உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சை பிரகதீசுவரர் கோயில், பொ.ஊ. 1010. இது சோழர் கட்டடக்கலையின் உன்னதமான ஓர் எடுத்துக்காட்டு

தென்னிந்தியாவில் ஏகாதிபத்திய சோழர்களின் காலம் (அண். பொ.ஊ. 850–1250) என்பது சோழர்களின் கலை மற்றும் கட்டடக்கலையின் தொடர்ச்சியான முன்னேற்றமும் செம்மைப்படுத்தப்படலும் கொண்ட காலமாகும். சோழர்கள் தங்களது விரிவான வெற்றிகளின் மூலம் ஈட்டிய செல்வத்தைக் கிட்டத்தட்ட திராவிட கலாச்சார அமைப்பில், நீண்டகால கற்கோவில்கள் மற்றும் நேர்த்தியான வெண்கல சிற்பங்களை கட்டுவதில் பயன்படுத்தினார்கள்.[1][2][3]

சோழர்கட்கு முற்பட்ட காலம்

[தொகு]

பொ.ஊ. 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களில் சிம்மவிஷ்ணு வம்சம் தோன்றியது முதல், தமிழ்நாட்டில் கலையில் வரலாறு அறுதியிட்டுக் கூறும் முறையில் தொடங்குகிறது. மண்டகப் பட்டில்(தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம்) முதல் தடவையாக ஒரு குகைக் கோயிலைக் குடைந்து எடுத்தப் பிறகு, மாமல்லன் அடைந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கட்டுக்கடங்கவில்லை. அந்தச் சாதனையை அவன் உடனே கல்வெட்டில் பொறித்தான். செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு ஆகியவை உபயோகிக்காமல், பிரமன், சிவன், விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளுக்கு ஒரு கோயில் எடுத்த பெருமையை, அரிய சாதனையை அவன் அக்கல்வெட்டில் பறை சாற்றுகிறான்.

அவன் காலத்துக்கு முன் கோயில்கள் மரத்தால் கட்டப்பட்டன என்றும், மரங்களை இணைக்க உலோக ஆணிகள் அல்லது வார்ப்பட்டைகள் உபயோகிக்கப்பட்டன என்றும் செங்கல்-சுண்ணாம்பு ஆகியவற்றைப் பரப்பி அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன என்று உறுதியாகத் தெரிகிறது. அவற்றில் மரமும் உலோகமும் கூட பயன்பட்டிருக்கலாம். இத்தகைய பழைய கட்டடங்கள் ஒன்றுகூட இப்போது எஞ்சவில்லை; அவையாவும் அழிந்துவிட்டன: அவற்றின் அமைப்புகள், சாயல்கள், இலச்சினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பல்லவர்களின் கட்டடங்கள், தூண்கள், நகரங்கள், அலங்கார வரைபடங்கள் முதலியயாவும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அரண்மனைகள், கோயில்கள், நகரங்களில் மாளிகைகள், கடைத் தெருக்கள் ஆகியவற்றைப் பற்றி இலக்கியங்களில்தான் வருணனைகள் காணப்படுகின்றன. அவை சற்று அதிகப்படியாயும் கற்பனையோடும் புனைப்பட்டிருக்கின்றன. எந்த அளவு அவை உண்மை என்பதைச் சரிபார்ப்பதற்கு இப்போது ஆதாரம் எதுவும் இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களின் பேராதரவில் கல் கட்டட நிர்மாணக் கலையும் கல் சிற்ப வேலைப்பாடும் மிக உயர்ந்த நிலைய அடைந்தன. கல்லெல்லாம் கலை வண்ணம் காட்டும் மாமல்லபுரத்தில் எழிலுடன் திகழும் கடற்கரைக் கோயில் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர், வைகுந்தப் பெருமாள் கோயில்கள் ஆகிய மூன்றையும் பல்லவர் கலைத் திறனுக்குச் சிகரங்கள் என்று சொல்லலாம்.

பிறகு, பல்லவர் செல்வாக்குக் குறைந்து அவர்களுடைய இறுதி நாட்களில், பொருளாதாரக் கட்டுப்பாடு ஏற்பட்டு சின்னஞ்சிறு கட்டடங்கள் உருவாயின. தென்னிந்திய வெண்கலப் படிமம் ஒன்றுகூட, 'உறுதியாக இது பல்லவர் காலத்தியதே' என்று அறுதியிட்டுச் சொல்லத் தக்கவையாக இல்லை. ஆனால், சோழர் ஆட்சியின் தொடக்கத்திலேயே உலோக வார்ப்புக்கலை உயர்ந்த நிலை அடைந்திருந்தது என்பதால், இந்தக் கலையின் வளர்ச்சி பல்லவர் காலத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

சோழர் கலை

[தொகு]

பல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் தொடர்ந்து ஆதரித்து மேன்மேலும் அது வளர்ச்சியடையச் செய்தார்கள். இவ்வாறு சோழர்காலத்தில் சிறப்பு பெற்ற கலைகளை சோழர் கலைகள் எனலாம். கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத���தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அங்கே நகர அமைப்புக் கலையின் இடைவிடாத தொடர்ச்சியும், முக்கியமான இடங்களில் அன்று முதல் இன்று வரை தெருக்களின் பெயர்கள் நின்று நிலவுவதையும் காணலாம். மலையிலிருந்து அப்படியே கோயில்களையும் மண்டபங்களையும் குடைந்து எடுக்கிற அரிய கலை, பிற்காலப் பல்லவ ஆட்சியில் கைவிடப் பட்டது. கல்கோயில்களைக் கட்டுவது பெரிது வழக்கமாகப் பரவியது. இந்தப் பழக்கத்தைத் தமிழ் நாடெங்கும் பரப்பினார்கள் என்பது சோழர்களுக்குரிய தனிப்பெருமை. ஆரம்பகால சோழர்கள் கட்டிய கட்டடங்களுக்கும், பல்லவ பேரரசு சரிந்து கொண்டிருந்த சமயங்களில், பிற்காலப் பல்லவர்கள் கட்டிய கோயில்களுக்கும் அவ்வளவாக வேற்றுமை கண்டுகொள்ள முடியாது.

பிற்கால நிலை இதனின்றும் முற்றுலும் வேறுபட்டது. சோழ ஆட்சியின் பரப்பும் செல்வமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரியவும் பெருகவும் ஆயின. இதற்குத்தக்க அவர்கள் கட்டிய கோயில்களும் நிலப்பரப்பிலும் உயரத்திலும் கலைத்துறையிலும் தனிச்சிறப்புக்களுடன் அமைந்தன. தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் சோழர்கள் கட்டிய கோயில்கள் மிகப் பிரம்மாண்டமானவை; தலை சிறந்தவை; வெளிநாட்டார் கூட வியப்படையும் வண்ணம், தமிழ்நாட்டின் கலைத் திறமையை நிலைநாட்டும் நிறுவனங்கள்; அவற்றின் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத்தையும் அவர்கள் உலகத்திற்கு அறிவித்தார்கள்.

சோழர்களுடைய கட்டடத் திறமைக்கும் கலை ஆர்வத்திற்கும் முடிசூட்டியது போல கும்பகோனத்திற்கு அருகே தாராசுரத்திலும் திருபுவனத்திலும் இரு பெரிய கோயில்கள் உள்ளன. சிற்பம், ஓவியம் வெண்கலக் படிகக்கலை ஆகிய துறைகளும், கோயில் கட்டடக் கலையோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறின.

தென்னிந்தியக் கட்டடக் கலையைப் பற்றி அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்வதற்கு வித்திட்டவர் ழூவே தூப்ராய்(G. Jouveau-Dubreuil)என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர். அவர் கூறியிருப்பதாவது: "சிற்பக்கலையில் பல்லவர்கள் மேம்பட்ட நிலையை அடைந்தனர்ர். ஏனைய துறைகளை விட கட்டடக்கலையிலேயே சோழர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். எளிமையும் பெரிமையும் கலந்த ஓர் அமைப்பு முறையை அவர்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்டார்கள்." சோழர் கட்டடக்கலை வல்லவர்களை விட, சோழ சிற்பக்கலைஞர் தங்கள் ஆற்றலில் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் பல்லவச் சிற்பக் கலைஞர்கள் கல்லில் காட்டிய ஆற்றலை இவர்களும் காட்டியிருக்கிறார்கள்.

வெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில் வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண் ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும் அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கற்கோயில்கள்

[தொகு]

சோழர் ஆட்சி ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது (பொ.ஊ. 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்ட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

[தொகு]

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறத

=== கங்கைகொண்ட சோழபுரம் ===கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தாராசுவரம் ஐராவதேஸ்வரர் கோயில்

[தொகு]

ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.

செப்புப் படிமங்கள்

[தொகு]

'செப்புப் படிமங்கள்' என்னும் சொல் எந்தெந்த உலோகங்கள், எந்தெந்த அளவில் சேர்த்து வார்க்கப்பட்டிருப்பினும், பொதுவாக உலோகத் திருவுருவங்களைக் குறிப்பதற்க��ப் பயன்படுத்தப் படுவதாகும். சோழர் காலத்து உலோகத் திருமேனிகள் மிக்கவாறும் 'சிரே பெர்டு'(Cire Perdu) என்னும் முறையில் வார்க்கப்பட்டவையாகும். தஞ்சையிலுள்ள சில கல்வ்வெட்டுகள் திடமாகவும்(Solid), உள்ளீடுள்ளதாகவும்(hollow) உள்ள உலோகத் திருமேனிகள் வார்ப்பது பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன.

மனித உருவங்கள்

[தொகு]

இந்திய கல் சிற்பக்கலையில், இன்ன உருவம் இன்னாருடையது தான் என்று ஆதாரமாகச் சொல்லக்கூடிய நிலை மிகக்குறைவு. இந்த குறைபாடு சோழர்களின் கல்சிற்பக்கலையிலும் காணலாம். உயிருள்ள ஓர் ஆளைப் பார்த்துக் கல்லிலே வடிக்க விரும்பிய போதும் கூட, உயிருக்கு உயிராகப் பிரதிபலிக்காமல் அந்தப் படைப்பு பழைய சிற்பம் ஒன்றின் படிவமாகி விடுவதும் உண்டு. முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோர் காலத்தில் தான் சோழர்களின் கல்சிற்பக்கலை வானோங்கி இருந்ததென்ற கருத்தை மறுக்கும் விதத்தில் ஸ்ரீநிவாசநல்லூரிலும் கும்பகோணத்திலும் உள்ள கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவைகள் முதலாம் இராஜராஜன் பட்டம் ஏறியதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முந்தியன.

முதலாம் இராஜேந்திரன் காலத்தில் மனித உருவமாகப் படைக்கப்பட்டது என்று தெரிவது காலஹஸ்திக் கோயிலில் உள்ள அழகிய வெண்கலத் திருமேனி மட்டுமே. இது முதலாம் இராஜராஜனின் அரசியான சோழ மாதேவியைக் குறிப்பது இந்தத் திருமேனியின் காலமும் இது யாருடையது என்ற அடையாளமும் அதன் அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு வாசகத்தால் தெரிகின்றன. இராஜேந்திரச் சோழனின் உத்தரவுப்படி நிச்சப் பட்டழகன் என்ற வெண்கல வார்ப்புக்கலை வல்லுநனால் செய்யப்பட்டதாக அது குறிப்பிடுகிறது. மனித உருவமாகச் சிறந்து விளங்குவதோடு அழகிய எடுத்துக்காட்டாக அக்காலத்துக் கலையை விளக்கும் இந்தப் படைப்பு தென்னிந்திய உலோகத் திருமேனிகளுள் காலம் வரையறுக்கப்பட்ட முதல் திருமேனியாகும்.

வண்ண ஓவியம்

[தொகு]

சோழர் கலைகளின் ஏனைய பகுதிகளைப் போலவே சோழர்களின் ஓவியக்கலையும் பல்லவ பாண்டியர் வளர்த்த துறையின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் சுவர்களில் தீட்டப்பட்ட வண்ணச் சித்திரங்களில் அளவு, சிறப்பு ஆகியவற்றை இலக்கியங்களில் ஆதாரமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வண்ணச் சித்திரங்களின் மாதிரிகள் எவையும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் பயிலப்பட்ட வண்ண ஓவியக் கலையின் தன்மையைப் பற்றி அவற்றை உற்றுப் பார்த்து நாமே கருத்தைச் சொல்வதற்கேற்ற சான்றுகள் இல்லை.

கலைப் பொருள்களிலேயே, ஓவியங்கள் தான் மிக மென்மையானவை. காலத்தாலும், இயற்கை சீற்றங்களாலும் மலைகளில், இரசாயனங்களால் உண்டாகும் மாறுதல்களாலும் உபயோகப்படுத்தப்பட்ட பொருள்களாலும் வண்ண ஓவியங்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படும். தஞ்சாவூர் போல, பல இடங்களில், முதலில் வரையப்பட்ட அழகான ஓவியங்களின் மீது பிற்காலத்தில் அவற்றைவிடச் சற்று மட்டமான ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. ஓவிய வரலாற்றில் தொடர்ச்சி வளர்ச்சியில்லாமல் இடைக்காலங்கள் உள்ளன. தவிரவும் சில காலப்பகுதிகள் பற்றி உறுதியான செய்திகள் இல்லை. இந்தக் குறைபாடுகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் ஓவியத்துறையில் தொடர்ந்து ஒரு மரபு நீடித்து வந்திருக்கிறது என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sangam literature, Encyclopaedia Britannica
  2. Ayyar, P. V. Jagadisa (1982). South Indian Shrines: Illustrated. Asian Educational Services. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120601512.
  3. Madhavan, Chithra (2014). Vishnu temples of South India, Volume 4, Tamil Nadu (1st ed.). Alpha Land Published Pvt. Limited. pp. 71–76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-908445-3-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_கலை&oldid=4168360" இலிருந்து மீள்விக்கப்பட்டது