உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்���ு பார்க்கப்படவில்லை

1. இந்தக் கட்டுரைகள்

‘'காரிகை கற்றுக் கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? காரிகையென்பது கவியின் இலக்கணத்தைச் சொல்லும் நூல். அதன் முழுப் பெயர் யாப்பருங்கலக் காரிகை. யாப்பு என்பது கவியைக் குறிக்கும் சொல். யாப்பு என்னும் கடலைக் கடக்க அது ஒரு கலத்தைப் போல, கப்பலைப் போல உதவுமாம்.

மேலே சொன்ன பழமொழி ஏன் வந்தது என்று பார்க்கலாம். கவிபாடுவது என்பது கருவிலே வர வேண்டிய பாக்கியம். எல்லோருமே கவி பாட முடியாது. எதுகை, மோனை என்று இலக்கணங்களைக் கற்றுக் கொண்ட மாத்திரத்தில் கவி தாராளமாகப் பாட வந்துவிடாது. கீற்று முடைகிற மாதிரி கவியை முடைய முடியாது. இந்த உண்மையைத்தான் அந்தப் பழமொழி சொல்கிறது.

ஆனால், இன்னாருக்குத்தான் பிறப்பிலே கவி பாடும் திறமை அமைந்திருக்கிறது என்பது எப்படித் தெரியும்? ஏதோ ஆசையினால் நானும் பாடுகிறேன் என்று ஆரம்பித்து, வாய்ப்பாகக் கிடைத்தால் நல்ல கவியாகப் பாடுகிறார்கள்; இல்லையானால் இதற்கும் நமக்கும் வெகு தூரம் என்று விட்டுவிடுகிறார்கள். முயன்று பார்த்தால்தான் யாருக்குக் கவி வரும், யாருக்கு வராது என்று தெரிய வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/14&oldid=655733" இலிருந்து மீள்விக்கப்பட்டது