கொரட்டூர் ஏரி
கொரட்டூர் ஏரி | |
---|---|
அமைவிடம் | தமிழ்நாடு, சென்னை, கொரட்டூர் |
வகை | ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 990 ஏக்கர் |
Islands | வேம்பு பசுமை திட்டு |
குடியேற்றங்கள் | சென்னை |
கொரட்டூர் ஏரி (Korattur lake) என்பது தமிழ்நாட்டின், சென்னை, அம்பத்தூர் மண்டலம் கொரட்டூரில் 990 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும்.[1] இந்த ஏரி சென்னை-அரக்கோணம் தொடர்வண்டி பாதையின் வடக்கில் அமைந்துள்ளது. இது மேற்கு சென்னையின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.
கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, ரெட்டேரி ஆகியவை மூன்றும் தொடர் நீர்நிலைகளாகும். மழைக்காலத்தில் இதில் ஒவ்வொரு ஏரியாக நிறைந்து அதன் உபரி நீர் அடுத்த ஏரியை நிரப்பக்கூடிய வகையில் உபரி நீர் வாய்க்கால்கள் அமைந்துள்ளன. 1970களுக்கு முன் நீர் பற்றாக்குறை நிலவிய காலங்களில் இந்த ஏரி நீர் சென்னையில் மக்களுக்கு வழங்கப்பட்டுவந்தது. ஆனால், பின்வந்த ஆண்டுகளில் ஏரியில் சுற்றியுள்ள பட்டரவாக்கம், அத்திபேட்டை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளின் குடியிருப்புகளின் சாக்கடை நீரும், தொழிற்சாலை கழிவுநீரும் சுத்திகரிக்கப்படாமல் கலக்கவிடப்பட்டதால் ஏரி நீர் மாசடைந்தது.
வளர்ச்சிகள்
[தொகு]2013 ஆம் ஆண்டில், நீர்வள ஆதாரத்துறையால் அம்பத்தூர், மாதவரம், கொரட்டூர் ஆகிய ஏரிகளை ஒட்டிய பகுதிகளில் புத்துணர்ச்சியூட்டும் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகள் ஆகியவற்றை அமைத்து அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டங்களுக்கு மொத்தம் 600 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.[2] மாசடைந்த இந்த ஏரியை[3][4] சீர்செய்ய கொரட்டூர் பகுதியிலுள்ள மக்கள் கொரட்டுர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் என்ற பெயர் கொண்ட குழுவை ஏற்படுத்தி, மரக்கன்றுகள் நாடுதல், ஏரியில் குருவிகள் தங்குவதற்கு வேம்பு பசுமைத்திட்டு அமைத்தல், மக்கள் நடைபயிற்சி செய்ய வசதியாக நடைபாதை அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
ஏரியின் பல்லுயிரியம்
[தொகு]கொரட்டூர் ஏரி பலவகை உயிரினங்களுக்கு இருப்பிடமாக இருக்கிறது. ஏரிக்கு வந்து செல்லும் பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அங்கு வரும் பறவை கவனிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
வலசை வரும் பறவைகள்
[தொகு]- இங்கு கணக்கெடுப்பில் கண்டுள்ள பறவை இனங்கள் மொத்தம் 160 [5]; அவற்றுள் 43 வகையான பறவை இனங்கள் வலசை வருபவையாகும்; அவற்றுள் சில இங்கு தரப்பட்டுள்ளது:
- வெண்சிறகு ஆலா (White Winged Tern)
- கொசு உள்ளான் (Common Sandpiper)
- கோணமூக்கு உள்ளான் (Pied Avocet)
- பழுப்புத்தலை கடற்காக்கை (Brown Headed Gull)
- சுடலைக் குயில் (Jacobin Cuckoo)
- பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover)
- சிறு கொசு உள்ளான் (Little Stint)
- நீளக்கால் கொசு உள்ளான் (Long-toed Stint)
- பெரிய நீர்க்காகம் (Great Cormorant)
- சின்னக் கொக்கு (Little Egret)
- சாம்பல் நாரை (Grey Heron)
- இராக்கொக்கு (Black-crowned Night Heron)
- கருங்குருகு (Black Bittern)
- கருப்பு வெள்ளை நாகணவாய் (Asian Pied Starling)
- சாம்பல் தலை நாகணவாய் (Chestnut-tailed Starling)
- எலுமிச்சை வாலாட்டி (Citrine Wagtail)
- மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கொரட்டூர் ஏரி: கூறு போட்டு விற்பனை". Dinamalar. 2020-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ "Life for Lakes: Work on Rejuvenating Water Bodies to Pick Up".
- ↑ "கழிவுநீர் விடுவதால் மாசுபடும் கொரட்டூர் ஏரி விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய பசுமை ���ீர்ப்பாயம் உத்தரவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ "Tamil Newspaper, Tamilnadu News, World news, Latest Tamil News, Tamilnadu Politics, Tamil News". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ http://ebird.org/ebird/hotspot/L4991476?yr=all&m=&rank=mrec