இராமலிங்க விலாசம்
இராமலிங்க விலாசம் என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், இராமநாதபுரத்தில் உள்ள இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அத்தானி மண்டபத்தின் பெயராகும். இந்த அத்தானி மண்டபம் 1674–1710 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இப்பகுதியை ஆண்ட இரகுநாத சேதுபதி [1] என்கிற "கிழவன் சேதுபதியால்" கட்டப்பட்டது. [2] [3] இந்த அத்தானி மண்டபத்திற்கு இராமலிங்க விலாச தர்பார் என்று பெயர். இந்த மண்டபத்தில் தஞ்சாவூர் மராட்டிய அரசர்களின் ஐரோப்பியத் தொடர்புகள் பற்றிய சுவரோவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அரண்மனையில் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தர் 1886 ஆம் ஆண்டில் நடைப்பயணமாக வந்த பொழுது தங்கியுள்ளார். தற்போது இங்கு தொல்பொருள் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.[4]
வரலாறு
[தொகு]இது இரண்டு முகப்புத் தூண்களை உடைய பெரிய கட்டடமாக உள்ளது. இது 1970க்கும் 1993க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது இரகுநாத சேதுபதி முதல் முத்து இரமலிங்க விசயரகுநாத சேதுபதிகள் பதின்மர் கொலுவீற்றிருந்து ஆண்ட அத்தானி மண்டபம் ஆகும். இடையில் 1772 சூன் 3 முதல் 1781 மார்ச் 7 வரை ஆற்காடு நவாப்பின் பிரதிநிதியான மார்ட்டினும், 1795 பெப்ரவரி 8 முதல் 1803 பெப்ரவரி 21வரை கிழக்கிந்திய கம்பெனியின் தண்டலரான (கலெக்டர்) பவுனி, லாண்டன், காலின்ஸ் ஜாக்சன், லூசிங்டன் ஆகியோரும் இம்மண்டபத்தில் இருந்து தம் பணிகளை செய்துவந்தனர். இம்மண்டபத்தின் மாடில் உள்ள அறையில்தான் தண்டலரான ஜாக்சனை வீரபாண்டிய கட்டபொம்மன் 1798 செப்டம்பர் 10ஆம் நாள் சந்தித்தார்.
1803 சனவரி 21 முதல் 1947 இந்திய விடுதலைவரை ஆங்கிலேயருக்கு அடங்கிய பெருநிலக்கிழாராக (சமீன்தார்) ஒன்பது சேதுபதிகள் இம்மண்டபத்தில் இருந்து ஆட்சி செய்தனர். இந்த இடத்தில்தான் 1901ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் தனது கலாவதி என்னும் நாடகத்தை அரங்கேற்றினார். அமெரிக்கா சென்று திரும்பிய விவேகானந்தருக்கு வரவேற்பு அளிக்கபட்டது. மு. இராகவர், இரா. இராகவர் போன்ற தமிழறிஞர்களும் புலவர்களும் தமிழ்ப் பணியாற்றினர். சேதுபதி குடுப்பத்தினரின் சொத்தாக இது 1978ஆம் ஆண்டுவரை இருந்தது. அதன்பிறகு தமிழ்க தொல்லியில் துறையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. இதில் ஒரு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.[5]
அமைப்பு
[தொகு]இம்மாளிகை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும், வடக்குத் தெற்காக 65 அடி அகலமும் கொண்ட 12 அடி உயரமுள்ள செவ்வக மேடையின்மீது கருங்கல், சுதை போன்றவற்றைக் கொண்டு 14 அடி உயரம் கொண்ட மண்டபமாக கட்டப்பட்டுள்ளது. இது மகா மண்டபம், முன்மண்டபம், அகமண்டபம், அதன்மீது ஒரு அறை அவ்வறைக்கு முன்னே ஒரு திறந்த முற்றம் அறைக்கு மேலே ஒரு இருக்கை என கோயிலின் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.[5]
தரையில் இருந்து மண்டபத்துக்குச் செல்ல 16 நீண்ட படிகள் அமைக்கப்படன. சாலையும் முற்றமும் பிற்காலத்தில் மேடாகிவிட்டதால் தற்போது 9 படிகளே மண்ணுக்கு மேலே தெரிகின்றன. இந்த படிகளின் இரு புறமும��� கல்லால் செய்யப்பட்ட இரண்டு யாளிகள் உள்ளன. அவை மட்டபத்தைத் தொடும் இடத்தில் முகப்புத் தூண்களாக இரண்டு வட்டத் தூண்கள் உள்ளன. இதைக் கடந்தால் 24 மண்டபங்களோடு மகா மண்டபம் அமைந்துள்ளது.[5]
இந்த மண்டபத்தின் சில பகுதிகள் திருமலை நாயக்கர் மகாலை நினைவூட்டுவதாக உள்ளது. மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சேதுபதிகளின் திருமுழுக்கு மேடை அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் மேற்கே ஊந்து படிகள் ஏறினால் நான்கடி உயர மேடையில் முன் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் கூரையை 16 கருங்கல் தூண்கள் தாங்கியுள்ளன. இந்த மண்டபத்தின் தென்மேற்கு மூலையின் உச்சியில் சேதுபதிகள் ஒன்பதின்மரின் சிலைகள் உள்ளன.[5]
முன் மண்டபத்துக்கு மேற்கே கருவறை என்னும் அகமண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை 12 கற்றூண்கள் தாங்கியபடி உள்ளன. இதை தற்காலத்தில் இராமர் பீடம் என்கின்றனர். அவ்வறையின் வடகிழக்கில் உள்ள படிக்கட்டுகளில் ஏறினால் 12 தற்றூண்களைக் கொண்ட மாடி அறை உள்ளது. இந்த அறைக்கு மேலே உள்ள மாடியில் ஒரு இருக்கை உள்ளது. அங்கிருந்து நகரின் முழுதோற்றத்தையும் காண இயலும்.[5]
ஓவியங்கள்
[தொகு]இராமலிங்க விலாசத்தின் உட்புறச் சுவர்களிலும், கூரைகளிலும் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை 1713 முதல் 1725 வரை ஆண்ட முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவற்றை சேதுபதியின் அகவாழ்வு ஓவியங்கள், புற வாழ்வு ஓவியங்கள், இறையியல் ஓவியங்கள் என பகுக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களில் மொகலாய ஓவியங்கள், நாயக்கர் ஓவியங்களில் காணப்படுவது போன்ற ஆடை அணிகலன்கள், ஒப்பனைகள் போனவையே முதன்மையாக காணப்படுகின்றன. இவை தமிழர் பண்பாட்டில் அயலாரின் பண்பாட்டு படையெடுப்பின் தாக்கத்தை பேசுவதாக உள்ளன.[5] இந்த ஓவியங்களில் சேதுபதி மன்னர்களுக்கும், தஞ்சாவூர் மராத்திய மன்னர்களுக்கும் இருந்த அரசியல் உறவு, இராமாயண, பாகவத கதைகள், மன்னரின் பொழுதுபோக்குகள், மன்னரை ஐரோப்பியரான டச்சுக்காரர்கள் வந்து சந்தித்தல் போன்றவை சித்தரிக்கபட்டுள்ளன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.158
- ↑ இராமலிங்க விலாசம்
- ↑ இராமலிங்க விலாசம் அருங்காட்சியகம் – geoview.info இணையத் தளத்தில்.
- ↑ இராமலிங்க விலாசம் அரண்மனை
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 அரி அரவேலன் (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். pp. 181–187.
- ↑ "ஓவியம் உணர்த்தும் வரலாறு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-10.