சிறப்புப் பாயிரம்
சிறப்புப் பாயிரம் என்பது, ஒரு குறிப்பிட்ட நூலுக்கு மட்டும் சிறப்பாகப் பொருந்தும் விடயங்களை உள்ளடக்கிய ஒரு பாயிர வகை ஆகும்[1][2]. இது முகவுரை அல்லது அணிந்துரை போன்றது. இது அக்குறிப்பிட்ட நூலுக்கு முன்னர் காணப்படும். எல்லா நூல்களுக்கும் பொருந்தக்கூடியதாக நூல் பற்றிய பொதுவான முகவுரையான பொதுப் பாயிரத்திலிருந்தும் இது வேறானது. சிறப்புப் பாயிரம் பொதுவாகத் தமிழ் மரபுவழியான நூல்கள் எல்லாவற்றிலும் காணப்படும். இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தில் பொதுப்பாயிரம் இல்லாவிட்டாலும், சிறப்புப் பாயிரம் உள்ளது[3].
சிறப்புப் பாயிரத்தை நூலாசிரியன் தவிர்ந்த வேறொருவர் எழுதுவதே மரபு. சிறப்புப் பாயிரம் பொதுவாக நூலின் சிறப்புப் பற்றிக் கூறுவது என்பதால் அதனை நூலாசிரியனே எழுதும்போது தற்புகழ்ச்சியாக ஆகிவிடும் என்பதாலேயே நூலாசிரியர் சிறப்புப் பாயிரத்தை எழுதுவதில்லை[4]. சிறப்புப் பாயிரத்தை யார் எழுதலாம் என்பது குறித்தும் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. இளம்பூரணர் தனது தொல்காப்பிய உரையில், நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியருடன் உடன் படித்தவர்கள், நூலாசிரியரின் மாணவர்கள், என மூன்று வகையினர் சிறப்புப் பாயிரம் செய்யத் தகுதியுடையவர் என்கிறார்[5]. நன்னூல், அந்நூலுக்கு உரை செய்தவர்களும் சிறப்புப் பாயிரம் எழுதலாம் என நான்கு வகையாகக் கூறுகின்றது[6]. எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியவர் தொல்காப்பிய நூலாசிரியரான தொல்காப்பியரோடு உடன் கற்றவரான பனம்பாரனார் ஆவார்.
சிறப்புப் பாயிர உறுப்புக்கள்
[தொகு]சிறப்புப் பாயிரம்;
- ஆக்கியோன் பெயர்
- நூல் வந்தவழி
- நூல் வழங்கும் எல்லை
- நூலின் பெயர்
- யாப்பு (தொகுத்து எழுதுதல், விரித்து எழுதுதல், தொகுத்தும் விரித்தும் எழுதுதல், மொழிபெயர்த்து எழுதுதல் போன்ற நூல் ஆக்கும் முறைகளே யாப்பு எனப்படுகின்றது)
- நூற்பொருள்
- நூலைக் கேட்பதற்கு உரியவர்கள்
- நூலைக் கேட்பதால் விளையும் பயன்
ஆகியவற்றைத் தெளிவாக விளக்கவேண்டும் என்று நன்னூல் கூறுகிறது. மாணவர்கள் ஒரு நூலைக் கற்க முயலும்போது, அந்நூலில் கூறப்பட்டிருக்கும் பொருள் என்ன என்பதையும், அந் நூலைக் கற்பதன் மூலம் அடையும் பயன் என்ன என்பதையும், இந்நூலைக் கேட்பதற்கு உரிய அடிப்படையான தகைமை என்ன என்பதையும், என்னென்ன விடயங்களை அறிந்துகொண்டபின் அந்நூலைப் பயிலவேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அல்லது நூலைக் கற்கும் போது ஆர்வம் இல்லாமலும் இருப்பதுடன் அவற்றைப் புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கும். இதன் காரணமாகவே இவ்விடயங்களை முன்னராகவே மாணவர்களுக்கு உணர்த்தவேண்டிச் சிறப்புப் பாயிரத்துள் இவ்விடயங்களைக் கூற வேண்டிய தேவை ஏற்படுகின்றது[7]. அத்துடன் தாம் கற்கவுள்ள நூல்கள் கற்று வல்ல சான்றோரால் செய்யப்பட்டுப் பிழைகள் இன்றி இருக்கும் என்பதையும், நூல் மூலநூலுக்கு முரண்பாடான கொள்கைகளைக் கொண்டவர்களால் ஆக்கப்படவில்லை என்பதையும் மாணவர்கள் முன்னரே தெளிவாக உணரவேண்டும் என்பதற்காகவே நூலாசிரியன் பெருமை, நூலின் பெருமை என்பவை விளங்கும்படி ஆக்கியோன் பெயர், நூலின் வழி, வழங்கும் நிலம், நூற்பெயர் என்பவையும் சிறப்புப்பாயிரத்தில் இடம்பெற வேண்டும் என இலக்கண நூல்கள் கூறுகின்றன[8].
இவற்றைத் தவிர;
- நூல் செய்த காலம்,
- நூல் அரங்கேறிய இடம்,
- நூல் ஏன் செய்யப்பட்டது
போன்ற தகவல்களும் சில நூல்களின் சிறப்புப் பாயிரங்களில் காணப்படுவது உண்டு. முன்னர் கூறிய எட்டும் நூல் ஆக்கிய காலத்திலும் அதற்குப் பின்னர் நூல் வழங்கும் காலம் முழுவதும் பயனுள்ளவை ஆக இருப்பதைப்போலப் பின்னர் கூறிய காலம் முதலான மூன்றும் நூல் ஆக்கிய காலத்துடன் மட்டும் தொடர்புடையவை என்பதால், அவற்றைக் கூறுவதால் பெரும் பயன் இல்லை என்று கருதிச் சிலர் இவற்றைச் சிறப்புப்பாயிரத்துள் கூறுவதில்லை[9].
எடுத்துக்காட்டு
[தொகு]சிறப்புப் பாயிரம் ஒன்றில் மேற்கூறிய உறுப்புக்கள் அடங்கியிருக்கும் முறையை நன்னூலின் சிறப்புப் பாயிரத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு அறிந்துகொள்ள முடியும். நன்னூலின் சிறப்புப் பாயிரம் பின்வருமாறு:
- "மலர்தலை உலகின் மல்கிருள் அகல
- இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
- பரிதியி னொருதா னாகி முதலீறு
- ஒப்பளவு ஆசை முனிவிகந் துயர்ந்த
- அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் 5
- மனஇருள் இரிய மாண்பொருள் முழுவதும்
- முனிவற அருளிய மூஅறு மொழியுளும்
- குணகடல் குமரி குடகம் வேங்கடம்
- எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
- அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணரத் 10
- தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
- இகலற நூறி யிருநில முழுவதும்
- தனதெனக் கோலித் தன்மத வாரணம்
- திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
- கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் 15
- திருந்திய செங்கோற் சீய கங்கன்
- அருங்கலை விநோதன் அமரா பரணன்
- மொழிந்தன னாக முன்னோர் நூலின்
- வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
- பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் 20
- பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
- என்னு நாமத் திருந்தவத் தோனே" [10]
இச் சிறப்புப் பாயிரத்தில், 20. 21, 22 ஆம் வரிகளில் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே என்று, நூலை ஆக்கியோன் பெயர் பவணந்தி என்று அறியத்தருவதுடன், பொன் மதில்களால் சூழப்பட்ட சனகாபுரி என்னும் நகரின் இருக்கும் சன்மதி முனிவன் போன்றவனும், பல அரிய சிறப்புக்களை உடையவனும், பெருந் தவத்தை உடையவனும் என நூலாசிரியரின் சிறப்பையும் கூறுகிறது.
18 ஆம் 19 ஆம் வரிகளில் காணப்படும் முன்னோர் நூலின் வழியே என்னும் பகுதியின் மூலம் முன்னோர் எழுதிய நூல்களை ஒட்டி இந்நூல் எழுதப்பட்டது என்று நூல் வந்த வழி கூறப்பட்டுள்ளது.
இப் பாயிரத்தின் 8 ஆம் 9 ஆம் வரிகள், குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் என இந் நூல் வழங்கும் பகுதி, கிழக்கே கிழக்குக் கடல், தெற்கே குமரி, மேற்கே குடக நாடு, வடக்கே திருவேங்கட மலை என்பவற்றிடையே அடங்கும் என அந் நூல்வழங்கும் பகுதியின் எல்லை கூறுகிறது.
19 ஆம் வரியில், நன்னூற் பெயரின் வகுத்தனன் என்பதன் மூலம் நூலின் பெயர் நன்னூல் என்று சிறப்புப் பாயிரம் தெளிவாக்குகிறது.
11 ஆம் வரியில் வரும் தொகைவகை விரியிற் றருகெனத் .... என்னும் தொடர் இந்நூல், தொகுத்தல், வகுத்தல், விரித்தல் என்னும் யாப்பு முறைகளுக்கு அமைவாக ஆக்கப்பட்டதை விளக்குகிறது.
10 ஆம் வரியில் அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணர..... என்று குறிப்பிடுவதன் மூலம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்துவகையான இலக்கணங்களே இந் நூலின் நூற்பொருள் எனச் சிறப்புப்பாயிரம் தெளிவாக்குகின்றது.
10 ஆம் வரியில் நூலைக் கேட்பதற்கு உரியவர்கள் யார் என்பதற்கு விடையாக எல்லோரும் அறிந்துகொள்ளும் படியாக என்னும் பொருளில் யாவரும் உணர என்று பாயிரத்தில் கூறியிருப்பினும், நன்னூல் உரைகளில், முன்னரே நிகண்டு கற்றுச் செய்யுள் ஆராய்ச்சி உடையோரே நூலின் கூறப்பட்டிருப்பவற்றைப் புரிந்துகொள்ள முடியும் ஆதலால், அத்தகைய ஆராய்ச்சி உடையோரே இந்நூலைக் கேட்பதற்கு உரியவர்கள் என்கின்றன[9].
முன்னர் கூறிய 10 ஆம் வரியில் உள்ள அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணர என்னும் தொடர்மூலம் முன்னரே குறிப்பிட்ட தமிழ் மொழியின் ஐந்து இலக்கணங்களையும் உணர்வதே இந்த நூல் கேட்பதால் விளையும் பயன் என்பது விளங்குகிறது.
16, 17, 18 ஆம் வரிகளில் காணப்படும் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோதன் அமரா பரணன் மொழிந்தன னாக ... என்னும் தொடரின் மூலம், இந்நூல் சீயகங்கன் என்னும் மன்னன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கச் செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாவதால், நூல் செய்த காலம் சீயகங்கனின் காலம் என்பதும், நூல் செய்த காரணம் சீயகங்கன் கேட்டுக்கொண்டதே என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. ��த்துடன் நூல் அரங்கேறிய இடம் சீயகங்கனின் அவை எனவும் உய்த்து உணரலாம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ இளவரசு, சோம., 2009. பக். 13.
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை பக். 2.
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை பக். 9.
- ↑ இளவரசு, சோம., 2009. பக். 36.
- ↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை பக். 5.
- ↑ இளவரசு, சோம., 2009. பக். 35.
- ↑ நன்னூல் விருத்தியுரை, 2004. பக். 3
- ↑ நன்னூல் விருத்தியுரை, 2004. பக். 3,4
- ↑ 9.0 9.1 நன்னூல் விருத்தியுரை, 2004. பக். 6
- ↑ இளவரசு, சோம., 2009. பக். 10.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- இளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
- பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.