தாய்
169
அவனது ஒல்லியான கால்கள் சரசரத்து மெதுவாக நடந்தன. அவன் தனது பூட்சுகளைக் கழற்றிவிட்டு நடந்தான். நடப்பதால் சத்தம் உண்டாக்கி பெலகேயாவை எழுப்பிவிடக் கூடாது என்று கருதினான். ஆனால் அவளோ தூங்கவில்லை. நிகலாய் சென்ற பிறகு அவள் ஆத்திரத்தோடு பேசினாள்;”அவனைக் கண்டாலே எனக்குப் பயமாகத்தானிருக்கிறது’.
“ஹும்!” என்று முனகினான் ஹஹோல். “ஆமாம். அவன் எப்போதுமே வக்கிர புத்தி கொண்டவனாகவே இருக்கிறான். இனிமேல் அவனிடம் இஸாயைப்பற்றிப் பேச்செடுக்காதீர்கள். அம்மா. இஸாய் உண்மையில் ஒரு ஒற்றன்தான்.”
“அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்றாள் தாய்; “அவனது பந்துக்களில் ஒருவன் ஒரு போலீஸ்காரன்.’
‘இல்லை. நிகலாய் அவனை வெளுத்து வாங்கி விடுவான்’ என்று மேலும் தொடர்ந்து பேசினான் ஹஹோல்; “அதிகாரத்திலே இருக்கும் கனதனவான்கள் இந்தச் சாதாரண மக்களின் மனத்திலே வளர்ந்துவிட்டிருக்கிற உணர்ச்சிகளைப் பார்த்தீர்களா, அம்மா? நிகலாய் மாதிரி நபர்கள் நமக்கு இழைக்கப்பட்ட தீங்கை உணர்ந்தால், அதனால் தம்து பொறுமையையும் இழந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவ்வளவுதான். வானத்தில் இரத்த வெள்ளம் பரவும்; பூமி ஒரு சேர்ப்பு போல இதில் நுரை தள்ளும்!”
“பயங்கரமாயிருக்கிறது, அந்திரியூஷா!” என்று வியந்து போய்ச் சொன்னாள் தாய்.
“ஈக்களை விழுங்கினால் குமட்டத்தான் செய்யும்’ என்று ஒரு நிமிஷம் கழித்துச் சொன்னான் அந்திரேய். முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது.”
திடீரென அவ்ன் சிரித்தான், பிறகு சொன்னான்:
“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது!”
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தாய் கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்ததும் கதவைத் திறந்தாள்; திறந்தவுடனேயே வாசல் நடையில் அப்படியே நின்றுவிட்டாள்; வேனிற்கால மழையிலே நனைந்துவிட்டதைப் போன்ற குதூகலத்தில் முங்கித்திளைத்து தன்னிலை மறந்து அப்படியே நின்றுவிட்டாள். ஏனெனில் வீட்டினுள் பாவெலின் வலுவான குரல் கேட்டது.