உள்ளடக்கத்துக்குச் செல்

புளூட்டோ நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளூட்டோ நடவடிக்கை (Operation Pluto) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையியல் வழங்கல் நடவடிக்கை (Millitary logisics/supply operation). இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீது கடல் வழியாகப் படையெடுத்திருந்த நேச நாட்டுப் படைகளுக்குத் தேவையான எரிபொருளை பிரான்சுக்குக் கொண்டு செல்ல ஆங்கிலக் கால்வாயின் கடல் படுகையில் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கப்பட்டன. PLUTO என்பது Pipe-Lines Under The Ocean (பெருங்கடலுக்கு அடியில் குழாய்கள்) என்பதன் முதலெழுத்துக் குறுக்கமாகும்.

மேற்கு ஐரோப்பா மீது கடல்வழியாக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புக்கு எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்களில் ஒன்று போதிய எரிபொருள்களை வழங்குதல். கடல்வழியே செல்லும் சரக்குக் கப்பல்கள் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களால் மூழ்கடிக்கப்படும் ஆபத்து இருந்ததால், நேச நாட்டு உத்தியாளர்கள் அதற்கு மாற்றாக இன்னொரு வழியைத் தேடத் தொடங்கினர். கடலுக்கடியில் எண்ணெய்க் குழாய்களை அமைக்கும் திட்டம் 1942ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்குத் தேவையான புதிய ரக குழாய்களை வடிவமைக்கும் பணி தொடங்கியது. சோதனை முயற்சிகள் வெற்றியடைந்த பின்னர் இத்திட்டம் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 1944ல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே முதல் புளூட்டோ எண்ணெய்க் குழாய் அமைக்கப்பட்டது. மே 1945ல் போர் முடிவதற்குள் மேலும் பதினாறு குழாய்கள் அமைக்கப்பட்டன. உச்ச கட்டமாக இக்குழாய்களின் மூலம் நாளொன்றுக்கு 4000 டன் எரிபொருள் பிரிட்டனிலிருந்து பிரான்சுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் மேற்கு ஐரோப்பியப் போர்முனையில் நேச நாட்டுப் படைப்பிரிவுகளின் எரிபொருள் பற்றாக்குறை வெகுவாகக் குறைந்தது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூட்டோ_நடவடிக்கை&oldid=3250567" இலிருந்து மீள்விக்கப்பட்டது