உள்ளடக்கத்துக்குச் செல்

தீக்குச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொரசொரப்பான பகுதியில் விரைந்து தேய்ப்பதால் தீக்குச்சியின் நுனியில் உள்ள பாஸ்பரஸ் சேர்ந்துள்ள வேதிப்பொருள் எரிந்து சிறு தீச்சுடர் தருவதைப் படத்தில் காணலாம்
தீக்குச்சிகள்

தீக்குச்சி என்பது நுனியில் எளிதில் தீப்பற்றும் வேதிப்பொருள்கள் கொண்ட, ஏறத்தாழ 3-4 செ.மீ நீளம் கொண்ட மெல்லிய குச்சி ஆகும். இக்குச்சி மரத்தாலோ அல்லது கெட்டியான காகித அட்டை போன்ற பொருளாலோ ஆனது. தீக்குச்சிகளின் நுனியில் இருக்கும் வேதிப்பொருளில் பாஸ்பரஸ் ஒரு முக்கியமான பொருள். சொரசொரப்பான பகுதியில் விரைந்து தேய்க்கும் பொழுது ஏற்படும் வெப்பத்தில் சட்டென்று தீப் பற்றிக்கொள்ளும் பொருள்களால் ஆன பொருள் தீக்குச்சியின் நுனியில் உருண்டையாய் ஒட்ட வைக்கப்பட்டிருக்கும். இப்படி குச்சியின் நுனியில் ஒட்டவைக்கப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் கலவையைத் தமிழில் மருந்து [1] என்று அழைப்பர். தீக்குச்சிகளில் இரு வகைகள் உண்டு. சில எந்த சொரசொரப்பான தளத்தில் தேய்த்தாலும் தீபற்றுவன. மற்றவை தேய்ப்பதற்கு என சிறப்பாக தளங்களில் மட்டுமே தேய்த்து தீச்சுடர் உண்டாக்க முடியும்.

தீக்குச்சிகளின் வரலாறு

[தொகு]

தற்கால தீக்குச்சிகள் பயன்பாட்டுக்கு வரும் முன்னர் சீனாவில் கி.பி. 577 ஆண்டு காலப்பகுதியில் கந்தகம் நுனியில் ஒட்டியிருக்கும் பைன் மரக் குச்சிகள் இருந்ததாக கருதப்படுகின்றது.

கி.பி. 1805 இல், பாரிசில் இருந்த பேராசிர���யர் லூயி சாக்கெஸ் தேனார் (Louis Jacques Thénard) அவர்களுக்குக் கீழ் பணி புரிந்த துணைப் பேராசிரியர் கே. சான்செல் (K. Chancel) என்பவர் முதன் முதலாக தானே பற்றி எரியும் தீக்குச்சிகளைக் கண்டு பிடித்தார். இக்குச்சிகளின் நுனியில் பொட்டாசியம் குளோரேட், கந்தகம் இனியம், ரப்பர் ஆகிய நான்கு பொருட்களும் இருந்தன. ஆனால் இந்த தீக்குச்சியைப் பயன்படுத்த குச்சியின் நுனியை கந்தகக் காடி (கந்தக அமிலம்) இருந்த ஆஸ்பெஸ்ட்டாஸ் குப்பியுள் நனைத்தனர். இவை விலை மிக்கதாகவும். போதிய பாதுகாப்பு இல்லாததாகவும் இருந்தது. எனவே பரவலாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

உரசித் தீப்பற்றும் தீக்குச்சிகளின் வரலாறு

[தொகு]
தீக்குச்சி எரியும் முறை

கி.பி 1827 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கிலேய வேதியியலாளர் ஜான் வாக்கர் (John Walker) என்பவர் உரசித் தீப்பற்றும் தீக்குச்சிகளைக் கண்டுபிடித்தார். 1680களில் புகழ்பெற்ற ராபர்ட் பாயில் (Robert Boyle) பாஸ்பரஸ் கந்தகம் முதலிய பொருட்களைக்கொண்டு ஆய்வுகள் செய்திருந்தார், ஆனால் இத் துறையில் பயனுடைய விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. ஜான் வாக்கர் ஆண்டிமனி சல்பைடு (ஸ்டிப்னைட்டு) (antimony(III) sulfide or stibnite), பொட்டாசியம் குளோரேட்டு(potassium chlorate), கோந்து (gum), ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருள் ஆகிய நான்கும் சேர்ந்த பொருளை சொரசொரப்பான தளத்தில் விரைந்து தேய்த்தால் தீப்பற்றும் என்று கண்டுபிடித்தார். ஜான் வாக்கர் இந்த தீக்குச்சிகளை காங்கிரீவ்ஸ் (congreves) என்று அழைத்தார். ஆனால் சாமுவேல் ஜோன்ஸ் என்பவர் இதே தயாரிப்பு முறைக்கு படைப்புக் காப்புரிமம் (patent) பெற்றிருந்து "லூசிஃவர்" தீக்குச்சிகள் என்று விற்றுக்கொண்டிருந்தார். நெதர்லாந்தில் இன்னமும் தீக்குச்சிகளை லூசிஃவர் (lucifers) என்று அழைக்கின்றார்கள்.

1830 இல் பிரான்சியர் சார்லஸ் சோரியா (Charles Sauria) என்பவர் தீக்குச்சியின் நுனியில் உள்ள மருந்தில் வெள்ளைப் பாஸ்பரஸைச் சேர்த்தார். இதனால் தீக்குச்சியின் கெட்ட வாடை குறைந்தது, ஆனால் தீக்குச்சிகளை காற்றுப் புகா பெட்டிகளில் வைக்க வேண்டியிருந்தது. வெள்ளைப் பாஸ்பரஸ் இருப்பதால் இத் தீக்குச்சிகளை உற்பத்தி செய்வோர்களுக்கு ஃவாஸ்ஸித் தாடை (phossy-jaw) என்னும் நோயும், வேறு பல எலும்பு தொடர்பான நோய்களும் ஊனங்களும் தோன்றின. ஒரு தீப்பெட்டியில் (தீக்குச்சிப் பெட்டியில்) இருந்த பாஸ்பரஸ் ஒருவரைக் கொல்லும் அளவுக்கு இருந்தது. இதனால் இதற்கு அதிகம் எதிர்ப்பு தோன்றியது. ஃவாஸ்ஸித் தாடை நோய் வேதிப்பொருளால் அக்காலத்தில் தோன்றிய ஒரு குறிப்பிடத்தக்க நோய் அல்லது ஊனம்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. மருந்து என்பது பல இடங்களில் வெடிபொருள்கள் அல்லது தீப்பற்றும் பொருட்களுக்கு பயன்படுத்தும் வேதிப்பொருட்களின் கலவைக்குப் பயன் படும் சொல். ஆனால் மருந்து என்பதன் வேறு சூழல்களில் நோய்தீர்க்கும் வேதிப்பொருட்களைக் குறிக்கும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Match
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்குச்சி&oldid=3732580" இலிருந்து மீள்விக்கப்பட்டது