தாய்
395
ஜனங்கள் இரு பிரிவினராகப் பிரிந்து நின்றார்கள். ஒரு சிலர் அந்த அதிகாரியைச் சுற்றி நின்று அவனோடு சேர்ந்து கத்திக்கொண்டும் இரங்கிக் கேட்டுக்கொண்டுமிருந்தனர். அந்தப் பிரிவினரில் சிறு பான்மையோர் கீழே விழுந்துகிடக்கும் ரீபினின் பக்கமாக நின்று ஏதேதோ வர்மம் கூறினர். அவர்களில் சிலர் ரீபினைத் தரையிலிருந்து தூக்கி நிறுத்தினர். போலீஸ்காரர்கள் அவனது கைகளைக் கட்ட முன் வந்த போது அவர்கள் கூச்சலிட்டார்கள்:
“ஏ, பிசாசுகளே! அவசரப்படாதீர்கள்!”
ரீபின் தனது முகத்திலும் தாடியிலும் படிந்திருந்த ரத்தத்தையும் புழுதியையும் துடைத்தான்; வாய் பேசாது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனது பார்வை தாயின் மீது விழுந்தது. அவள் நடுங்கியபடி, அவனைநோக்கித் தன்னையுமறியாமல் கையை ஆட்டிக்கொண்டே முன் வரக் குனிந்தாள். ஆனால் அவன் சட்டென்று அவள் பார்வையினின்றும் கண்களைத் திருப்பிக்கொண்டான். சில நிமிஷ நேரம் கழித்து அவனது கண்கள் மீண்டும் அவள் பக்கம் திரும்பின. அவன் நிமிர்ந்து நின்று தலையை உயர்த்திப் பார்ப்பதாகவும் ரத்தக்கறை படிந்த அவனது கன்னங்கள் நடுங்குவதாகவும் அவளுக்குத் தோன்றியது.
“அவன் என்னைக் கண்டுகொண்டான்—-உண்மையிலேயே என்னை அவன் அடையாளம் கண்டுகொண்டானா?”
அவள் அவனை நோக்கி உடம்பெல்லாம் நடுங்க, அடக்க முடியாத வருத்தம் நிறைந்த மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். மறு கணமே அந்த நீலக்கண் முஜீக் அருகே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டாள். அவனது பார்வை தாயின் உள்ளத்தில் ஆபத்துக்கான எச்சரிக்கையுணர்வைக் கிளப்பிவிட்டது.
“நான் என்ன செய்கிறேன்? இப்படிச் செய்தால் என்னையும் அவர்கள் கொண்டு போய்விடுவார்கள்!”
அந்த முஜீக் ரீபினிடம் ஏதோ சொன்னான்: ரீபின் பதிலுக்கு ஏதோ கூறியவாறே தலையை அசைத்தாள்.
“அது சரிதான்!” என்றான் அவன். நடுக்கம் ஒரு புறமிருந்தாலும், அவனது குரல் தெளிவாகவும் துணிவாகவும் ஒலித்தது. “இந்தப் பூமியில் நான் ஒருவன் மட்டும் அல்ல. உண்மை முழுவதையும் அவர்களால் அடக்கிப் பிடித்துவிட முடியாது. நான் எங்கெங்கு இருந்தேனோ அங்கெல்லாம் என்னைப் பற்றிய நினைவு நிலைத்திருக்கும். அவர்கள் எங்களது இருப்பிடங்களையெல்லாம் குலைத்து, எல்லாத் தோழர்களையும் கொண்டு போய்விட்டாலும் கூட...”