு]

குழந்தை ம. சண்முகலிங்கம் 2025 சனவரி 17 அன்று தனது 93-ஆவது அகவையில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.[4][5]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • நாடக வழக்கு (அரங்கியற் கட்டுரைகளும், நேர்காணல்களும்)
  • மாதொருபாகம்
  • வேள்வித் தீ
  • ஒரு பாவையின் வீடு ( மொழி பெயர்ப்பு நாடகம்)
  • அன்னை இட்ட தீ
  • கோக்கேசிய வெண்கட்டி வட்டம் (மொழிபெயர்ப்பு நாடகம்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 குழந்தை ம- சண்முகலிங்கம், அரிதாரம்
  2. 2.0 2.1 "Kulandai Shanmugalingam treasure of Lankan Tamil theatre". Sunday Observer (in ஆங்கிலம்). 2022-02-19. பார்க்கப்பட்ட நாள் 2023-05-26.
  3. ஜீவநதி 2019.12 (135) (குழந்தை ம. சண்முகலிங்கம் சிறப்பிதழ்)
  4. ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார், வீரகேசரி, சனவரி 17, 2025
  5. "ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் காலமானார்!". Ada_Derana. 2025-01-18. பார்க்கப்பட்ட நாள் 2025-01-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
தளத்தில்
ம. சண்முகலிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சண்முகலிங்கம்&oldid=4191635" இலிருந்து மீள்விக்கப்பட்டது