இறையியல்
இறையியல் (Theology) என்னும் சொல் இறைவன் (கடவுள்) தொடர்பான ஆய்வு என்னும் பொருள்கொண்டது. அதைவிடவும் விரிவான பொருளில் சமய நம்பிக்கை, சமய ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்த ஆய்வு எனவும் அதை விளக்கலாம்.
இறையியல் எதற்காக உருவாக்கப்படுகிறது?
[தொகு]இறையியலை உருவாக்குவோர் இறையியலார் (theologians) எனப்படுவர். இவர்கள் சமயம் தொடர்பான பொருள்களைப் புரிந்துகொள்ள, விளக்கியுரைக்க, விமர்சனம் செய்ய மெய்யியல், வரலாறு, மக்களினவியல், ஆன்மீகவியல் போன்ற பல துறைகளின் உதவியோடு ஆய்வினை மேற்கொள்வர்.
இறையியல் கீழ்வரும் பல குறிக்கோள்களை அடையும் வண்ணம் ஆக்கப்படுகிறது:
- இறையியலார் தம் சொந்த சமய மரபினை ஆழமாகப் புரிந்துகொள்ளல்;
- பிறரின் சமய மரபினை ஆழமாக அறிந்துகொள்ளல்;
- ஒன்றுக்கு மேற்பட்ட சமய மரபுகளை ஒப்பிட்டு ஆய்தல்;
- தமது சமய மரபு ஏற்புடையதென ஆதாரங்களோடு நிறுவுதல்;
- தமது சமயத்தைப் பரப்புதற்கு அடிப்படை காணல்;
- தற்கால உலக நிலைக்கும் பிரச்சினைகளுக்கும் சமய மரபின் ஒளியில் தீர்வுகாண முயல்தல்;
- ஒரு குறிப்பிட்ட சமய மரபின் வரம்புகளைக் கடந்து கடவுள் பற்றிய ஆய்வில் ஈடுபடுதல்.
இறையியல் என்னும் சொல்லின் வரலாறு
[தொகு]தமிழில் இறையியல் என்னும் சொல் பெரும்பாலும் கிறித்தவப் பின்னணியில் உருவானது. பழைய வழக்குப்படி, இது தேவ சாஸ்திரம் அல்லது வேத சாஸ்திரம் என்றும் மறையியல் என்றும் அழைக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் theology என்னும் சொல் கிரேக்க மொழியில் theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல்லிலிருந்து பிறந்தது.[1] இலத்தீனிலும் theologia என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. θεολογία (theologia) என்னும் கிரேக்கச் சொல் θεός = theos (= கடவுள்), λόγος (logos) (= சொல், உரை, விளக்கம், இயல்) என்னும் இரு மூலச் சொற்களால் ஆனது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞரும் இடைக்காலக் கிறித்தவ அறிஞரும் இச்சொல்லுக்கு அளித்த பொருள் கிறித்தவ மரபில் ஊன்றியது. பின்னர் பிற சமயங்களும் தம் சமய மரபு ஆய்வைக் குறிக்க இறையியல் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாயின.
- இறையியல் என்னும் சொல் கிறித்தவ சமய வழக்கில் கையாளப்படுவதற்கு முன்னர் பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டது. தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428/427 - கி.மு. 348/347) [2] கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட நான்காம் நூற்றாண்டிலேயே இச்சொல்லைக் கையாண்டார். அதற்கு தெய்வம் (தெய்வங்கள்) பற்றிய விளக்கம் என்னும் பொருள் கொடுத்தார். பிளேட்டோவின் தலைசிறந்த மாணவரான அரிசுட்டாட்டில் (கி.மு. 384 - கி.மு. 322) [3] என்னும் தத்துவ அறிஞர் இச்சொல்லுக்கு மெய்யியல் சார்ந்த பொருள் வழங்கினார். அவர் சிந்தனைப்படி மனித அறிவு சார்ந்த அனைத்துத் துறைகளும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடங்கும். அவையாவன: 1) கணிதவியல் (mathematike), 2) இயற்பியல�� (physike),3) இறையியல் (theologike). இந்த இறையியல் என்னும் பிரிவில் இயற்பியல் கடந்த இயல் (metaphysics) உள்ளடங்கும். அதன் உட்பிரிவாக கடவுள் (கடவுளர்) பற்றிய விளக்கம் அடங்கும். இதுவே அரிசுட்டாட்டிலின் தத்துவப் பார்வை.
- கிரேக்க மரபை ஆதாரமாகக் கொண்டு, வார்ரோ (Varro) (கி.மு. 116 - கி.மு. 27) [4] என்னும் இலத்தீன் மரபு சிந்தனையாளர் இறையியலை மூன்று கோணங்களிலிருந்து பார்த்தார்: 1) தொன்மரபு நம்பிக்கை (mythology): தெய்வங்கள் பற்றிய ஆய்வு. பண்டைய கிரேக்கரும் உரோமையரும் பல தெய்வ வழிபாட்டினராய் இருந்தனர். தெய்வங்கள் பற்றிய தொன்மங்கள் (mythis) அவர்களிடையே பரவலாய் இருந்தன. 2) பகுத்தறிவுப் பார்வை: தெய்வங்களையும் உலகையும் பற்றிய பகுத்தறிவு சார்ந்த ஆய்வு. 3)குடிமைசார் பார்வை: குடிமக்கள் பொதுவாழ்வில் சமயச் சடங்குகளையும் கடமைகளையும் நிறைவேற்றுதல் பற்றியது.
- கடவுள் அருளிய சொல் (λόγον τοῦ θεοῦ = logon tou theou = word of God) என்னும் தொடர் விவிலியத்தின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு நூலில் வருகிறது (காண்க: திருவெளிப்பாடு 1:2).
- கிறித்தவ அறிஞர் தெர்த்தூல்லியன் (கி.பி. சுமார் 160 - சுமார் 220) [5] மேற்குறிப்பிட்ட வார்ரோ என்பவரின் புரிதலையே கொண்டிருந்தார். புனித அகுஸ்தீன் (கி.பி. 354 - 430) [6] என்னும் அறிஞரும் அக்கருத்தை ஏற்றார். அது தவிர, பொதுப்பொருளில் இறையியல் என்றால் கடவுள் பற்றிய சிந்தனை, விவாதம் எனவும் கொண்டார்.
- நடுக்கால அறிஞர் சிலர் theologia என்னும் சொல்லுக்கு கடவுளின் வார்த்தை என்று பொருள்கொடுத்து அதை விவிலியத்தைக் குறிக்கப் பயன்படுத்தினர்.
- கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொயேத்தியுசு (Boethius) என்னும் அறிஞர் இறையியல் என்பது மெய்யியலின் ஒரு பகுதி என்று பொருள்கொண்டார். அசையும் பொருள்களைப் பற்றிய ஆய்வு இயற்பியல் என்றால் அசையாப் பொருள் பற்றிய ஆய்வு இறையியல் என்பது அவர் கருத்து. கடவுள் இயற்கைப் பொருள்களைப் போன்று மாற்றங்களுக்கு உட்பட்டவர் அல்லர் என்னும் கருத்தின் அடிப்படையில் அசையாப் பொருள் என்று குறிக்கப்பட்டார்.
- நடுக்கால கிறித்தவ அறிஞர்கள் கிறித்தவ சமய நம்பிக்கைகளை ஆயும் கல்வித்துறையாக இறையியலை வரையறுத்தார்கள்.
- 17ஆம் நூற்றாண்டிலிருந்து பொதுவாக சமயம் சார்ந்த கருத்துகளை ஆயும் இயல் இறையியல் என்னும் பொருள் எழுந்தது. இவ்வாறு "இயற்கை இறையியல்" (Natural Theology) என்னும் தொடர் எழுந்தது. கிறித்தவ வெளிப்பாட்டை நேரடியாக எடுத்து ஆயாமல், இயற்கையே இறைவன் பற்றி எதை எடுத்துரைக்கிறது என்று ஆயும் பாடம் இது.
கிறித்தவ இறையியல் - பிற சமய இறையியல்கள்
[தொகு]இறையியல் என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்கு மட்டுமே பயன்படுத்துவதா அல்லது எந்த சமய மரபுக்கும் பயன்படுத்தலாமா என்பது பற்றி அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. ஒருசிலர் கருத்துப்படி, இறையியல் என்னும் சொல்லைக் கிறித்தவ சமய மரபுக்குரியதாகக் கொள்வதே சரி. வேறுசிலர் எந்த மதங்கள் கடவுள் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் பண்புகளை மனிதர் அறிந்து அப்பண்புகள் குறித்து ஆய்வு நிகழ்த்த இயலும் என்று கருதுகின்றனவோ அவை மட்டுமே இறையியல் நிகழ்த்துகின்றன என்பர். கடவுள் குறித்துப் பேசாத சமய மரபுகளில் இறையியல் உள்ளது என்பது முரணாகும் என்பது இவர்கள் வாதம்.
- மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் புத்த சமயத்தில் இறையியல் உளது என்பதற்குப் பதிலாக, புத்த மெய்யியல் பற்றிப் பேசுவதே பொருத்தம். இவ்வுலகு பற்றியும் உலகில் வாழும் மனிதர் பற்றியும் புத்த மரபு சில சிந்தனைகளைக் கொண்டுள்ளது. அச்சிந்தனைத் தொகுப்பும் ஆய்வும் புத்த மெய்யியல் ஆகும். ஆனால் புத்த இறையியல் என்பது சரியே என்று வாதாடுகிறார் இக்னாசியோ கபேசோன் (Ignacio Cabezon) என்பவர். இறையியில் என்னும் சொல்லை அதன் மூலப்பொருளில் கொள்ளாமல், சமய நம்பிக்கை பற்றிய ஆய்வு எனக் கொள்வதே பொருத்தம் என்பது அவர் கருத்து.
- இந்து சமயத்தில் நீண்டகால மெய்யியல் வரலாறு உண்டு. இவ்வுலகின் தன்மை என்ன, பரம்பொருள் ஒன்று உளதா, உயிர் என்றால் என்ன, உயிருக்கும் பரம்பொருளுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் இந்திய சமய மரபு தொன்றுதொட்டே சிந்தித்து வந்துள்ளது. இத்தகைய மெய்யியல் சிந்தனைகளும் அவற்றின் தொகுப்பும் தரிசனம் (வடமொழியில் दर्शन) என்றும் தமிழில் மெய்ப்பொருள் காண்டல் என்றும் அறியப்பட்டன. பார்வை, காட்சி என்னும் பொருளுடைத்த தரிசனம் என்னும் சொல் மெய்ம்மை பற்றிய ஆய்வு என்னும் பொருள் பெற்று, இந்திய மரபு சார்ந்த ஆறு அமைப்புகளாகக் கொள்ளப்படுகிறது (நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம்). சைவ இறையியல், வைணவ இறையியல் என்னும் ஆய்வுத்துறைகள் பல்கலைக்கழகங்களில் உள்ளன.
- இசுலாமிய மரபில் கலாம் [7] என்னும் சொல் இறையியலையும் மெய்யியலையும் குறிக்கிறது. திருக்குரான் பற்றிய ஆய்வும், இசுலாமிய சட்ட முறை பற்றிய் ஆய்வும் அதில் உள்ளடங்கும்.[8]
- யூத இறையியல் என்பது கிறித்தவ இறையியலுக்கும் இசுலாமிய இறையியலுக்கும் ஒருவிதத்தில் முன்னோடியாக இருந்தது. யூத சமயச் சட்டத்தையும், (எபிரேய, யூத) விவிலியத்தையும் விளக்கியுரைக்கும் செயலே பெரும்பாலும் யூத சமய ஆய்வு அல்லது யூத இறையியல் ஆகும் என்பது சில அறிஞர் கருத்து. ஆங்கிலத்தில் இது Judaism என அழைக்கப்படுகிறது.[9]
வரலாற்றில் இறையியல் ஆய்வுத்துறைகள்
[தொகு]- கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவில் (இன்றைய பாகிசுத்தான்) தட்சசீலம் (வடமொழி: तक्षशिला; இந்தி: तक्षिला)[10] என்னும் பழம்பெரும் நகரில் அமைந்திருந்த உயர் கல்வி நிறுவனத்தில் வேதங்களும் புத்த சமயக் கொள்கைகளும் கற்பிக்கப்பட்டன.
- கிரேக்க நாட்டில் மெய்யியலார் பிளேட்டோ கி.மு. நான்காம் நூற்றாண்டில் நிறுவிய அக்காதெமி (Academy) என்னும் கல்வியகத்தில் மெய்யியலோடு இறையியலும் கற்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
- சீனாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கன்ஃபூசிய இறையியல் தைக்சு Taixue (சீனம்: 太学) என்னும் உயர் கல்வி நிறுவனத்தில் கற���பிக்கப்பட்டது.[11]
- பண்டைக்கால அசீரிய நகரான நிசிபிசு (Nisibis) என்னும் நகரில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஒரு கிறித்தவ உயர் கல்விக் கழகம் சிறப்பாகச் செயல்பட்டது. அங்கே கிறித்தவ இறையியல் கற்பிக்கப்பட்டது. அந்நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது.
- கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருந்த நாளந்தா (नालंदा)[12] என்னும் பண்டைய நகரில் புத்த சமயக் கொள்கைகள் தொடர்பான ஆய்வு நிகழ்த்திய பல்கலைக்கழகம் செயல்பட்டது.
- மொரோக்கோ நாட்டில் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே அல்-கராவ்வியின் (Al-Karouine)[13] என்னும் நகரில் இசுலாமிய இறையியல் கற்பிக்கப்பட்ட பல்கலைக் கழகம் இருந்து வருகிறது. அதுபோலவே கெய்ரோ நகரில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அல்-ஆசார் (Al-Azhar) பல்கலைக்கழகத்தில் இசுலாமிய சமய ஆய்வுகள் நிகழ்ந்தன.
- இன்றைய மேலை நாட்டு முறையில் அமைந்த பல்கலைக் கழகங்கள் ஐரோப்பாவில் நடுக்காலத்தில் கிறித்தவத் துறவியரால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து வளர்ச்சி பெற்றவையே. அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக் கழகங்கள் பொலோஞ்ஞா (Bologna), பாரிசு, ஆக்சுஃபோர்டு போன்றவை ஆகும். இந்நிறுவனங்களில் இறையியல் பாடங்கள் கற்பிக்கப்பட்டன; விரிவான இறையியல் ஆய்வுகள் நிகழ்ந்தன. அக்காலத்தில் இறையியல் மனித அறிவியல் துறைகளின் அரசி என்னும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பிற பாடத்துறைகள் இறையியல் படிப்புக்குத் துணையாக அமைந்தன.
- 18ஆம் நூற்றாண்டில் எழுந்த அறிவொளி இயக்கம் (Enlightenment) மனித பகுத்தறிவுக்கு அதிகமாக முதன்மை அளித்து, சமய நம்பிக்கைக்கு எதிராக எழுந்தது. பகுத்தறிவுக்கும் சமய நம்பிக்கைக்கும் இடையே நிலவிய பிணைப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. இவ்வாறு பல்கலைக் கழகங்கள் திருச்சபையின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தொடங்கின; உலகு சார்ந்த (secular) தன்னுரிமை கொண்ட நிறுவனங்களாக வளரத் தொடங்கின.
- இன்று, பல பல்கலைக் கழகங்களில் இறையியல் துறை உள்ளது. சிலவற்றில் சமய ஆய்வுத்துறை (religious studies) உள்ளது. சமய நம்பிக்கை இல்லாதோரும் சமய ஆய்வுத்துறையில் பணியாற்றுவது வழக்கமாகி வருகிறது. ஆனால், இறையியல் துறை என்பது சமய நம்பிக்கையோடு நெருங்கிய தொடர்புடையதால் அத்துறையில் பணிபுரிவோர் சமய நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்னும் கருத்து பரவலாக உள்ளது. ஆயினும், மறைச் சுதந்திரம் யாருக்கும் மறுக்கப்படலாகாது என்னும் அடிப்படையில் இப்பொருள் குறித்த விவாதம் தொடர்கிறது.