உள்ளடக்கத்துக்குச் செல்

புவிப்புறத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவிப்புறத் தொலைக்காட்சி (Terrestrial television) என்ற வகை தொலைக்காட்சிப் பரப்புகை வானொலி ஒலிபரப்பை ஒத்து காற்றுவெளியில் மின்காந்த அலைகள் மூலம் அனுப்பப்பட்டு தொலைக்காட்சி அலைவாங்கி ஒன்றின் மூலம் பெறப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும். இது செய்மதியையோ கம்பிவடத்தையோ ஊடகமாகப் பயன்படுத்துவதில்லை. வீட்டில் உள்ளத் தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி கொண்டு விரும்பும் அலைவரிசையைப் பெறலாம். ஐரோப்பாவில் இது புவிப்புறத் தொலைக்காட்சி என அறியப்பட்டாலும் ஐக்கிய அமெரிக்காவில் இதனை ஒளிபரப்புத் தொலைக்காட்சி (broadcast television) என்றும் சில நேரங்களில் வளியாற்றுத் தொலைக்காட்சி (over-the-air television, OTA) என்றும் குறிப்பிடப்படுகிறது.

புவிப்புறத் தொலைகாட்சியே முதன்முதலாக ஓர் ஊடகம் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்ட தொழினுட்பமாகும். 1927ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று வாசிங்டன், டி. சி.யிலிருந்து முதல் தொலைதூரத் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. பிபிசி 1929ஆம் ஆண்டு பொதுமக்களுக்கான ஒளிபரப்பை துவங்கியது; வழமையான நிகழ்ச்சிகளை 1930 முதல் ஒளிபரப்பத் தொடங்கியது. 1950களில் கம்பிவடத் தொலைக்காட்சிகள் வரும்வரை இவ்வகை ஒளிபரப்பே கோலோச்சி வந்தது.

இந்தியாவில்

[தொகு]

இந்தியாவில் 1959ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் த���ல்லியில் சோதனையோட்டமாக சிறு பரப்பானைக் கொண்டு தற்காலிக ஒளிப்பதிவு தளத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. வழமையான நிகழ்ச்சிகள் 1965ஆம் ஆண்டிலிருந்து அனைத்திந்திய வானொலியின் அங்கமாக செயல்படத் தொடங்கின. இச்சேவை மும்பைக்கும் அமிர்தசரசிற்கும் 1972ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது. 1975 வரை ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள் இருந்தன; தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக தூர்தர்சன் இருந்தது. 1976ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியிலிருந்து தூர்தர்சன் தனியாக செயல்படத் தொடங்கியது. தேசிய சேவைகள் 1982ஆம் ஆண்டிலிருந்து அனைத்து நிலையங்களிலிருந்தும் ஒளிபரப்பப்பட்டன. அதே ஆண்டு வண்ணத் தொலைக்காட்சி இந்தியாவிற்கு அறிமுகமானது.

இந்தியாவின் பரந்த நிலப்பரப்பை கருத்தில்கொண்டு இன்சாட் செயற்கைக்கோள்களின் மூலம் ஓர் தொலைதொடர்பு பிணையம் தொலைக்காட்சி புவிப்புற பரப்பான்களுக்காக அமைக்கப்பட்டது. இந்தப் புவிப்புறப் பரப்பான்களுக்கான குறிப்பலைகள் மைய நிலையத்திலிருந்து இந்த செயற்கைக்கோள்கள் மூலம் அனுப்பப்பட்டன; இவற்றை புவிப்புற பரப்பான்கள் புவிப்புறத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பின. தற்போது இவ்வாறு பிணைக்கப்பட்ட 1400 புவிப்புற பரப்பான்கள் மூலம் இந்திய மக்கள்தொகையின் 90% நபர்கள் தூர்தர்சன் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]