உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

மக்சீம் கார்க்கி


“எப்போது? இப்போதா?”

“மே முதல்...... முதல் தேதிக்கு!”

“அதுவா?” என்று குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்லத் தொடங்கினான் பாவெல். “நான் கொடியைத் தாங்கிக்கொண்டு,அணி வகுப்புக்குத் தலைமை தாங்கிச் செல்லப் போகிறேன். இந்தக் காரணத்துக்காக, அவர்கள் மீண்டும் என்னை ஒரு வேளை சிறையில் தள்ளுவார்கள்.”

தாயின் கண்களில் குத்தல் எடுத்தது வாய் உலர்ந்து வறண்டது. பாவெல் அவள் கரத்தைப் பிடித்தெடுத்துத் தடவிக் கொடுத்தான்.

“அம்மா! இதை நான் செய்யத்தான் வேண்டும். என்னை உனக்குப் புரியவில்லையா, அம்மா!”

“நான் எதுவுமே சொல்லவில்லை, அப்பா!” என்று தலையை லேசாக நிமிர்த்தியவாறு. சொன்னாள் அவள். ஆனால் அவனது கண்களிலுள்ள உறுதி நிறைந்த ஒளியை அவளது கண்கள் சந்தித்தன. அவள் மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்.

அவன் பெருமூச்செறிந்தான், அவள் கரத்தை நழுவவிட்டான்.

“நீ இதைக்கண்டு வருத்தப்படக்கூடாது, அம்மா, சந்தோஷப்பட வேண்டும்” என்று அவன் கண்டிக்கும் பாவனையில் பேச ஆரம்பித்தான். “மரணத்தை நாடிச் செல்லும் தங்கள் மைந்தர்களை, புன்னகையோடு வழியனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்றைக்குத் தோன்றப் போகிறார்கள், அம்மா!”

“அடேடே! உபதேசிகர் வந்துவிட்டாரடா!....” என்று முனகினான் ஹஹோல்.

“நான்தான் எதுவுமே சொல்லவில்லையே...” என்று திரும்பச் சொன்னாள் தாய். “நான் உன் வழியில் குறுக்கே நிற்கவில்லை; ஆனால் எனக்குச் சங்கடமாயிருக்கும்போது,. நான் ஒரு தாய்போல நடந்துகொள்வதைத் தடுக்க முடியாது.....”

அவன் அவளை விட்டு விலகிச் சென்றான்; அவனது வார்த்தைகளின் குத்தலை உணர்ந்தாள் அவள்.

“ஒரு மனிதன் தன் இஷ்டப்படி வாழ்வதற்குக்கூட, குறுக்கே நிற்கிறது ஒருவகைப் பாசம்!”

“இல்லை. பாஷா. அப்படிச் சொல்லாதே” என்று அவன் நடுங்கிக்கொண்டு சொன்னாள். அவன் மேற்கொண்டும் ஏதாவது கூறி, தன் இதயத்தைப் புண்படுத்திவிடக் கூடும் என அவள் பயந்தாள்;