கொண்டைக்கிளி
கொண்டைக்கிளி | |
---|---|
ஆசுத்திரேலியாவில் காலா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | சிட்டாசிபார்மிசு
|
Superfamily: | |
குடும்பம்: | ஜி. ஆர். கிரே, 1840
|
மாதிரிப் பேரினம் | |
கக்காட்டுவா வியெய்லோ 1817[1] | |
பேரினம் | |
புறொபோசிகர் | |
கொக்கட்டூக்களின் தற்போதைய எல்லை – சிவப்பு அண்மைக்காலப் புதைபடிவங்கள் – நீலம் | |
வேறு பெயர்கள் | |
|
கொண்டைக்கிளி (Cockatoo) என்பது ஒரு வகைக் கிளி. "கக்கட்டுவோயிடே" பெருங்குடும்பத்தின் ஒரே குடும்பமான "கக்கட்டுயிடே" பறவைக் குடும்பத்தில் அடங்கும் 21 இனங்களில் ஒன்றை இப்பெயர் குறிக்கும். "சிட்டாக்கொயிடே" (உண்மைக் கிளிகள்), "இசுட்ரிகோபோயிடே" (பெரிய நியூசிலாந்துக் கிளிகள்) ஆகியவற்றுடன் சேர்ந்து இவை, "சிட்டாசிபார்மசு" (கிளிகள்) என்னும் வரிசை ஒன்றை உருவாக்குகின்றன. இக்குடும்பம் பெரும்பாலும் ஆசுத்திரலேசியப் பகுதிகளிலேயே காணப்படுகின்றது. பிலிப்பைன்சு, வல்லாசியாவின் கிழக்கு இந்தோனேசியத் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து, நியூ கினி, சொலமன் தீவுகள், ஆசுத்திரேலியா உள்ளடங்கிய பகுதிகள் வரை இக்குடும்பம் பரந்துள்ளது.
இவற்றைக் கவர்ச்சியான கொண்டையாலும், வளைந்த அலகாலும் அடையாளம் காணலாம். கொக்கட்டூக்களின் சிறகுத் தொகுதி ஏனைய கிளிகளைவிடக் குறைவான பிரகாசம் கொண்டது. வெள்ளை, சாம்பல், கறுப்பு ஆகியவற்றுடன்; உச்சி, கன்னம், வால் ஆகிய பகுதிகளில் நிறச் சிறகுகளையும் காணமுடியும். சராசரியாகக் கொக்கட்டூக்கள் ஏனைய கிளிகளைவிடப் பெரியன எனினும், இக்குடும்பத்தைச் சேர்ந்த கொக்கட்டியல் என்பது ஒரு சிறிய கொக்கட்டூ இனமாகும். கொக்கட்டியலின் கூர்ப்பு மரபுவழி அமைவிடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது கொக்கட்டூ கால்வழியில் இருந்து மிக முன்னதாகவே பிரிந்துவிட்ட ஒரு இனம் ஆகும். எஞ்சிய இனங்களில் இரண்டு கிளைகள் உள்ளன. கலிப்தோரைஞ்சசு என்னும் பேரினத்தைச் சேர்ந்த ஐந்து பெரிய கருநிறக் கொக்கட்டூ இனங்கள் ஒரு கிளையைச் சேர்ந்தவை. பெரிய இரண்டாவது கிளை, எஞ்சிய இனங்களைக் கொண்ட கக்கட்டுவா பேரினத்தை உள்ளடக்கியது. இதில் வெள்ளை நிற இறகுகளோடு கூடிய கொக்கட்டூக்களும்; ஒரே தோற்றம் கொண்ட இளஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களுடன் கூடிய "மேஜர் மிச்சேல் கொக்கட்டூ"; இளஞ்சிவப்பு, சாம்பல் நிற "கலா"; முதன்மையாகச் சாம்பல் நிறமான "காங்-காங் கொக்கட்டூ"; பெரிய கறுப்பு நிற "பாம் கொக்கட்டூ" என்பனவும் அடங்குகின்றன.
விதைகள், கிழங்குகள், பழங்கள், பூக்கள், பூச்சிகள் போன்றவற்றைக் கொக்கட்டூக்கள் விரும்பி உண்கின்றன. இவை பெரும்பாலும், குறிப்பாக நிலத்தில் உண்ணும்போது கூட்டமாக வந்து உண்கின்றன. கொக்கட்டூக்கள் ஒருதுணை கொள்பவை. இவை மரப் பொந்துகளில் கூடுகளை அமைக்கின்றன. சில கொக்கட்டூ இனங்கள் வாழிட இழப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரிய, முதிர்ந்த மரங்கள் பெருமளவில் வெட்டப்பட��வதால், கூடமைப்பதற்கு உகந்த மரப் பொந்துகள் கிடைப்பது அரிதாகிறது. அதேவேளை, சில இனங்கள் மனித மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளதுடன், வேளாண்மை தொடர்பில் பாதிப்பை விளைவிக்கும் உயிரினங்களாகவும் கருதப்படுகின்றன.
பறவை வளர்ப்பில் கொக்கட்டூக்கள் பெரிதும் விரும்பப்படும் பறவைகளாக உள்ளன. ஆனால், அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமானது. கொக்கட்டூக்களில், பராமரிப்பதற்கு இலகுவானது கொக்கட்டியல் என்ற இனமாகும். இதனால், இவையே பெரும்பாலும் கூட்டில் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கூட்டில் வளர்க்கும் கொக்கட்டூக்களில் கறுப்பைவிட வெள்ளை நிறம் கொண்டவையே கூடுதலாகக் காணப்படுகின்றன. சட்டத்துக்கு மாறாகக் காட்டில் பிடிக்கப்படும் கொக்கடூக்களின் வணிகத்தால், காட்டில் வாழும் கொக்கட்டூ இனங்கள் சில அருகி வருகின்றன.
பெயர்
[தொகு]17 ஆம் நூற்றாண்டில் இருந்து வழங்கிவரும் "கொக்கட்டூ" என்னும் பெயர், இப்பறவைகளைக் குறிக்கும் மலாய் மொழிச் சொல்லான "கக்கக் டுவா" (மூத்த உடன்பிறப்பு) என்பதில் இருந்து உருவானது. அல்லது வெள்ளைக் கொக்கட்டூக்கள் எழுப்பும் ஒலியில் இருந்தும் உருவாகி இருக்கலாம். 17 ஆம் நூற்றாண்டில் இவை, கக்கட்டோ, கொக்கட்டூன், குறொக்கடோர் ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்பட்டன. கொக்கட்டோ, கொக்கட்டோர் ஆகிய பெயர்களும் 18 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தன.[3][4] இவற்றில் இருந்து பெறப்பட்ட சொற்களான கக்கட்டுயிடே, கக்கட்டுவா என்பன முறையே இவை சார்ந்த இனத்துக்கும், பேரினத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ICZN (2000). "Opinion 1949. Cacatua Vieillot, 1817 and Cacatuinae Gray, 1840 (Aves, Psittaciformes): conserved.". Bulletin of Zoological Nomenclature: 66–67. https://www.biodiversitylibrary.org/item/45022#80.
- ↑ பன்னாட்டு விலங்கியற் பெயரிடல் ஆணையகத்தின் கருத்தினால் மாற்றப்பட்டது 1949 (2000). ICZN (2000). "Opinion 1949. Cacatua Vieillot, 1817 and Cacatuinae Gray, 1840 (Aves, Psittaciformes): conserved.". Bulletin of Zoological Nomenclature: 66–67. https://www.biodiversitylibrary.org/item/45022#80.
- ↑ "cockatoo". Oxford English Dictionary (2nd). (1989). Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861186-2.
- ↑ Mynott, Jeremy (2009). Birdscapes: Birds in Our Imagination and Experience. Princeton, New Jersey: Princeton University Press. p. 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-13539-8.
- ↑ Higgins, Peter Jeffrey (ed.) (1999). Handbook of Australian, New Zealand and Antarctic Birds. Volume 4: Parrots to Dollarbird. Melbourne: Oxford University Press. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-553071-3.
{{cite book}}
:|author=
has generic name (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Australian Faunal Directory பரணிடப்பட்டது 2009-07-01 at the வந்தவழி இயந்திரம்
- MyToos.com பரணிடப்பட்டது 2016-05-31 at the வந்தவழி இயந்திரம் – explaining many of the responsibilities of cockatoo ownership
- Cockatoo videos பரணிடப்பட்டது 2016-04-25 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection