உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மா, பலா, வாழை முற்காலத்தில் தமிழ் அகத்தில் வளர்ந்தோங்கின செடிகளாம் ; ஆகவே அவற்றின் பூ, பிஞ்சு, காய், கனி முதலி யன தமிழ்ச் சொற்களால் குறிக்கப்பட்டன. பூர்வத்தில் தமிழில் முப் பழம் என்றது, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழமாம். இவைகள் இடுகுறிப் பெயர்களாம். தமிழ் நாட்டிலேயே பூர்வத்தில் உற்பத்தி யான அவரை, வண்டை, கத்திரி, முருங்கை, பாகல், அகத்தி, சுரை முதலிய காய் கறிகளின் பெயர்கள் பெரும்பாலும் இடுகுறிப் பெயர்களே. கிழங்கு வகையில், தமிழ் வழங்கும் தேசத்திற்குரிய சேப்பங் கிழங்கு, கருணைக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு முதலியனவும் இடுகுறிப் பெயர்களே கிழங்கு எனும் தமிழ்ச்சொல் பூமியின் கீழிருந்து வெட்டி எடுக்கப்படுமதலால், அப்பெயர் கொண்டது என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். இங்ஙனமே கீரை வர்க்கத்தில் வாலைக்கீரை, முளக் கீரை, ஆரைக்கீரை முதலியவற்றைக் கூறலாம். ஆயினும் இவற்றுள் சில காரணப் பெயர்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக அறு கீரையைக் கூறலாம்; இதை சாதாரண ஜனங்கள் அரைக்கீரை என்று கூறுகிறார்கள். அரைக்கீரை என்பது அறுகீரை என்பதின் மருவென்று இதைப்பற்றிக் கூறும் பதார்த்தகுண சிந்தாமணி முதலிய வயித்திய நூல்களால் அறிகிறோம். இக்கீரையானது மற்றக் கீரைகளைப்போல் அல்லாமல், அறுத்துக்கொணடே வந்தால் வளர்ந்துகொண்டே வரும், ஆகவே இதற்கு அறு கீரையெனப் பெயர் வழங்கலாயிற்று. புளி யாரை என்பது அரைக்கீரை வகையில் புளிப்பிணையுடையதாம். பொன்னாங்கண்ணிக் கீரை என்பது பொன்னும் கண்ணுக்குக் கீரை, என்று சிலர் கூறுகின்றனர். இதன் மூலமாக நமது முன்னோர்கள் சில பதார்த்தங்களுக்குப் பெயர் வைத்தபொழுது, அவற்றின் குணத்தை வெளிப்படுத்தும்படியான பெயர்களே வைத்திருக்கின்றனர் என்று நாம் கூறலாம்.

இது நிற்க தமிழகத்தில் உண்டாகாது வெளிதேசங்களிலிருந்து இங்கு கொணரப்பட்ட பதார்த்தங்களுக்குப் பெரும்பாலும் அத்தேசங்களில் வழங்கிவரும் பெயர்களாவது, அல்லது காரணப் பெயர்களாவது வழங்கப்படுகின்றன. இவற்றுள் சில உதாரணங்களை ஆராய்வோம். ஆப்பில் (Apple) என்பது மேனாட்டிலிருந்து நமது தேசத்திற்கு வந்தது. இதற்கு ஆங்கில மொழியாகிய ஆப்பில் என்கிற பதமே உப யோகிக்கப்படுறது. அன்னாசிப் பழம் என்பது நமது தேசத்தில் ஆதி யில் உண்டானதல்ல. வெளி தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்டு