உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

497


இந்த மாதிரியான குரூரமான, விபரீதமான எண்ணங்கள் எல்லாம் நீதிபதிகளையே கவனித்துக்கொண்டிருந்த தாயின் மனத்தில் தெள்ளத் தெளிவாக உருப்பெற்றுத் தோன்றிக் கொண்டிருந்தன. தங்களது இந்தப் பேராசை உணர்ச்சியையும், ஒரு காலத்தில் தங்களது மிருகப் பசியைத் தணித்துக் கொள்வதற்கு வழி தெரிந்து வைத்திருந்து, இன்று பலமிழந்துபோன மிருகங்களின் உறுமலைப் போன்ற ஆண்மையற்ற மூர்க்க பாவத்தையும், அவர்கள் அனைவரும் மூடி மறைக்க விரும்பவில்லை என்றே அவளுக்குத் தோன்றியது. பெண்மை உணர்ச்சியும் தாய்மையுணர்ச்சியும், கலந்து நிறைந்த தாய்க்கோ தனது மகனது சரீரம் என்றென்றும் இனிமை பயப்பதாக, ஆத்மா என்று சொல்லப்படுகிறதே, அதைவிட அருமையானதாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே அந்தப் பசிவெறிகொண்ட மங்கிய கண்கள் அவனது முகத்தின் மீதும், மார்பின் மீதும் தோள்களின் மீதும், கைககளின் மீதும் ஊர்ந்து தவழ்ந்து, அவனது உயிர்ப்பு நிறைந்த சதைக் கோளத்தின் உணர்வை நாடி, அவன் உடம்போடு ஒட்டி உராய்ந்து தமது உடம்பிலும், தங்களது தொய்ந்து தொளதொளத்துப்போன தசைக் கோளங்களிலும், வலியிழந்து போன நரம்புகளிலும் புது வலுவை ஏற்றிக்கொள்ளும் விருப்பத்தோடு பற்றிப்பிடித்துப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே அவளுக்குப் பயங்கரமாய்த் தோன்றியது. அந்த இளைஞர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கும் தாமே ஆளாகி, அவர்களது உடம்புகளைத் நாம் என்றென்றும் இழப்பதற்கும் தயாராகிவிட்ட அந்த இளைஞர்களை எண்ணியெண்ணி அந்த நீதிபதிகள், ஊறிவரும் பகைமை பேராசை முதலியவற்றின் உறுத்தலால், ஒரு புதிய துடிப்புக்கு ஆளாயினர், அவர்களது இந்த உணர்ச்சியற்ற இனிமையற்ற பார்வையைப் பாவெலும் உணர்ந்துகொண்டது போலவே அவளுக்குத் தோன்றியது. எனவேதான் அவன் அவளை ஒரு நடுக்கத்தோடு பார்ப்பதாக அவள் உணர்ந்தாள்.

பாவெல் அவளை அமைதியோடும் அன்போடும், கண்ணில் களைப்பின் சாயை படர்ந்து பரவப் பார்த்தான். இடையிடையே அவன் அவளை நோக்கித் தலையை அசைத்துப் புன்னகை செய்தான்.

“சீக்கிரமே — விடுதலை!” என்ற வார்த்தைகளே அவனது புன்னகையின் அர்த்த பாவமாகத் தோன்றியது. அந்தப் புன்னகை அவளைத் தொட்டுத் தடவி அமைதியளித்தது.

திடீரென்று அந்த நீதிபதிகள் எழுந்திருந்தார்கள், தாயும் தன்னை அறியாமலே எழுந்து நின்றாள்.

“அதோ அவர்கள் போகப் போகிறார்கள்” என்றான் சிஸோவ்.

“தீர்ப்புச் செய்யவா?” என்று கேட்டாள் தாய்.