பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி புதைப்படிவ காலம்:Palaeocene-Recent, | |
---|---|
Papilio machaon | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | Rhopalocera
|
Subgroups | |
|
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புறச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது[1].
பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ. நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ. தான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் (இமய மலையிலும்), கனடாவின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் வெப்பம் நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. இப்பூச்சிகள் பல்லுருத்தோற்றத்தை வெளிப்படுத்தினாலும் ஒன்றைப் போல மற்றொன்றின் தோற்றம், பண்புகள், ஒலியெழுப்புதல், இருப்பிடம் முதலியவற்றில் ஒன்றுபட்டு வண்ணத்துப் பூச்சிகளாகவே காணப்படுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) வலசையாகப் பறந்து செல்கின்றன (எ.கா: வட அமெரிக்க செவ்வரசு பட்டாம்பூச்சி (monarch butterfly, மானார்க் பட்டாம்பூச்சி) சிலவகைப் பட்டாம்பூச்சிகள் ஒருசெல் உயிரினங்கள், ஈக்கள், எறும்புகள், முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவை போன்றவற்றுடன் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன[2][3].
பட்டாம் பூச்சியின் வளர்ச்சி நிலைகள்
[தொகு]துணைதேடுதல்
[தொகு]முழுவளர்ச்சியடைந்த பட்டாம்பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும் உணவு தேடுவதுமாகப் பறந்து திரிந்தாலும், இனப்பெருக்கம் செய்வது அவைகளின் இன்றியமையாத வாழ்க்கைக்கூறாகும். ஆண் பூச்சியோ பெண் பூச்சியோ இணைவு விருப்பத்தை தெரிவிக்கவும் அறியவும் சில குறிப்புகளைப் பயன்படுத்துகின்றன. இவை கண்ணால் காணக்கூடியதாகவோ மணமாக உணரக்கூடியதாகவோ இருக்கும். கண்ணால் காணக்கூடிய குறிப்புகள் (குறிகைகள், signals), தன் இறக்கைகளில் உள்ள செதில்களை அசைத்து புற ஊதாக்கதிர்களை பல்வேறு விதமாக எதிர்வுகொள்ளச் செய்கின்றன. இவ்வகைக் குறிப்புகள் மூலம் தான் ஆணா, பெண்ணா, எந்த இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி என்பனவற்றைத் தெரிவிக்கின்றன. குறிப்புச் செய்திகள் (குறிகைகள்) சரியாக இருந்தால் அவ்வினத்தைச் சேர்ந்த எதிர்பால் (ஆண்-பெண் பால்) பூச்சி இணைய இசைவு தரும். இறக்கைகளின் செதிலில் மணம்பரப்பும் வேதியல் பொருட்களும் உண்டு. இம்மணம்பரப்பிகள் வெகுதொலைவு செல்லும் திறன் கொண்டவை. எனவே வெகு தொலைவில் உள்ள தன் இனப் பட்டாம்பூச்சியை ஈர்க்க வல்லது. பெரும்பாலான இனங்களில், ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் புணர்ந்த பின், ஆண் பூச்சி இறந்து விடுகின்றது. புணர்ந்த பின் சில மணிநேரத்திலேயே பெண்பூச்சியால் முட்டையிட இயலும். எனவே பெண் பட்டாம்பூச்சிகள் முட்டைகளையிட தகுந்த இடம் தேடிச்சென்று முட்டைகளை இடுகின்றன. ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் தன் வளர்ச்சியில் நான்கு நிலைகளைக் கடக்கின்றன. (1) முட்டைப் பருவம், (2) புழுப் பருவம் (குடம்பிப் பருவம்) (3) கூட்டுப்புழு பருவம், (4) இறக்கைகளுடன் பறக்கவல்ல முழுப் பட்டாம்பூச்சி நிலை.
முட்டை
[தொகு]பட்டாம்பூச்சியின் முட்டைகள் பல அளவிலும் வடிவிலும் நிறத்திலும் காணப்படுவன. சில நம் கண்ணுக்கே தெரியாத மிகச்சிறியனவாயும், சில 2.5 மில்லி மீட்டர் வரையிலும் உள்ளன. பெரும்பாலானவை மஞ்சள் அல்லது இளம்பச்சை நிறத்தில் சிறு உருண்டை, நீளுருண்டை முதலிய வடிவங்களில் இருப்பவை. சில மழு மழுப்பாகவும், சில சொரசொரப்பாகவும், சில வரிகள் உடையதாகவும் இருக்கும். பெண் பட்டாம்பூச்சிகள் தம்முட்டைகளைப் பெரும்பாலும் பின்னர் முட்டையிலிருந்து பொரிக்கும் புழுவுக்கு உணவாக அமையக் கூடிய இலைகளில் இடுகின்றன. முட்டையை இடும்முன் முட்டையில் உள்ள சிறு துளை வழியாக தான் புணர்ந்தபொழுது கிடைத்த விந்துகளை இத்துளையில் இடுகின்றன. பின்னர் கோந்து போன்ற ஓர் ஒட்டும் நீர்மத்தால் முட்டைகளை ஒன்றாக ஒட்ட வைக்கின்றன. சில முட்டைகள் சில நாட்களிலேயே பொரிக்கின்றன. சில பொரிப்பதற்கு பல மாதங்கள் கடக்கின்றன. முட்டையில் இருந்து வெளி வரும் புழு தன் உணவைத் தானேதான் தேர்ந்து உண்ணவேண்டும்.
குடம்பி
[தொகு]முட்டையில் இருந்து முதலில் வெளிவரும் புழுக்கள், மிகுதியாக இருக்கும் முட்டைகளையே உண்டுவிடும். பின்னர் அருகில் உள்ள இலைகளை உண்ணத் தொடங்கும். புழு நிலையில் இருக்கும் பொழுது மிக விரைவாக நிறைய உணவு உட்கொள்ளுகின்றது. ஒரு நாளிலேயே தன் உடல் எடையை விட அதிகமாக உணவு உட்கொள்ளும். இப்புழுக்கள் பார்ப்பதற்குப் பொதுவாக பச்சை நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருக்கும். சிலவற்றின் உடலில் வரிவரியாய் பல நிற அமைப்புகளும் கொண்டிருக்கும். சில புழுக்கள் உடலில் முடிகளுடன் இருக்கும். இவைகளை கம்பளிப்புழுக்கள் அல்லது மயிர்க்கொட்டிகள் என்றும் கூறுவர். இதன் வேறு பெயர்கள் கம்பளிப்பூச்சி, பச்சைப்புழு, எரிபுழு, சடைப்பூச்சி, மயிர்க்குட்டி (மயிர்க்கொட்டி என்றும் சொல்வர்), முசுக்கட்டைப்பூச்சி என்பனவாகும்.பொதுவாக புழுவின் உடல் அமைப்பு தன்னைத் தன் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுமாறு இருக்கும்.
புழுவின் உடலில் தெளிவாக அடையாளம் காணுமாறு உடலுறுப்புகள் இருக்கும். உடலில் 14 பகுதிகள் மடிப்புகளாகத் தெரியும். முதல் பகுதியில் தலையும், அதில் இருக்கும் மெல்லும் வாய் உறுப்புகளும், இரு உணர்விழைகளும் இருக்கும். தலைப்பகுதியில் இரு புறமும் பக்கத்துக்கு ஆறு கண்களாக மொத்தம் பன்னிரண்டு கண்கள் இருக்கும். இக்கண்கள் உருவங்களைப் பார்க்க இயலாவிடிலும், வெளிச்சம் இருட்டு போன்ற ஒளியடர்த்தியை உணர வல்லவை.
புழுவின் உடலில் உள்ள அடுத்த மூன்று பகுதிகளும் மார்புப் பகுதியாகும். இம்மூன்று பகுதிகளில் ஒவ்வொன்றிலும் இரு இணைக்கப்பட்ட கால்கள் வீதம் ஆறு கால்கள் உள்ளன. இவையன்றி பெரும்பாலான புழுக்களின் உடலின் ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது பகுதிகளில் ஒரு பகுதிக்கு இரு கால் போன்ற உறுப்புகளுடன் எட்டு போலிக்கால்கள் உள்ளன. உடலின் இரு புறமும் உள்ள மூச்சுத்துளை வழியாக மூச்சு விடுகின்றது.
புழுவின் வாய்ப்பகுதிக்குக் கீழே சற்று நீண்டு தொங்கிகொண்டு இருக்கும் ஒரு சிறு உறுப்பும் உண்டு. கோந்துமிழி என்னும் இப்பகுதியானது ஒட்டும் பண்புள்ள நீர்மத்தை நீரிழையாக வெளிவிடும் திறன் கொண்டது. இந்நீர்மம் உலர்ந்து பட்டுபோன்ற இழையாக மாறுகின்றது. இவ்வமைப்பு புழு ஊர்ந்து செல்லும் இடங்களுக்கு ஒரு பற்றுக்கோடாக இருந்து உதவுகின்றது. புழுவின் வால்புறம் ஒரு கால் போன்ற பற்றும் அமைப்பும் உள்ளது. இதனைக் குண்டிக்கால் அல்லது கழிவாய்க்கால் (anal proleg) எனலாம். புழு நிலையானது ஏறத்தாழ இரண்டு கிழமைகளே (வாரங்களே) நீடிக்கும். இக்காலத்தில் ஏராளமாக உணவை உண்ணுவதால் மிக விரைந்து உடல் பருக்கும். ஆனால் புழுவின் மேல் தோல் அதிகம் விரிவடைந்து தர இயலாது. அதனால் நீளவாக்கில் மேல் தோல் பிளவுறும். ஆனால் அப்படிப் பிளவுறும் முன்னர் உள்ளே ஒரு தோலுறை உருவாகும். மேற்தோலை புற எலும்புறை (exoskeleton) என்று அழைப்பர். புதிதாக உண்டான புற எலும்புறை இளகி இருப்பதால், உடல் வேண்டிய அளவு முதலில் விரிந்து கொடுக்கும். பிறகு புழுவானது அதிகம் அசையாமல் நகராமல் சில மணிநேரம் இருக்கும். இக்காலத்தில் புற எலும்புறை வலுவுற்று உறுதி பெறுகின்றது. இது போல புழுவானது தன் புற எலும்புறையை நான்கைந்து தடவை மாற்றும்.
கூட்டுப் புழு
[தொகு]புழுவானது அந்நிலைக்கான முழு வளர்ச்சியை அடைந்தபின், அடுத்த நிலையாகிய கூட்டுப்புழு நிலைக்கு அணியமாகின்றது (தயாராகின்றது). ஒரு சில பட்டாம்பூச்சி இனங்களில், முழு வளர்ச்சி அடைந்த புழுவானது தன் கோந்துமிழி உறுப்பின் உதவியால் பட்டுநூல் போன்ற இழையை வெளியுமிழ்ந்து தன்னைச்சுற்றி ஒரு கூடு கட்டிக்கொள்ளுகின்றது. முற்றிலுமாய் தன்னுடலைச் சுற்றி நூலிழை போன்ற கூடு கட்டியபின், புழுவின் புற எலும்புறையானது தலைப்பக்கம் பிளவுற்று, அதன் வழியாக புழு பாதுகாப்பாக கூட்டுக்குள்ளேயே வெளிவந்து இருக்கும். இப்படி கூட்டுக்குள் இருக்கும் நிலையே கூட்டுப்புழு நிலை என்பதாகும். இப்படியாக கூட்டுப்புழு நிலையில் அசையாமல் சில நாட்கள் இருக்கும் (சில இனங்களில் இந்நிலை ஒராண்டுக்கு மேலேயும் இருக்கும்). இக்காலப்பகுதியில் கூட்டுக்குள் இருக்கும் புழுவானது வியப்பான மாறுதல்களுக்கு உள்ளாகின்றது. உடல் உறுப்புகள் உள்ளும் புறமுமாய் முற்றிலுமாய் உருமாறுகின்றது. பறக்க வல்ல செதில்களினால் ஆன இறக்கைகளும் முளைக்கின்றன.
முழுப் பூச்சி நிலை
[தொகு]கூட்டுக்குள் முழு வளர்ச்சி அடைந்தபின், பட்டாம்பூச்சியானது இருந்து காலால் உந்தி கூட்டில் இருந்து வெளிப்படுகின்றது. இப்படி கூட்டில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சில நிமிடங்களே ஆகும். வெளி வந்தவுடன், பட்டாம்பூச்சியின் இறக்கைகள் சற்று ஈரமாய் இருக்கும். புதிய புற எலும்புறையும் சற்று இளக்கமாக இருக்கும். வெளிவந்தவுடன் பட்டாம்பூச்சியானது தன்னுடைய உடற்தசையை இறுக்கி, காற்றையும் இரத்தத்தையும் அமுக்கித் தன்னுடலெங்கும் செலுத்துகின்றது. கூட்டுப்புழு நிலையில் இருந்து வெளியேறிய பட்டாம்பூச்சி ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் இறக்கையை மேலும் கீழுமாய் அடித்துப் பறக்க அணியமாய் இருக்கும். முழுப் பூச்சிநிலையை அடைந்த பட்டாம்பூச்சிக்கு ஆறு நீளமான கால்களும், உறிஞ்சுகுழாய்களும், இரண்டு நீண்ட உணர்விழைகளும், ஒரு பக்கத்துக்கு இரண்டு இறக்கைகளாக நான்கு இறக்கைகளும், தலை-மார்பு-வயிறு என முப்பாகம் கொண்ட உடலுமாக தோற்றம் அளிக்கும். இப்படி முழுவளர்ச்சி அடைந்த பட்டாம் பூச்சி ஓரிரு கிழமைகள்தாம் (வாரங்கள்தாம்) வாழுகின்றன. ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன. (வளரும்)
வலசை போதல்
[தொகு]பட்டாம் பூச்சிகள் இலங்கையிலிருந்து மதுரைக்கு பருவகாலங்களில் வலசை வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.[4]
வகைகள்
[தொகு]இவற்றில் மதுரைப்பகுதியில் மட்டுமே 70 வகையான பட்டம்பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றில் பருபலா வெள்ளையன், வெண்புள்ளி கருப்பன், மயில் அழகி, நீல வசீகரன் என்பன போன்ற பட்டம்பூச்சிகளும் இவற்றில் அடங்கும்.[5]
தற்பாதுகாப்பு
[தொகு]பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் சாப்பிட்டுவிடும். ஆனால் பட்டாம்பூச்சிகளை பெரும்பாலும் பறவைகள் வேட்டையாடுவதில்லை. காரணம் அதிக வண்ணங்களோடு பளிச்சென்று இருக்கும் உயிரினங்கள் ஆபத்தானவை எனப் பறவைகளின் மூளையில் பதிவாகி இருக்கிறது.
பட்டாம்பூச்சிகள் பெரும் பாலும் நச்சுச்செடிகளின் இலைகளில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த முட்டையிலிருந்து வெளிவரும் இளம் கம்பளிப்புழு, அந்த நச்சு இலைகளைத் தின்றே வளர்கிறது. இதனால், அதன் உடலிலேயே நச்சு கொஞ்சம் கொஞ்சமாக��் சேர்ந்துவிடுகிறது. பட்டாம்பூச்சியாக உருவெடுத்த பிறகும் இந்த நச்சுத்தன்மை நீடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தெரியாமல் பறவைகள் பட்டாம்பூச்சியைக் கொத்தித் தின்றால் பறவைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுமாம். ஆனால் வயதான பிறகு பட்டாம்பூச்சியின் உடலில் விஷத்தன்மை குறைந்துவிடுமாம். அப்போது அதன் வண்ண நிறமும் மங்கிவிடும். இதைப் புரிந்து கொள்ளும் சில புத்திசாலிப் பறவைகள், பட்டாம்பூச்சியைக் கொத்தி தின்றுவிடுகின்றன.[6]
வெளி புறவடிவவியல்
[தொகு]Error: no page names specified (help).
-
வளர்ந்த பட்டாம்பூச்சியின் பகுதிகள்
-
பட்டாம்பூச்சிகள் இரண்டு உணர்கொம்புகள், இரு கூட்டுகள் கண்கள் மற்றும் ஒரு உறிஞ்சுகுழல் கொண்டிருக்கும்
-
வால் பிளவு
வளர்ந்த பட்டாம்பூச்சி நான்கு சிறகுகள்: முன்னிறகும் பின்னிறகும் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உடலிக் காணப்படும். உடல் மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்: தலை, மார்பு மற்றும் அடிவயிறு. அவற்றுக்கு இரு உணர்கொம்புகளும், இரு கூட்டுகள் கண்கள், மற்றும் ஒரு உறிஞ்சுகுழல் காணப்படும்.
செதில்கள்
[தொகு]
வண்ணத்துப்பூச்சிக்கும் விட்டில்பூச்சிக்கும் என்ன வேறுபாடு?
[தொகு]வண்ணத்துப்பூச்சி | விட்டில் பூச்சி |
---|---|
வண்ணத்துப்பூச்சிகள் பெரும்பாலும் பகல் உலாவிகள் | விட்டில் பூசிகள் இரவு உலாவிகள் |
ஒத்த உணர்கொம்புகளை உடையவை | மாறுபட்ட இறகு போன்ற / கூரிய உணர்கொம்புகளை உடையவை |
கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு இல்லை | கடிவாள திசு என்ற ஒரு முள் போன்ற அமைப்பு ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் |
பிரகாசமானநிறம் உடையவை | மந்தநிறம் உடையவை |
இறக்கைகள் ஒன்றாக நிமிர்ந்த நிலையில் அமைந்து இருக்கும் | இறக்கைகள் தங்கள் பக்க ஓய்வு நிலையில் அமைந்து இருக்கும் |
மெல்லிய உடல் உடையவை | தடித்த உடல் உடையவை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hall J.P.W., Robbins R.K., Harvey D.J. (2004). "Extinction and biogeography in the Caribbean: new evidence from a fossil riodinid butterfly in Dominican amber". Proceedings of the Royal Society B 271 (1541): 797–801. doi:10.1098/rspb.2004.2691. பப்மெட்:15255097.
- ↑ Brewer, Jo; Gerard M. Thomas (1966). "Causes of death encountered during rearing of Danaus plexippus (Danaidae)" (PDF). Journal of the Lepidopterist's Society 20 (4): 235–238. http://research.yale.edu/peabody/jls/pdfs/1960s/1966/1966-20(4)235-Brewer.pdf. பார்த்த நாள்: 2008-04-13. Lay summary.
- ↑ Leong, K. L. H.; Yoshimura, M. A.; Kaya, H. K.; Williams, H. (1997). "Instar Susceptibility of the Monarch Butterfly (Danaus plexippus) to the Neogregarine Parasite, Ophryocystis elektroscirrha". Journal of Invertebrate Pathology 69 (1): 79–83. doi:10.1006/jipa.1996.4634. பப்மெட்:9028932. Lay summary.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ இலங்கையிலிருந்து மதுரைக்கு வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகள்: சூழலியல் பேரவையின் ஆய்வில் தகவல் தி இந்து தமிழ் பார்த்த நாள் 02. செப்டம்பர் 2015
- ↑ http://tamil.thehindu.com/opinion/reporter-page/
- ↑ "எதிரிகள் இல்லாத பட்டாம்பூச்சிகள்!". தி இந்து (தமிழ்). 11 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2016.
மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழக வண்ணத்துப் பூச்சிகள் பட்டியல். (ஆங்கில மொழியில்)
- இலங்கையின் பட்டாம்பூச்சி பட்டியல். (ஆங்கில மொழியில்)
- வட அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் பட்டாம்பூச்சிகளின் படங்கள் (பெரிய வடிவில் கூர்ந்து நோக்கத்தக்க ஒளிப்படங்கள்)
- BugGuide.net வட அமெரிக்காவின் பட்டாம்பூச்சிகள்
- பட்டாம்பூச்சிப் படங்கள் பரணிடப்பட்டது 2016-05-03 at the வந்தவழி இயந்திரம்
- பட்டாம்பூச்சியின் வாழ்க்கை வட்டம் அசைபடம்
- பட்டாம்பூச்சியின் வாழ்க்கை வட்டம்