உள்ளடக்கத்துக்குச் செல்

துங்குசுக்கா நிகழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்குசுக்கா நிகழ்வு
சைபீரியாவில் அமைவிடம்
நிகழ்வுகாட்டுப் பகுதியில் வெடிப்பு (10–15 மெகாதொன்கள் டிஎன்டி)
நேரம்30 சூன் 1908
இடம்பொத்காமின்னயா துங்குசுக்கா ஆறு, சைபீரியா, உருசியப் பேரரசு
விளைவுகள்2000 சதுரகிமீ காட்டுப்பகுதி அழிவு
சேதம்உள்ளூர் தாவரங்கள், மிருகங்கள் அழிவு
சில கட்டடங்கள் சேதம்
இறப்புகள்0 அதிகாரபூர்வம், 2 (இருக்கலாம்)
காரணம்சிறிய சிறுகோள் அல்லது வால்வெள்ளி வானில் சிதறியிருக்கலாம்.
ஆள்கூறுகள்60°55′N 101°57′E / 60.917°N 101.950°E / 60.917; 101.950
 டுங்குஸ்க்கா நிகழ்வு
டுங்குஸ்க்கா நிகழ்வு நடைபெற்ற இடம், சைபீரியா

துங்குசுக்கா நிகழ்வு (Tunguska event, உருசியம்: Тунгусский метеорит, துங்குஸ்கா விண்வீழ்கல்) எனும் சொற்றொடரால் குறிப்பிடப்படுவது 1908ம் ஆண்டு, கிரகோரியன் நாட்காட்டியின் படி ஜூன் 30, ஜூலியன் நாட்காட்டிப்படி ஜூன் 17 காலை உருசிய நாட்டின் மாநிலமான யெனிசெய்ஸ்க்கில் ஓடும் டுங்குஸ்க்கா நதியின் அருகாமையில் நிகழ்ந்த பாரிய வெடிப்பு நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்வினால் கிட்டத்தட்ட கிழக்கு சைபீரிய காட்டின் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதி தரை மட்டமாக்கப்பட்டது.எனினும் இப்பிரதேசத்தின் சனத்தொகை அடர்த்தி குறைவு காரணமாக இதுவரை மனித உயிரிழப்புகள் எதுவும் பதியப்படவில்லை. அணுகுண்டு வெடிப்பு போல பெருவெடிப்பு நிகழ்வுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வு விண்கல் அல்லது விண்கல்லின் ஒருபகுதி விழுந்ததினால் ஏற்பட்டிருக்கலாமென கூறப்படுகிறது.என்றாலும் விண்பொருள் தாக்கத்தினால் உருவாக்கப்படும் பாரிய பள்ளம் எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. வேகமாக வந்த விண்கல் பூமிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்துச் சிதறியிருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றன

துங்குசுக்கா நிகழ்வு பூமியில் நிகழ்ந்த விண்பொருள் தாக்க வெடிப்பு நிகழ்வுகளில் மிகப் பெரியது ஆகும். ஆராய்ச்சிகள் எரிகல்லின் பரப்பளவை 60 முதல் 190 மீட்டர் வரை பல்வேறு அளவுகளில் வரையறுக்கின்றன.

1908 முதல் இதுவரை இந்நிகழ்வைப்பற்றி ஏறத்தாள 1000 அறிவியல் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் அதிகமான கட்டுரைகள் உருசிய மொழியில் வெளிவந்தவை ஆகும். 2013ல் ஆராய்ச்சி குழு ஒன்று வெடிப்பு நிகழ்ந்த இடத்தின் மையப் பகுதியில் உள்ள முற்றா நிலக்கரி சதுப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அக்கட்டுரை, வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட அம்மாதிரிகள் எரிவெள்ளி ஒன்றின் துகள்களாக இருக்கலாம் என குறிப்பிடுகிறது.[1][2]

ஆரம்பத்தில் இவ்வெடிப்பின் மூலம் வெளிப்பட்ட சக்தியின் அளவு 10-15 மெகாதொன் டி,என்,டி முதல் 30 மெகாதொன் டி.என்.டி என அணு ஆயுத விளைவு அளவு விதிப்படி வெடிச்சுவாலையின் உயரத்தை வைத்து கணக்கிடப்பட்டது.என்றாலும் பிற்காலத்தில் அதிநவீன கணணிகளைக் கொண்டு ஆராய்ந்ததன் மூலம் வெளிப்பட்ட சக்தி 3-5 மெகாதொன் டி,என்,டி என கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட 15 மெகாதொன் டி,என்,டி என்பது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட 1000 மடங்கு ஆற்றல் பெரியதும்,1954 மார்ச் 1ம் திகதி ஐக்கிய அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட காசல் ப்ராவோ எனும் அணுகுண்டு சோதனையில் வெளிப்பட்ட ஆற்றலுக்கு (15.2 மெ.தொ) சமனானதும்,சோவியத் யூனியனினால் 30 அக்டோபர் 1961 அன்று வெடிக்கவைக்கப்பட்ட சார் அணுகுண்டின் ஆற்றலில் (50 மெகாதொன்.இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுகுண்டுகளில் மிக சக்தி வாய்ந்தது) மூன்றில் ஒரு பங்கும் ஆகும்.

இவ்வெடிப்பு 2150 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியிலிருந்த ஏறத்தாள 80 மில்லியன் மரங்களை நிர்மூலமாக்கியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு ரிச்டர் அளவுகோலில் 5.0 அலகாக இருக்கலாமென கருதப்படுகிறது.இந்த அளவுடைய வெடிப்பு ஒரு பெரிய நகரத்தையே அழிக்கக்கூடியது , எனினும் மக்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு பல கிலோமீட்டர் தொலைவில் வெடித்தமையால் மனித உயிர் சேதங்கள் எதுவும் பதியப்படவில்லை .சில அறிக்கைகள் இருவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டாலும் உத்தியோக பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.[3] இந்நிகழ்வு விண்கல் தாக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அடித்தளம் இட்டது.

விளக்கம்

[தொகு]

ஜூன் 30ம் திகதி காலை 07:17 மணியளவில் பைக்கால் ஏரிக்கு வடமேற்கே வசிக்கும் ரஷ்ய குடியேறிகள் மற்றும் எவான்கி ஆதிக்குடி மக்கள் சூரியனைப் போல பிரகாசத்துடன் நீல நிற ஒளிப்பிழம்பொன்று வானில் செல்வதை அவதானித்தனர்.பத்து நிமிடங்களின் பின் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் இராணுவ ஏவுகணையின் ஒலி போன்ற பெரும் சப்தமொன்று கேட்டது.வெடிப்பு நிகழ்வுக்கு அண்மையில் வசித்தவர்களின் கூற்றுப்படி அவ்வொலி கிழக்கிலிருந்து வடக்காக சென்றுள்ளது.அவ்வொலி ஏற்படுத்திய அதிர்வலைகள் சில நூறு கிலோமீட்டர்கள் அப்பாலிருந்த மனிதர்களைத் தள்ளாட வைத்ததுடன் ஜன்னல்களையும் உடைத்தது.பெரும்பாலான மக்கள் வெடிப்பைத் தவிர்த்து சத்தத்தையும் நடுக்கத்தையும் மட்டுமே உணர்ந்துள்ளனர். வெடிப்பு நிகழ்வு நீடித்த நேரம்,தொடர்ச்சி நிகழ்வுகள் போன்றவை கண்ணால் கண்ட சாட்சிகளின் கூற்றுகள் பிரகாரம் வேறுபடுகின்றது. [சான்று தேவை]

இவ்வெடிப்பு யூரேசியா முழுதும் நில நடுக்கவியல் நிலையங்களில் பதியப்பட்டுள்ளதுடன் வானில் ஏற்பட்ட அலைகள் ஜெர்மனி, டென்மார்க், குரேஷியா, ஐக்கிய இராச்சியம் மற்றுமல்லாது ஜகார்த்தா, வாஷிங்டன் போன்ற மிகத்தொலைவிலுள்ள நாடுகளிலும் தென்பட்டன. சில இடங்களில் இதன் அதிர்வலைகள் 5.0 ரிக்டர் அளவுடைய பூகம்பத்துக்கு இணையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[4] வெடிப்பின் பின் அடுத்த சில நாட்கள் ஆசிய,ஐரோப்பிய வானம் இரவிலும் ஒளிர்ந்ததை[5] ஸ்வீடன் மற்றும் ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு அறியலாம். விண்ணோட்டத்தினால் வானில் ஏற்படுத்தப்படும் ஒளிர்வைப் போல இவ்வான ஒளிர்வும் வளிமண்டலத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான இடை மண்டலத்தில் அமைந்துள்ள பனித்துகள்களை ஒளி ஊடுருவியதால் தென்பட்டது .[6] அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களான ஸ்மித்ஸன் வானியற்பு அவதானிப்பு மையம் மற்றும் மவுன்ட் வில்சன் கண்காணிப்பு நிலையம் ஆகியன துங்குசுக்கா வெடிப்பின் பின்னர் சில மாதங்கள் வரை புவிமேற்பரப்பில் அமைந்துள்ள வளிமண்டலத்தின் தெள்ளியதன்மை தூசுகளினால் பாதிப்படைந்திருந்ததை அவதானித்திருந்தன.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில சாட்சிகள்

[தொகு]
டோப்பீ டுங்குஸ்கி, விண்கல் விழுந்த இடத்தை அண்டிய பகுதி. இப்புகைப்படம் அரௌன்ட் த வேர்ல்ட் எனும் பத்திரிக்கையில் 1930ல் வெளியிடப்பட்டது.படம் பிடிக்கப்பட்ட ஆண்டு 1927லிருந்து 1930க்குள்.

1930ல் லியோனிட் குலிச்சின் ஆராய்ச்சி பயணத்தில் பதியப்பட்ட எஸ்.செமனோவ் கண்ட காட்சி,செமனோவின் பார்வையில்:[7]

'அன்று காலை நான் வனவாராவிலிருந்த என் வீட்டின் வெளியே வடக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தேன்.திடீரென்று ஒன்குல்ஸ் துங்குசுக்கா வீதியின் மேலே வானம் பிளந்து காட்டின் மேலே நெருப்புப் பிழம்பொன்று தோன்றி பெரிதாகி வடதிசை முழுவதையும் ஆக்கிரமித்தது. அதன் வெப்பம் ஏதோ என் சட்டை தீப்பற்றிக் கொண்டதைப் போல தகித்தது.அதிக வெப்பத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த போது பெரும் மோதல் ஒலி கேட்டது.நான் சில மீட்டர்கள் தூரம் தூக்கி வீசப்பட்டேன்.அதனால் நான் என் சுய நினைவை இழந்தேன்.பிறகு என் மனைவி வீட்டினுள்ளிருந்து வந்து என்னை அழைத்துச் சென்றாள்.வானம் பிளந்த போது வீசிய அனல் காற்றினால் பயிர்கள்,செடிகள் எல்லாம் கருகின.பிற்பாடு எங்கள் வீட்டின் ஜன்னல் உடைந்திருந்ததையும் தானிய சேமிப்புக் கிடங்கின் தாழ் உடைந்திருந்ததையும் கவனித்தோம்.'

1926ல் ஐ. எம்.சுஸ்லோவ் பதிவு செய்த ஷன்யாகிர் பழங்குடியைச் சேர்ந்த ஷுக்கானின் சாட்சியம் :

நானும் என் சகோதரன் ஷெக்காரெனும் ஆற்றோரமாய் இருந்த எங்கள் குசையில் உறங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று விழித்தெழுந்தோம். யாரோ எங்களைத் தள்ளினார்கள். சீட்டிகை சத்தமும் பலத்த காற்றும் வீசியது. 'நிறைய பறவைகள் பறப்பது உனக்கு கேட்கிறதா?'என என் சகோதரன் கேட்டான். எங்களுக்கு வெளியில் என்ன நடக்கிறதென தெரியவில்லை. திடீரென்று மீண்டுமொருமுறை நான் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தேன். எங்களுக்கு பயம் பிடித்தது.அம்மா,அப்பா,சகோதரனை அழைத்தோம் ஆனால் அவர்கள் வரவில்லை. எங்கள் குடிசைக்கு வெளிப்புறம் மரங்கள் விழும் சத்தம் கேட்டது. நாங்கள் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே செல்ல எத்தனிக்கும் போது பெரிய இடி ஒன்று இடித்தது.இது முதல் இடி.பூமி அசைந்தது,காற்று எங்கள் குடிசையை அழித்தது.எனது உடல் கழிகளின் அடியில் மாட்டிக் கொண்டாலும் எனக்கு சுய நினைவு இருந்தது.பிறகு அங்கு நான் ஒரு அதிசயத்தைக் கண்டேன்.மரங்கள் எரிந்து விழுந்தன,பிரகாச ஒளி சூரியனைப்போல என் கண்ணைத் தாக்கியது.நான் கண்களை மூடிக்கொண்டேன். அது ஒரு மின்னல் போல இருந்தது.பிறகு இரண்டாவது இடியொலி கேட்டது.அன்று காலை மழைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.சூரியன் வழமைபோல பிரகாசமாக வானில் ஜொலித்துக் கொண்டிருந்தது.எனினும் இடி இடித்தது.

ஷெக்கானும் நானும் உடைந்த குடிசையிலிருந்து தடுமாற்றங்களுடன் வெளியேறினோம்.வானில் அதை மீண்டும் பார்த்தோம்.இம்முறை அது வேறொரு பக்கம் இருந்தது.மீண்டுமொரு முறை பளீரென ஒளி தென்பட்டு இடி இடித்தது. இது மூன்றாவது இடியோசை.மீண்டும் ஒருமுறை பலத்த காற்று வீசி எங்களை கீழே தள்ளியது.

நாங்கள் சாய்க்கப்பட்ட மரங்களைப் பார்த்தோம்.அதன் உடைந்த கிளைகள் பற்றியெரிவதையும் கண்டோம்.திடீரென்று ஷெக்கான் 'அதோ பார்' என மேலே சுட்டிக் காட்ட இன்னும் ஒரு பிரகாச ஒளியைக் கண்டேன்.அதைத் தொடர்ந்து நான்காவது இடியோசையும் கேட்டது. இம்முறை வீரியம் குறைந்த ஒலியே கேட்டது.

எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது அங்கு நான்காவது இடி ஒலியும் மென்மையாக தூரத்தில் சூரியன் மறையும் திசையில் கேட்டது.

சைபீரிய செய்தித்தாள், 2 ஜூலை 1908:

 ஜுன் மாதம் 17ம் நாள் காலை 9 மணியளவில் நாங்கள் விசித்திரமான இயற்கை நிகழ்வொன்றை கேள்விப்பட்டோம். வட கரேலின்ஸ்கியில் வசித்த விவசாயிகள் அடி வானத்துக்கு சற்று மேலே வடகிழக்குப் பகுதியில் நீலம் கலந்த வெள்ளை நிறம் கொண்ட கண்ணைப் பறிக்கும் மிகப் பிரகாசமான ஒளி கீழ்நோக்கி சொல்வதைக் கண்டனர்.அவ்வொளி ஒரு உருளைப் போல் அல்லது குழாய் போல் காட்சியளித்திருந்தது.வானம் மேகமற்று இருந்தாலும் அவ்வொளியின் ஒரு பக்கத்தில் கறுப்பு மேகங்கள் தென்பட்டன. அது மிகவும் வெப்பமாகவிருந்தது. அது காட்டை நோக்கி கீழே செல்கையில் பிரகாசமிழந்து பூதாகரமான கறுப்பு புகையாக மாறியது.பின்பு, மலை சரிந்தது போல அல்லது இராணுவ ஏவுகணை ஏவப்பட்டது போல பெரும் மோதல் ஒலி ஒன்று கேட்டது.கட்டிடங்கள் குலுங்கின.பிரளயம் வந்து விட்டதாக பயந்து கிராமவாசிகள் அனைவரும் வீதியில் இறங்கினர்.

சைபீரியன் வாழ்க்கை செய்தித்தாள், 27 ஜூலை 1908:

அவ்விண்கல் வீழ்ந்தவுடன் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டதுடன் கண்ஸ்க் பகுதியிலிருந்த லொவாட் கிராமத்தினருகே பெரும் வெடியோசை கேட்டது.


 

க்ரஸ்நோயாரெட்ஸ் செய்தித்தாள், 13 ஜூலை 1908:

கெஸெம்ஸ்கோ கிராமம்.17ம் திகதி அன்று காலை அசாதாரண சூழல் நிகழ்வொன்று அறியப்பட்டது.7.43 மணிக்கு பலத்த காற்றை ஒத்த ஓசை ஒன்று கேட்டது.அதன்பின் உடனடியாக பலத்த மோதல் ஒலி ஏற்பட்டு கட்டடங்களை உலுக்கியது.முதல் மோதல் ஒலியின் பின் மேலும் இரண்டு ஒலிகள் கேட்டன.முதல் ஒலிக்கும் மூன்றாவது ஒலிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பல புகயிரதங்கள் ஒரே நேரத்தில் பயணம் செய்வதைப் போல விசித்திரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.5-6 நிமிடங்களின் பின் பீரங்கி வெடிப்பு போல பலமான் ஓசை கேட்டது.அதன் பின் 2 நிடங்களுக்குப் பின் நான்கைந்து வெடிப்பு சத்தங்கள் அதிர்வோடு ஒலித்தன.

முதலில் கவனிக்கையில் வானம் சதாரணமாகவே தோன்றியது.மேகங்கள் தென்படவில்லை;காற்று வீசவில்லை.ஆனால் சற்று உண்ணிப்பாக பார்த்த போது அடிவானத்தில் பெரிய சாம்பல் நிற மேகம் ஒன்று தென்பட்டது.அது மெல்ல மெல்ல சிறிதாகி 2-3 மணியளவில் காணாமல் போனது.

Trajectory Models of The Tunguska Fireball
துங்குசுக்காவின் எறிபாதை மற்றும் ஐந்து கிராமங்கள்.பூமிக்கு மேலே தீப்பிழம்பின் பாதையூடாக விமானத்திலிருந்து கணிக்கப்பட்டது.ஆரம்ப அளவிடை உயரம் 100 கிலோ மீட்டர்.எறிபாதை புள்ளிகோட்டால் சுட்டி காட்டப்படுகிறது.ஆங்கில எழுத்து ZR இனால் குறிக்கப்படுவது கதிரியக்கக் கோணங்கள் ஆகும்.அடைப்புக் குறிக்குள் உள்ள எண்கள் விமானத்துக்கும் ஐந்து கிராமங்களுக்கும் இடையேயான வித்தியாசம்.கூட்டல் குறி விமானத்திற்கு தென் மற்றும் தென்மேற்கு பகுதியையும் கழித்தல் குறி விமானத்திற்கு வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியையும் குறிக்கிறது.

ஆய்வுகள்

[தொகு]

துங்குசுக்கா நிகழ்வு சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு தசாப்ததிற்கும் மேலான ஆண்டுகள் பிடித்தது.1921ம் ஆண்டில் உருசிய கனிமவியலாளர் லியோனட் கியுலிக் சோவியத் அறிவியல் கழக சார்பாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்த ஒரு குழுவை அழைத்துக்கொண்டு பொட்கமனேயா துங்குசுக்கா ஆற்று வடிநிலத்தை அடைந்தார். அவர் வெடிப்பு நிகழ்ந்த மையப்பகுதிக்கு செல்லாமல் விட்டாலும் உள்ளூர்வாசிகள் கண்ட காட்சிகள் அது ஒரு விண்கல் தாக்கமே என்ற நம்பிக்கைக்கு அவரை இட்டுச் சென்றன. ஆய்விலிருந்து திரும்பியதும் அவர் உருசிய அரசாங்கத்தை வற்புறுத்தி தடை செய்யப்பட்ட வெடிப்பு நிகழ்ந்த மையப்பகுதியை ஆராய்ச்சி செய்ய தேவையான நிதியுதவியை வழங்க இணங்கச்செய்தார்.விண்கல் கனிம வளத்தை பாதுகாக்கும் நோக்குடனே இதை செய்தார் .[8]

இறுதியில் கியுலிக் 1927ம் ஆண்டு உள்ளூர் எவென்கி இன வேட்டைக்காரர்களை வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு துங்குசுக்கா வெடிப்பு நிகழ்ந்த மையப்பகுதி நோக்கி தனது ஆராய்ச்சி பயணத்தை மேற்க் கொண்டார். விண்கல் தாக்கத்தால் ஏற்படும் பெரும் பள்ளத்தை எதிர்பார்த்துச் சென்ற அவருக்கு அதிச்சி ஒன்று காத்திருந்தது. அங்கு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அண்மையில் எவ்வித பள்ளமும் காணக்கிடைக்கவில்லை. மாறாக சுமார் 8 கிலோமீட்டர் குறுக்களவு வலயத்தில் இருந்த அனைத்து மரங்களும் கருகி, கிளைகளற்று நின்றிருந்தன.[8] அவ்வலயத்திற்கு அப்பால் இருந்த மரங்கள் பகுதியளவே கருகியிருந்தாலும் முற்றாக வேரோடு சாய்க்கப்பட்டிருந்தன.

பல ஆண்டுகள் கழித்து 1960ல் துங்குசுக்கா நிகழ்வில் அழிக்கப்பட்ட மரங்கள் கொண்ட பகுதியின் பரப்பளவு 2,150 km2 (830 sq mi) என கணிக்கப்பட்டது. தரை மட்டமாக்கப்பட்ட மரங்களிருந்த பகுதியின் வடிவம் ஒரு பிரம்மாண்ட சிறகு விரித்த வண்ணத்துப்பூச்சியைப் போல் காணப்பட்டது. அதன் ''விரிக்கப்பட்ட சிறகின்'' நீளம் 70 கிலோமீட்டர், மற்றும் அதன் ''உடலின் நீளம்'' 55 கிலோமீட்டர் கொண்டது.[9] சற்று உண்ணிப்பாய் ஆராய்ந்ததில் கியுலிக் பூமியில் சில துளைகளை அவ்விடத்தில் கண்டார். அத்துளைகள் விண்கல் தாக்கத்தினாலேற்பட்டிருக்க வேண்டுமென அவர் தவறாக கணித்தார்.எனினும் அத்துளைகளை தோண்டுவதற்கான நேரம் அவருக்கு கிடைக்க வில்லை.

அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் மூன்று ஆய்வுகள் அப்பகுதியில் நடந்தன. கியுலிக் சில சேற்றுக்குழிகளை கண்டுபிடித்தார்.அவை விண்கல்லினால் ஏற்பட்டிருக்கலாமென நினைத்தார். சேறு நிறைந்த அக்குழிகளில் ஒன்றை ("சஸ்லோவ் பள்ளம்", 32 m (105 அடி) விட்டம்), கடின உழப்பினால் தூர் வாறிய பின் அக்குழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட அடிமரக்கட்டை அவரின் கணிப்பை தவறாக்கியது. 1938ம் ஆண்டு கியுலிக் வெடிப்பு நிகழ்ந்த மையப்பகுதியைச் சுற்றி வான்வழிப் புகைப்பட ஆய்வொன்றை மேற்கொண்டார். எனினும் இவ்வாய்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் 1500 படலமறைகள் அபாயகரம் நிறைந்த செலுலாயிடு அழிப்பு நடவடிக்கை காரணமாக 1975ல் அப்போதிருந்த ருஷ்ய அறிவியல் கல்விக்கழக கனிம அருங்காட்சியத்தின் விண்கல் பிரிவின் தலைவர் யெவ்கேனி கிரினோவின் உத்தரவினால் அழிக்கப்பட்டது.மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அப்புகைப்படங்கள் உருசியாவின் டொம்ஸ்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

1950, 1960களில் அவ்விடத்துக்கு அனுப்பபட்ட ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதி மண்ணை சலித்துப் பார்த்தனர். அம்மண்ணில் சிலிக்கேட் மற்றும் மக்னடைட் துணிக்கைகள் கலந்திருந்ததை கண்டுபிடித்தனர். அத்துணிக்கைகளை இரசாயன பகுப்பாய்வு செய்த போது அதில் விண்வீழ்கற்களில் காணப்படக்கூடியதைப் போல அதிகூடிய விகிதாசாரத்தில் இரும்பு சார்பான நிக்கல் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது அத்துணிக்கைகள் பூமிக்கு வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வழிகோலியது. மேலும் அப்பகுதியை அண்மித்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட உலோகங்களில் அசாதரண விகிததில் வேறு கனிமங்களும் கலந்திருந்தன.

புவியியற்பியல் கருதுகோள்கள்

[தொகு]

கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் இவ்வெடிப்புக்கு காரணம் விண்கல் தாக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும் சில எதிர் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன;வானியற்பியலாளர் வுல்ஃப்கேங் குண் இவ்வெடிப்புக்கு புவியோட்டிற்குள் இருந்த பத்து மில்லியன் தொன் அளவிலான இயற்கை வாயுவின் வெடிப்பே காரணம் என்கிறார்.[10][11][12][13][14] புவியோட்டிற்குள்ளிருந்த பாரியளவு இயற்கை வாயு புவிமேற்பரப்பில் வெளிப்பட்டு தீப்பற்றி வெடித்திருக்கலாம் என்பது அவர் கருத்து.

இதே போன்ற நிகழ்வுகள்

[தொகு]

1930லும் இந்நிகழ்வை ஒத்த நிகழ்வொன்று பிரஸீலில் குருசா நதியின் மேல் நிகழ்ந்தது.விண்கல் தாக்கமே காரணம் என்று குறிப்பிடப்பட்டாலும் தெளிவான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை.

குறிப்புகள்

[தொகு]
  1. Peplow, Mark (10 June 2013). "Rock samples suggest meteor caused Tunguska blast". Nature. http://www.nature.com/news/rock-samples-suggest-meteor-caused-tunguska-blast-1.13163. 
  2. Kvasnytsya, Victor. New evidence of meteoritic origin of the Tunguska cosmic body. 
  3. "The Tunguska Event" (PDF). Archived from the original on 2009-08-31. பார்க்கப்பட்ட நாள் 2019-01-28.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. . 
  5. வாட்சன், Nigel. "Tunguska Event". வரலாற்றில் இன்று 58.1 (ஜூலை 2008): 7. மாஸ் தீவிர School பதிப்பு. EBSCO. 10 பிப்ரவரி 2009
  6. N. V. Vasiliev, A. F. Kovalevsky, S. A. Razin, L. E. Epiktetova (1981). Eyewitness accounts of Tunguska (Crash). பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம், Section 6, Item 4
  7. 8.0 8.1 "This Month in Physics History" (in ஆங்கிலம்). June 2018.
  8. Boyarkina, A. P., Demin, D. V., Zotkin, I. T., வேகமாக, W. G. "மதிப்பின்படி குண்டு வெடிப்பு அலை Tunguska விண்கல் இருந்து வன அழிவு". Meteoritika, Vol. 24, 1964, பக். 112-128 (ரஷியன்).
  9. Kundt, W. (2001). The 1908 Tunguska catastrophe. பக். 399–407. 
  10. Jones, N.. Did blast from below destroy Tunguska?. 
  11. Kundt, W. (2007). "Tunguska (1908) and its relevance for comet/asteroid impact statistics". In Bobrowsky, P. T.; Rickman, H. (eds.). Comet/Asteroid Impacts and Human Society. Springer. pp. 331–339.


"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்குசுக்கா_நிகழ்வு&oldid=3667102" இலிருந்து மீள்விக்கப்பட்டது