பசுபதிநாத் கோவில்
பசுபதிநாத் கோவில் | |
---|---|
2020-ல் பசுபதிநாத் கோவில் | |
Location in Nepal | |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாகாணம்: | பாக்மதி பிராந்தியம் |
மாவட்டம்: | காத்மாண்டு, நேபாளம் |
அமைவு: | காத்மாண்டு |
அமைவு: | காத்மாண்டு |
ஆள்கூறுகள்: | 27°42′35″N 85°20′55″E / 27.70972°N 85.34861°E{{#coordinates:}}: cannot have more than one primary tag per page |
கோயில் தகவல்கள் | |
தீர்த்தம்: | பாக்மதி ஆறு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பகோடா |
பசுபதிநாத் கோவில் (நேபாளி: पशुपतिनाथको मन्दिर) உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்.
இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[1]
பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
தல புராணம்
[தொகு]இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை. நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி [2] ஒரு கதை நம்பப்படுகிறது. அஃது, கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டுப் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார். பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார். காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் ஆடு அம்மண்மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த ஆடு தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த லிங்கச் சிலை கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது.[3]
பசுபதிநாத் கோவிலைப் பற்றி விவரிக்கும் பிற கதைகள்
[தொகு]இடையன் கதை
[தொகு]சிவன் முறை ஒரு மான் வடிவம் எடுத்துக் பாக்மதி ஆற்றின் காடுகளில் அலைந்து திரிந்த போது கடவுளர் அந்த மானைப் பிடிக்க அதன் கொம்புகளைப் பற்றினர். அப்போது அக்கொம்பு உடைந்து சிவனின் உரு வெளிப்பட்டது. அது முதல் அம்மானின் உடைந்த கொம்பு ஒரு லிங்கமாக வழிபடப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அது புதையுண்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஓர் இடையன் தான் மேய்த்து வந்த மாடு அங்கு தானே பால் பொழிந்ததைக் கண்டு, அங்கே லிங்க உருவத்தைக் கண்டறிந்தான் எனக் கூறப்படுகிறது.[1]
லிச்சாவி வம்சம்
[தொகு]நேபாளத்தின் லிச்சாவி வம்சாவளியைச் சேர்ந்த கோபால்ராஜ் என்ற அரசன் காலத்தில் கிடைத்த, பொ.ஊ. 753 -ஐச் சேர்ந்த, 'இரண்டாம் ஜெயதேவர்' என்பவரால் அமைக்கப்பட்டு, இக்கோயிலின் வெளிச்சுற்றில் கிடைத்த கல்வெட்டுச் சான்றின்படி இக்கோவில் 'சுபஸ்பதேவர்' என்பவரால் கட்டப்பட்டது. அவரது காலம் தொடங்கி அதாவது பொ.ஊ. 464–505 வரை 39 தலைமுறைகளாக 'மானதேவர்' என்பவரின் காலம் வரை அக்கோயிலில் வழிபாடு நடந்தமைத் தெரியவருகிறது.[1]
கோவில் சான்றுகள்
[தொகு]சுபஸ்பதேவர் இங்கு ஐந்து நிலை மாடங்கள் கொண்ட கோவில் அமைப்பதற்கு முன்பே அங்கு லிங்க வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்யும் கோவில் ஒன்று இருந்தது. காலப்போக்கில் இந்தக் கோவிலை பழுதுபார்த்து புணரமைக்கும் தேவை எழுந்தது. எனவே இங்கு சுபஸ்பதேவரால் கோவில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் இந்த கோவில் 'சிவதேவர்' (பொ.ஊ. 1099–1126) என்ற மன்னரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டதாகவும் அதன் பின் ஆனந்த மல்லர் என்ற அரசன் இக்கோவிலுக்கு ஒரு கூரை அமைத்து அதனைப் புதுப்பித்தார் எனவும் கோவில் சான்றுகள் கூறுகின்றன.[1]
புணரமைப்பு வரலாறு
[தொகு]இக்கோவிலின் கட்டிடங்கள் கறையான்களால் அரிக்கப்பட்டு பாழடைந்ததால் நேபாள மன்னர் பூபேந்திர மல்லா என்பவரால் இக்கோவில் முதன்முதலில் பதினேழாம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டது.[1] இதில் 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதிகளில் குறிக்கப்பட்டுள்ள வைணவக் கோவிலாகிய ராமர் கோவிலையும், குஹ்யேஸ்வரி கோவிலையும் உள்ளடக்கிய இரண்டு அடுக்குகள் கொண்ட மேலும் எண்ணற்ற கோயில்கள் இந்தக் கோவிலை சுற்றிலும் நிறுவப்பட்டன.
கோவில் பூசாரிகள்
[தொகு]கடந்த 350 ஆண்டுகளாக அக்கோவிலில் பூசாரிகளாகத் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்திலுள்ள பட்டர்கள் என்ற சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர்.[4] பசுபதிநாதரின் பூசாரிகள் 'பட்டர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். கோவிலின் தலைமைப் பூசாரியானவர் 'மூல பட்டர்' என்றும் இராவல் (வட நாட்டு மரபு) என்றும் அழைக்கப்படுகிறார். இவர்களுள் மூல பட்டர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நேபாள மன்னரிடம் கோவில் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவராக இருந்தார்.
இக்கோவிலின் மூலவரான பசுபதிநாதரை நான்கு வம்சாவளியைச் சேர்ந்த பூசாரிகள் மட்டுமே தொடமுடியும். ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து சமய எழுச்சியைத் தோற்றுவிக்க மூல காரணமாக விளங்கிய ஆதி சங்கரர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோயிலின் நடை முறைகள் கடைபிடிக்கப்பட்டன. இந்நடைமுறைகள் இந்தியா எங்கும் உள்ள, ஆதி சங்கரரால் மேம்படுத்தப்பட்ட மேலும் சில இந்து கோயில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன. பின்னாட்களில் ஆண்ட இந்து சமய 'மல்லா' மன்னர்களும் ஆதிசங்கரரின் இந்தக் கோரிக்கையை விடாது போற்றி வந்தனர்.
எவ்வாறிருப்பினும் அண்மையில் இந்நடைமுறை மாற்றம் கண்டது. நேபாளத்தில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி ஏற்பட்ட பின்னர் நேபாள பூசாரிகள் இந்து எதிர்ப்பு மாவோயிச அரசினால் ஆதரிக்கப்பட்டனர்.[5] ஆனால் நேபாள மக்கள் இதனை தங்கள் மதத்தில் ஏற்பட்ட குறுக்கீடாகக் கருதுகின்றனர்.
கோவில் கட்டமைப்பு
[தொகு]இக்கோவில் பகோடா கட்டடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது. பகோடா முறையின் அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியவாறு கோவிலானது கனசதுர வடிவில் மரங்களைக் கொண்டும் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் நான்கு முதன்மை வாயில்களைக் கொண்டுள்ளது. இவ்வாயில்கள் அனைத்துமே வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். கோவிலின் மேல் ஒரு தங்கத்தால் ஆன கலசம் உள்ளது. பசுபதிநாத் சிலையானது ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கிறது. பசுபதிநாதரின் கிழக்குப் பகுதியில் 'வாசுகிநாதர்' வீற்றுள்ளார்.
ஆர்ய காட்
[தொகு]இக்கோவில் அமைந்துள்ள பாக்மதி ஆற்றங்கரையில் ஆர்ய காட் என்றழைக்கப்படும் சுடுகாடும் உள்ளது. இங்கு உயிர் பிரிந்து உடல் எரியூட்டப்படின் நற்கதி கிட்டும் என்பது இந்துக்களிடையே உள்ள ஒரு நம்பிக்கை ஆகும். இந்தியாவில் காசியும் இதே நம்பிக்கையைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாக்கள்
[தொகு]பசுபதிநாத் கோவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் புனிதப் பயணத்திற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நேபாளத்திலிருந்தும், இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் பசுபதிநாதரை வழிபாடு செய்து வருகின்றனர். ஏகாதசி, சங்கராந்தி(தை முதல் நாள்), மகாசிவராத்திரி, தீஜ் அட்சயா, ரட்சா பந்தன், கிரகணம் மற்றும் முழு நிலவு நாள் போன்ற சிறப்பு நாட்களில் மக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இங்கு கூடுவதால் அந்நாட்கள் விழாக்கோலம் காணுகின்றன. மேலும், இக்கோவிலில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா சிவராத்திரி ஆகும். சிவராத்திரி நாளில் இங்கு நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாதுக்களும் (முனிவர்கள்) பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருவதுண்டு. நெய் விளக்குகள் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் இக்கோவில் திறந்தே இருக்கும்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நாளில் பாக்மதி ஆற்றில் நீராடி, நாள் முழுதும் உண்ணாநோன்பு இருக்கும் புனிதச் சடங்கை மேற்கொள்வர்.
2009ஆம் ஆண்டு ஏற்பட்ட சச்சரவுகள்
[தொகு]மல்லா சகாப்தத்திலிருந்து தொடர்ந்து தென்னாட்டிலிருந்து வந்த பிராமணப் பூசாரிகள் (பட்டர்கள்) கோவில் நிர்வாகத்தில் நுழைந்தது நேபாளிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. சனவரி 2009-இ���் மூல பட்டரின் திடீர்ப் பதவி விலகலைத் தொடர்ந்து மாவோயிச ஆதரவு நேபாள அரசு, ஒரு நேபாளியை உடனுக்குடன் மூல பட்டராக பணியமர்த்தியது. இவ்வாறாகக் கோவிலின் நீண்ட கால தேவைகளுக்கு அவ்வரசு வழியேற்படுத்தியது.[6]. நேபாளியின் பணியமர்த்தலுக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும் ஆனால் பணியமர்த்தல் ஒரு வரைமுறையின்றி இருப்பதாகவும் கூறி கோவிலின் பண்டாரிகளால் எதிர்க்கப்பட்டது.[7][8]. இவ்விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால், பட்டர் பணியமர்த்தல் நேபாள உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.[9][10]. ஆனாலும் நேபாளத்திற்கு வெளியிலும் உள்ளும் இருக்கின்ற இந்துக்களின் தொடர் எதிர்ப்பினால் அம்முறை கைவிடப்பட்டு பழைய நிலைமையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இக்கோவில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தெகதி ஏற்பட்ட பூகம்பத்தில் எந்த வித இடிபாடுகளும் இன்றி தப்பித்தது. ஆனால் அங்கிருந்த அதிகமான அதிசய சின்னங்கள் அழிந்தன.[11][12][13]
படக் காட்சியகம்
[தொகு]-
பசுபதிநாத் கோவிலின் முன்புறத் தோற்றம்
-
பசுபதிநாத் கோவிலின் ஒரு பக்கத் தோற்றம்
-
பசுபதிநாத் புனிதப் பயணி
-
பசுபதிநாத்திலுள்ள சிவன் கோவில்
-
கோவில் வாயில்
-
பாக்மதி ஆற்றங்கரையில் தகனம்
-
பசுபதிநாத்திலுள்ள சாது
-
பாக்மதி ஆற்றில் நீராடும் பக்தர்கள்
-
2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில் சேதமடைந்த கோயிலின் வெளிப்பகுதி.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "சார்க் நாடுகளின் சுற்றுலா". Archived from the original on 2010-07-22. பார்க்கப்பட்ட நாள் 2010-12-28.
- ↑ http://www.sacred-destinations.com/nepal/kathmandu-pashupatinath.htm புனிதத் தலங்கள்
- ↑ Nepal Mahatmaya and Himvatkhanda
- ↑ "Spiritual guides". Archived from the original on 2010-06-12. பார்க்கப்பட்ட நாள் 2010-12-28.
- ↑ நேபாளத்தில் முடியாட்சி அகற்றம்,
- ↑ இந்தியன் எக்சுபிரசு
- ↑ "Kantipur". Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2010-12-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-12-30.
- ↑ சிஃபி
- ↑ "Kantipur". Archived from the original on 2009-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-12-30.
- ↑ பாரம்பரியச் சின்னமான 9 அடுக்கு தராஹரா கோபுரம் பூகம்பத்தில் தரைமட்டம் தி இந்து தமிழ் 28 ஏப்ரல் 2015
- ↑ ஆலயம் தப்பியது இந்து தமிழ் ஏப்ரல் 25 2015
- ↑ "holy symbol". economic times. பார்க்கப்பட்ட நாள் 2015-05-05.
வெளி இணைப்புகள்
[தொகு]- Pashupatinath Temple, a World Heritage Site, Kathmandu, Nepal காணொலிக் காட்சி
- Yatra Shri Pashupati Nath காணொலிக் காட்சி