உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

125


"நிகலாய், நிறுத்து. உன் வசவுகளால் ஒரு பயனும் இல்லை” என்று பாவெல் அடிக்கடி கூறிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நிகலாயோ போலீசாரைப் பார்த்து “உங்களையெல்லாம் பொருக்காடிப்போன புண்ணைத் துடைக்கிற மாதிரி பூமியிலிருந்தே துடைத்துத் தீர்த்துவிடுவேன்!” என்று கத்துகிறான். பாவெல் நன்றாக நடந்துகொள்கிறான். உறுதியோடும் நிதானத்தோடும் இருக்கிறான். அவனைச் சீக்கிரம் வெளியே விட்டுவிடுவார்கள் என்பதுதான் என் எண்ணம்....

“சீக்கிரமா?” என்று அன்பு ததும்பும் புன்னகையோடு திருப்பிக் கேட்டாள் தாய்: “அவன் சீக்கிரம் வந்துவிடுவான், அது நிச்சயம்.”

“அதனால் விஷயங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கின்றன. சரி எனக்கு முதலில் ஒரு குவளைத் தேநீர் கொடுங்கள். அப்புறம், நீங்கள் எப்படிக் காலந் தள்ளினீர்கள்? சொல்லுங்கள்.”

அவன் சிரித்துக்கொண்டே, அவளை ஏற இறங்கப் பார்த்தான். அன்பும் அமைதியும் ததும்பப் பார்த்த அவனது பாசம் ஒளி வீசம் கண்களில் ஒரு கணம் சோகத்தின் சாயை படர்ந்து மறைந்தது.

“உங்கள்மேல் எனக்கு ரொம்பப் பிரியம். அந்திரியூஷா!” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள் தாய். மண்டி வளர்ந்திருந்த தாடிக்குள் தெரியும். அவனது மெலிந்த முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

“என்னை நீங்கள் கொஞ்சமாக நேசித்தாலும் எனக்குத் திருப்திதான்” என்று கூறிக்கொண்டே தான் அமர்ந்திருந்த நாற்காலியை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டான் அவன். “உங்களுக்கு என் மேலே பிரியம் என்பதும் எனக்குத் தெரியும். உங்கள் இதயம் பரந்தது: நீங்கள் எல்லோரையுமே நேசிக்கிறீர்கள்.”

“ஆனால் உங்களை பிரத்தியேகமாக நேசிக்கிறேன்” என்று அவள் அழுத்திக் கூறினாள். “உங்களுக்கு ஒரு தாய்மட்டும் இருந்தால், உங்களை மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்காக, எல்லோரும் அவள்மீது பொறாமை கொள்வார்கள்.” அந்த ஹஹோல் தலையை அசைத்தான்; தன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கரகரவென்று தேய்த்து விட்டுக் காண்டான்.

“எனக்கும் எங்கோ எவ்விடத்திலோ ஒரு தாய் இருக்கத்தான் செய்கிறாள்” என்றான். அவன் குரல் தணிந்து போயிருந்தது.

“இன்றைக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா?” என்று தொடங்கினாள் தாய். பிறகு மிகுந்த உணர்ச்சிப் பரவசத்தோடு அன்று