இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரு சிறு வாய்ப்பாட்டு
என்னைப்பற்றி நான் திருவாய் மலர்வதற்கு முன் என்னைப் பற்றி ஒரு சிறுவாய் மலர்வதைக் கேட்பீர் :
பூவோ பூ,
புளியம் பூ;
பொன்னாங் கண்ணித்
தாழம் பூ:
அத்திப் பூ ,
ஆவாரம் பூ,
அக்கா கொண்டைக்குத்
தாழம் பூ - இஃது என்னைப் பற்றிய எளிய
பாடல். ஒரு நாட்டுப் பாடல். பாட்டி கட்டியது. பெயர்த்தி பாடுவது. இதில் எனது கதை இல்லை. எனது வரலாற்றைக் குறிக்க எழுந்ததும் அன்று. ஆனால், எனது வரலாற்றை விரிக்க இடந்தருகின்றது. இப்பாடலை வாய்ப்பாக்கிக் கொண்டு எனது வரலாற்றைச் சொல்லப் புகுகின்றேன்