தாய்
67
அந்த அதிகாரி கண்களை நெரித்து, நிகலாயின் அசைவற்ற முகத்தை வெறித்துப் பார்த்தான். அவனது கைகள் புத்தகத்தின் பக்கங்களை இன்னும் வெகுதுரிதமாகப் புரட்டத் தொடங்கின. சமயங்களில் அவன் தனது அகன்ற சாம்பல் நிறக் கண்களை மேலும் அகலத்திறந்து பார்த்தான். அந்தப் பார்வை அவன் ஏதோ தாங்க முடியாத வேதனையால் தவிப்பது போலவும், சக்தியற்ற கோபத்தில் வாய்விட்டுக் கத்தப்போவது போலவும் தோன்றியது.
“ஏ, போலீஸ்காரா! புத்தகங்களைப் பொறுக்கி எடு!” என்று மீண்டும் சத்தமிட்டான் நிகலாய்.
“உடனே எல்லாப் போலீஸ்காரர்களும் அவன் பக்கமாகக் கண் திருப்பினர். பிறகு தங்கள் அதிகாரியைப் பார்த்தனர். அதிகாரி நிமிர்ந்து நிகலாயின் அகன்ற உருவத்தின் மீது மெதுவான பார்வை செலுத்தினான்.
“ம்! அவற்றைப் பொறுக்குங்கள்!” என்று மூக்கால் உறுமினான் அவன்.
போலீஸ்காரர்களின் ஒருவன் உலைந்து கிழிந்துகிடந்த புத்தகங்களைக் குனிந்து பொறுக்கினான்.
“நிகலாய் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கட்டுமே!” என்று பாவெலைப் பார்த்து முனகினாள் தாய்.
அவனோ வெறுமனே தோளை மட்டும் குலுக்கிக்கொண்டான். ஹஹோல் தலையைக் குனிந்துகொண்டான்.
“இந்த பைபிளைப் படிப்பது யார்?”
“நான் தான்” என்றான் பாவெல்.
“இந்தப் புத்தகமெல்லாம் யாருடையவை?”
“என்னுடையவை” என்றான் பாவெல்.
“ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்தான் அதிகாரி. தனது மெல்லிய கைவிரல்களை முறித்துச் சொடுக்கு விட்டுக்கொண்டான்: கால்களை மேஜைக்கு அடியில் நீட்டினான். மீசையைத் தடவிவிட்டுவிட்டு நிகலாயிடம் கேட்டான்: “நீ தான் அந்திரேய் நஹோத்காவா?”
“ஆமாம்” என்று ஓர் அடி முன்னால் வந்து சொன்னான் நிகலாய். ஹஹோல் அவனது தோளைப்பிடித்து இழுத்துப் பின்னுக்குத் தள்ளினான்.
“அவன் சொல்வது தவறு. நான்தான் அந்திரேய்.....”
அதிகாரி தன் கையை உயர்த்தி நிகலாயை மிரட்டினான்.