தாய்
111
“உங்களைப் பார்த்தவுடன் ஏன் இப்படித் தடித்துப்போய் விட்டீர்கள் என்று நான் முதலில் அதிசயப்பட்டேன். ஒருவேளை மணமாகி இப்போது கர்ப்பிணியாயிருக்கிறீர்களோ என்று கூடச் சந்தேகப்பட்டேன். இப்போதல்லவா புரிகிறது! அடி கண்ணே இவ்வளவு கொண்டு வந்திருக்கிறீர்களா? இத்தனையையும் சுமந்துகொண்டு இவ்வளவு தூரம் நடந்தா வந்தீர்கள்?”
“ஆமாம்” என்றாள் சாஷா. மீண்டும் அவள் தனது பழைய நெடிய ஒல்லியான உருவைப் பெற்றுவிட்டாள்! அவளது முகம் ஒடுங்கி, கண்கள் முன்னைவிடப் பெரியதாகத் தோன்றுவதையும், கண்களுக்குக் கீழே கறுத்த வளைவுகள் தெரிவதையும் தாய் கண்டாள்.
“சிறையிலிருந்து இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். வந்தவுடன் கொஞ்சமேனும் ஓய்வெடுக்காமல், அதற்குள் இப்படி வேலை செய்யலாமா? யோசித்துப் பாருங்கள்” என்று தலையை அசைத்துக்கொண்டும் பெரு மூச்செறிந்து கொண்டும் அனுதாபப் பட்டாள் தாய்.
“எப்படியும் இது செய்து முடிக்க வேண்டிய காரியமாயிற்றே!” என்று குளிரால் நடுங்கிக்கொண்டே சொன்னாள் அந்த யுவதி, “சரி, பாவெலைப் பற்றிச் சொல்லுங்கள். அவர்கள் அவனைக் கைது செய்து கொண்டு போகும்போது, மிகவும் கலங்கிப் போய்விட்டானா?”
அதைக் கேட்கும்போது சாஷா தாயைப் பார்க்காமல் தலையைக் குனிந்து நடுங்கும் விரல்களால் தன் தலை மயிரைச் சீர்படுத்திக் கொண்டாள்.
“அது ஒன்றுமில்லை, அவன் ஒன்றும் தன்னைக் காட்டிக்கொடுத்து விடமாட்டான்!” என்றாள் தாய்.
“அவன் உடம்பு திடமாக இருக்கிறதா?” என்று மெதுவாகக் கேட்டாள் அந்தப் பெண்.
“அவன் ஆயுளில் அவனுக்கு நோய்நொடி எதுவுமே வந்ததில்லை” என்றாள் தாய். “அது சரி. ஆனால், நீங்கள் ஏன் இப்படி நடுங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? இருங்கள். கொஞ்சம் தேநீரும், ராஸ்ப்பெர்ரி பழ ஜாமும் கொண்டுவருகிறேன்.”
“அது நன்றாகத்தானிருக்கும். ஆனால், உங்களுக்கு இந்த நேரத்தில் அத்தனை சிரமம் எதற்கு? இருங்கள், நானே தயார் செய்து கொள்கிறேன்.”
“சே! எவ்வளவு களைத்துப் போயிருக்கிறீர்கள், நீங்களே செய்கிறதாவது?” என்று கண்டித்துக் கூறும் தொனியில் பதிலளித்து விட்டு, தேநீர்ப் பாத்திரத்தை ஏற்றப்போனாள் தாய்