உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியச் சாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

வ.சுப. மாணிக்கனார்



வரலாற்றுக் குறிப்புப் பொதுளப் பாடிய தற்காலக் கவிஞர்கள் கண்ணதாசனைப் போல் யாருமிலர். வரலாறு எழுதும் எதிர்காலத்தினர்க்கு இவர்தம் பாடல்கள் குறிப்புப்பால் நிரம்பச் சுரக்கும்.

கண்ணதாசனின் சில பாடற்றொகுதிகளில் இப்பாட்டு இன்ன காலத்து இவ்விடத்துப் பாடப்பெற்றது என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளது.இக்குறிப்பு எழுதாத பாடல்களும் பலவுள. ஒவ்வொரு பாட்டுக்கும் காலக் குறிப்புக் கொடுத்தால் மட்டும் போதாது; பாட்டுக்கள் பாடிய காலமுறைப்படி அடைவு செய்யப்பட்ட வரிசைத் தொகுதிகளும் வரல் வேண்டும். அப்போதுதான் கவிஞனின் வாழ்வு நோக்கங்களும் கொள்கை வளர்ச்சிகளும் அவற்றிற்கேற்பத் தோன்றிய கவிதைப் படைப்புகளும் காரணம் படப் புலனாகும். உண்மைக்கும் ஆய்வுக்கும் உரிய கால நிரற் பதிப்பு கண்ணதாசன் அனைய கவிப்பெரு மக்கட்கு இல்லாவிட்டால் இவர்தம் சிறப்பினை வருங்கால இளைஞர்கள் உணரமாட்டார்கள்; பொருள் முரண்களுக்கு அமைதி கண்டு கவிதை வளத்தைப் பருகமாட்டார்கள். ஆதலின் கண்ணதாசனாரின் இனிவரும் கவிதைத் தொகுதிகள் காலச் செம்பதிப்பாக வருக என்பது என் வேண்டுகோள்.

காலப்பொருள்மேல் எண்ணிறந்த பாடல்கள் பாடிய கண்ணதாசன், காலத்தொடுசாரா நிலைப்பொருள்மேல்யாத்த தனிப்பாடல்களும் கவிதை நூல்களும் பலவுள. அவற்றுள் ஒன்று தைப்பாவை என்பது. இப்பாவையை மணிவாசகரின் திருவெம்பாவையொடும் ஆண்டாளின் திருப்பாவையொடும் ஒத்திட்டு ஓரளவு காண்போம். ஒப்பீடு என்பது ஏற்றத் தாழ்வு கூறுவதன்று பெருமை சிறுமைப்பட முடிப்பதன்று ஒரினப் பட்ட நூல்களில் வேறுபட்ட இயல்புகளைச் சுட்டிக் காட்டுவதே ஒப்பியத்தின் நோக்கம். t

முன்னிரு பாவைகளைத் தழுவித் தைப்பாவை இயற்றப்பட்டிருத்தலின், கண்ணதாசன் மரபு வழிப்பட்ட கவிஞர் என்பது அறியப்படும். மரபு, புரட்சி என்ற இரு சொற்கள் கலையுலகில் மிகவும் எடுத்தாளப்படுகின்றன.