450
மக்சீம் கார்க்கி
22
அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று அவள் சிறைச்சாலை ஆபீசில்
பாவெலைச் சந்தித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டிருந்தாள்; அந்தச்
சமயத்தில் அவன் அவளது கைக்குள் ஒரு காகித உருண்டையை வைத்து
அழுத்துவதைத் தாய் உணர்ந்தாள். கையில் சூடுபட்ட மாதிரி அவள்
திடுக்கிட்டுப்போனாள். தன்னுடைய மகனது முகத்தைக் கூர்ந்து
கவனித்தாள்; எனினும் அதில் அவளுக்கு எந்தப் பதிலும்
கிடைக்கவில்லை. பாவெலின் நீலக் கண்கள் வழக்கம்போலவே
அமைதியோடும் அழுத்தத்தோடும் சிரித்துக் களித்தன.
"வருகிறேன்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள்.
மீண்டும் ஒரு முறை அவளது மகன் தன் கரத்தை நீட்டினான்: அவனது முகத்தில் அன்பின் சாயை படர்ந்தோடியது.
"போய்வா, அம்மா.”
அவள் அவனைப் போகவிடாமல் அப்படியே நின்றாள்.
"கவலைப்படாதே, கோபமும்படாதே” என்றான் அவன்.
இந்த வார்த்தைகளும் அவனது நெற்றியிலே அழுந்தித் தோன்றிய உறுதியான ரேகையுமே அவளுக்குப் பதிலளித்தன.
"அட, கண்ணு” என்று தலையைத் தாழ்த்திக் கொண்டே சொன்னாள். ”நீ என்ன சொல்கிறாய்... ”
அவனை மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் வெளியே வந்தாள். தனது கண்களில் பொங்கும் கண்ணீரையும் நடுங்கும் உதடுகளையும் தன் மகன் பார்த்துவிடக்கூடாதே என்ற தவிப்பில் விறுட்டென வெளிவந்துவிட்டாள். வீட்டுக்கு வந்து சேருகிறவரையிலும், அந்தக் காகித உருண்டையை வாங்கிய கரம் கனத்துத் தொங்குவதுபோலவும், தோளில் ஓங்கி அறை வாங்கியது போலவும், அதனால் அது வலியெடுத்து வேதனைப்படுவது போலவும் அவளுக்குத் தோன்றியது. வீட்டுக்கு வந்த மாத்திரத்தில் அவள் அந்தக் காகிதத்தை நிகலாய் இவானவிச்சிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு அவன் அந்தக் காகிதத்தை விரித்துப் பிரித்துப் படிக்கத் தொடங்கும்வரையிலும், இதயத்திலே நம்பிக்கை படபடத்துத் துடித்துக்கொண்டிருக்க, அப்படியே காத்து நின்றாள். ஆனால் நிகலாயோ அவற்றைக் கவனிக்கவில்லை.
"ஆமாம். அவன் இதைத்தான் எழுதியிருக்கிறான்” என்று கூறிவிட்டு அதை வாசிக்கத்தொடங்கினான். ‘தோழர்களே, நாங்கள் தப்பி வருவதற்கு முயலமாட்டோம். எங்களால் முடியாது. எங்களில்