உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

255



1


அந்த நாளின் குறைப் பொழுதும் மங்கிய நினைவுகளாலும், தனது உடலையும் உள்ளத்தையும் பற்றியிருந்த களைப்பு மிகுதியாலுமே தாய்க்குக் கழிந்தது. அவள் முன்னால், அந்தக் குட்டி அதிகாரியின் உருவம், பாவெலின் தாமிர நிறமுகம், புன்னகை பூக்கும் அந்திரேயின் கண்கள்–எல்லாம் நிழலாடின.

அவள் அறைக்குள்ளே அலைந்தாள்; ஜன்னலருகே உட்கார்ந்தாள்; தெருவை எட்டிப் பார்த்தாள், மீண்டும் எழுந்தாள் புருவத்தை மேலேற்றி வியந்தவாறு. சிறு சப்தம் கேட்டாலும் விழிப்புற்று, எங்கும் பார்த்தவாறு நடந்தாள்; அல்லது எதையோ அர்த்தமற்றுத் தேடுவது போல் பார்த்தாள். அவள் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் அவளது தாகத்தையும் தணிக்கவில்லை. அவளது நெஞ்சுக்குள் தவிக்கும் ஏக்கத்தையும் தணிக்கவில்லை; குமைந்து நின்ற துயரத்தையும் அணைக்கவில்லை. அன்றையப் பொழுதே அவளுக்கு இரு கூறாகத் தோன்றியது. அதன் முதற் பகுதிக்கு அர்த்தம் இருந்தது: இரண்டாம் பகுதியிலே அந்த அர்த்தமெல்லாம் வெற்றிச் சுவறி வறண்டு போய்விட்டது. வேதனை தரும் சூன்ய உணர்ச்சி அவள் மனத்தில் மேலோங்கியது. அவள் தனக்குத்தானே ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டாள்:

“இப்போது என்ன?”

மரியா கோர்சுனவா அவளைப் பார்க்க வந்தாள். அவள் தன் கரங்களை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டாள்; அழுதாள், உணர்ச்சிப் பரவசமானாள்; காலைத் தரையில் உதைத்தாள்; ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டினாள்; சபதம் கூறினாள்; யோசனை சொன்னாள். எதுவுமே தாயை அசைக்கவில்லை,

ஆஹா! ஜனங்கள் எல்லோரும் போராடக் கிளம்பிவிட்டார்கள்! தொழிற்சாலை முழுவதுமே எழுச்சி பெற்றுவிட்டது. ஆமாம், தொழிற்சாலை முழுவதும்தான்!” என்று மரியாவின் கீச்சுக்குரல் கேட்டது.

“ஆமாம்” என்ற அமைதியோடு தலையை ஆட்டிக்கொண்டு சொன்னாள் தாய், ஆனால் அவளது கண்கள் கடந்த காலத்தை, பாவெலோடும் அந்திரேயோடும் மறைந்துபோன சகலவற்றையும் நினைத்து நிலைகுத்தி நின்றன. அவளால் அழ முடியவில்லை: அவளது