தாய்
95
விழவேண்டும். நீ மக்களை உன் அறிலைக்கொண்டு வசப்படுத்த முடியாது. காலுக்கேற்ற செருப்பல்ல இது.”
“பெலகேயா, நம்மாதிரிக் கிழடுகள் எல்லாம் சமாதியிலே இடம் தேடிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது” என்று தாயை நோக்கிப் பேச ஆரம்பித்தான் சிஸோவ். “ஒரு புதுத் தினுசான மக்கள் வளரத் தொடங்கிவிட்டார்கள். நீயும் நானும் எப்படி வாழ்ந்தோம்? முட்டும் முழங்காலும் தேய், மண்டையெல்லாம் தரையிலே முட்டிமோத, நமது முதலாளிக்குச் சலாம் போட்டுதானே வாழ்ந்தோம். ஆனால், இந்தக் காலத்திலோ? பிள்ளைகளுக்குப் புத்திதான் பெருத்துப்போயிற்றோ, தவறு தான் அதிகம் பண்ணுகிறார்களோ? எப்படியிருந்தாலும், இவர்கள் நம்மாதிரி இல்லை. இவர்களைப் பாரேன்! மானேஜரோடு, அவரோடு சம அந்தஸ்து உள்ளவர்கள் மாதிரி பேசுகிறார்கள், பார்த்தாயா?..... போகட்டும். போய் வா, பாவெல் மிகாய்லவிச்! நீ ஜனங்களுக்காகக் கச்சை கட்டிக்கொண்டு நிற்பது நல்லதுதான், தம்பி! கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்! ஒருவேளை இவர்கள் விமோசனத்துக்கு உனக்கு ஒரு வழி கிடைத்தாலும், கிடைக்கும்! கடவுள் உனக்கு உதவட்டும்!”
அவன் போய்விட்டான்.
“போ போ, சீக்கிரம்போ. போய்ச் செத்துத் தொலை!” என்று முனகினான் ரீபின். “இவனை மாதிரி ஆட்களெல்லாம் மனிதர்களே அல்ல; வெறும் மண்ணாங்கட்டிகள்! பெயர்ந்து விழுந்த இடத்தை அடைக்கத்தான் உதவுவான்! பாவெல்! உன்னைத் தூதனுப்ப வேண்டும் என்று சொன்னவர்களைக் கவனித்தாயா! உன்னை சோஷலிஸ்ட் என்றும், கலாட்டாக்காரன் என்றும் வதந்திகளைப் பரப்பினார்களே, அவர்களேதான். அதே ஆசாமிகள்தான்! ‘பயலுக்கு வேலை போய்விடும்; அதுதான் அவனுக்கு வேண்டும்’ என்று அவர்கள் தமக்குள்ளாக நினைத்திருக்கிறார்கள்! தெரிந்ததா?”
“அவர்கள் நினைக்கிறபடி பார்த்தால், அவர்கள் செய்தது சரிதான்” என்றான் பாவெல்.
“ஆமாம். ஓநாய்கள் ஒன்றையொன்று கடித்துத்தின்பது அவைகளுக்குச் சரிதான்!”
ரீபினுடைய முகம் இருண்டது; அவனது குரலில் அசாதாரணமான உத்வேகம் தொனித்தது.
“மக்கள் வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்கமாட்டார்கள்; பட்டால்தான் தெரியும். உன் வார்த்தைகளை இரத்தத்தில் தோய்த்தெடுக்க வேண்டும். பாவெல்....”