உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/அழுந்தூர் ஆமருவியப்பன்

விக்கிமூலம் இலிருந்து
25

அழுந்தூர் ஆமருவியப்பன்

மிழ் நாட்டிலே சைவ வைஷ்ணவச் சண்டைகள் பிரசித்தம். 'ஆலமுண்டான் எங்கள் நீலகண்டன்' என்று சிவபக்தன் பெருமைப் பட்டுக்கொண்டால். 'ஆம்! அண்டமுண்டபோது அந்த ஆலமுண்ட கண்டனையும்கூட உண்டான் எங்கள் பெருமாள்' என்று பெருமைப்படாத விஷ்ணு பக்தன் இல்லை. இந்தச் சைவவைஷ்ணவச் சண்டைகள் எல்லாம் அவர்களது பக்தர்களுக்கு இடையில் தான். ஆனால் அவர்கள் இருவருமோ அத்தானும் அம்மாஞ்சியுமாக உறவு கொண்டாடிக் கொள்கிறார்கள். விஷ்ணுவோ தன் தங்கை பார்வதியையே சிவனுக்கு மணம் முடித்துக் கொடுத்து உறவைப் பலப்படுத்திக் கொள்கிறார். எல்லா ஊரிலுமே இரண்டு பேரும் குடித்தனம் வைத்துக் கொள்வார்கள். ஊருக்கு நடுவில் ஈசுவரன் கோயில் கொண்டிருந்தால், ஊருக்கு மேல் புறத்தில் பெருமாள் கோயில் அமைத்துக் கொள்ளுவார். காவிரி ஆற்றிடையே ஒரு தீவு ஏற்பட்டால், அதில் மேல் பாகத்தை விஷ்ணுவும், கீழ் பாகத்தைச் சிவனும் பங்கு போட்டு இடம் பிடித்துக்கொள்வார்கள்.தனக்கு எதிரேயே தன் மைத்துனன் கால் நீட்டிப்படுத்துக் கொண்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இன்முகத்தோடேயே ஏற்றுக் கொள்வார் சிவன். இன்னும் சில ஊர்களில், ஒரு வீட்டுக்குள்ளேயே (ஆம், கோயிலுக்குள்ளேதான்) இருவரும் இடம்பிடித்துக் கொள்வார்கள். பிரபலமான தில்லைச் சிற்றம்பலத்திலே ஆடும் பெருமானான நடராஜர், அந்த கோவிந்தராஜனுக்கு நல்ல விசாலமான இடத்தையே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். நிலாத் திங்கள் துண்டப் பெருமாளோ ஏகம்பரர் கோயிலுக்குள்ளே இடம் பிடித்துக் கொள்கிறார். இப்படியே சிக்கலில், பவானியில் இன்னும் பலதலங்களில் இருவரும் சேர்ந்தே வாழ்கிறார்கள் ஒரு கூரையின் அடியிலே.

இவர்களுக்குள் எவ்வளவு சௌஜன்யம் நிலவியது என்பதற்கு எத்தனையோ கதைகள். வேலைவெட்டி ஒன்றும் இல்லாத நேரத்தில் இருவரும் சொக்கட்டான் ஆடவும் கிளம்பியிருக்கிறார்கள். இப்படிச் சொக்கட்டான் சதுரங்கம் ஆடும்போது ஒரு கஷ்டம். வெற்றி தோல்வியை நிர்ணயிக்க இருவரும் அன்னை பார்வதியை நடுவராக இருக்கவேண்டுகிறார்கள். அப்படி வேண்டிக் கொண்டு, கடைசியில் விஷ்ணு வெற்றிபெற, அப்படி அவரே வெற்றிபெற்றார் என்று தீர்ப்புக்கூறியதற்காக இந்தச் சிவன் தம் மனைவியாம் பார்வதியோடு பிணங்கிக்கொண்டு பல நாட்கள் இருந்திருக்கிறார். இந்தப் பிணக்கெல்லாம் கொஞ்சநேரத்துக்குத்தானே. அன்னையின் சக்தி இல்லாவிட்டால் ஐயனுக்குக் காரியங்கள் நடப்பதேது? ஆதலால் இருவரும் பின்னர் இணங்கியே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் இணங்கியபின், அத்தானும் அம்மாஞ்சியுமே இணைந்து வாழ்வதில் வியப்பில்லைதானே. இப்படியே வேதபுரி ஈசுவரராம் சிவபெருமானும் ஆமருவிப் பெருமானாம் விஷ்ணுவும் இணைந்து வாழும் தலமே தேரழுந்தூர் என்னும் திரு அழுந்தூர். அத்தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்தத் தேரழுந்தூர் மாயூரத்துக்குத் தென் மேற்கே ஆறு மைல் தொலைவில் உள்ள குத்தாலத்துக்குத் தென்கிழக்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது. மாயூரம்-தஞ்சைப் பாதையிலிருந்து ஒரு நல்ல ரோடு ஊருக்கு அழைத்துச் செல்லும். மாயூரத்துக்கும் குத்தாலத்துக்கும் இடையே ரயில்வேக்காரர்கள் ஒரு சிறு ஸ்டேஷன் அமைத்திருக்கிறார்கள். அதோடு அந்த ஸ்டேஷனில் 'தேரழுந்தார் - கம்பன் மேட்டுக்கு இங்கே இறங்குங்கள்' என்று நல்ல ரஸனையோடு ஒரு போர்டையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். (ஆம், சொல்ல மறந்து விட்டேனே, இந்தத் தேரழுந்தூர்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர்) ஸ்டேஷனில் எல்லா ரயிலும் நிற்காது, சக்கடா வண்டி போலப் போகும் பாசஞ்சர், ஷட்டில்கள் மாத்திரமே நிற்கும். ஆதலால் போட் மெயிலில் வருபவர்கள் எல்லாம் மாயூரத்தலே இறங்கி வண்டி பிடித்துப் போகவேணும். காலில் தெம்புள்ளவர்கள் தேரழுந்தூர் ஸ்டேஷனிலிருந்து நடக்கலாம். தெம்பு இல்லாதவர்களுக்கு என்றுதான் கொம்பு இல்லாத மொட்டை மாடுகள் பூட்டிய வண்டிகள் தயாராயிருக்குமே. ஆதலால் வண்டியேறியே ஊர்போய்ச் சேரலாம். போகும்போதே வண்டிக்காரனிடம் ‘ஏன் இந்த ஊருக்குத் தேரழுந்தூர் என்று பெயர் வந்தது?' என்று விசாரிக்கலாம். உபரிசரவசு என்ற ஒரு அரசன். அவனுக்கு ஒரு தேர். அந்தத் தேரோ வானவீதியிலேயே உருண்டு ஓடும் தன்மையுடையது. இந்த அரசன் கீழே பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார் என்பதை மதியாமல் அவர் தலைக்கு மேலே வானவீதியிலே தேரைச் செலுத்தியிருக்கிறான். பெருமாள் சும்மா இருந்தாலும், அவரது பெரிய திருவடியாம் கருடாழ்வார் சும்மா இதைச் சகித்துக் கொண்டிருப்பாரா? தம்முடைய மந்திர சக்தியால் தேரைக் கீழே இழுத்துப் பூமியில் அழுந்த வைத்து விடுகிறார். பின்னர் உபரிசரவசு பெருமானை வணங்கி மன்னிப்புப் பெற்றுத்தேரோடு திரும்பியிருக்கிறான். (பதினைந்து வருஷங்களுக்கு முன் நான் இந்த ஊர் போகும்போது, நான் சென்ற வண்டி, அங்குள்ள மண்ரோட்டில் அழுந்திக் கொண்டது. அப்போது நான் இந்த உபரிசரவசுவைப்போல் பெருமாளை மதியாது நடந்தவன் அல்லவே, ஏன் நம் வண்டி அழுந்தவேண்டும்?" என்று நினைத்தேன். பெரிய திருவடியையும் பிரார்த்தித்துக் கொண்டேன். அழுந்திய வண்டி கிளம்பிற்று. இப்போதெல்லாம் அந்தக் கஷ்டம் இல்லை. நல்லதார்ரோடு அல்லவா போட்டிருக்கிறார்கள் நெடுஞ்சாலைப் பொறியாளர்கள்) இந்தத் தேரழுந்திய கதையைவிட இங்கு திரு வந்து அழுந்தியிருக்கிறது என்று சொல்லவே நான் ஆசைப்படுகிறேன். கம்பன் பிறந்த ஊர் திரு அழுந்திய ஊராக இல்லாமல், தேர்மட்டும் அழுந்திய ஊராகவா இருக்கும்?

நம்மை ஏற்றிச் செல்லும் வண்டிக்காரன் ஊருக்குள் நம்மைக் கூட்டிச் சென்றதும், நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ஒரு பிரச்சினையைக் கிளப்புவான். அவன் எழுப்பும் பிரச்சினை எந்தக் கோயிலுக்கு முதலில் போகவேண்டும் என்பதுதான், நாம் வண்டியிலிருந்து இறங்கினால் மேற்கே ஒரு கோபுரம் தெரியும். கிழக்கே ஒரு கோபுரம் தெரியும். கிழக்கேயுள்ள கோயில் வேதபுரி ஈசுவரராம் சிவன் கோயில். இவர் மேற்கே பார்க்க இருக்கிறார். மேற்கேயுள்ள கோயில் ஆமருவிப்பெருமாள் கோயில். இவர் கிழக்கே பார்க்க நிற்கிறார். இருவருக்கும் இடையில், உள்ள சந்நிதித் தெருவின் நீளம் எல்லாம் இரண்டு பர்லாங்கு தூரமே. ஒருவரையொருவர் எதிர்நோக்கியே இருக்கிறார்கள். ஆம்; அன்று எதிர் எதிராக இருந்துதானே சதுரங்கம் ஆடியிருக்கிறார்கள். எந்த மூர்த்தியை முதலில் சென்று காண்பது என்ற தீர்மானத்துக்கு வரமுடியாமல் தவிப்போம் கொஞ்சநேரம். அந்த நேரம் அங்குள்ள தேரடிப்பக்கம் ஒரு சிறு கோயில் தெரியும். அந்தக் கோயிலில் இருப்பவர் வழிகாட்டி விநாயகர் என்பார்கள். அவரிடமே வழிகாட்டும்படி கேட்கலாம். ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னே இத்தலத்துக்கு எழுந்தருளிய, ஞானசம்பந்தருக்குமே இவர்தான் வழிகாட்டியிருக்கிறார். அதனாலேயே ஞானசம்பந்த விநாயகர் என்��ு பெயரும் பெற்றிருக்கிறார். இவர்தான் பிரம்மச்சாரியாயிற்றே. ஆதலால் அவருக்கு மாமனார் வீட்டில் அவ்வளவு அக்கறையில்லை. அவர் தம் தகப்பனார் இருக்கும் இடத்துக்கே வழி காட்டுவார். அன்றும் சம்பந்தருக்கு அப்படித்தானே வழி காட்டியிருக்கிறார். நாமும் அவர் காட்டிய வழியிலே கிழக்குநோக்கி நடந்து வேதபுரி ஈசுவரர் கோயில் வாயிலுக்கு வந்து சேரலாம். சம்பந்தருடன் சேர்ந்து,

தொழுமாறு வல்லார்துயர்தீர, நினைந்து
எழுமாறு வல்லார் இசைபாட, விம்மி
அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மாமடம் மன்னினையே

என்று பாடிக்கொண்டே நாமும் கோயிலுக்குள் நுழையலாம். கோயிலின் வெளிப்பிராகாரத்திலே தென்மேற்குப் பகுதியிலேயே சௌந்தராம்பிகை தனிக்கோயிலில் இருக்கிறாள். இப்படி இவள் தனித்திருப்பதனால்தான், சதுரங்க விளையாட்டு, அதனால் இறைவன் இறைவியரிடையே பிணக்கு என்றெல்லாம் கதை கட்டியிருப்பார்கள் போல் இருக்கிறது. திருக்கடவூரில் அபிராமியின் கோயிலும் இப்படித்தான் இருக்கிறது. அங்கு பிணக்கு என்ற பேச்சு இல்லையே. உண்மையைச் சொல்லப்போனால் அமிர்த கடேசுரர்கூட அபிராமிக்கு அடங்கியவராகத்தானே வாழ்கிறார். நாமும் முதலில் சௌந்தராம்பிகையை வணங்கிவிட்டு வேதபுரி ஈசுவரர் சந்நிதிக்குப் போகலாம். ‘மாமடம்' என்று சம்பந்தர் குறிப்பிடுவதால் மாடக் கோயிலாக இருக்குமோ என்று எண்ணுவோம��. இது மாடக்கோயில் அல்ல. ஆனால் வருஷத்துக்கு மூன்று நாட்கள் (மார்ச்சு 6,7,8) மாலை ஆறு மணி சுமாருக்குக் கோபுரம் வாயில், கொடிமரம், பலிபீடம் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு சூரியன் கோயிலுக்குள் புகுந்து லிங்கத் திரு உருவைச் சோதிமயமாக ஆக்கிவழிபடுகிறான். சூரியன் மாத்திரம் என்ன வேதங்கள், திக்கு பாலகர்கள் எல்லாம் வழிபாடு இயற்றியிருக்கிறார்கள் என்பது புராண வரலாறு. நாமும் வேதபுரி ஈசுவரரை வணங்கிவிட்டு மற்றையப் பரிவாரதேவதைகளையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம். இக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவையெல்லாம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வெட்டப்பட்டவை. 'மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட திரிபுவன வீரதேவன்' என்று அவன் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருக்கிறான். இந்த வட்டாரம், ஜெயங்கொண்ட சோழவள நாட்டுத் திருவழுந்தூர் நாடு என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இத்தலமே திருமாவளவன் கரிகாலனது தாயாரது ஊர் என்றும், இங்கேயே அவன் மறைந்து பல காலம் தங்கியிருந்தான் என்றும் கூறுவர். சரித்திர வரலாறு இவ்வளவு போதும்.

இனி நாம் ஆமருவி அப்பன் சந்நிதிக்குச் செல்லாலாம்.

வேதபுரி ஈசுவரர் கோயிலிலிருந்து. கண்ணை மூடிக்கொண்டு நேரே மேற்கு நோக்கி நடந்தால் ஆமருவியப்பன் வந்து சேரலாம். ஆனால் கோயில் பக்கம் வருமுன் மூடிய கண்ணைத் திறந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் கோயில் முன்னிருக்கும் தர்சன புஷ்கரிணியில் விழுந்து விடவேண்டியதுதான். இந்தப் புஷ்கரிணியைச் சுற்றிக் கொண்டு வந்தால் ஊஞ்சல் மண்டபத்துக்கு வந்து சேருவோம். கோயிலில் நுழைந்த உடனேயே ராஜகோபுரத்தின் உள்பக்கம் தென்பக்கத்திலே இரண்டு மாடங்கள் இருக்கும். அந்த மாடத்தில் இருப்பவர்கள் 'கம்பர்களும் அவர் மனைவிகளும்' என்பார்கள், 'இது என்ன கம்பர்கள்?' என்று
ஆமருவி அப்பன்

கேட்டால் கோயில் நிர்வாகிகள், முன்னரே கம்பனையும் அவர் மனைவியையும் இங்கு பிரதிஷ்டை வைத்திருக்கிறார்கள். அவர்கள் பின்னமுற்று விட்டார்கள் என்பதனால் புதிதாகக் கம்பனுக்கும் அவன் மனைவிக்கும் சிலைகள் அமைத்துப் பழைய சிலைகளுடனே நிறுத்தி யிருக்கிறோம்' என்பார்கள். ராமாயணம் என்னும் ராம கதை பாடினான் என்பதற்காக, வேதபுரி ஈசுவரர் கம்பனைத் தன் கோயிலுள் இருக்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆமருவியப்பன் அவனுக்கு அக்ரஸ்தானமே கொடுத்திருக்கிறான். 'அரன் அதிகன், உலகு அளந்த அரி அதிகன்' என்றெல்லாம் வாதிட்டு மயங்குபவர்களை 'அறிவிலார்' என்றே கூறியிருக்கிறான்.

வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும்
விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில்
படிவங்கள் எப்படியோ?

என்று வேதபுரியானைப் பாடினபிறகே,

தாய்தன்னை அறியாத கன்று இல்லை
தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின்
தாயாகி, ஐய!
நீ அறிதி எப்பொருளும்
அவை உன்னைநிலை அறியா
மாயை இது என் கொல்லோ?
வாராதேவரவல்லாய்!

என்று ஆமருவி அப்பனைப் பாடி இருக்கிறான். இனி அந்த ஆமருவி அப்பனையே காணக் கோயிலுக்குள் விரைந்து செல்லலாம். கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் தன் தோழர்களுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்திருக்கிறான். பசுக்களை ஓரிடத்தில் விட்டு நீர் அருந்தச் சென்றிருக்கிறான். இந்த நேரத்தில் அவ்வழி வந்த பிரம்மா, பசுக்களைத் திருவழுந்தூருக்கு ஓட்டி வந்து விடுகிறார். இதைத் தெரிந்த கண்ணன் புதிதாக ஒரு பசுக்கூட்டத்தையே, உருவாக்கி யாதவர்களுக்குக் கொடுத்து விடுகிறான். பிரம்மாவும் தம் பிழையை உணர்கிறார். அவர் வேண்டிக் கொண்டபடியே, திருவழுந்தூர் சென்ற பசு நிறைகாக்கும் கோவலனாகக் கண்ணன் இங்கு வந்துவிடுகிறான். 'ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக ' அமர்கிறான். கர்ப்பக் கிருஹத்தில் இருக்கும் உற்சவரது பின்புறம் பசு ஒன்று நின்று கொண்டிருப்பது கண்கூடு. இத்துடன் இவ்வூரைச் சுற்றியுள்ள கிராமங்களெல்லாம் இளங்கன்றுக்குடி, (இளங் கார்குடி என்பார்கள்) வெண்ணெய், கோமலர், கண்ணபுரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. கிருஷ்ணனோடு மிகத் தொடர்புடைய ஊர் இது. பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது ஒன்று என்பர் பெரியோர்.

உற்சவர் மிக அழகானவர். ஏதோ வருஷத்துக்கு இரண்டு மூன்று முறையே அபிஷேகம் பெறுகிறார். ஒரு அபிஷேகத்துக்குக் காவிரிக்கே எழுந்தருளுவார். அன்று தான் அர்ச்சகர்கள், ஆமருவியப்பனின் முழு மேனியழகையும் நமக்குக் காண்பிப்பார்கள். பங்குனிப் புனர்வசு ராமன் பிறந்தநாள். அன்று இந்தக் கண்ணனையே ராமனாக அலங்காரம் பண்ணிச்சிவன் கோயில் வரை உலா வரப் பண்ணுவர், இராமாவதாரம் பாடிய கம்பனுக்கு ஆமருவியப்பன், ராமனாகவே காட்சி கொடுத்திருக்கிறான் என்றும் கூறுவர். உற்சவராம் ஆமருவியப்பனைவிட, மூலவராம் 'திருவுக்கும் திருவாகிய செல்வன்' மிக்க அழகு வாய்ந்தவன். உயரம் பத்து அடிக்குக் குறையவில்லை . நல்ல ஆஜானுபாகு. நின்ற திருக்கோலத்தில் கரிய திருமேனியனாக அமைந்த நல்லசிலாவடிவம். தலையிலே தங்கக் கிரீடம். இடையிலே தசாவதார பெல்ட். கழுத்திலே சஹஸ்ரநாம மாலை. தோள்களிலே வாகுவலயம். மார்பிலே லக்ஷ்மி. எல்லாம் தங்கமயம், நெற்றியிலேவைரத்திருநாமம். எல்லாவற்றையும் விட மந்தஹாசத்துடன் சாந்தம் தவழும் திருமுக மண்டலம். இந்தத் திருமுக தரிசனம் பெற்ற திருமங்கை மன்னன்,

திருவுக்கும் திருவாகிய செல்வார்
தெய்வத்துக் கரசே! செய்ய கண்ணா !
உருவச் செஞ்சுடர் ஆழிவல்லானே!
உலகு உண்ட ஒருவா! திருமார்பார்

என்று பாடிப் பரவியதுடன்,

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்தநாவர்
திசைமுகனே அனையவர்கள் செம்மைமிக்க
அந்தணர்தம் ஆகுதியின் புகையார் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே!

என்றும் புகழ்ந்து ஏத்துகிறார். இந்தக் கருவறையிலேயே கருடாழ்வார், காவேரி, மார்க்கண்டர், பிரஹலாதர் எல்லோரும் இருக்கிறார்கள். அகஸ்தியரும் காவேரியும் பிணக்குற்றனர் என்றும் அதனால் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்ள, பின்னர் இருவரும் இத்தலம் வந்து சாபவிமோசனம் பெற்றனர் என்றும் வரலாறு. 'கம்பன் பிறந்த ஊர், காவேரி தங்கும் ஊர், கும்பமுனி சாபம் குலைத்த ஊர்' என்றுதானே இத்தலத்தின் புகழ் பரவியிருக்கிறது. மார்க்கண்டேயர் என்றும் பதினாறு வயது என்று அமிர்தகடேசுவரரிடம் வரம் பெற்றாரே ஒழிய, அழியாத சாயுஜ்யத்தைப் பெற ஆமருவியப்பனையே அடைந்திருக்கிறார். பிரஹலாதனின் பக்தியை மெச்சிய பெருமாள், அவனையும் தன் பக்கத்திலேயே இருத்திக் கொண்டிருக்கிறான். அதனால்தானோ என்னவோ முதல் நூலில் இல்லாத பிரஹலாத வரலாற்றைக் காவியத்திலே புகுந்தி வைத்திருக்கிறான் கம்பன். ஆமருவியப்பனைப் பார்த்த பின் அவன் துணைவியாம் செங்கமலவல்லித்தாயார் சந்நிதியும் சென்று வணங்கலாம். ராமனுக்கும் ஆழ்வாருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலில் அவர்களையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம். இத்தனையும் பார்த்தபின் ஒன்று ஞாபகத்துக்கு வரும் இங்குதானே கம்பன் மேடு என்று ஒரு இடம் இருக்கிறது என்பது. அதைக் காண ஊரின் தென்மேற்குக் கோடிக்கே செல்லவேண்டும். அங்கு புதைபொருள் இலாக்காவினர் ஒரு போர்டு வைத்திருக்கிறார்கள்: கம்பன் குடியிருந்த இடம் அது என்பர். அங்கு சில ஓட்டாஞ்சல்லிகள்தான் கிடைக்கும். முன்னர் சில காசுகளும் கிடைத்தன என்பார்கள். நமக்கு எதற்கு 'ஓடும் செம்பொனும்' அவற்றை யெல்லாம் விட அழகான காவியமாம் இராமவதாரமே கிடைத்திருக்கிறதே. ஆதலால் கம்பன் பிறந்த ஊரில் பிறந்த பெருமானுக்கு வணக்கம் செலுத்துவதோடே, கம்பன் பிறந்து வளர்ந்த இடத்துக்கே நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பலாம்.