222 கவி பாடலாம்
நாடகக் கீர்த்தனங்களும், வேதநாயம் பிள்ளை கீர்த்தனங் களும், நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களும் தமிழ் நாட்டில் நன்றாகப் பரவின காலம் ஒன்று உண்டு.
இப்போதும் கீர்த்தனங்களைப் பலர் பாடுகிறார்கள். ராகமும் தாளமும் பாவமும் இசைப்பாவுக்குரிய யாப் பமைதியும் ஒருங்கே பொருந்தியிருந்தால்தான் கீர்த்தனம் நன்றாக இருக்கும். பாவத்துக்கு ஏற்ற ராகம் இருக்க வேண்டும்.
கீர்த்தனங்களில் பல்லவியானது அநுபல்லவியோடும் சரணங்களோடும் பொருளால் தொடர்புடையதாகி, முடி மணிபோல விளங்கவேண்டும். சின்னதாக இருப்பது பல்லவி, அதைவிடச் சற்றே பெரியது அது பல்லவி, அதைவிடப் பெரியது சரணம் என்று நினைத்துக் கொண்டு அமைப்பது கீர்த்தனம் ஆகாது.
பல்லவியும் அநுபல்லவியும் ஒரே எதுகையில் அமைந்திருக்க வேண்டும். சரணங்களில் தாளம் விழும் இடங்களில் மோனையோ எதுகையோ இருந்தால் கீர்த்தனத்தின் அழகு மிகுதியாகும். பாவத்துக்கு ஏற்றபடி ராகத்தை அமைப்பது போல, வார்த்தைகளையும் அமைக்க வேண்டும். இரக்கத்தை உண்டாக்க வேண்டிய இடத்தில் வல்லின மெய்களைப் போட்டு நிரப்பக் கூடாது. பெரியவர் களுடைய கீர்த்தனங்களை வாயாரப் பாடிப் பார்க்க வேண்டும். தாளம் விழும் இடங்களை நுட்பமாகக் கவனிக்க வேண்டும். வார்த்தைகள் விள்ளாமல் விரியாமல் அப்படி அப்படியே இருக்கும்படி அமைக்க வேண்டும். இசைப் பாட்டில் வகையுளி வந்தால் பாவமே போய்விடும்.