உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. வேலுப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. வேலுப்பிள்ளை
A. Veluppillai
பிறப்பு(1936-11-29)நவம்பர் 29, 1936
புலோலி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்புநவம்பர் 1, 2015(2015-11-01) (அகவை 78)
சான் பிரான்சிஸ்கோ, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைதமிழ் மொழி, கல்வெட்டியல்
பணியிடங்கள்பேராதனைப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
எடின்பரோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இலங்கைப் பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

ஆ. வேலுப்பிள்ளை (நவம்பர் 29, 1936 - நவம்பர் 1, 2015)[1] இலங்கைத் தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர்.[2]

இளமைக்காலமும், கல்வியும்

[தொகு]

வேலுப்பிள்ளை இலங்கையின் வடக்கே தென்புலோலியில் உபயகதிர்காமம் என்ற ஊரில், ஆழ்வாப்பிள்ளை, உமையாத்தைப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியைப் புலோலி தமிழ்ப் பாடசாலை, புலோலி ஆங்கிலப்பாடசாலை ஆகியவற்றில் கற்று, உயர்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று 1955-1959 இல் இளங்கலை படித்து முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறினார். இதற்காக ஆறுமுக நாவலர் பரிசும், கீழ்த்திசைக் கல்வி உதவித்தொகையும் பெற்றார்.[2] பேராசிரியர். க. கணபதிப்பிள்ளையின் நெறிப்படுத்தலிற் தமிழிற் கலாநிதிப் பட்டம் பெற்றார்.[1][3]

மீனாட்சி என்பவரைத் திருமணம் புரிந்த வேலுப்பிள்ளைக்கு சிவப்பிரியை, அருளாளன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

பணிகள்

[தொகு]

ஆ. வேலுப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 ஆம் ஆண்டில் விரிவுரையாளராகப் பதவியில் அமர்ந்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் 1984 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[3]

அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் சமயவியல்துறையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர். 1973-1974 இல் திருவனந்தபுரத்தில் உள்ள திராவிடமொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது கேரளப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். 1980 இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 1981-1982 இல் பொதுநல நாடுகள்(காமன்வெல்த் நாடுகள்) கழகத்தில் நிதியுதவி பெற்று இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் ஆசர் அவர்களுடன் இணைந்து பணிசெய்தவர். 1990-2000இல் சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

ஆய்வுகளும்/பட்டங்களும்

[தொகு]

இவர் 1959-1962 இல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் (1251- 1350 AD) தமிழ்மொழிநிலை என்ற பொருளில் ஆய்வு செய்தவர். இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1962-1964 இல் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு (D.Phil)பட்டம் பெற்றவர். கல்வெட்டுகளில் தமிழ்மொழியின் நிலை (கி.பி.800 - 920) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். இவரது கல்வெட்டு ஆய்வுகள் தமிழகக் கல்வெட்டுகளைப் பற்றியும், இலங்கைக் கல்வெட்டுகள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன. பின்னாளில் இவரது ஆய்வேட்டுச் செய்திகள் நூல்வடிவம் பெற்றபொழுது தமிழுலகம் இவரது ஆராய்ச்சி வன்மையை ஏற்றுப் போற்றியது. 31.05.1996 இல் சுவீடனில் உள்ள உப்சாலாப் பல்கலைக்கழகமும் இவரது பேரறிவுகண்டு இவருக்குச் சிறப்பு முனைவர் பட்டம் வழங்கிப் பாராட்டியது.

நூல்கள்

[தொகு]
  • இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை
  • ஈழத்து அறிஞர் ஆளுமைகள்
  • கல்வெட்டுச் சான்றும் தமிழாய்வும் (ஆங்கிலத்தில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது)
  • கல்வெட்டில் தமிழ்க் கிளைமொழியியல் ஆய்வு (ஆங்கிலத்தில், திராவிட மொழியியற் கழகம் வெளியிட்டது)
  • சாசனமும் தமிழும்
  • சேர் பொன். இராமநாதன் நினைவுப் பேருரை
  • தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்
  • தமிழ் வரலாற்றிலக்கிணம்
  • நினைவுப் பேருரை பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் ஈழத்துத் தமிழர்சால்புக் கோலம்
  • பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  • தமிழர் சமய வரலாறு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Veteran Tamil scholar Professor Veluppillai passes away". தமிழ்நெட். 2 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  2. 2.0 2.1 முனைவர் மு.இளங்கோவன் (28 பெப்ரவரி 2009). "பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை(இலங்கை)". பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 கார்த்தியாயினி கதிர்காமநாதன் (3 நவம்பர் 2015). "இரட்டைக் கலாநிதி பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
தளத்தில்
ஆ. வேலுப்பிள்ளை எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._வேலுப்பிள்ளை&oldid=3927394" இலிருந்து மீள்விக்கப்பட்டது