உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் காயாரோகணம்.
காஞ்சிபுரம் காயாரோகணம். is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் காயாரோகணம்.
காஞ்சிபுரம் காயாரோகணம்.
காயாரோகணேசுவரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:12°49′41″N 79°41′45″E / 12.8281°N 79.6958°E / 12.8281; 79.6958
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் காயாரோகணம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:காயாரோகணேசுவரர்
உற்சவர் தாயார்:அம்பாள் கமலாம்பிகை
வரலாறு
அமைத்தவர்:பல்லவர���கள் விஜயநகர மன்னர்கள்

காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் (காயாரோகணம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மேலும் வியாழ(குரு)பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப் பெற்ற இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]

இறைவர், வழிபட்டோர்

[தொகு]

தல வரலாறு

[தொகு]

பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் "காயாரோகணம்" எனப் பெயர்பெற்றது. மேலும் மகாலட்சுமி இத்தலத்து இவ்விறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றதும். மற்றும் குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது தல வரலாறாக விளங்குகிறது.[3]

தல விளக்கம்

[தொகு]

காயாரோகணம்: காஞ்சியில் மிகப் பெருஞ் சிறப்பினவாய இடங்கள் மூன்றென்று போற்றப்பெறும். அவை திருவேகம்பம், கச்சபேசம், காயாரோகணம் எனப் பெற்று முறையே உமையம்மையார், சரசுவதி, இலக்குமி என்னும் முச்சத்திகளால் வழிபடப்படுவன. காஞ்சிக்கு உயிராய் விளங்கும் இத்தலத்தில் சிவபிரானார் திருமால் பிரமர் இறக்கவரும் காலத்தில் அவர்களை ஒடுக்கி அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி நடனம் புரிவர், ஆகலின், அவ்விடம் காயாரோகணம் எனப் பெற்றது.

இலக்குமி வில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத் திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர்! ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன் பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண (தாயார்குளம்) தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். ‘என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார்.

இயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.[4]

அமைவிடம்

[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் தாயர்குளம் அருகில் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வந்தவாசி செல்லும் பிரதான சாலையில் (மேல் ரோடு) 3-வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புலத்தில் இத்தலம் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Project Madurai, 1998-2008|சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2|18. காயாேராகணப் படலம் 822 - 835
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. tamilvu.org|காஞ்சிப் புராணம்|காயாரோகணப் படலம்|பக்கம்: 252 - 256
  4. Tamilvu.org|காஞ்சிப் புராணம்|திருத்தல விளக்கம்| பக்கம்: 815
  5. "shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்". Archived from the original on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-02-17.

புற இணைப்புகள்

[தொகு]