உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

மக்சீம் கார்க்கி


அவன் திரும்பிப் பார்க்காமலே சென்றான்.

“இன்றிரவு நீங்கள் இந்த ஊரிலா தங்குகிறீர்கள்?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமாம். பின்னால் லேஸ் வாங்க வந்தேன்.....”

“இங்கே யாரும் பின்னுவதில்லையே, தின்கோவாலிலும். தாரினாவிலும் தான் நெய்கிறார்கள். இங்கே கிடையாது” என்று விளக்கினாள் அந்த யுவதி.

“நான் நாளைக்கு அங்கே போவேன்....”

“தேநீருக்குக் காசு கொடுத்து முடிந்ததும். தாய் அந்தப் பெண்ணுக்கு, மூன்று கோபெக்குகளை இனாமாகக் கொடுத்தாள். இனாம் கொடுத்ததில் அவளுக்கு ஓர் ஆனந்தம். அவர்கள் வெளியே வந்தார்கள். ஈரம் படிந்த அந்த ரோட்டில் அந்தப் பெண் வெறும் கால்களோடு விடுவிடென்று நடந்து சென்றாள்.

“நீங்கள் விரும்பினால், நான் தாரினாவுக்குச் சென்று அங்குள்ள பெண்களை, அவர்கள் பின்னிய லேஸ்களை எடுத்துக்கொண்டு இங்கு வரச் சொல்கிறேன்” என்றாள் அந்தப் பெண்; “அவர்களே இங்கு வந்துவிடுவார்கள். நீங்கள் அங்கே போக வேண்டியதில்லை. இங்கிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம்தான் இருக்கிறது......”

“நீ ஒன்றும் கவலைப்படாதே, கண்ணு” என்று கூறிக்கொண்டே அவளோடு சேர்ந்து நடக்க முயன்றாள் தாய். குளிர்ந்த காற்று அவளுக்கு இதம் அளித்தது. ஏதோ ஒரு மங்கிய தீர்மானம் அவளது மனத்துக்குள்ளே வடிவாகி உருபெறுவதாகத் தோன்றியது. அந்த உருவம் மெதுவாக வளர்ந்து வந்தது. அதன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையால், அவள் தனக்குத் தானே கேட்டுக்கொண்டிருந்தாள்:

“நான் என்ன செய்ய வேண்டும்? நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால்.....”

பொழுது ஒரே இருளாகவும் குளிராகவும் ஈரமாகவும் இருந்தது. குடிசைகளின் ஜன்னல்களில் செக்கர் ஒளி மினு மினுத்தது. சிறு சிறு அழுகைக் குரல்களும், கால்நடைகளின் கனைப்பும் அந்த அமைதியினூடே கேட்டன. அந்தக் கிராமம் முழுவதுமே ஏதோ ஓர் இருண்ட பாரவுணர்ச்சியைச் சுமந்து கவலையில் ஆழ்ந்திருட்பதாகத் தோன்றியது.

“இதோ” என்று காட்டினாள் அந்தப் பெண்; “இரவைக் கழிப்பதற்கு மிகவும் மோசமான இடத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். இவன் மிகவும் ஏழையான முஜீக்.”