உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

மக்சீம் கார்க்கி


கடைசியாக நிகலாய் எழுந்திருந்து சொன்னான்;

“நாம் படுக்கப் போகலாமே, சிறையில் உட்கார்ந்து உட்கார்ந்து பழகிப் போய்விட்டது. திடீரென்று அவர்கள் என்னை விடுதலை பண்ணிவிட்டார்கள். நானும் வெளி வந்துவிட்டேன். எனக்கு ஒரே களைப்பாயிருக்கிறது.”

அவன் சமையலறைக்குள் நுழைந்தான். அங்குச் சிறிது நேரம் அவன் தூக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுப்பது தெரிந்தது. பிறகு சவம் மாதிரி அசையவோ சத்தமோ அற்றுக் கிடந்தான். தாய் அந்த அமைதியைக் கவனித்துவிட்டு, பிறகு அந்திரேயிடம் திரும்பி இரகசியமாகச் சொன்னாள்,

“அவன் மனதில் பயங்கரமான எண்ணங்கள் இருக்கின்றன.”

“ஆமாம் அவன் ஒரு அழுத்தமான பேர்வழி” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் ஹஹோல். “ஆனால் அவன் சரியாகிவிடுவான். நானும் கூட முன்னால் இப்படித்தானிருந்தேன். இதயத்தில் தீக்கொழுந்துகள் பிரகாசிப்பதற்கு முன் முதலில் வெறும் புகைதான் மண்டிக்கொண்டிருக்கும். சரி, நீங்கள் படுக்கப் போங்கள். அம்மா, நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து படிக்கப்போகிறேன்.”

மூளையிலே துணித்திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த படுக்கையை நோக்கிச் சென்றாள் தாய். வெகு நேரம் வரையிலும் அவளது பெருமூச்சையும் பிரார்த்தனையின் முணுமுணுப்பையும் அந்திரேயால் கேட்க முடிந்தது. அவன் புத்தகத்தின் பக்கங்களை அவசர அவசரமாய்ப் புரட்டினான்; நெற்றியைத் தேய்த்துவிட்டுக்கொண்டான்; தனது நீண்டு மெலிந்த விரல்களால் மீசையைத் திருகிவிட்டுக் கொண்டான்; கால் மாற்றிக் கால் போட்டுக்கொண்டான். கடிகாரம் தன்பாட்டில் சப்தித்துக்கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே காற்று முனகி ஓலமிட்டது.

“ஆ! கடவுளே!” என்று தாயின் மெதுவான தணிந்த குரல் ஒலித்தது; “உலகில் எத்தனையோ பேர், அத்தனை பேரும் அவரவர் துக்கத்தால் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அழாமல் இருக்கும் அந்தப் பாக்கியசாலிகள் எங்கேதான் இருக்கிறார்களோ?”

“இருக்கிறார்கள். அம்மா” என்றான் ஹஹோல்; “சீக்கிரமே அவர்களில் பலரை, பல்லாயிரம் பேரை, நீங்கள் காணப்போகிறீர்கள்."