உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேச வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காள தேச வரைபடம்

வங்காளதேச வரலாறு (History of Bangladesh), பாகிஸ்தானிடமிருந்து 1971இல் விடுதலை அடைந்து, வங்காளதேசம் எனும் தனி நாடாக விளங்குவதற்கு முன், 1947 முதல் 1971 முடிய கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினை வரை, இந்திய வரலாறு வங்காள தேசத்திற்கும் பொருந்துவதாக உள்ளது.

பண்டைய வரலாறு

[தொகு]

வரலாற்றுக்கு முந்தைய காலம்

[தொகு]
பண்டைய கிழக்கு வங்காளத்தின், நரசிங்காடி எனுமிடத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிதைவடைந்த போதேஸ்வரர் குளம்

பண்டைய கிழக்கிந்தியாவின் வங்காள தேசத்தின் பெரும் பகுதிகள், கிமு 600 முதல் - 300 வரை, 16 குடியரசுகள் எனப்படும், மகாஜனபத நாடுகளில் ஒன்றான அங்க நாட்டின் கீழ் இருந்தது. [1] [2]

வங்காள தேசததில், மகாஸ்தாங்கர் எனுமிடத்தில், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கி மு 600க்கு முந்தைய தொல்லியல் பொருட்கள்
மகாஸ்தாங்கர் தொல்லியல் களத்தில் காணப்பட்ட கல்வெட்டு எழுத்துக்கள்.
தலை சிதைந்த புத்தரின் சிற்பம், மகாஸ்தாங்கர் தொல்லியல் களம்

வங்காளதேசத்தில், திராவிட மொழியின் கிளையான குருக் அல்லது குருக்ஸ் அல்லது ஆஸ்டிரோ-ஆசியாடிக் மொழியான சாந்தல் மொழி பேசப்பட்டது. பின்னர் திபெத்திய-பர்மியன் மொழிகள் பேசும் மக்கள் வங்காளதேசத்தில் குடியேறினர்.

வங்காளதேசம், மகத நாட்டின் ஒரு பகுதியாக மாறிய பின்னர், கி மு ஏழாம் நூற்றாண்டில், முதன் முதலாக நந்தர்கள் காலத்தில் இந்தோ-ஆரியரின் நாகரீக பகுதியில் இணைந்தது. பின்னர் வங்காள தேசம் பௌத்த சமயத்தின் ஆதிக்கத்தில் சென்றது.

கங்காரிதய் பேரரசு

[தொகு]
கி மு 323இல் நந்தப் பேரரசு, மற்றும் கங்காரிதய் பேரரசு மற்றும் அருகமைந்த அலெக்சாண்டரின் பேரரசுடன்
வங்காள தேசத்தை ஆண்ட கங்காரிதய் பேரரசைக் காட்டும் தாலமியின், ஆசியாவின் வரைபடம்

அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது, வங்காள தேசத்தில் கங்காரிதாய் பேரரசு பெரும் படைபலத்துடன் இருந்தது.

ஆரம்ப மத்தியகால வரலாறு

[தொகு]

குப்தப் பேரரசுசிற்கு முன்னர் வங்காளம் இருளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது. சமுத்திர குப்தர் வங்காளத்தைக் கைப்பற்றி புஷ்கரனா மற்றும் சமத்ததா என இரண்டு நாடுகளாக பிரித்தார். இரண்டாம் சந்திரகுப்தர், வங்க நாட்டை வென்று, குப்த பேரரசுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் ஹர்ஷவர்தனர் மற்றும் காமரூப பேரரசில், வங்காள தேசம் ஒரு பகுதியாக இருந்தது.

கௌடப் பேரரசு

[தொகு]

மகத நாட்டின் கௌடப் பேரரசர் சசாங்கன் கி. பி 590 முதல் 626 முடிய முப்பத்தாறு ஆண்டுகள் வங்காளத்தை தனது பேரரசுடன் இணைத்து ஆண்டான்.

பாலப் பேரரசு

[தொகு]
பாலப் பேரரசும் அதனருகில் அமைந்த நாடுகளும்

பௌத்த சமயத்தைச் சார்ந்த, மண்ணின் மைந்தர்களான பாலர்கள், வங்காளத்தை சுதந்திரமாக கி பி எட்டாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர்.

பாலப் பேரரசின் தலைநகர் விக்கிரம்பூரில் பிறந்த பௌத்த குரு அசிதர்

மன்னர் தர்மபாலன் மற்றும் தேவபாலன் காலத்தில் வட இந்தியாவில், வடக்கிலும் தெற்கிலும், இமயம் முதல் விந்தியம் வரையும், கிழக்கிலும் மேற்கிலும், வங்காள விரிகுடா முதல் குஜராத்தின் அரேபியன் கடல் வரையும், தனது பாலப் பேரரசை விரிவுப் படுத்தினர். மேலும் அருகில் உள்ள கலிங்க நாட்டையும் கைப்பற்றினர்.[3]வீழ்ச்சியுடன் இருந்த காமரூப நாட்டையும், இராஷ்டிரகூடர்கள் மற்றும் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசுகளை வென்றனர்[4] Devapala is also believed to have led an army up to the Indus river in Punjab.[3]

கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவர்கள், 11ஆம் நூற்றாண்டு, பாலப் பேரரசு

தர்மபாலனுக்கு பின்னர் வந்த முதலாம் மகிபாலன் காலத்தில், போருக்கு வந்த இராஜேந்திர சோழன் மற்றும் சாளுக்கியர்களை வென்றார். பாலப் பேரரசின் இறுதி அரசன் இராமபாலன் காலத்தில் பாலப் பேரரசு, வங்காளத்தின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. வங்காள மன்னர்கள் வரலாற்றில் பெரும் புகழ் பெற்றனர். மகாயாண பௌத்த சமயத்தை, திபெத், பூட்டான் மற்றும் மியான்மர் நாடுகளில் பரப்பினர். தென் கிழக்காசியாவில் வணிகத் தொடர்புகளும், பௌத்த சமயத்தின் தாக்கங்களும் ஏற்படுத்தின. ஜாவா, சுமத்திரா மற்றும் மலாய் தீபகற்பத்தில் காணப்படும் கட்டிடக்கலைகள் மற்றும் சிற்பங்கள் வாயிலாக இதனை அறிய முடிகிறது. 1021-1023இல் நடந்த போரில், முதலாம் இராசேந்திர சோழன், பிற்கால பாலப் பேரரசர்களை போரில் வென்றார்.[5][5]தென்னிந்திய மேலைச் சாளுக்கியப் பேரரசர், ஆறாம் விக்கிரமாதித்தியன், தற்கால கர்நாடக மக்களை, வங்காளத்தில் குடியமர்த்தி, சென் பேரரசை உருவாக்கினார். சென் பேரரசு வங்காளத்தை கி. பி 1070 முதல் 1230 முடிய ��ண்டது.[6]சோழர்கள் மற்றும் சாளுக்கியர்களின் தொடர் படையெடுப்புகளால், பாலப் பேரரசு வீழ்ச்சியடைந்து, சென் பேரரசு நிறுவப்பட்டது.

சந்திர வம்சம்

[தொகு]

விக்கிரம்பூர் எனும் தற்கால முன்சிகஞ்ச் நகரை தலைநகரமாகக் கொண்டு, சந்திர வம்சத்தவர்கள் வங்காளத்தை கி பி பத்தாம் நூற்றாண்டின், முதல் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். மன்னர் ஸ்ரீசந்திரன் காமரூப நாட்டை வென்று வங்கத்துடன் இணைத்தனர். சந்திர வம்சத்தின் இறுதி மன்னர் கோவிந்த சந்திரனை, முதலாம் இராஜேந்திர சோழர் வெற்றி கொண்டார்.[7]

சென் பேரரசு

[தொகு]

பாலப் பேரரசுக்கு பின் வந்த சென் வம்சம் வங்காளத்தை 1070 முதல் 1230 வரை ஆண்டனர். பல்லால் சென் என்ற மன்னர் வங்காளத்தில் வர்ணாசிரமம் எனும் ஆரிய வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்தினார். நவதீப் நகரை தனது தலைநகராகக் கொண்டார். இலக்குமண சென் என்ற மன்னர், தனது அரசை பீகார் வரை விரிவுப் படுத்தினார். சென் வம்ச மன்னர்கள், வங்காளத்தில் இந்து சமயத்திற்கு புத்துயிர் ஊட்டினார்கள். துருக்கிய ஆட்சியாளர், கல்ஜி பக்தியாரிடம் தோல்வியுற்ற சென் வம்ச அரசன் இலட்சுமன சென் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் முன்சிகஞ்ச் நகரத்தில் வாழ்ந்து 1230இல் மறைந்தனர்.

தேவா பேரரசு

[தொகு]

சென் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் கிழக்கு வங்காளத்தை இந்து சமய தேவா வம்ச மன்னர்கள் விக்கிரம்பூர் (தற்கால முன்சிகஞ்ச்) நகரை தலைநகராகக் கொண்டு 12 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பின்னர் மேற்கு வங்காளத்தின் பெரும் பகுதிகளை கைப்பற்றி வங்காளத்தை ஒரு குடையின் கீழ் ஆண்டனர்.[8]

பிந்தைய மத்தியகாலம்

[தொகு]

துருக்கியர் ஆட்சி

[தொகு]

கி பி 1203இல் வங்காளத்தின் நாடியா பகுதியை கைப்பற்றிய துருக்கி ஆட்சியாளர் இக்தியார் உத்தீன் முகமது பின் பக்தியார் அல்லது முகமது பக்தியார் கல்ஜி, வங்காளத்தில் முதல் இசுலாமிய ஆட்சியை ஏற்படுத்தினார். சென் பேரரசின் தலைநகர் இலக்குமணாவை கைப்பற்றி, வங்காளத்தில் இசுலாம் சமயத்தைப் பரப்பினார். 1205க்கு பின் படையெடுத்து திபெத்தை கைப்பற்றும் நோக்கில் சென்ற பக்தியாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கருவூலத்தின் செல்வம் காலியானதால், இராணுவத்தின் பலத்தை குறைத்தார். 1207இல் தனது படைத்தலைவர் அலி மர்தன் கல்ஜியால் கொல்லப்பட்டார்.[9]

தில்லி சுல்தானக ஆட்சி

[தொகு]

தில்லி சுல்தானகத்தின் சுல்தான்கள் வங்காள தேசத்தின் பெரும் பகுதிகளை 1206 முதல் 1526 முடிய ஐந்து இசுலாமிய வம்ச மன்னர்கள் ஆண்டனர்.

  1. மம்லுக் வம்சம் - கி பி 1206–1290
  2. கில்ஜி வம்சம் - கி பி 1290–1320
  3. துக்ளக் வம்சம் - கி பி 1321–1413
  4. சையிது வம்சம் - கி பி 1414–1451
  5. லௌதி வம்சம் - கி பி 1451–1526

பஷ்தூன் ஆட்சி

[தொகு]

சூரி வம்சம்

[தொகு]

சேர் சா சூரி என்பவர், சூரி வம்சத்தை நிறுவி வங்காள தேசத்தையும் பீகாரையும் 17 மே முதல் 22 மே 1545 வரை ஆண்டார். சேர் சா சூரியின் இறப்புக்குப் பின்னர், தில்லி சுல்தான்களால் நியமிக்கப்பட்ட, முகமது கான் சூரி, கியாசுதின் பகதூர் ஷா மற்றும் ஜலால் ஷா ஆகியோர் வங்காள ஆளுனர்களாக, வங்காள தேசத்தை 44 ஆண்டுகள் நிர்வகித்தனர்.

கர்ரானி வம்சம்

[தொகு]

சூரி வம்சத்திற்கு பின் வந்த வங்கதேச ஆளுனர், கர்ரானி வம்சத்து சுலைமான் கான் கர்ரானி என்பவர், மொகலாய பேரரசர் அக்பரிடமிருந்து விலகி, வங்கத்தை தன்னிஷ்டப்படி ஆட்சி செய்தார். எனவே வங்கத்தை மீண்டும் தன் அரசுடன் இணைக்க அக்பர் ஐந்தாண்டுகள் சுலைமான் கானுடன் போரிட்டு 1576இல் பஷ்தூன்களை வெற்றி பெற்றார்.

சோனார்கான் சுல்தானகம்

[தொகு]

பக்ரூத்தின் முபாரக் ஷா வங்கதேசத்தை, 1338 முதல் 1349 முடிய சுதந்திரமாக ஆண்டார்.[10] 1340இல் சிட்டகாங் பகுதியை கைப்பற்றிய முதல் இசுலாமியர் என்ற பெருமை இருவருக்கு உண்டு.[11]சிட்டகாங் நகரத்தை வங்கதேசத்தின் தலைநகராக அறிவித்தார்.[12]

மொகலாயர் காலம்

[தொகு]
கி பி 1700இல் மொகலாயர் கால இந்தியாவின் வரைபடம்

1575இல் அக்பருக்கும், பீகாரையும் வங்காளத்தையும் ஆண்ட, கர்ரானி சுல்தானகத்திற்கு இடையே, பலாசூரில் போர் நடைபெற்றது.[13] அக்பர் காலத்தில் டாக்காவை தலைமையிடமாகக் கொண்ட வங்காள மாகாணம், மொகலாயர் பேரரசில் இருந்தது. மொகலாயப் பேர்ரசில் இருந்த வங்காளப் பகுதி மட்டும், மொழியாலும், இனத்தாலும் தனித்தன்மை கொண்டதால், இப்பகுதியை தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயர்கள் கட்டுப்படுத்தி நிலையாக ஆள இயலவில்லை.

1660இல் ஜகாங்கீர் காலத்தில் வங்காளத்தின் மீதான படையெடுப்பு

1612ஆம் ஆண்டில் ஜகாங்கீர் ஆட்சிக் காலத்தில், வங்காளத்தின் சில்ஹெட் பகுதி முழுவதும் கைப்பற்றினார். அவுரங்கசீப் காலத்தில், தாஜ்மகால் அமைப்பில் லால்பாக் கோட்டை கட்டப்பட்டது.

இஸ்லாம் கான்

[தொகு]
செயிஷ்டகான் மேம்படுத்திய லால்பாக் கோட்டை

1608இல் ஜகாங்கீர், வங்காள ஆளுனராக இசுலாம் கான் என்பவரை நியமித்தார்.[14] மொகலாயருக்கு எதிரான உள்ளூர் இந்து மன்னர்கள், ஆப்கானியர்கள், பெரு நிலக்கிழார்களை அடக்கினார். [14] ஜெஸ்சூரின் பிரதாபாதித்தியன் மற்றும் பக்ளாவின் இராமச்சந்திரனை வென்றார்.[14] பின்னர் கூச் பீகார், கச்சாரின் பராக் சமவெளி பகுதிகளை மொகலாயர் அரசில் இணைத்தார்.

செயிஷ்ட கான்

[தொகு]

மொகலாயப் பேரரசின் வங்காள தேச ஆளுனராக செயிஷ்டகான் 1664இல் நியமிக்கப்பட்டார்.[15] இவர் டாக்கா நகரை தலைமையிடமாகக் கொண்டு, 24 ஆண்டுகள் 1664 முதல் 1688 முடிய வங்கத்தின் ஆளுனராக பணியாற்றியவர்.[15] இவர் ஐரோப்பியர்களுடன் மற்றும் தெற்காசியாவில் வணிக உறவுகளை மேம்படுத்தியவர். அவுரங்கசீப் மீது அளவு கடந்த விசுவாசம் கொண்டவர்.[16]சிட்டகாங் நகரத்தை பர்மிய அரக்கான் அரசிடமிருந்து, சனவரி 1668இல் மீட்டிய பெருமை இவருக்கு உண்டு. [16] .

வங்காள நவாப்புகள்

[தொகு]
மொகலாய பேரரசின் வங்காள ஆளுனர், அலிவர்த்தி கான் ஜகாங்கீர், போரில் இருவரை சிறைப் பிடித்தல்.
சிராஜூத்தின் உத்-தௌலா, இறுதி சுதந்திர வங்காள நவாப்

வங்காளத்தில் மொகலாயப் பேரரசின் ஆட்சியை 1717இல் முர்சித் உலி ஜாபர் கான் முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திர வங்காள தேசத்தை நிர்வகித்த முதல் வங்காள நவாப் ஆவார். வங்காளத்தில் தலைநகரை முர்சிதாபாத் நகரத்திற்கு மாற்றினார். 1727 முடிய ஆட்சியில் இருந்தார். இவருக்குப் பின்னர் அவரது பேரன் வங்காள நவாப்பாக 1740 வரை ஆண்டார். அப்சர் வம்சத்தின் அலிவர்த்தி கான் ஜகாங்கீர் வங்காள நவாப்பாக 1740 முதல் 1757 முடிய ஆண்டார். பின்னர் மூன்றாவது மட்டும் இறுதி வங்காள நவாப் சிராஜ் உத்-தௌலா 1757இல் நடந்த பிளாசி சண்டையில், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனி படைகளால் தோற்கடிக்கப்பட்டார். வங்காள தேசம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது.

பிரித்தானிய ஆட்சி 1757 - 1947

[தொகு]
பிளாசி சண்டையில் இராபர்ட் கிளைவ் படைத்த முதல் வெற்றியே, ஆங்கிலேயர்கள், தெற்காசியாவில் காலணி ஆதிக்கம் செலுத்த காரணமாயிற்று.
பிரித்தானிய இந்தியாவின் வரைபடம் ஆண்டு, 1909 (பிரித்தானிய அரசை ஏற்ற மன்னராட்சி பகுதிகள் மஞ்சள் நிறத்தால் குறிக்கப்பட்டுள்ளது.
வங்கப் பிரிவினைக்கு காரணமானவர் கர்சன் பிரபு. இப்பிரிவினைப்படி பின்னர் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தின் அரசியல் எல்லைகள் அமைந்தன.

வங்காள தேசத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின், கம்பெனி ஆட்சி 1757 முதல் 1858 முடிய நடைபெற்றது.

1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைத்தலைவர் ராபர்ட் கிளைவ் தலைமையில், ஆங்கிலேயர்களுக்கும், வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தவுலாவிற்கும் இடையே நடைபெற்ற பிளாசி சண்டையில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்றது. இவ்வெற்றியே தெற்காசியாவில் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாட்டில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை காலூன்ற முதல் படியாக அமைந்தது.

சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் பிரித்தானிய அரசு, கிழக்கிந்திய வணிக நிறுவனத்தையும் மற்றும் கம்பெனி ஆட்சியையும் கலைத்து விட்டு, பிரித்தானிய அரசு நேரடியாக வைஸ்ராய் தலைமையில் வங்காளத்தை 1858 முதல் 1947 முடிய ஆட்சி செய்தது.

கிழக்கு பாகிஸ்தான்

[தொகு]

பிரித்தானிய ஆட்சியின் போது, கிழக்கு வங்காளம் என அழைக்கப்பட்ட, தற்கால வங்காளதேசம், இந்தியப் பிரிவினைக்கு பின்னர் பாக்கிஸ்தான் நாட்டின் கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் 1947 முதல் 1971 முடிய இருந்தது.

வங்காளதேசம் மலர்தல்

[தொகு]
வங்காளதேசத்தின் முதல் குடியரசுத் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான்
வங்காளதேச விடுதலை இயக்க தியாகிகள் நினைவுச் சின்னம்

1971இல் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து தனி சுதந்திர வங்காளதேசமாக மலர, சேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் தனி வங்காளதேச சுதந்திர நாடு அறிக்கை 26 மார்ச் 1971 அறிவிக்கை வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முக்தி வாகினி என்ற மக்கள் அமைப்பு போராட்டங்கள் செய்த போது, இந்தியாவும் வங்காளதேச மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவியதால், பாகிஸ்தான் இராணுவம், இந்தியா மீது போர் தொடுத்தது. போரில் பாகிஸ்தானிய இராணுவம் வங்க மக்களையும், அறிவாளிகளையும் கொன்றது. இறுதியில் பாகிஸ்தான் இராணுவம், இந்திய இராணுவத்திடம் தோற்று சரண் அடைந்ததால், 16 டிசம்பர் 1971 முதல் வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. சேக் முஜிபுர் ரகுமான் தலைமையிலான புதிய வங்காளதேச அரசை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா ஆகும்.

அரசியல் சாசனம்

[தொகு]

வங்காள தேசத்தின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 7 மார்ச் 1973 அன்று நடைபெற்றது. தேர்தலில் சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

உள்நாட்டு பொருளாதார சீர்கேடுகளை களைய மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளை ஒடுக்க டிசம்பர் 1974 அன்று, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மேலும் நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. ஒரு கட்சி அட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

வங்காளதேச கிரிஷாக் ஸ்ராமிக் அவாமி லீக் என்ற கட்சி துவக்கப்பட்டது. அக்கட்சியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடிமைப் பணி மற்றும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். எனவே அவாமி லீக் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகள் இயங்க தடை செய்யப்பட்டது.

15 ஆகஸ்டு 1975 அன்று இடைநிலை இராணுவ அதிகாரிகள், சேக் முஜிபுர் ரகுமானையும், அவரது குடும்பத்தவர்களையும் சுட்டுக் கொன்றது. அவரது மகள்கள், சேக் ஹசினா மற்றும் சேக் ரஹானா வெளி நாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். சேக் முஜிபுர் ரகுமானின் அரசியல் தோழர் முஸ்தாக் அகமது புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜியாவுர் ரகுமான் 1977-1981

[தொகு]

1977 இல் இராணுவ அதிகாரி லெப்டிண்ட் ஜெனரல் ஜியாவுர் ரகுமான் வங்காள தேசத்தின் அதிபரானார். அவாமி லீக் உட்பட மீண்டும் பல அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டது. பொருளாதார நடைமுறைகள் எளிமைப் படுத்தப்பட்டது. ஜியாவுர் ரகுமான் தனியாக வங்காளதேச தேசியக் கட்சியை தொடங்கினார். 1981இல் சில இராணுவ அதிகாரிகள் சதி செய்து, ஜியாவுர் ரகுமானை கொன்றனர்.

எர்சத் 1982-1990

[தொகு]

வங்காள தேச இராணுவ லெப்டிண்ட் ஜெனரல் உசைன் முகமது எர்சாத், 24 மார்ச் 1982இல் நடந்த இராணுவப் புரட்சியின் மூலம் நாட்டின் அதிபரானார். நாட்டின் மக்கள் உள்ளிட்ட அனைத்து பெரிய அரசியல் கட்சிகளின் வற்புறுத்தல் மற்றும் வங்க தேசத்திற்கு நிதி வழங்கும் நாடுகளின் கோரிக்கை காரணமாக, 6 டிசம்பர் 1990இல் எர்சாத் அதிபர் பதவியை துறந்தார்.

ஜனநாயக ஆட்சி 1991 முதல்

[தொகு]

15 செப்டம்பர் 1991 அன்று நடைபெற்ற பொது மக்கள் கருத்து கேட்டலின் படி, மீண்டும் வங்கதேசத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன்படி குடியரசு தலைவர், அரசியல் சாசன சட்டத்தின்படி, நாட்டின் அதிபராகவும், பிரதம அமைச்சர், நாட்டின் நிர்வாகத் தலைவராகவும் செயல்படும் படி, நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் திருத்தப்பட்டது. நாட்டின் அதிபரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்.

ஜியாவுர் ரகுமானின் விதவை மனைவியும், வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 1991ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சேக் முஜிபுர் ரகுமானின் மகளும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான சேக் அசீனா பிரதமர் பதவியில் அமர்ந்தார். 2001இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் கட்சி தோல்வி கண்டது. வங்கதேச தேசியக் கட்சியின் கலிதா ஜியா பிரதமரானார். கலிதா ஜியா அரசிற்கு எதிராக நாட்டில் அரசியல் கலவரங்கள் தொடர்ந்த நிலையில், அக்டோபர் 2006இல் வங்கதேச தேசியக் கட்சி ஆட்சியிலிருந்து விலகியது.

11 சனவரி 2007இல் இராணுவத்தின் ஆதரவுடன், அரசியல் சார்பற்ற ஒருவரை தலைமை ஆலோசகர் தலைமையில், தற்காலிக அரசு செயல்பட்டது. பத்தாண்டுகளாக நாட்டில் ஊழல் பெருகியது. விலைவாசி உயர்ந்தது. நாட்டு மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.[17] அரசியல் வன்முறைகள், ஒழுங்கீனங்களும் பெருகியது. ஊழலை ஒழிக்க அனைத்து மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இரு மகன்கள் உட்பட 160 அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஊழல் வழக்கில் சிறை பிடிக்கப்பட்டனர்.

பின்னர் காபந்து அரசு எனும் தற்காலிக அரசு, 29 டிசம்பர் 2008இல் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தியது.[18] அவாமி லீக் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி, சேக் ஹசினா தலைமையில் 6 சனவரி 2009இல் புதிய அரசு பதவி ஏற்றது. [19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Millard Fuller. "(अंगिका) Language : The Voice of Anga Desh". Angika. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  2. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Delhi: Pearson Education. pp. 260–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1120-0.
  3. 3.0 3.1 Sailendra Nath Sen (1 January 1999). Ancient Indian History and Civilization. New Age International. pp. 277–287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1198-0.
  4. George E. Somers (1 January 1977). Dynastic History Of Magadha. Abhinav Publications. p. 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-059-4.
  5. 5.0 5.1 Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib by Nitish K. Sengupta p.45
  6. The Cambridge Shorter History of India p.10
  7. Encyclopaedia of North-East India by T. Raatan p.143
  8. Roy, Niharranjan (1993). Bangalir Itihas: Adiparba Calcutta: Dey's Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7079-270-3, pp.408-9
  9. "International Education Programmes and Qualifications from Cambridge". projects.cie.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  10. Khan, Muazzam Hussain (2012). "Fakhruddin Mubarak Shah". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  11. "About Chittagong:History". Local Government Engineering Department, Government of Bangladesh. Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-25.Retrieved: 2014-03-09
  12. Historical Sites needs to be preserved, The Daily Star, September 5, 2009,Retrieved: 2014-03-09
  13. The History of India: The Hindú and Mahometan Periods By Mountstuart Elphinstone, Edward Byles Cowell, Published by J. Murray, Calcutta 1889, Public Domain
  14. 14.0 14.1 14.2 Karim, Abdul (2012). "Islam Khan Chisti". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  15. 15.0 15.1 Karim, Abdul (2012). "Shaista Khan". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  16. 16.0 16.1 Sarkar, Jadunath (2003). The History of Bengal (Volume II): Muslim Period. Delhi: B.R. Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7646-239-X.
  17. Rahman, Waliur (18 October 2005). "Bangladesh tops most corrupt list". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4353334.stm. பார்த்த நாள்: 13 April 2007. 
  18. "Bangladesh election seen as fair, though loser disputes result". The New York Times. 30 November 2008. http://www.nytimes.com/2008/12/30/world/asia/30iht-bangla.5.19007747.html. 
  19. "Hasina takes oath as new Bangladesh prime minister". Reuters. 6 January 2009 இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110820062306/http://www.reuters.com/article/2009/01/06/us-bangladesh-hasina-idUSTRE5053GG20090106. பார்த்த நாள்: 3 July 2010. 

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_வரலாறு&oldid=4054650" இலிருந்து மீள்விக்கப்பட்டது