உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பாற்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தம் கடைய விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து கடலின் அடியில் அமர்ந்து கொண்டு, மந்தார மலையை மத்தாகக் கொண்டும், வாசுகி எனும் நாகத்தை கயிறாகக் கொண்டும் தேவர்களும், அரக்கர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். 1870-ஆம் ஆண்டு ஓவியம்.
திருப்பாற்கடலில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட விஷ்ணுவுடன் - திருமகள்

திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாகக் கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்புப் படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன. [2]

இறைவன் இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்) பாம்பணை மேல் தெற்கு நோக்கி தூங்கும் கோலத்தில் காட்சியளிக்கிறான். இறைவி கடல்மகள் நாச்சியார், பூமாதேவி ஆகியோர். இத்தலத்தின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகியன. விமானம் அஷ்டாங்க விமானம்.

சிறப்புக்கள்

[தொகு]

நிலவுலகில் இல்லாத இந்த திருப்பாற்கடல் மொத்தம் 51 பாக்களால் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார் முதலிய பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்றது.

பாற்கடல் கடைதல்

[தொகு]

இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்தார மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

மந்தார மலையானது பாற்கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்தார மலையைத் தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விசத்தினைக் கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தைப் பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. M. S., Ramesh (2000). 108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu. Tirumalai-Tirupati Devasthanam. p. 188.
  2. http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5019 திருக்கடம்பூர்-
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பாற்கடல்&oldid=3855576" இலிருந்து மீள்விக்கப்பட்டது