உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 20ஆம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சபை வரலாற்றின் கால கட்டங்கள்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான கால கட்டத்தை உள்ளடக்கியது. அதன் வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

கி.பி. 1900-2000: நிகழ்வுகள்

[தொகு]
  • 1903, சூலை 20: திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இறையடி எய்தினார்.
  • 1903, ஆகத்து 4: கர்தினால் ஜுசேப்பே சார்த்தோ திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பத்தாம் பயஸ் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.
  • 1903-1914: திருத்தந்தை பத்தாம் பயஸின் ஆட்சிக்காலம்[1]. இருபதாம் நூற்றாண்டில் புனிதர் பட்டம் பெற்ற ஒரே திருத்தந்தை இவர். இவருக்கு முன் புனிதராக அறிவிக்கப்பட்ட திருத்தந்தை ஐந்தாம் பயஸ் ஆவார். திருச்சபையில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்த திருத்தந்தை பத்தாம் பயஸ் கத்தோலிக்க சமய நம்பிக்கையைப் பழுதின்றி காப்பதில் பெரும் கவனம் செலுத்தினார். மக்கள் திருப்பலியில் பங்கேற்று, நற்கருணை விருந்து அடிக்கடி அருந்துவதற்கு வழிசெய்தார். திருச்சபையில் பல நூற்றாண்டுகள் வழங்கிவந்த கிரகோரி இசையை (Gregorian Chant)[2] இன்னும் பரவலாகப் பயன்படுத்த ஏற்பாடு செய்தார். 1914, சூலை மாதம் முதல் உலகப் போர் வெடித்த செய்தியைக் கேட்ட திருத்தந்தையின் உடல்நலம் மோசமாகியது. அவர் ஆகத்து 20ஆம் நாள் உயிர்நீத்தார்.
  • 1914, செப்டம்பர் 3: ஜாக்கமோ பவுலோ ஜோவான்னி பத்தீஸ்தா தெல்லா கியேசா என்னும் பெயர் கொண்ட கர்தினால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினைந்தாம் பெனடிக்ட் என்னும் பெயரைச் சூடிக் கொண்டார்.
  • 1914-1918: முதலாம் உலகப்போர் நிகழ்ந்தபோது, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் எந்தவொரு கூட்டணியோடும் இணையாமல் நடுநிலை காத்தார்[3]. ஆனால் இரு கூட்டணிகளும் அவர் மற்ற அணியை ஆதரித்தார் என்று குறைகூறி, திருத்தந்தை முன்வைத்த அமைதிப் பரிந்துரையைப் புறக்கணித்தன. போரினால் துன்புற்ற மக்களுக்கு கத்தோலிக்க திருச்சபை பல விதங்களில் உதவியது.
  • 1916: ஆஸ்திரியா நாட்டு முதலாம் சார்லஸ் ஆஸ்திரிய-அங்கேரிய பேரரசின் மன்னராக முடிசூடினார். இவர் கத்தோலிக்கர். முதல் உலகப்போரின் போது வெவ்வேறு நாடுகளுக்கிடையே சமாதானம் கொணர இவர் முயன்றார். அதனால் பலன் ஏற்படவில்லை.
  • 1917: திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் திருச்சபையின் சட்டத் தொகுப்பை வெளியிட்டார்[4].
  • 1917, மே 13 - அக்டோபர் 13: போர்த்துகல் நாட்டில் பாத்திமா நகரில் அன்னை மரியா மூன்று சிறுவர்களுக்குக் காட்சி அளித்தார் என்று கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிட்டது. லூசியா சாந்தோஸ், அவர்தம் சகோதரி ஜெசிந்தா, மற்றும் பிரான்சிஸ்கோ மார்த்தோ என்னும் அம்மூவரும் அன்னை மரியா தங்களிடம் உடல் ஒறுத்தல் செய்தல், செபமாலை செபித்தல் போன்ற நற்செயல்கள் புரிந்தால் உலகம் அழிவிலிருந்து காக்கப்படும் என்று கூறியதாகத் தெரிவித்தார்கள்.
  • 1917: உருசிய நாட்டில் புரட்சி ஏற்பட்டது.
  • 1918: முன்னாள் சோவியத் யூனியனில் கிறித்தவ சமயம், குறிப்பாக கீழை கத்தோலிக்க திருச்சபைகள் துன்புறுத்தப்பட்டன (1985 வரை).
  • 1919, ஏப்பிரல் 13: பிரித்தானிய இந்தியாவில் அமிர்தசரசு நகரில் ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடிய மக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நிகழ்த்த பிரிகதியர் ஜெனரல் ரெஜினால்டு டையர் கட்டளையிட்டார். ஆயிரத்துக்கு மேலான மக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள்.
  • 1922: ஆஸ்திரியா மன்னர் முதலாம் சார்லஸ் போர்த்துகல்லுக்கு நாடுகடத்தப்பட்டு, வறுமையில் வாடி, இறந்தார். பின்னர் அவர் முத்திப்பேறு பெற்றவர் என்று அறிவிக்கப்பட்டார்.
  • 1922, சனவரி 22: திருத்ந்தை பதினைந்தாம் பெனடிக்ட் இறையடி எய்தினார்.
  • 1922, பெப்ருவரி 6: கர்தினால் அக்கீல்லே ராத்தி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினொன்றாம் பயஸ் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்[5].
  • 1925: திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் 1925ஆம் ஆண்டு திரு ஆண்டாகக்[6] கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
  • 1926: மெக்சிகோ நாட்டில் திருச்சபை துன்புறுத்தலுக்கு ஆளாகியது (1940 வரை).
  • 1927, மார்ச்சு 19: "கைவிடப்பட்டோரின் சகோதரிகள்" (Sisters of the Destitute) என்னும் துறவற சபையை அருள்திரு வற்கீஸ் பாலக்காப்பிள்ளில் (വർഗീസ് പാലയ്ക്കാപ്പിള്ളിൽ) (வேறுபெயர்: வற்கீஸ் பாயப்பிள்ளி വർഗീസ് പയ്യപ്പിള്ളി ) கேரளத்தில் தொடங்கினார்.
  • 1928, அக்டோபர் 2: "கடவுளின் நிறுவனம்" (Opus Dei) என்னும் சபையை புனித ஹொசேமரியா எஸ்க்ரீவா (Saint Josemaría Escrivá) என்பவர் ஸ்பெயின் நாட்டில் தொடங்கினார். உலகளாவிய இந்நிறுவனத்தில் கத்தோலிக்க சபையில் உறுதிப்பாடுள்ள பொதுநிலையினர் உறுப்பினராய் உள்ளனர்.
  • 1929, பெப்ருவர் 11: உரோமையில் இலாத்தரன் அரண்மனையில் இலாத்தரன் உடன்படிக்கை (Lateran Treaty) கையெழுத்தாகியது[7]. அதில் இத்தாலிய அரசர் மூன்றம் விக்டர் இம்மானுவேல் தரப்பில் இத்தாலிய முதலமைச்சர் பெனிட்டோ முசொலீனியும் வத்திக்கான் தரப்பில் திருத்தந்தையின் பதிலாளாக கர்தினால் பியேத்ரோ காஸ்ப்பரி (Cardinal Pietro Gasparri) என்பவரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, 1870இல் திருத்தந்தை நாட்டுப் பகுதிகளை (Papal States) இத்தாலி நாடு பிடித்துக்கொண்டது ஏற்கப்பட்டது. வத்திக்கான் நகர்-நாடு (State of the Vatican City) முழு அதிகாரம் கொண்ட தனி நாடாக நிறுவப்பட்டது. இத்தாலியின் ஏற்கப்பட்ட மத அமைப்பாக கத்தோலிக்க திருச்சபை இருக்கும் என்றும், திருத்தந்தை பன்னாட்டுப் பிரச்சனைகளில் நடுநிலை பேணுவார் என்றும் ஒப்பந்தமாயிற்று. இவ்வாறு "உரோமைப் பிரச்சினை" (Roman Question) தீர்வு பெற்றது.
  • 1929, அக்டோபர் 5: அருள்திரு வற்கீஸ் பாலக்காப்பிள்ளி (பாயப்பிள்ளி) காலமானார்.
  • 1930, மார்ச்சு 12: மகாத்மா காந்தி பிரித்தானிய அரசை எதிர்த்து தண்டியில் அமைதியான விதத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நிகழ்த்தினார்.
  • 1931, பெப்ருவரி 12: வத்திக்கான் நகரத்தில் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் வத்திக்கான் வானொலி நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார். அதை நிறுவியவர் நோபல் பரிசுபெற்ற கண்டுபிடிப்பாளர் குலியேல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi)[8] ஆவார். மோர்ஸ் தந்திக்குறிப்பின்[9] வழி வத்திக்கான் வானொலியில் அனுப்பப்பட்ட முதல் செய்தி "ஆண்டவரின் பெயரால்" (இலத்தீன்: In nomine Domini) என்பதாகும்.
  • 1931-1936: எசுப்பானியா நாட்டில் கத்தோலிக்க திருச்சபை இடதுசாரி குழுக்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாகியது. 6832 கத்தோலிக்க குருக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்[10].
  • 1933, சூலை 20: வத்திக்கான் திருப்பீடத்திற்கும் செருமானிய இராச்சியத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. வத்திக்கான் தரப்பில் கர்தினால் யூஜேனியோ பச்சேல்லி (பின்னாள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்), செருமனி தரப்பில் ஃப்ரான்ஸ் ஃபோன் பாப்பென் என்போர் முறையே திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் பெயராலும், பவுல் ஃபோன் ஹின்டென்பர்க் பெயராலும் கையெழுத்திட்டனர்.
  • 1937: நாசிசத்தை எதிர்த்து திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். "பற்றியெரியும் கவலையோடு" (Mit brennender Sorge) எனத் தொடங்கும் அச்சுற்றுமடலை எழுதியவர்கள் பிற்காலத் திருத்தந்தை பன்னிரண்டாம் பயசும் கர்தினால் மிக்கேல் ஃபோன் ஃபவுல்ஹாபெர் என்பவரும் ஆவர்.
  • 1939, மார்ச் 2: பன்னிரண்டாம் பயஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1939, செப்டம்பர் 1: செருமனி போலந்தை ஆக்கிரமித்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது[11]. போர் நிகழாமல் தடுப்பதற்காக வத்திக்கானில் அமைந்துள்ள திருச்சபையின் தலைமையிடமாகிய "திருப்பீடம்" (Holy See) எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. அதில் வெற்றிபெறவில்லை. போர் மூண்டதும் திருப்பீடம் எந்த ஒரு தரப்பினரோடும் சேராமல் நடுநிலை வகித்தது. ஐரோப்பாவில் நிகழ்ந்த போரின் காரணமாகப் புலம்பெயர்ந்த மக்களுக்கும் தேவையில் உழன்றவர்களுக்கும் திருச்சபைத் தலைமைப் பீடம் பல வகைகளில் உதவி செய்து, நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைத்தது.
  • 1939-1945: இரண்டாம் உலகப் போர்.
  • 1939: அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் மெல்போர்ன் நகரில் அமைந்த மறைமாவட்டப் பெருங்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அது புனித பேட்ரிக் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • 1939, பெப்ருவரி 10: திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இறையடி எய்தினார்.
  • 1939, மார்ச்சு 2: கர்தினால் யூஜேனியோ பச்சேல்லி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பன்னிரண்டாம் பயஸ் என்னும் பெயரைத் தெரிந்துகொண்டார்[12].
  • இரண்டாம் உலகப் போரின் போது: நாசி அரசு யூதர்களையும் பிற சிறுபான்மையோரையும் அழிக்கத் திட்டமிட்டு செயல்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருச்சபையின் தலைமைப் பீடம் வத்திக்கான் நகரிலும், துறவியர் இல்லங்களிலும் மடங்களிலும் புகலிடமும் உணவு உடை போன்றவையும் அளித்து உதவியது. அவுஷ்விட்ஸ் வதை முகாமில்[13] யூத இனத்தைச் சார்ந்த ஒரு மனிதரைத் துப்பாக்கிக்கு இரையாக்க நாசி ஆட்சியாளர்கள் முயன்றபோது, அம்மனிதரின் உயிரைக் காக்கும் பொருட்டு தன்னையே அவரிடத்தில் நிறுத்திக் கொல்லுமாறு கையளித்தார் புனித மாக்சிமிலியன் கோல்பே என்னும் துறவி [14]. அவரது பிறரன்புச் செயலை ஏற்று, அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கியது கத்தோலிக்க திருச்சபை. நாசிக் கட்சியின் இனவாதம், யூதர் மற்றும் சிறுபான்மையோர் ஒழிப்பு போன்ற கொள்கைகளை ஏற்கமாட்டோம் என்று கூறிய ஆயிரக்கணக்கான குருக்கள் மற்றும் பெண் துறவியரை நாசி ஆட்சியாளர் சிறையில் அடைத்தனர்[15].
  • 1943: திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இயேசு கிறிஸ்து உருவாக்கிய திருச்சபை கிறிஸ்துவின் மறையுடலாக (Mystical Body of Christ) உள்ளது என்னும் விவிலியக் கருத்தை ஒரு சுற்றுமடல் வழியாக விளக்கியுரைத்தார்.
  • 1943: விவிலியத்தை ஆய்வு செய்யும் போது, பிற இலக்கியங்களை ஆய்ந்திட பயன்படுத்தும் உத்திகளைப் பயன்படுத்தலாம் என்றும், கத்தோலிக்க ஆய்வாளர்கள் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்றும் ஊக்கமூட்டும் வகையில் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் "தூய ஆவியின் தூண்டுதலால்" (Divino Afflante Spiritu) என்னும் சுற்றுமடலை வெளியிட்டார்[16].
  • 1944: செருமானிய இராணுவம் உரோமை நகரை ஆக்கிரமித்தது. போரில் ஈடுபடுவதில்லை என்று நடுநிலை வகித்த வத்திக்கான் நகர்-நாட்டின் நிலைப்பாடு மதிக்கப்படும் என்று அடோல்ஃப் ஹிட்லர் வாயளவில் கூறினார். செருமனிக்கு எதிராகப் போரிட்டு காயமடைந்த நேசப்படையினருக்கும் வத்திக்கான் உதவி செய்தது என்று கூறி நாசி செருமனி வத்திக்கானையும் ஆக்கிரமிக்கும் ஆபத்து நெருங்கியது. அந்நிலையில் ஒரு சில வாரங்கள் ஆக்கிரமிப்புக்குப் பின் உரோமை நகர் நேசப்படையினரால் விடுதலை செய்யப்பட்டது.
  • 1945, ஆகத்து 6: ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா நகரிலும் நாகசாகி நகரிலும் (ஆகத்து 9) ஐக்கிய அமெரிக்க நாடுகள் அணுகுண்டு வீசியது.
  • 1947: திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் திருவழிபாட்டில் மக்கள் செயல்முறையில் பங்கேற்றலின் தேவையை வலியுறுத்தி, "இறைவனின் இடைநிலையாளர்" (Mediator Dei) என்னும் தலைப்பில் ஒரு சுற்றுமடல் விடுத்தார்[17].
  • 1947, ஆகத்து 15: இந்தியா பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
  • 1948, சனவரி 30: மகாத்மா காந்தி துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி உயிர்நீத்தார்.
  • 1950: திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1950ஆம் ஆண்டு திரு ஆண்டு (புனித ஆண்டு - Holy Year) எனக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார் [6].
  • 1950, சூன் 24: திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1902இல் கற்பைக் காக்க இறந்த மரியா கொரெட்டி என்னும் பன்னிரண்டு வயது சிறுமியை "மறைச்சாட்சி" என்று அறிவித்து, புனிதர் நிலைக்கு உயர்த்தினார்[18].
  • 1950, ஆகத்து 12: கத்தோலிக்க கொள்கைகளைத் தாக்குகின்ற தவறான கருத்துக்களைக் கண்டித்து "Humani generis" என்னும் தலைப்பில் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார்[19].
  • 1950, நவம்பர் 1: "புனித கன்னி மரியா தம் மண்ணுலக வாழ்வை முடித்தபின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்" என்னும் திருச்சபைப் போதனையை வழுவா வரத்தோடு அறுதியிட்டு, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் உலகறிய எடுத்துரைத்தார். இவ்வாறு அறிவிக்குமுன் உலகனைத்திலும் பரவியுள்ள திருச்சபைத் தலைவர்களாகிய ஆயர்களின் விருப்பம் கேட்டறியப்பட்டது. மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா ஆகத்து 15ஆம் நாள் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது[20].
  • 1950, திசம்பர் 25: அகழ்வாளர்களின் ஆய்வின் அடிப்படையில் புனித பேதுரு பெருங்கோவிலின் அடித்தளத்தின் கீழ் புனித பேதுருவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதாக திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அறிவித்தார்[21].
  • 1953, சனவரி 12: மும்பை (பம்பாய்) உயர்மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த வலேரியன் கிராசியாஸ் திருத்தந்தை பன்னிரண்டாம் பயசால் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். இந்தியாவின் முதல் கர்தினால் இவரே.
  • 1954, மே 29: திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1914இல் இறந்த திருத்தந்தை பத்தாம் பயசை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்[22].
  • 1954: திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் 1954ஆம் ஆண்டு "மரியாவின் ஆண்டு" என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்தார். அன்னை மரியாவின் பக்தியை வளர்க்கவும், ஒவ்வொரு கோவிலிலும் அன்னை மரியாவுக்கு ஒரு திருச்சிலையாவது அமைக்கவும் திருத்தந்தை வேண்டுகோள் விடுத்தார். திருச்சபை வரலாற்றில் மரியாவுக்கென்று ஓர் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.[23]
  • 1955-1975: வியத்நாம் போர்.
  • 1958, அக்டோபர் 9: திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் தம் 82ஆம் வயதில் இறையடி எய்தினார்.
  • 1958, அக்டோபர் 28: கர்தினால் ஆஞ்செலோ ஜுசேப்பே ரொங்கால்லி கத்தோலிக்க திருச்சபையின் 262ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இவருக்கு வயது 77.
  • 1958, திசம்பர் 25: திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் தம் மறைமாவட்டமாகிய உரோமையைச் சந்திக்கச் சென்றார். மருத்துவ மனைகளுக்குச் சென்று நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். மறுநாள் உரோமையில் உள்ள "விண்ணக அரசி" சிறைக்கூடம் சென்று அங்கு கைதிகளைச் சந்தித்துப் பேசினார். "என்னைத் தேடி வர உங்களால் இயலாது; எனவே நான் உங்களைத் தேடி வந்தேன்" என்று அவர்களிடம் கூறினார்.
  • 1959, சனவரி 25: தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் மாதத்திலேயே திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வை அறிவித்தார். அதாவது உலகில் உள்ள அனைத்து ஆயர்களையும் அழைத்து வத்திக்கான் நகரில் பொதுச்சங்கம் ஒன்றினை நடத்தப்போவதாக அறிவித்தார்.
  • 1961, மே 15: திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் சமூகப் பிரச்சினைகள் பற்றி கத்தோலிக்க திருச்சபை வழங்கும் போதனையை எடுத்துக்கூறும் விதத்தில் "அன்னையும் ஆசிரியையும்" (Mater et Magistra) என்னும் சுற்றுமடலை வெளியிட்டார்[24].
  • 1962, அக்டோபர் 11: திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இந்நாளில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடங்கிவைத்தார். இது கத்தோலிக்க திருச்சபையின் 21ஆம் பொதுச்சங்கம் ஆகும். இப்பொதுச்சங்கம் வலியுறுத்திய சில முக்கிய கருத்துகள்: எல்லாக் கிறித்தவர்களும் புனித வாழ்க்கை நடத்த அழைக்கப்படுகிறார்கள்; கிறித்தவ சபைகளுக்கிடையே ஒன்றிப்பு ஏற்பட அனைவரும் உழைக்கவேண்டும்; வழிபாட்டில் பயன்படுத்தும் மொழி அந்தந்த நாட்டு மக்களின் மொழியாக இருப்பது சிறந்தது; எல்லா மக்களும் வழிபாட்டில் செயல்முறையில் பங்கேற்றல் சிறப்பு; எல்லா சமயத்தாரோடும் திருச்சபை உரையாடலில் ஈடுபட வேண்டும்; காலத்தின் அறிகுறிகளை நற்செய்தியின் ஒளியில் ஆய்வுசெய்து இன்றைய உலகத்தின் பல்வேறு துறைகளோடு திருச்சபை உரையாடவும், பொதுநன்மை கருதி ஒத்துழைக்கவும் வேண்டும்[25].
  • 1962-1965: இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் முக்கிய நிகழ்வான இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடந்த காலம்.
  • 1962, அக்டோபர்: கியூபா ஏவுகணை நெருக்கடி. சோவியத் யூனியனும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் அணு ஆயுதப் போர் நிகழ்த்தப் போவதாக அச்சுறுத்தின[26].
  • 1963, ஏப்பிரல் 11: திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பனிப்போரில் ஈடுபட்டு அணு ஆயுதப் போர் நிகழும் நெருக்கடியை உருவாக்கிய நிலையில் உலக அமைதியை வலியுறுத்தி, "நன்மனம் கொண்ட அனைத்து மக்களுக்கும்" "அவனியில் அமைதி" (Peace On Earth, இலத்தீனில் Pacem in Terris) என்னும் சுற்றுமடலை விடுத்தார்[27].
  • 1963, சூன் 3: திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் புற்று நோய் வாய்ப்பட்டு தம் 81ஆம் வயதில் காலமானார்.
  • 1963, சூன் 21: கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆறாம் பவுல் என்னும் பெயரைச் சூடிக் கொண்டார்[28]. திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானின் இறப்போடு தானாகவே முடிவுபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக ஆறாம் பவுல் அறிவித்தார்.
  • 1963, செப்டம்பர் 29 - திசம்பர் 4: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இரண்டாம் அமர்வு திருத்தந்தை ஆறாம் பவுலின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
  • 1963, நவம்பர் 22: அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி டெக்ஸாஸ் மாநிலத்தில் டால்லஸ் நகரில் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி உயிர்நீத்தார்[29].
  • 1964, சனவரி 4-6: திருத்தந்தை ஆறாம் பவுல் எருசலேம் நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். ஆட்சியிலிருந்த ஒரு திருத்தந்தை விமானப் பயணம் மேற்கொண்டது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். எருசலேமில் ஆறாம் பவுல் மரபுவழி திருச்சபையின் மறைமுதல்வரும் காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயருமான முதலாம் அத்தனாகோரசை சந்தித்தார். 1054இல் நிகழ்ந்த பெரும் சமயப்பிளவுக்குப் பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இரு திருச்சபைகளின் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறை ஆகும்.
  • 1964, ஆகத்து 6: திருத்தந்தை ஆறாம் பவுல் "கிறிஸ்துவின் திருச்சபை" (Ecclesiam Suam) என்னும் தலைப்பில் முதல் சுற்றுமடல் வெளியிட்டார். அதில் தம் ஆட்சிக் காலம் கிறித்தவ சபைகளோடும் எல்லா மக்களோடும் உரையாடலில் ஈடுபடுவதாக இருக்கும் என்று அறிவித்தார்[30].
  • 1964, செப்டம்பர் 14 - நவம்பர் 21: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மூன்றாம் அமர்வு திருத்தந்தை ஆறாம் பவுலின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
  • 1964, திசம்பர் 2-5: திருத்தந்தை ஆறாம் பவுல் இந்தியாவுக்குத் திருப்பயணமாகச் சென்றார். மும்பை நகரில் நடைபெற்ற "38ஆம் உலக நற்கருணை மாநாட்டில்" கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றி, உரையாற்றினார். மும்பை நகரில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு செய்தி வழங்கினார்[31]. உலகில் வறுமையை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சமயங்களுக்கிடையே நல்லெண்ணம் உருவாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்[32].
  • 1965, செப்டம்பர் 14 - திசம்பர் 8: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இறுதி அமர்வாகிய நான்காம் அமர்வு திருத்தந்தை ஆறாம் பவுலின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
  • 1965, அக்டோபர் 3: திருத்தந்தை ஆறாம் பவுல் நியூயார்க் நகருக்குப் பயணமாகச் சென்றார். "போர் வேண்டாம், வேண்டவே வேண்டாம்!" என்று ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார்[33].
  • 1965, திசம்பர் 7: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இறுதிக் கூட்டம் நடைபெற்ற இந்த நாளில் திருத்தந்தை ஆறாம் பவுலும் மரபுவழி திருச்சபையின் தலைவரும் காண்ஸ்டாண்டிநோபுள் மறைமுதுவருமான முதலாம் அத்தனாகோராஸ் என்பவரும் இணைந்து ஓர் அறிக்கை விடுத்தனர். அந்த அறிக்கையை உரோமையில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கக் கூட்டத்தின்போது திருத்தந்தை ஆறாம் பவுல் வாசித்தளித்தார். அதே நேரத்தில் இஸ்தான்புல் நகரில் (பண்டைய காண்ஸ்டாண்டிநோபுள்) அதே அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது. இரு திருச்சபைகளும் ஒன்றையொன்று 1054இல் சபைநீக்கம் செய்தது (காண்க: பெரும் பிளவு) அந்த அறி்க்கையில் நினைவுகூரப்பட்டது. அச்சபைநீக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இது கிறித்தவ சபைகளுக்கிடையே நல்லெண்ணமும் நல்லுறவும் வளர்வதற்கு ஒரு முக்கிய படியாக அமைந்தது[34].
  • 1965, திசம்பர் 8: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவெய்தியதைத் தொடர்ந்து உரோமையில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதற்கு திருத்தந்தை ஆறாம் பவுல் தலைமை தாங்கினார். அன்னை தெரேசாவும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
  • 1967, மார்ச்சு 26: திருத்தந்தை ஆறாம் பவுல் "மக்களின் முன்னேற்றம்" (Populorum Progressio = On the Development of Peoples) என்னும் பொருள் குறித்து ஒரு சமூக போதனைச் சுற்றுமடல் வெளியிட்டார். அதில் வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாடுகளுக்குப் பிற நாடுகள் மனமுவந்து உதவி அளித்து எல்லா மக்களின் முழு வளர்ச்சிக்குத் துணைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்[35].
  • 1967, மே 13: திருத்தந்தை ஆறாம் பவுல் போர்த்துகல் நாட்டில் பாத்திமா நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்குதான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் (1917) அன்னை மரியா மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார்[36].
  • 1967, சூன் 5-10: "ஆறு நாள் போர்" - இசுரயேலும் பாலஸ்தீன நாடும் போரில் ஈடுபட்டன[37].
  • 1968, ஏப்பிரல் 4: அமெரிக்க-ஆப்பிரிக்க இனத்தவரின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி உயிர்நீத்தார்[38].
  • 1968, சூலை 25: திருத்தந்தை ஆறாம் பவுல் "மானிட உயிர்" (Humanae Vitae = On Human Life) என்னும் பொருளில் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். அதில் திருமணத் தம்பதியர் பொறுப்பான பெற்றோராகச் செயல்பட வேண்டும் என்றும், குழந்தைகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதில் இயற்கைக் குடும்பக் கட்டுப்பாடு முறை தவிர செயற்கை முறைகளைக் கையாளுவது அறநெறிக்கு மாறானது என்றும் போதித்தார். இச்சுற்றுமடலின் போதனை பல அரங்குகளில் சர்ச்சைக்கு உள்ளானது[39].
  • 1969, சூன் 10: திருத்தந்தை ஆறாம் பவுல் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகருக்குப் பயணமாகச் சென்று, பன்னாட்டு உழைப்பு நிறுவனக் கூட்டத்தில் (ILO = International Labor Organization) உரையாற்றினார்[40].
  • 1969, சூலை 20: நாசா விண்வெளி நிலையம் ஏவிய அப்போலோ 11 என்னும் விண்வெளிக் கப்பல் சந்திரனைச் சென்றடைந்து வரலாறு படைத்தது. மறுநாள் முதல் முறையாக நிலாவில் காலடி எடுத்து வைத்தவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின்[41].
  • 1970, நவம்பர் 25 - திசம்பர் 5: திருத்தந்தை ஆறாம் பவுல் ஆசியக் கண்டத்தில் ஒன்பது நாடுகளுக்குப் பயணமாகச் சென்றார். அவை: ஈரான், கிழக்கு பாக்கிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்), பிலிப்பீன்சு, அமெரிக்க சாமோவா, சாமோவா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, ஹாங்காங், இலங்கை ஆகிய நாடுகளாகும். நவம்பர் 27இல் மணிலா விமான நிலையத்தில் ஒருவர் திருத்தந்தையைத் தாக்க முனைந்தார்.
  • 1971: விடுதலை இறையியல் என்னும் புதிய அணுகுமுறை கிறித்தவ இறையியல் ஆக்கத்தில் தொடங்க பெரு நாட்டு இறையியலார் குஸ்தாவோ குத்தியேரெஸ் (Gustavo Gutierrez) வெளியிட்ட "விடுதலை இறையியல்" என்னும் நூல் வழிவகுத்தது[42].
  • 1978, ஆகத்து 6: திருத்தந்தை ஆறாம் பவுல் இறையடி எய்தினார்.
  • 1978, ஆகத்து 26: கர்தினால் அல்பீனோ லூச்சியானி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலாம் யோவான் பவுல் என்னும் பெயரைச் சூடிக் கொண்டார். தமக்கு முன் ஆட்சியில் இருந்த இரு திருத்தந்தையர்களின் பெயர்களையும் இணைத்து ஒரு புதுப் பெயரைத் தமக்கென ஒரு திருத்தந்தை தெரிந்துகொண்டது இதுவே முதல் முறை. ஆடம்பரமான முடிசூட்டு விழா தமக்கு வேண்டாம் என்று இவர் மறுத்துவிட்டர். 33 நாள்கள் மட்டுமே ஆட்சி செய்த இவர் திடீரென மாரடைப்பால் இறந்தபோது சிலர் அச்சாவு மர்மமாக இருந்ததாகக் கருத்துத் தெரிவித்தனர்[43].
  • 1978, செப்டம்பர் 28: முதலாம் யோவான் பவுல் 33 நாள் ஆட்சிக்குப் பின் இறையடி எய்தினார்.
  • 1978, அக்டோபர் 16: கர்தினால் காரோல் யோசஃப் வொய்த்தீவா திருத்தந்தையாகத் ���ேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் யோவான் பவுல் என்னும் பெயரைத் தெரிந்துகொண்டார்[44]. இவரே சிலாவிய (Slavic) நாடுகளிலிருந்து முதல் முறையாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், 16ஆம் நூற்றாண்டில் ஓலாந்து நாட்டிலிருந்து திருத்தந்தை ஆன திருத்தந்தை நான்காம் ஹேட்ரியன் என்பவருக்குப் பிறகு திருத்தந்தை ஆன இத்தாலியர் அல்லாத திருத்தந்தை இவர் ஆவார்.
  • 1979, சனவரி 25: இரண்டாம் யோவான் பவுலின் முதல் வெளிநாட்டுப் பயணம். அவர் தொமீனிக்கன் குடியரசு, மெக்சிகோ, பஹாமாஸ் என்னும் நாடுகளுக்குப் பயணமாகச் சென்றார்.
  • 1979, மார்ச்சு 4: இரண்டாம் யோவான் பவுல் "மனிதனின் மீட்பர்" (Redemptor Hominis) என்னும் தலைப்பில் தம் முதல் சுற்றுமடலை வெளியிட்டார். அதில் இயேசு கிறிஸ்து உலக மக்களுக்குக் கடவுளின் மீட்புச் செய்தியைக் கொணர்ந்தார் என்னும் உண்மையையும், உலக வரலாற்றில் மனிதர் மைய இடம் பெறுவதையும் விளக்கி உரைத்தார்[45].
  • 1979, சூன் 2 - 10: தாம் பிறந்து வளர்ந்த நாடாகிய போலந்துக்குத் திருத்தந்தை என்னும் தகுதியிலும் "மண்ணின் மைந்தன்" என்னும் உரிமையோடும் இரண்டாம் யோவான் பவுல் முதல் பயணம் மேற்கொண்டார். சோவியத் யூனியனின் செல்வாக்குக்குக் கீழ் இருந்த நாடுகளில் முதல் தொழிலாளர் யூனியனாக "சாலிடாரிட்டி" (Solidarity) என்னும் இயக்கம் தொழிலாளரின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும், அரசியல் சீர்திருத்தம் கோரியும் செயல்படுவதற்கு திருத்தந்தையின் பயணம் வழிகோலிற்று[46].
  • 1979, சூன் 7: இரண்டாம் யோவான் பவுல் போலந்தில் கிராக்கோவ் நகருக்கு அருகே அமைந்திருந்த அவுஷ்விட்ஸ் என்னும் நாசி வதை முகாம் வளாகத்துக்குச்[47] சென்றார். அங்கே உள்ள உள்ள 36 வதை முகாம்களில் மிகப் பெரியதாகிய பிர்க்கெனாவ் வதை முகாமில் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது மனிதர் பிற மனிதரை வெறுப்பதின் உச்சக்கட்டமாகக் காட்சியளிக்கும் வதை முகாம் அநீதி மனித வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிகழ்ந்திடா வண்ணம் அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்[48].
  • 1981, மே 13: புனித பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தில் இரண்டாம் யோவான் பவுலை கொலைசெய்யும் நோக்கத்துடன் துருக்கி நாட்டவரான முகமது அலி ஆட்சா (Mehmet Ali Agca) என்பவர் துப்பாக்கியால் சுட்டார்[49]. திருத்தந்தையின் மேல் பட்ட நான்கில் இரு குண்டுகள் அவரது அடிவயிற்றில் பதிந்தன. ஒரு குண்டு வலது கை மேற்புறத்திலும் இன்னொரு குண்டு இடது கையிலும் பட்டது. தம் உயிரைப் பறிக்கத் தேடிய ஆக்சாவைத் தாம் மனதார மன்னித்துவிட்டதாக இரண்டாம் யோவான் பவுல் தாம் ஜெமேல்லி மருத்துவ மனைக்குக்குக்[50] கொண்டுபோகப்பட்ட நேரத்திலேயே கூறினார் . மருத்துவ மனையில் திருத்தந்தை 22 நாள்கள் இருந்தார்.
  • 1981, செப்டம்பர் 14: இரண்டாம் யோவான் பவுல் "மனித உழைப்பு" என்னும் தலைப்பில் கிறித்தவ சமூகப் போதனை ஏட்டினை வெளியிட்டார். அதில் மனித உழைப்பின் மேன்மை, மனித உரிமைகள், முதலாளியமும் பொதுவுடைமையும் மனித உழைப்பு பற்றித் தெரிவிக்கும் கருத்துகள், உழைப்பு பற்றிய கிறித்தவக் கண்ணோட்டம் போன்ற பொருள்கள் விவாதிக்கப்படுகின்றன[51].
  • 1981, திசம்பர்: இரண்டாம் யோவான் பவுல் உரோமையில் ரெபீப்பியா (Rebibbia) சிறைக்கூடம் சென்று அங்கு தம்மைக் கொல்ல முயன்று, பிடிபட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஆட்சா என்பவரை அவரது சிற்றறையில் 21 நிமிடங்கள் சந்தித்தார். தம்மைக் கொல்ல எண்ணிய அவரை மனதார மன்னித்துவிட்டதாகத் திருத்தந்தை தெரிவித்தார்[52].
  • 1982, மே 13: இரண்டாம் யோவான் பவுல் போர்த்துகல் நாட்டு பாத்திமா நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். சரியாக ஓராண்டுக்கு முன் துப்பாக்கிக் குண்டுக் காயத்திலிருந்து தாம் உயிர்தப்பியதற்கு அன்னை மரியாவின் அருளே காரணம் என்று கூறி நன்றி செலுத்துவதற்காக அவர் பாத்திமா சென்றார். அன்னை மரியா பாத்திமாவில் முதல்முறையாக மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்த நாள் மே மாதம் 13 (ஆண்டு: 1917) என்பது குறிப்பிடத்தக்கது[53]. திருத்தந்தையின் உடலில் குண்டு பாய்ந்ததும் மே 13ஆம் நாள் தான்.
  • 1982, மே 28 முதல் சூன் 2 வரை: இரண்டாம் யோவான் பவுல் பிரித்தானிய நாட்டுக்குத் திருப்பயணமாகச் சென்றார். அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக, குண்டு துளைக்க முடியாததும், முழுமையாக மூடப்பட்டதுமான சிற்றுந்து தயாரிக்கப்பட்டு முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அச்சிற்றுந்து "திருத்தந்தைச் சிற்றுந்து" (Popemobile) என்று அழைக்கப்படுகிறது[54].
  • 1982, செப்டம்பர் 12: இரண்டாம் யோவான் பவுல் வத்திக்கான் நகரில் பாலஸ்தீன விடுதலை நிறுவனத் தலைவராகிய யாசர் அராபத்தைச் சந்தித்தார். அச்சந்திப்பு பற்றி இசுரயேலும் யூத குழுக்களும் கடுமையாக விமரிசித்தன.
  • 1983, மார்ச்சு 25 முதல் 1984 ஏப்பிரல் 22 வரை "மீட்பின் யூபிலி ஆண்டு" கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு இறந்த ஆண்டு கிபி 33 எனக் கணக்கிட்டு, அந்த மீட்புச் செயலின் 1950ஆம் ஆண்டு நினைவாக இந்த யூபிலி ஆண்டு கொண்டாடப்படுவதாக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அறிவித்திருந்தார். 1983, மார்ச் 25ஆம் நாள் இந்த யூபிலி ஆண்டைத் தொடங்கும் விதத்தில் திருத்தந்தை உரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலில் அமைந்துள்ள புனித கதவைத் திறந்துவைத்தார். யூபிலி ஆண்டின்போது கிறித்தவர்கள் ஞானநலன்களை மிகுதியாகப் பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
  • 1983, செப்டம்பர் 29: இரண்டாம் யோவான் பவுல் உலக அமைதிக்காகப் பன்னாட்டளவில் முயற்சிகள் மேற்கொண்டார். அதன் பின்னணியில் வல்லரசுகளான ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் யூனியன் ஆகிய வல்லரசுகள் அணு ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்[55].
  • 1984, சனவரி 10: திருச்சபைத் தலைமைப் பீடமாகிய வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் அதிகாரப்பூர்வமாக முழு அரசு உறவு ஏற்படுத்திக்கொண்டன.
  • 1986, சனவரி 31 முதல் பெப்ருவரி 11 வரை: இரண்டாம் யோவான் பவுல் இந்தியாவுக்குத் திருப்பயணமாகச் சென்றார்[56]. பயண விவரங்கள்:
  • பெப்ருவரி முதல் நாள் தில்லி விமானத் தளத்தில் இறங்கிய பின் தில்லி தூய இதய மறைமாவட்டப் பேராலயம் சென்று இறைவேண்டல் செய்தார். பின்னர் காந்தி சமாதி சென்று, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உலக சமாதானத்திற்காக இறைவேண்டல் செய்தார். இந்தியக் கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்தார். இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் இரண்டாம் யோவான் பவுல் திருப்பலி நிறைவேற்றினார்.
  • பெப்ருவரி 2ஆம் நாள் இரண்டாம் யோவான் பவுல் தில்லி மற்றும் ஆக்ரா மண்டலங்களைச் சார்ந்த் ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார். பின்னர் தில்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் பல சமயங்களையும் பண்பாடுகளையும் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்தார்.
  • பெப்ருவரி 3ஆம் நாள் ராஞ்சி நகரில் தொழிலாளர்களோடு சேர்ந்து திருப்பலி நிறைவேற்றினார். பின்னர், கொல்கத்தா நகருக்குப் பயணமாகி, அங்கு புனித பிரான்சிசு சேவியர் கல்லூரியில் வெவ்வேறு சமயத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். பின்னர் வெவ்வேறு கிறித்தவ சபைகளின் தலைவர்களைச் சந்தித்தார். கொல்கத்தாவில் அன்னை தெரேசாவை இரண்டாம் யோவான் பவுல் சந்தித்து அன்போடு அரவணைத்தார். அன்னை தெரேசா நிறுவிய நிர்மல் ஹ்ருதய் ஆஷ்ரம் என்னும் இல்லம் சென்று அங்கிருந்த ஏழைகளையும் முதியோர்களையும் சந்தித்து உரையாடினார். அங்கு 86 படுக்கைகளில் கிடந்த ஒவ்வொருவரையும் அணுகி, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்காக இறைவேண்டல் செய்து ஒவ்வொருவருக்கும் ஒரு செபமாலையை அன்பளிப்பாகக் கொடுத்தார்[57].
  • பெப்ருவரி 3ஆம் நாள் கொல்கத்தாவில் திருப்பலி நிறைவேற்றினார். பல்வேறு சமயத் தலைவர்களைச் சந்தித்து, அவர்கள் ஏழைகள் மட்டில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  • பெப்ருவரி 4ஆம் நாள் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஷில்லாங் கோல்ஃப் மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றினார். பின்னர், மேற்கு வங்காள கத்தோலிக்கருக்குத் திருப்பலி நிகழ்த்தினார்.
  • பெப்ருவரி 5ஆம் நாள் இரண்டாம் யோவான் பவுல் சென்னை வந்தடைந்து, அங்கே இராசாசி மண்டபத்தில் பல சமயங்களின் தலைவர்களைச் சந்தித்து, பல்சமய உரையாடலின் தேவையை வலியுறுத்தினார்[58].
  • பெப்ருவரி 5ஆம் நாள் இரண்டாம் யோவான் பவுல் புனித தோமா மலையில் ("பரங்கி மலை") அமைந்துள்ள புனித தோமா கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் செய்தார்[59].
  • பெப்ருவரி 5ஆம் நாள் இரண்டாம் யோவான் பவுல் சென்னை மெரீனா கடற்கரையில் புனித அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ) திருவிழாவைச் சிறப்பிக்க திருப்பலி நிறைவேற்றினார். அப்போது ஆற்றிய மறையுரையில் இரண்டாம் யோவான் பவுல் பின்வருமாறு கூறினார்[60]:
  • 1986, ஏப்பிரல் 13: இரண்டாம் யோவான் பவுல் உரோமை நகரில் அமைந்துள்ள மிகப் பழமையான யூத வழிபாட்டுக் கூடத்தைச் சென்று சந்தித்து, இறைவேண்டல் செய்தார். கிறித்தவர்களும் யூதர்களும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். யூதர்கள் கிறித்தவர்களுக்கு "அன்பார்ந்த மூத்த சகோதரர்களாக உள்ளார்கள்" என்று கூறினார்[68].
  • 1986, மே 18: "உயிரளிக்கும் ஆண்டவர்" (Dominum Vivificantem) என்னும் தலைப்பில் தூய ஆவி பற்றி ஒரு சுற்றுமடலை இரண்டாம் யோவான் பவுல் வெளியிட்டார்[69].
  • 1986, அக்டோபர் 26-27: இத்தாலி நாட்டு அசிசி நகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க "பல்சமய உரையாடல்-இறைவேண்டல் கூட்டம்" நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து தலைமையேற்ற இரண்டாம் யோவான் பவுல் உலக அமைதிக்காக எல்லா சமயங்களும் சமயத்தவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்[70].
  • 1987, சூன் 6: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் ரானல்ட் ரேகன் வத்திக்கான் சென்று திருத்தந்தந்தை இரண்டாம் யோவான் பவுலைச் சந்தித்தார்.
  • 1987, திசம்பர் 30: திருச்சபை உலக மக்களை வாட்டுகின்ற சமூகப் பிரச்சினைககளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளது என்னும் உண்மையை விளக்கி, "Sollicitudo Rei Socialis" (On Social Concerns) என்னும் தலைப்பில் திருத்தந்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார்[71]
  • 1989, மே 27: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் ஜோர்ஜ் H. W. புஷ் வத்திக்கான் நகரில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை சந்தித்துப் பேசினார்.
  • 1989, திசம்பர் 1: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சோவியத் யூனியனின் அதிபர் மிக்காயில் கோர்பச்சோவை வத்திக்கானில் வரவேற்றுப் பேச்சு நடத்தினார். சோவியத் யூனியனின் கிரெம்ளின் அதிபர் ஒருவர் திருத்தந்தையைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சு நடத்தியது இதுவே முதல் முறை ஆகும். பேச்சுவார்த்தையின்போது கோர்பச்சோவ் தம் நாட்டில் மதச் சுதந்திரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.
  • 1991, சனவரி 15: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷுக்கும் ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கும் கடிதம் எழுதி, ஈராக்கில் போர் நிகழும் ஆபத்தைத் தடுக்க பெருமுயற்சி செய்தார்.
  • 1991, மே 1: சோவியத் யூனியன் தனித்தனி நாடுகளாகப் பிரிந்த பின் முதல் முறையாக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒரு சமூகப் போதனைச் சுற்றுமடல் வெளியிட்டார். "நூறாம் ஆண்டு" (Centesimus Annus = The Hundredth Year) எனத் தொடங்கும் அந்த ஏடு, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் (1891, மே 15) திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ தொழிலாளர் உரிமைகள் பற்றி வெளியிட்டிருந்த "ரேரும் நோவாரும்" (Rerum Novarum) என்னும் சுற்றுமடலின் நூற்றாண்டு நினைவாக அளிக்கப்பட்டது. சோசியலிசத்தின் வீழ்ச்சி முதலாளியத்தின் வெற்றி என்று பொருள்படாது என்றும், முதலாளியமும் தொழிலாளரின் நலனில் அக்கறை கொள்ளாமல் ஊதியம் ஈட்டுவதிலேயே கண்ணாயிருந்தால் ஒருநாள் வீழ்ச்சியுறும் என்றும் எடுத்துரைத்தார்[72].
  • 1992, மே 17: புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஹோசேமரியா எஸ்க்ரீவா தெ பலாகேர் என்பவரையும் ஜோசஃபீன் பக்கீத்தா என்பவரையும் முத்திப்பேறு பெற்றோர் என்னும் நிலைக்கு உயர்த்தினார்[73].
  • 1992, அக்டோபர் 31: கலிலேயோ கலிலேயி பூமிதான் சூரியனைச் சுற்றுகிறதே ஒழிய சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்று கூறியதைத் திருச்சபை கண்டனம் செய்தது தவறு என்பதை ஏற்று, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வருத்தம் தெரிவித்தார்[74].
  • 1992, திசம்பர் 7: "கத்தோலிக்க திருச்சபையின் போதனைச் சுருக்கம்" (Catechism of the Catholic Church) என்னும் ஏட்டினை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வெளியிட்டார். இது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க மறுமலர்ச்சிப் பார்வையில் கிறித்தவ கொள்கைகளை எடுத்துரைக்கிறது. இதற்கு முன்னால், சுமார் 5 நூற்றாண்டுகளுக்கு முன் திரெந்து பொதுச்சங்கத்தைத் தொடர்ந்து ஒரு "போதனைச் சுருக்கம்" வெளியிடப்பட்டிருந்தது.
  • 1993, ஆகத்து 15: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அமெரிக்காவில் டென்வர் நகரில் நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களி கலந்துகொண்டார்.
  • 1993, செப்டம்பர் 4-10: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் முன்னாளைய சோவியத் யூனியனுக்கு முதல் முறையாகப் பயணமாகச் சென்றார். பால்டிக் நாடுகளாகிய லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சந்தித்தார்.
  • 1993, திசம்பர் 30: கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமாகிய திருப்பீடமும் (Holy See) இசுரயேல் நாடும் ஒன்றையொன்று முழுத் தன்னுரிமை கொண்ட நாடுகளாக ஏற்று, கையொப்பம் இட்டன.
  • 1994, மே 22: கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி, பெண்கள் குருக்களாகத் திருநிலை பெற முடியாது என்னும் கொள்கையைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அறுதியான கோட்பாடாக எடுத்துரைத்தார்[75].
  • 1994, அக்டோபர் 20: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய "எதிர்பார்ப்பை நோக்கி அடியெடுத்து வைக்க" (Crossing the Threshold of Hope) என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார்[76].
  • 1995, மார்ச்சு 25: மனித உயிரை மதித்து மக்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு கலாச்சாரம் இவ்வுலகில்ஏற்படுவதற்காக உலக மக்கள் யாவரும் ஒத்துழைக்க வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "மனித உயிர் பற்றிய நற்செய்தி" (The Gospel of Life = Evangelium Vitae) என்னும் தலைப்பில் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். அதில் "சாவைப் போற்றும் மனநிலை" (culture of death) மனிதரிடமிருந்து மறைய வேண்டும் என்று கூறுகிறார்[77].
  • 1996, நவம்பர் 19: பொதுவுடைமை ஆட்சியின் கீழ் உள்ள கியூபா நாட்டின் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சந்தித்துப் பேசினார்.
  • 1997, மார்ச் 10: ஐக்கிய அமெரிக்க நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் வத்திக்கான் லிபியா நாட்டோடு அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது.
  • 1998, சனவரி 21-26: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ப���துவுடைமை நாடாகிய கியூபாவுக்கு முதல் முறையாகப் பயணம் சென்றார். அங்கு திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட இப்பயணம் தூண்டுதலாக அமைந்தது[78].
  • 1998, மார்ச்சு 16: "நாங்கள் நினைவுகூர்கின்றோம்: யூத இனப்படுகொலை பற்றிய ஒரு சிந்தனை" (We Remember: Reflection on the Shoah, or Holocaust) என்னும் தலைப்பில் வத்திக்கான் ஒரு ஏடு வெளியிட்டது[79]. அதில் இரண்டாம் உலகப் போரின் போது சில கிறித்தவர்கள் உறுதியாகச் செயல்படாததற்கு கத்தோலிக்க திருச்சபை வருத்தம் தெரிவித்தது. போரின் போது திருத்தந்தையாக இருந்த பன்னிரண்டாம் பயஸ் துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்கும் பிறருக்கும் தம்மால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்தார் என்றும் அந்த ஏடு கூறியது.
  • 1998, செப்டம்பர் 14: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "இறைநம்பிக்கையும் பகுத்தறிவும்" (Faith and Reason = Fides et Ratio) என்னும் பொருள் பற்றி முக்கியமான ஒரு சுற்றுமடலை வெளியிட்டார். அதில் கடவுள் நம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு எதிரானதல்ல என்றும், மனிதர் தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி, இவ்வுலகை ஆக்கிய கடவுள் ஒருவர் உண்டு என்றும், அவரே மனித வாழ்க்கையின் இறுதி கதி என்றும் அறிந்து, அக்கடவுளை நம்பி ஏற்க முடியும் என்றும் விளக்கி உரைத்தார். மெய்யியலும் இறையியலும் ஒன்றோடொன்று ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்[80].
  • 1999, சனவரி 26: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் பில் கிளிண்டனை செயிண்ட் லூயிஸ் நகரில் சந்தித்துப் பேசினார்.
  • 1999, மார்ச்சு 1: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அன்னை தெரேசா முத்திப்பேறு பெற்றவர் என்னும் பட்டம் பெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கலாம் என்று இசைவு அளித்தார்.
  • 1999, திசம்பர் 24: இயேசு கிறிஸ்து பிறந்த இரண்டாயிரம் ஆண்டு நிறைவுறுவதை முன்னிட்டும், மூன்றாம் ஆயிரமாண்டு (Third Millennium) தொடங்கவிருப்பதை முன்னிட்டும் ஒரு சிறப்புக் கொண்டாட்டம் நிகழும் என்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அறிவித்தார். அதன் பகுதியாக திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வத்திக்கான் நகரில் புனித பேதுரு பெருங்கோவிலில் திருக்கதவை (Holy Door) திறந்துவைத்து, யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்தார்[81].
  • 2000, மார்ச்சு 20-26: திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் யூதம், இசுலாம், கிறித்தவம் ஆகிய மூன்று உலக சமயங்களின் தோற்றிடமாகிய நடு ஆசியாவுக்குத் திருப்பயணமாகச் சென்றார். அப்போது அரசியல் தலைவர்களையும் சமயத் தலைவர்களையும் சந்தித்துப் பேசி அமைதிக்காக உழைக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பாலஸ்தீன நாடு தனி நாடாக உருப்பெற வேண்டும் என்பதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்தார்.

அவர் திருநாட்டுப் பகுதியாகிய எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கே, பண்டைய எருசலேம் கோவிலின் இடிபகுதியாகிய "மேற்குச் சுவரில்" (Western Wall), திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒரு சிறப்பு இறைவேண்டலைச் செருகி வைத்தார். அதில் காணும் வாசகம் இதோ[82]:

இப்பயணத்தின்போது திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் எகிப்து நாட்டிலும் திருப்பலி நிறைவேற்றினார். அப்போது கத்தோலிக்க திருச்சபைக்கும் எகிப்திய கோப்து சபைக்கும் இடையே நல்லுறவு வளர வேண்டும் என்று கூறினார். இவ்விரு சபைகளும் கிபி 5ஆம் நூற்றாண்டில் பிரிந்தன.

(தொடர்ச்சி): திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு

மேலும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. திருத்தந்தை பத்தாம் பயஸ்
  2. கிரகோரி இசை
  3. திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட்
  4. திருச்சபைச் சட்டத் தொகுப்பு
  5. திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
  6. 6.0 6.1 திரு ஆண்டு
  7. இலாத்தரன் உடன்படிக்கை
  8. குலியேல்மோ மார்க்கோனி
  9. மோர்ஸ் தந்திக்குறிப்பு
  10. எசுப்பானியாவில் பயங்கரம்
  11. இரண்டாம் உலகப் போர்
  12. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்
  13. நாசி ஆட்சியில் அவுஷ்விட்ஸ் வதை முகாம்
  14. மாக்சிமிலியன் கோல்பே
  15. நாசிசம்
  16. விவிலிய ஆய்வு
  17. இறைவனின் இடைநிலையாளர்
  18. மரியா கொரெட்டி
  19. தப்பறைகள் கண்டனம்
  20. மரியாவின் விண்ணேற்பு
  21. புனித பேதுருவின் கல்லறை
  22. புனித பத்தாம் பயஸ்
  23. மரியாவின் ஆண்டு
  24. அன்னையும் ஆசிரியையும்
  25. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
  26. http://en.wikipedia.org/wiki/Cuban_Missile_Crisis கியூபா ஏவுகணை நெருக்கடி
  27. அவனியில் அமைதி
  28. Hebblethwaite, Peter (1993). Paul VI: The First Modern Pope. Paulist Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8091-0461-X. ஆறாம் பவுல் - வரலாறு
  29. ஜான் எஃப். கென்னடி
  30. கிறிஸ்துவின் திருச்சபை
  31. ஆறாம் பவுல் மும்பையில் ஆற்றிய உரைகள்
  32. "திருத்தந்தையின் இந்தியப் பயணம் குறித்த விமரிசனம்". Archived from the original on 2013-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
  33. ""போர் வேண்டாம்!" - ஆறாம் பவுல்.ஐ.நா. உரை". Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  34. சபைநீக்கம் விலக்கல் பற்றிய கூட்டறிக்கை
  35. மக்களின் முன்னேற்றம்
  36. பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்த நிகழ்வு
  37. ஆறு நாள் போர்
  38. மார்ட்டின் லூதர் கிங்
  39. மானிட உயிர்
  40. பன்னாட்டு உழைப்பு நிறுவனம்
  41. அப்போல்லோ 11
  42. விடுதலை இறையியல்
  43. முதலாம் யோவான் பவுல்
  44. இரண்டாம் யோவான் பவுல்
  45. மனிதனின் மீட்பர்
  46. சாலிடாரிட்டி இயக்கம்
  47. அவுஷ்விட்ஸ்
  48. அவுஷ்விட்சில் ஆற்றிய மறையுரை
  49. கொலை முயற்சி
  50. ஜெமேல்லி மருத்துவ மனை
  51. மனித உழைப்பு - சுற்றுமடல்
  52. "மன்னிப்பு வழங்கும் திருத்தந்தை". Archived from the original on 2010-03-03. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  53. பாத்திமா
  54. "திருத்தந்தைச் சிற்றுந்து"
  55. அணு ஆயுதப் போட்டி
  56. திருத்தந்தையின் இந்தியப் பயணம்
  57. திருத்தந்தையும் அன்னை தெரேசாவும்
  58. பல்சமய உரையாடல் - சென்னை உரை
  59. புனித தோமா மலையில் உரை
  60. சென்னை மெரீனாவில் மறையுரை
  61. சாந்தோம் பெருங்கோவிலில் உரை
  62. முத்திப்பேறு பெற்ற பட்டமளிப்பில் மறையுரை
  63. கோட்டயம் மறைமாவட்டக் கோவிலில் உரை
  64. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உரை
  65. இந்தியாவை அன்னை மரியின் பாதுகாவலில் ஒப்படைத்தல்
  66. துறவியருக்கு உரை
  67. பிரியாவிடை உரை
  68. உரோமை யூத வழிபாட்டுக் கூடத்தில் உரை
  69. தூய ஆவி பற்றிய சுற்றுமடல்
  70. அசிசி நகரில் பல்சமய உரையாடல்
  71. சமூகச் சிக்கல்கள் - சுற்றுமடல்
  72. "நூறாம் ஆண்டு" - சுற்றுமடல்
  73. பக்கீத்தா முத்திப்பேறு பெற்ற பட்டம் - உரை
  74. கலிலேயோவின் கருத்து ஏற்கப்படல்
  75. பெண்கள் குருத்துவ நிலை ஏற்பது பற்றி
  76. "எதிர்பார்ப்பை நோக்கி அடியெடுத்து வைக்க" - நூல்
  77. மனித உயிர் பற்றிய நற்செய்தி
  78. கியூபாவில் நீதியான பொருளாதார அமைப்பு பற்றி உரை
  79. யூத இனப் படுகொலை - வத்திக்கான் அறிக்கை
  80. "இறைநம்பிக்கையும் பகுத்தறிவும்" - சுற்றுமடல்
  81. "திரு ஆண்டு 2000"
  82. திருத்தந்தையின் மன்னிப்பு இறைவேண்டல்
  83. பாத்திமாவில் உரை
  84. உலக இளையோர் நாள்
  85. "இரு திருத்தந்தையர்களின் முத்திப்பேறு பெற்ற பட்டம்". Archived from the original on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  86. திருத்தந்தையின் மறையுரை
  87. ட்ரெக்சல், பக்கீத்தா புனிதர் பட்டம்
  88. ஊனமுற்றோர் யூபிலி

வெளி இணைப்புகள்

[தொகு]