உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணம்புழா பகவதி அம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலக்குடி ஆற்றின் வடக்கு கரையில் உள்ள கோவில்களில் தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கே அமைந்துள்ளது இந்த கோவில். கிழக்கு கிருஷ்ணர் சாமி கோவிலும் உண்டு

கண்ணம்புழா பகவதி அம்மன் கோவில் (Kannampuzha Bhagavathi Temple) சாலக்குடி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவில் சாலக்குடி ஆற்றின் கரையில் உள்ளது.

ஐதீகம்

[தொகு]

கண்ணம்புழா பகவதி அம்மன் சுயம்பு வடிவத்தில் உருவானதாக நம்பப்படுகிறது. புதர் மண்டிக் கிடந்த இந்த இடத்திற்கு முதன் முதலாக வந்த ஒரு புலைய இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் அரிவாளை அங்குள்ள ஒரு பாறை மீது தீட்டியதாகவும், அப்போது அந்த பாறையில் இருந்து இரத்தம் வடிந்தாகவும், அவ்வாறு அந்த இடம் புனித இடமாக மாறியதுமாக ஐதீகம். சுயம்புவாக உருவான சிலை அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்ததாக அப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர்.

வரலாறு

[தொகு]

இந்த கோவில் திராவிடர்களுக்கு சொந்தமானதாக இருந்து பிறகு ஆரியர்கள் அதை கைப்பற்றியுள்ளதாகவும் சில வரலாற்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

கோவில் ஆரியர்களின் கைக்கு வந்த பிறகு தெக்கேடத்து மனையைச் சேர்ந்த நம்பூதிரிமார் அங்கு பூசை செய்து வந்தனர். அந்த காலக்கட்டத்தில் தெக்கேடத்து முல்லய்க்கல் பகவதி என்று இந்த கோவில் அழைக்கப்பட்டு வந்தது. மலையாள நாட்காட்டியின் படி 1096-ஆம் ஆண்டு இந்த கோவில் சீரமைக்கப்பட்டதோடு கோவிலைச் சுற்றி நான்கு பிரகாரங்களும் அமைக்கப்பட்டன. அன்று முதல் கோவிலில் வழக்கமாக இரு வேளை பூசை மற்றும் நைவேத்தியம் தொடங்கப்பட்டது. அனைவரும் பாகுபாடின்றி கோவில்களுக்குள் நுழையலாம் என்ற கோவில்நுழைவு அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அன்று முதல், முல்லய்க்கல் பகவதி என்ற பெயரை விட்டு விட்டு, அப்பகுதியின் குலதெய்வம் என்ற புகழ் பெற்றது.

பிரதிஷ்டை

[தொகு]

இங்கு முக்கிய தெய்வம் பகவதி அம்மன் ஆகும். ஐயப்பன், சிவபெருமான், விஷ்ணு, பத்திரகாளி, துர்க்கா மற்றும் நாகராஜா மற்றும் நாகதேவதை ஆகிய தெய்வங்களும் உள்ளன.

பூசைகள் மற்றும் சடங்குகள்

[தொகு]

தினசரி பூசைகள் தற்போதும் தெக்கேடத்து நம்பூதிரிமார் நடத்தி வருகின்றனர். தென்காசி எனப் போற்றப்படும் மலபாரில் உள்ள பிரசித்தி பெற்ற கொட்டியூர் மகாதேவ கோவிலின் பிரதான தந்திரி பதவியும் தெக்கேடத்து நம்பூதிரிமார்க்கு சேர்ந்தது. சபரிமலை விரத காலத்தில் (விருச்சிகம் 21 முதல்) வரநாட்டு குறுப்பின் களம் எழுத்து பாட்டும் ஒரு முக்கிய சடங்கு ஆகும். தினசரி நிறமாலையும் உண்டு.

நவராத்திரிகாலங்களில் நிறமாலையும் குருதி என அழைக்கப்படும் வண்ணக்கலவை ஊற்றும் சடங்கு நடைபெறுகிறது. மகர செவ்வாய் மற்றும் மகர மாத அத்தம் நாளில் வரும் பிரதிஷ்டா தினத்தன்றும் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று தீபக்காட்சியும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

கோவில் திருவிழா

[தொகு]
பிரதிஷ்டை தினத்தன்று நடைபெறும் தீபக்காட்சி

கண்ணம்புழா பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா மலையாள நாட்காட்டி படி கும்ப மாதம் அசுவதி நாளில் (இரவு அசுவதி நாள் அதிகமாக வரும் நாள்) நடத்தப்படும்.

அன்றைய தினம் தேவிக்கு சாற்ற தாலிகளுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேளதாளங்களுடன் தேவியை ஊர்வலமாக கொண்டு வருகின்றனர்.

அன்றைய தினம் ஐந்து அல்லது ஏழு யானைகளுடன் தெக்கேடத்து மனையை நோக்கி ஊர்வலம் செல்கிறது. தரிசனம் முடிந்த பிறகு தேவி திரும்ப கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது.

பாறைப்புறத்து பகவதி

[தொகு]
பாறைப்புறத்து பகவதி கோவில்

கண்ணம்புழ கோவிலின் உப தேவதை எனப் போற்றப்படும் பாறைப்புறத்து பகவதி அம்மனை கோவிலின் வடக்கு பகுதியில், தெக்கேடத்து மனையின் வளாகத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பண்டைய காலத்தில் ஒரு நாள் தெக்கேடத்து மனையைச் சேர்ந்த மூத்த திருமேனி கொட்டியூர் கோவிலில் சிலர் பூசை விஷயமாக சென்று வீடு திரும்பும் நேரத்தில், அடர்த்தியான காட்டுப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நம்பூதிரி அச்சத்தால் நடுங்கியதாகவும், இரவு வழி தெரியாமல் தடுமாறியதாகவும், அப்போது தேவியை பிரார்த்தனை செய்தபோது தொலைவில் இருந்து ஒரு பெண் விளக்கு ஏந்தி போவதை கண்டதாகவும் ஐதீகம்.

அந்த பெண்ணை பின்தொடர்ந்து நடந்து சென்ற நம்பூதிரி ஆபத்து ஏதும் இல்லாமல் காட்டில் இருந்து பாதுகாப்பாக மனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அன்று அவர் கண்ட பெண் உருவத்தை தேவி உருவத்தில் மனையின் வளாகத்தில் பாறையின் மீது பிரதிஷ்டை செய்ததாகவும், இது கண்ணம்புழ பகவதி அம்மனே ஆகும் என்றும் நம்பப்படுகிறது. தற்போது பாறைப்புறத்து பகவதி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

மலையாள நாட்காட்டியின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இந்த கோவிலின் நடை திறந்து பூஜை செய்வது வழக்கம். அன்றைய தினம் மட்டும் தேவி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் என நம்பப்படுகிறது.