கருஞ்சாம்பல் கதிர்க்குருவி
கருஞ்சாம்பல் கதிர்க்குருவி | |
---|---|
P. h. albogularis from Mangaon, Raigad, Maharashtra | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Prinia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PriniaP. hodgsonii
|
இருசொற் பெயரீடு | |
Prinia hodgsonii பிளைத், 1844 | |
வேறு பெயர்கள் | |
|
கருஞ்சாம்பல் கதிர்க்குருவி ( Grey-breasted prinia ) என்பது பழைய உலகின் வெப்பமண்டல தெற்குப் பகுதிகளில் முதன்மையாகக் காணப்படும் குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இந்தப் பறவை இந்திய துணைக்கண்டம், இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வசிக்கிறது. மற்ற கதிர்க்குருவிகளைப் போலவே, இது பெரும்பாலும் வாலை நிமிர்ந்து வைத்திருக்கும், ஆனால் இதன் மார்பில் உள்ள அகன்ற கருஞ்சாம்பல் வளையத்தாலும், வெள்ளைத் தொண்டையாலும் எளிதில் அடையாளம் காணப்படுகிறது. கால்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும், அலகு முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும். வால் முனை குறுகிய வெள்ளைக் கறைகளுடன் காட்சிதரும். இனப்பெருக்கக் காலத்தில் இதன் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும் அதே சமயம் இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் இப்பறவைகளின் மேற்பகுதி வெளிர் நிறமாகவும், மெலிந்த புருவத்தையும் கொண்டிருக்கும். இது புல்வெளிகளையும், புதர்காடுகளையும் சார்ந்து வாழும்.
வகைபிரித்தல்
[தொகு]ஜேம்ஸ் ஃபிராங்க்ளின் 1831 இல் கல்கத்தா மற்றும் பனாரஸ் இடையே கங்கைப் பகுதியில் கிடைத்த மாதிரியின் அடிப்படையில் இந்த இனத்திற்கு பிரினியா கிராசிலிஸ் என்று பெயரிட்டார். 1844 ஆம் ஆண்டில் எட்வர்ட் பிளைத் என்பவரால் இது பிரினியா ஹாட்க்சோனி என மறுபெயரிடப்பட்டது, ஏனெனில் சில்வியா கிராசிலிஸ் என்ற பெயர் கிரேஸ்புல் பிரினியாவிற்கு பயன்பாட்டில் இருந்ததால் (முன்னர் 1823 இல் மார்ட்டின் லிச்சென்ஸ்டீனால் விவரிக்கப்பட்டது) பிரினியா பேரினத்தில் சேர்க்கபட்டபோது சிக்கல் நேர்ந்தது.[3] இது ஜெர்டனால் ப்ரினியா ஆடம்சி என்றும் ஹியூம் மூலம் பிரினியா ஹுமிலிஸ் என்றும் விவரிக்கப்பட்டது.[2] இத�� பிளித் என்பவரால் ஃபிராங்க்லினியா என்ற தனி பேரினத்தில் வைக்கப்பட்டது, மேலும் இந்த வகைப்பாட்டை ஜெர்டன் [4] மற்றும் ஹக் விஸ்லர் உள்ளிட்ட பலர் பின்தொட்ந்தனர், அவர் இந்த இனத்தை பிரினியா பேரினத்திலிருந்து பிரித்து ஃபிராங்க்லினியா பேரினத்தில் வைத்தார்.[5] பிரினியாவிலிருந்து ஃபிராங்க்லினியாவில் இணைக்கபட்டதை எச்.ஜி டீக்னனால் ஆதரிக்கப்பட்டது.[6] இந்த இனம் பரவலான வாழிடப் பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் தனித்துவமான இறகு நிறங்களைக் கொண்டு இப்பறவைகள் துணை இனங்களாக பிரிக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன:[2][7][8]
- P. h. hodgsonii Blyth, 1844 - பரிந்துரைக்கப்பட்ட துணையினம் இந்திய தீபகற்பத்தில் கங்கை சமவெளியிலிருந்து தெற்கில் மைசூர் வரை மற்றும் கிழக்கே வங்காளதேசம் வரை நீண்டுள்ளது. இது இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் மார்பில் பட்டையில்லாமல் சாம்பல்-ஆலிவ் மேல்பகுதியைக் கொண்டிருக்கும்.
- P. h. rufula காட்வின்-ஆஸ்டன், 1874 - பாகிஸ்தானின் கீழ் சுவாத் முதல் கிழக்கு இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் வரையிலான இமயமலை அடிவாரத்தில் வசிக்கிறது. இது குளிர்காலத்தில் தெற்கு நோக்கி நகர்கிறது. இதன் உடலின் பக்கவாட்டிலும் மேல்-உடலிலும் செம்பழுப்பு நிறச் சாயலைக் கொண்டுள்ளது.
- P. h. albogularis வால்டன், 1870 - மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் இதன் மார்பில் பரந்த கரும் பட்டை உள்ளது.
- P. h. pectoralis Legge, 1874 - இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் வசிக்கிறது. இது ஆண்டு முழுவதும் சாம்பல் நிற மார்புப் பட்டையைக் கொண்டுள்ளது. பெண் பறவைகளின் மார்புப் பட்டை முழுமையற்று இருக்கும்.
- P. h. erro Deignan, 1942 - கிழக்கு மியான்மரில் இருந்து தாய்லாந்து மற்றும் தெற்கு இந்தோசீனா வரையிலான புவியியல் எல்லையைக் கொண்டுள்ளது.[6]
- P. h. confusa Deignan, 1942 - தென் சீனாவிலிருந்து வடகிழக்கு லாவோஸ் மற்றும் வடக்கு வியட்நாம் வரையிலான புவியியல் எல்லை.[6]
விளக்கம்
[தொகு]இந்தப் பறவை சுமார் 11-முதல்-13-சென்டிமீட்டர் (4 முதல் 5 அங்) நீளம் இருக்கும். இதன் வால் குறுகி வெள்ளைக் கறைகளுடன் காட்சியளிக்கும். குளிர்காலத்தில் வால் சற்று நீண்டிருக்கும் போதே இந்த வெள்ளைப் புள்ளிகள் தெளிவாகத் தெரியும். கால்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும், குறுகிய கருப்பு அலகையும் கொண்டிருக்கும். கண் வளையம் ஆரஞ்சு நிறமாக இருக்கும். இலங்கையில் காணப்படும் ( P .h. pectoralis) துணையினத்தைத் தவிர பெரும்பாலான துணையினங்களில் பாலினங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். இலங்கை துணையினத்தில் பெண் பறவையின் மார்பில் உள்ள கரும் பட்டை முழுமையற்று இருக்கும். உடலின் அடிப்பகுதி வெள்ளையாக இருக்கும். இவற்றின் உடலின் மேல் பகுதி இனப்பெருக்க காலத்தில் புகை சாம்பல் நிறமாகவும், இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் ஆலிவ் பழுப்பு நிறமாகவும் இருக்கும். இனப்பெருக்கம் செய்யாத பறவைகள் பெரும்பாலும் மார்புப் பட்டையைக் கொண்டிருப்பதில்லை.
வாழ்விடமும் பரவலும்
[தொகு]இந்தப் பறவை பொதுவாக அடர்த்தி குறைந்த காடுகளிலும், புதர்க்காடுகளிலும், புல்நிலங்களிலும், சாகுபடி பகுதிகளிலும் காணப்படுகிறது. மூங்கில் காடுகள், சதுப்பு நிலங்கள் நாணல்களிலும் காணப்படுகிறது. P. h. rufula துணையினம் காத்மாண்டு பள்ளத்தாக்கு அருகே கரும்புத் தோட்டங்களில் காணப்பட்டது.[9]
இது இந்திய தீபகற்பத்தில் வாழும் ஒரு பொதுவான பறவையாகும். இது குளிர்காலத்தில் சற்று தெற்கு நோக்கி நகர்கிறது. இமயமலை அடிவாரத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கும் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா அஸ்ஸாம் வரை செல்கிறது . இந்த இனத்தில் பரவல் பாகிஸ்தான், பர்மா, வியட்நாம், இலங்கை, தெற்கு சீனாவில் யுனான் மாகாணம் வரை உள்ளது. இதன் சமவெளியில் இருந்து 1000 மீட்டர் (3280 அடி) வரை செல்கிறது .
நடத்தையும் சூழலியலும்
[தொகு]பெரும்பாலான கதிர்க்குருவிகளைப் போலவே, இப்பறவைகளும் பூச்சிகளை உண்ணக்கூடியவையவே. இவை முக்கியமாக எறும்புகள், சிறிய வண்டுகள், கம்பளிப்பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகளை உண்கின்றன. இவை எரித்ரினா மற்றும் முள்ளிலவு போன்ற மரங்களின் பூக்களிலிருந்து தேனையும் உண்கின்றன. கோடையில் இவற்றின் நெற்றியில் சில சமயங்களில் மகரந்தம் ஒட்டி, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற தலையாக தோன்றுகின்றன. இது இவற்றை தவறாக அடையாளம் காண வழிவகுக்கும்.[7]
பொதுவாக இவை இணைகளாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படும். இவை சில நேரங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட (இருபது வரை) பறவைகளாக காணப்படுகின்றன. கிளைகளுக்கு இடையில் பறக்கும்போது இது தன் வாலை அசைக்கிறது.[7]
இனப்பெருக்க காலம் மழைக்காலத்தில் துவங்குகிறது. இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவை உயரமான இடத்தில் இருந்து பாடுவதுடன், வானில் மேலும் கீழும் பறந்து காதல் விளையாட்டுகளை நிகழ்த்துகிறது. மேலும் யூசீ இ- யூசீ இ- யூசீ இ- விச்விச்விச் என முதலில் மிக மெல்லிய குரலில் தொடங்கி பின் உரக்கக் கத்தும். ஒரிரு பெரிய இலைகளை ஒட்டித் தைத்து உள்ள புல், நார் முதலியவற்றால் மெத்தென ஆக்கி முட்டையிடும். தனியாக உல் முதலியவறை சிலந்தி நூலால் கோப்பை போல் சேர்த்து அமைத்து அதனைச் சுற்றி இலைகளால் மறைப்பதும் உண்டு. இவற்றின் கூடு சாதாரண தையல்சிட்டின் கூட்டை ஒத்திருக்கும். வழக்கமாக மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். முட்டைகள் பளபளப்பான நீலம், இளஞ்சிவப்பு வெள்ளை, பச்சை-நீலம், தூய வெள்ளை ஆகிய பல நிறங்களில் வேறுபடுகிறது. பெற்றோர் பறவைகள் இரண்டும் அடைகாக்கும். பத்து முதல் பதினொரு நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Prinia hodgsonii". IUCN Red List of Threatened Species 2016: e.T22713587A94381406. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713587A94381406.en. https://www.iucnredlist.org/species/22713587/94381406. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 Mayr, E.; Cottrell, G.W., eds.
- ↑ Blyth, Edward (1844). "Appendix to Mr. Blyth's report for December meeting, 1842". Journal of the Asiatic Society of Bengal 13 (149): 361–395. https://www.biodiversitylibrary.org/page/40057203.
- ↑ Jerdon, T.C. (1863). The Birds of India. Volume II. Part 1.
- ↑ Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds. pp. 170–173.
- ↑ 6.0 6.1 6.2 Deignan, H.G. (1942). "A revision of the Indo-Chinese forms of the avian genus Prinia". Smithsonian Miscellaneous Collections 103 (3689): 1–12. https://archive.org/stream/smithsonianmisce1031943smit#page/n399/mode/2up.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Ali S. (2007). Handbook of the birds of India and Pakistan. Vol. 8. pp. 38–44.
- ↑ Rasmussen, P.C. (2005). The Birds of South Asia. The Ripley Guide. Volume 2.
- ↑ Rand, Austin L.; Fleming, Robert L. (1957). "Birds from Nepal". Fieldiana: Zoology 41 (1). https://archive.org/stream/birdsfromnepal411rand#page/168/mode/2up.