ஆப்பலாச்சிக்கோலா பழங்குடி
ஆப்பலாச்சிக்கோலா பழங்குடி, கிறீக் இனக்குழுவினரோடு உறவுடையவர்களாக இருந்த ஒரு தொல்குடி அமெரிக்கப் பழங்குடி ஆகும். இவர்களைப் பல்லச்சக்கோலா எனவும் அழைப்பதுண்டு. அவர்கள் ஹிச்சித்தி மொழிக்கு இனமான முஸ்கோஜிய மொழிகளுள் ஒன்றைப் பேசினார்கள். இவர்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றோரமாக வாழ்ந்தனர்.[1][2]
1706 ஆம் ஆண்டளவில் சில ஆப்பலாச்சிக்கோலா மக்கள் ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதியில் இருந்து தென் கரோலினா குடியிருப்புக்கு அண்மையில் உள்ள சாவன்னா ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர். 1706 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சாவன்னா ஆற்றுப் பகுதி ஆப்பலாச்சிக்கோலாக்கள் 80 பேர் சாவன்னா ஆற்றிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் குடியேறியிருந்தனர். ஜான் பார்ண்வெல் என்பவர் 1715 இல் கூடிய திருத்தமான கணக்கெடுப்பொன்றைச் செய்தார். இது சாவன்னா ஆற்று ஆப்பாலாச்சிக்கோலாக்கள் இரண்டு ஊர்களில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. இவற்றில், 64 ஆண்கள், 71 பெண்கள், 42 சிறுவர்கள், 37 சிறுமிகள் உட்பட 214 பேர் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
1715 ஆம் ஆண்டின் யமாசிப் போரில் இவர்களும் தென் கரோலினா மீதான தாக்குதலில் பங்கேற்றனர். பின்னாளில் இப்போரில் தப்பியவர்கள், மீண்டும், சட்டகூச்சி ஆறு, ஃபிளிண்ட் ஆறு ஆகியவை சந்திக்கும் இடத்திற்கு அருகில், ஆப்பலாச்சிக்கோலா ஆற்றுப் பகுதிக்கு வந்தனர்.
1833 இலும், 1834 இலும் செய்துகொள்ளப்பட்ட இரண்டு இந்தியர் அகற்றல் சட்ட ஒப்பந்தக்களுக்கு அமைய இவர்கள் இன்றைய ஒக்லஹோமாவுக்கு இடம்பெயர்ந்தனர். ஆப்பலாச்சிக்கோலா ஆறு, புளோரிடாவில் உள்ள ஆப்பலாச்சிக்கோலா நகரம் என்பன இவர்களுடைய பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Worth, John E. (October 28, 2011). "Indigenous Chiefdoms of Georgia". The New World. பார்க்கப்பட்ட நாள் January 28, 2023.
- ↑ Gallay, Alan (2002). The Indian Slave Trade: The Rise of the English Empire in the American South 1670–1717. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10193-7.