உள்ளடக்கத்துக்குச் செல்

ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்
இரண்டாம் உலகப் போரின் பகுதி

வான்போர் நிகழ்ந்த இடங்கள்[1]
நாள் 4 செப்டம்பர் 1939 – 8 மே 1945[2]
இடம் ஜெர்மனி ஆக்கிரமித்த ஐரோப்பா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்


 ஆத்திரேலியா
 கனடா
 நியூசிலாந்து
 ஐக்கிய அமெரிக்கா
 தென்னாப்பிரிக்கா

 ஜெர்மனி
 உருமேனியா
 அங்கேரி
சிலோவாக்கியா சுலொவாக்கியா
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஆர்த்தர் டெட்டர்
ஐக்கிய இராச்சியம் சார்லஸ் போர்ட்டல்
ஐக்கிய இராச்சியம் டிராஃபோர்ட் லீக்-மல்லொரி
ஐக்கிய இராச்சியம் ஆர்த்தர் ஹாரிஸ்
ஐக்கிய அமெரிக்கா கார்ல் ஸ்பாட்ஸ்
ஐக்கிய அமெரிக்கா ஜேம்ஸ் டூலிட்டில்
ஐக்கிய அமெரிக்கா ஐரா ஈக்கர்
கனடா லாயிட் சாமுவேல் பிரட்னர்
நாட்சி ஜெர்மனி ஹெர்மன் கோரிங்
நாட்சி ஜெர்மனி ஹான்ஸ் யெஷோனெக்
நாட்சி ஜெர்மனி ஹான்ஸ்-யூர்கன் ஸ்டம்ஃப்
நாட்சி ஜெர்மனி யோசப் காம்ஹியூபர்
நாட்சி ஜெர்மனிஹியூகோ ஸ்பெர்லே
இழப்புகள்
22,000 பிரிட்டானிய வானூர்திகள்[3]
79,281 பிரிட்டானிய வான்படையினர்[3]
18,000 அமெரிக்க வானூர்திகள்[3]
79,265 அமெரிக்க வான்படையினர்[3]
>= 15,430 வானூர்திகள் (வான்சண்டையில்)[4]
~. 18,000 வானூர்திகள் (தரையில்)[5]
97 நீர்மூழ்கிகள்[6]
>= 23,000 வாகனங்கள்[7]
>= 700-800 டாங்குகள்[8]
5,00,000 பொது மக்கள்[3]
>= 450 ரயில் எஞ்சின்கள் (1943ல் மட்டும்)[9]
>=4,500 பயணிகள் ரயில் பெட்டிகள் (1943ல் மட்டும்)[9]
>= 6,500 சரக்கு ரயில் பெட்டிகள் (1943ல் மட்டும்)[9]

ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்த் தொடர் (Defence of the Reich) என்பது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தில் நிகழ்ந்த ஒரு வான்படைப் போர். நாசி ஜெர்மனியின் (மூன்றாம் ரைக்) வான்படை லுஃப்ட்வாஃபே ஜெர்மனி மற்றும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வான்பகுதிகளில் நேச நாட்டு வான்படைகளுடன் மோதியது. ஜெர்மனியின் படைத்துறை மற்றும் குடிசார் தொழிற்சாலைகளை குண்டு வீசி அழித்து அதன் மூலம் அந்நாட்டு போர்திறனை முடக்க நேச நாடுகள் முயன்றன. 1939 முதல் 1945 வரை ஆறு ஆண்டுகள் இடையறாது இரவும் பகலும் இரு தரப்பு வான்படைகளும் மோதிக் கொண்ட இப்போர்த் தொடரில் இறுதியில் லுஃப்ட்வாஃபே தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

இப்போர்த் தொடரின் தொடக்கத்தில் லுஃப்ட்வாஃபேவின் சண்டை வானூர்திப் பிரிவான யாக்ட்வாஃபே பிரிட்டானிய குண்டுவீச்சுத் கட்டுப்பாட்டகத்தின் (RAF Bomber Command) குடுவீசி விமானங்களுடன் ஐரோப்பிய வான்பகுதியில் மோதியது. 1942ல் பிரிட்டானியர்களுக்குத் துணையாக அமெரிக்க வான்படையும் இப்போர் தொடரில் பங்கு கொண்டது. ஆரம்பத்தில் இம்மோதல்களில் லுஃப்ட்வாஃபேவிற்கே வெற்றி கிட்டியது. அதன சண்டை வானூர்திகளை சமாளிக்க முடியாமல் திணறிய பிரிட்டானிய வான்படை, பகல் நேர வெளிச்சத்தில் குண்டு வீச்சுத் தாக்குதல்களைத் தவிர்த்து இரவு நேரத் தாக்குதல்களை மேற்கொண்டது. அமெரிக்க வான்படை போரில் ஈடுபடத் தொடங்கிய பின்னர் அதன் விமானங்கள் பகல் நேரத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கின. ஆனால் 1942-43ல் அமெரிக்கர்களின் பகல் நேர வான் தாக்குதல் முயற்சி ஜெர்மானிய சண்டை வானூர்திகளால் தோற்கடிக்கபப்ட்டது.

1944ல் நேச நாடுகளின் அதிகமான தொழில் உற்பத்தி திறன், புதிய ரக சண்டை வானூர்திகளை அவர்கள் உருவாக்கியமை, எண்ணிக்கை பலம் ஆகியவற்றால் மெல்ல மெல்ல இதுவரை லுஃப்ட்வாஃபே பெற்றிருந்த வான் ஆதிக்க நிலையைக் குறைத்தன. தரையில் மேற்கு கிழக்கு என இரு திசைகளிலும் இருமுனைப் போர் புரிந்து கொண்டிருந்த ஜெர்மனியால் மேற்கத்திய நேச நாடுகளின் தொழில் ஆற்றலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சேதமடையும் வானூர்திகளையும், இறக்கும் விமானிகளையும் புதிய விமானங்களையும் விமானிகளையும் கொண்டு ஈடு செய்வதில் ஜெர்மானியர்கள் நேச நாடுகளைக் காட்டிலும் மிகவும் பின் தங்கினர். மேலும் தரைப்போரினால் ஜெர்மானிய தொழில் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லுஃப்ட்வாஃபேவுக்கு தளவாட மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆறாண்டுகளாக நடந்த அரைப்பழிவுப் போரில் (war of attrition) நேச நாட்டு தொழில் வன்மையிடம் ஜெர்மானிய வான்படை தோற்றது.

1944 குளிர் காலத்தில், இரவு (பிரிட்டானிய குண்டுவீசிகள்) பகலாக (அமெரிக்க குண்டுவீசிகள்) ஜெர்மானியத் தொழில் மையங்களையும் நகரங்களையும் தாக்கியதால், அந்நாட்டு உற்பத்தித் திறனும் பொருளாதாரமும் அழிந்தன இதனால் லுஃப்ட்வாஃபே இயங்கவே இயலவில்லை. ஜெர்மானிய வான்பகுதியில் வான் ஆளுமை பெற்ற நேச நாட்டு விமானங்கள் எதிர்ப்பார் யாருமின்றி தங்கு தடையில்லாமல் ஜெர்மனி மீது குண்டு வீசத் தொடங்கின. 1945ல் போர் முடியும் வரை இந்த குண்டு வீச்சுத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன.

பின்புலம்

[தொகு]

செப்டம்பர் 1, 1939ல் போலந்து மீதான ஜெர்மானிய படையெடுப்புடன் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. அடுத்த ஒரு வருடத்திற்குள் பிரான்சு சண்டை, பெல்ஜியம் சண்டை, நெதர்லாந்து, லக்சம்பர்க், நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளை ஜெர்மானியப் படைகள் வென்று ஆக்கிரமித்தன. தரைப்படைப் போர் தொடங்கிய போதே வான்படைப் போரும் தொடங்கி விட்டது. பிரிட்டானிய வான்படை ஜெர்மானிய நகரங்கள், தொழில் மையங்கள், படைத் தளங்கள் மீது குண்டுவீசத் தொடங்கியது. தங்கள் நாட்டு வான்பகுதியைப் பாதுகாக்க இட்லரும் லுஃப்ட்வாஃபே தலைமைத் தளபதி கோரிங்கும் ஜெர்மானிய வான்பாதுகாவல் உத்தியை உருவாக்கினர். ஆனால் ஒரு நீண்ட கால வான் போருக்குத் தேவையான மேல்நிலை உத்தியினை அவர்கள் உருவாக்கத் தவறி விட்டனர். ஜெர்மானிய வான்பாதுகாப்புத் திட்டங்கள் குறுகிய நோக்கும் தற்காலிகத் தன்மையுடனும் உருவாக்கப்பட்டன.

மூன்றாம் ரெய்க்கின் வான் பாதுகாப்புக் பொறுப்பு, துணை இராணுவப் படைகளால் இயக்கப்பட்ட வானூர்தி எதிர்ப்பு பீரங்கி குழுமங்களிடமும், லுஃப்வாஃவேயின் சண்டை வானூர்திப் பிரிவுடனும் (Fighter arm) இருந்தது. சரியான தொலை நோக்கு திட்டமிடல் இல்லாமை, இரு பிரிவுகளுக்கும் இருந்த வேறுபாடுகள், நேச நாட்டு தொழில் உற்பத்தித் திறனை சமாளிக்க இயலாமை போன்றவை ஆறாண்டுகள் நிகழ்ந்த வான்போர்த் தொடரில் ஜெர்மனியின் பலவீனங்களாக இருந்தன. மேலும் லுஃப்ட்வாஃபேவின் போர்க்கோட்பாடுகள் அனைத்தும் தாக்குதல் போருக்கே (offensive war) பொருத்தமானவை. பாதுகாவல் போருக்குத் (defensive war) தேவையான உத்திகளை உருவாக்க லுஃப்ட்வாவே தவறிவிட்டது. மேலும் ஒரே போர் முனையில் தன் தாக்கு திறனை குவித்து வெற்றி பெறும் போர்க்கோட்பாட்டைப் பின்பற்றி வந்தது. 1941ல் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியத்துடன் போர் மூண்ட பின்னால் நிலவிய இருமுனைப் போர் சூழ்நிலையில் இக்கோட்பாடு லுஃப்ட்வாஃவேக்கு பெரும் பலவீனமாக மாறியது. அடுத்து நான்காண்டுகள் நிகழ்ந்த அரைப்பழிவுப் போரில் எண்ணிக்கையிலும் உற்பத்தித்திறனிலும் அதிக பலம் வாய்ந்த் எதிரிகளை சமாளிக்க முடியாமல் அழிந்து போனது.

பிரிட்டானிய குண்டு வீச்சின் தோல்வி (1939-41)

[தொகு]
காம்ஹியூபர் அரண்கோடு வரைபடம்

செப்டம்பர் 4, 1939ல் பிரிட்டன் ஜெர்மனி மீது போர் சாற்றியது. போரின் கடுமையை எதிரி நாட்டு மக்களும் சமூகமும் அனுபவிக்க வேண்டும், அதனால் அவர்களுக்கு தங்களது தலைவர்களின் தவறை உணரச் செய்ய வேண்டுமென்பது பிரிட்டானியப் போர்க் கோட்பாடு. ஜெர்மனியின் பெரு நகரங்கள் மீது தொடர் குண்டு வீசி பெரிய அளவில் நாசத்தை உருவாக்குவதன் மூலம் ஜெர்மானிய குடிமக்களின் மன உறுதியைக் குலைக்க பிரிட்டானிய வான்படை தளபதிகள் திட்டமிட்டனர். ஆனால் மே 1940 வரை நேரடியாக குடிசார் இலக்குகளை இரு தரப்பினரும் தாக்காமல் இருந்தனர். முதலில் கொள்கைப் பிரச்சார துண்டறிக்கைகளை மட்டுமே பிரிட்டானிய வானூர்திகள் ஜெர்மானிய நகரங்கள் மீது வீசி வந்தன. மேலும் இலக்குகள் மீது துல்லியமாக குண்டு வீசக்கூடிய தொழில்நுட்பங்கள் அப்போது பிரிட்டானிய வானூர்திகளில் இல்லை. வான் போரின் முதல் தாக்குதலிலேயே பிரிட்டானிய வான்படைக்கு ஏற்பட்ட தோல்வி பகல் நேர வெளிச்சத்தில் தாக்குதல் நடத்துவதின் அபாயங்களை பிரிட்டானிய தளபதிகளுக்கு உணர்த்தியது. எனவே அதிலிருந்து அவர்கள் இரவு நேரத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

ஜெர்மானியத் தரப்பிலும், இக்காலகட்டத்தில் வான்பாதுகாப்பு உத்திகளும் முயற்சிகளும் மிக அடிப்படையான நிலையில் தான் இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல ஜெர்மானிய உத்திகளும் பாதுகாவல் தொழில்நுட்பமும் சீரடைந்தன. தேடு விளக்குகள், இரவு நேர சண்டை வானூர்திகள், ராடார் நிலையங்கள், வான் கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவை அடங்கிய காம்ஹியூபர் அரண்கோடு (Kammhuber Line) உருவாக்கப்பட்டது. ஜெர்மனி மீது தாக்குதல் நடத்த வரும் பிரிட்டானிய குண்டுவீசிகளை கண்காணிப்பு நிலையங்கள் அடையாளம் கண்டு லுஃப்ட்வாஃபேவின் சண்டை வானூர்திப் பிரிவுகளுக்கு செய்தி சொல்லும், அவை குண்டுவீசிகளை தாக்கி அழிக்கும். இதுவே இக்காலகட்டத்தில் ஜெமானி கையாண்ட வான்பாதுகாப்பு முறைமை. இந்த பாதுகாப்பு முறையின் அறிமுகத்தாலும், பிரிட்டானிய வான்படையின் தொழில் நுட்பப் பற்றாக்குறையாலும், 1940-41ம் ஆண்டு பிரிட்டானிய வான்படைத் தாக்குதல் தோல்வியடைந்தது. ஜூலை-டிசம்பர் 1940ல் 170 குண்டுவீசிகளையும், 1941ல் 421 குண்டுவீசிகளையும் பிரிட்டானிய வான்படை இழந்தது. ஆனால் ஜெர்மானிய குடிமக்களின் மன உறுதியைக் குலைக்க முடியவில்லை.

அமெரிக்க வான்படையின் வரவு (1942)

[தொகு]
குண்டுவீசும் அமெரிக்க பி-17 குண்டுவீசிகள்

டிசம்பர் 1941ல் அமெரிக்க நேரடியாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அமெரிக்க வான்படையின் 8வது மற்றும் 15வது வான்படைப் பிரிவுகள் ஐரோப்பியக் களத்தில் பங்கேற்பதற்காக பிரிட்டனுக்கு அனுப்பட்டன. பி-17 மற்றும் பி-27 ரக குண்டுவீசி விமானங்களைக் கொண்ட இப்பிரிவுகள் ஜெர்மனி மீது பகல் நேர குண்டு வீச்சுகளை மேற்கொண்டன. ஜெர்மானிய போர் முயற்சியை முடக்குவது எப்படி என்பதில் அமெரிக்க உத்தியாளர்களுக்கும் பிரிட்டானிய உத்தியாளர்களுக்கு அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. பிரிட்டானியர்கள் ஜெர்மானிய மக்களின் மன உறுதியைக் குலைக்க வேண்டுமென்று விரும்பினர். அமெரிக்கர்களோ ஜெர்மனியின் தொழிற்சாலைகளை அழித்து போக்குவரத்து கட்டமைப்பைக் குலைப்பதன் மூலம் ஜெர்மானிய போர் எந்திரத்தை முடக்கலாம் என கருதினர். எனவே எரிபொருள், எந்திர உதிரிபாகங்கள், செயற்கை ரப்பர் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில் மையங்கள் அமெரிக்க வான்படையின் முக்கிய இலக்காயின.

1942ல் லுஃப்ட்வாஃபேவின் சக்தி வாய்ந்த சண்டை வானூர்திப் பிரிவுகள் கிழக்குப் போர்முனையில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மானிய வான்பகுதியில் அமெரிக்க மற்றும் பிரிட்டானிய வான்படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதல்களை எதிர்க்க போதுமான பலம் அதனிடம் இல்லை. எனினும் இந்நிலையை நேச நாட்டு வான்படைகளால் சரிவர பயன்படுத்த இயலவில்லை. புதிதாக போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படையின் அனுபவமின்மை, குண்டுவீசிகளுக்குத் துணையாக நெடுந்தூரம் செல்லக்கூடிய சண்டை வானூர்திகள் தேவையில்லை என அவர்கள் கருதியமை, பி-17 ரக குண்டுவீசிகளின் பலவீனம் போன்றவற்றால் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு வெற்றிகிட்டவில்லை. எனினும் வான்போரில் அமெரிக்காவின் நுழைவு லுஃப்ட்வாஃபேவுக்கு பெரிடராக அமைந்தது. அதன் பல தளபதிகளுக்கு அமெரிக்க வான்படையின் போர்திறன் மீது மதிப்பு இல்லையெனினும், சிலர் மட்டும் நிகழவிருக்கும் பேரபாயத்தை உணர்ந்திருந்தனர். அமெரிக்கர்களின் தொழில் வன்மையினையும் பெரு உற்பத்தித் திறனையும் சமாளிக்க ஜெர்மனியும் புதிய ரக வானூர்திகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினர். ஆனால் அவர்களது எச்சரிக்கையை இட்லரும் கோரிங்கும் கண்டுகொள்ளவில்லை.

பகலில் ஜெர்மானிய வெற்றிகள் (1942-43)

[தொகு]
லுஃப்ட்வாவேவின் FW 190A ரக சண்டை வானூர்தியில் குண்டுகள் பொருத்தப்படுகின்றன

அமெரிக்க வான்படை ஜெர்மனிக்கு எதிரான முயற்சிகளை மெதுவாகத் தொடங்கின. 1942 முழுவதும் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் மீது சிறு சிறு தாக்குதல்களை மட்டும் நிகழ்த்தின. ஜெர்மனி மீதான் முதல் அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதல் ஜனவரி 27, 1943ல் நிகழ்ந்தது. இத்தாக்குதல்களை எதிர்க்க லுஃப்ட்வாபேவிடம் குறைந்த அளவு சண்டை வானூர்திகளே இருந்தன. வான்படை தளபதிகளின் மெத்தனம், இருமுனைப் போரினால் ஏற்பட்ட் உற்பத்தி நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், புதிய ரக வானூர்திகளின் உருவாக்கமும் தடைப்பட்டிருந்தது. அமெரிக்கர்கள் மெதுவாக புதிய ரக வானூர்திகளை உருவாக்கி தாக்குதல்களில் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், லுஃப்ட்வாஃபே தனது பழைய ரக வானூர்திகளைக் கொண்டே அவர்களை எதிர்கொண்டது.

ஆனால் அனுபவம் வாய்ந்த லுஃப்ட்வாஃபே விமானிகளின் சண்டைத் திறனும், வான் உத்திகளும் அமெரிக்கத் தாக்குதல்களைச் சமாளிக்கப் போதுமானதாக இருந்தன. மேலும் அமெரிக்க வான்படை தனது தாக்குதல்களை பகல் நேர வெளிச்சத்தில் மேற்கொண்டது லுஃப்ட்வாஃபேவிற்கு சாதகமாக அமைந்தது. ஒவ்வொரு குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபடும் அமெரிக்க குண்டுவீசிகளில் கணிசமான சதவிகிதம் தாக்குதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்டன அல்லது சேதமடைந்தன. ஜெர்மானிய சண்டை வானூர்திகள் மட்டுமல்லாது (தரையிலுள்ள) விமான எதிர்ப்பு பீரங்கிகளும் பல அமெரிக்க குண்டுவீசிகளை சுட்டு வீழ்த்தின. 1943ல் அமெரிக்கர்களுடனான பல வான்போர்களில் லுஃப்ட்வாவே வெற்றி பெற்றது. பகல் நேரத்தில் ஜெர்மானிய வான்பகுதியில் அது தெளிவான வான் ஆதிக்கம் பெற்றிருந்தது. ஆனால் இவ்வெற்றி எளிதில் கிட்டவில்லை. அமெரிக்க வானூர்திகளைச் சுட்டு வீழ்த்த விமான எதிர்ப்பு பீரங்கிகளும் அவற்றுக்குத் தேவையான குண்டுகளும் பெரும் அளவில் தேவைப்பட்டன. இதனால் பிற தளவாடங்களுக்கான உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் சண்டை வானூர்திகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை புதிய வானூர்திகளின் உற்பத்தியால் ஈடு செய்ய முடியவில்லை. எண்ணிக்கைப் போக்கில், லுஃப்ட்வாவேவின் பலம் குறைந்தது வந்தது.

பிரிட்டானிய வெற்றிகள் (1942-43)

[தொகு]
பிரிட்டானிய குண்டுவீச்சில் சேதமடைந்த கோல்ன் நகரம் (1942)

பகலில் அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் பிரிட்டானிய வான்படை இரவு நேரத்தின் தனது ”பகுதி குண்டுவீச்சு”த் (Area bombing) தாக்குதலை மேற்கொண்டது. இவ்வகைத் தாக்குதலில், ஒரு குறிப்பிட்ட இலக்கினை அழிப்பதற்கு பதில், நிறைய இலக்குகள் உள்ள ஒரு பகுதி முழுவதையும் அழிக்க குண்டுவீச்சு நிகழ்த்தப்பட்டது. (ஒரு தொழிற்சாலையை மட்டும் அழிக்க முயலாமல், தொழிற்சாலைகள் நிறைந்த ஒர�� பகுதியில் சராமாரியாக குண்டுகளை வீசுவது. இதனால் ஏதேனும் ஒரு இலக்கு அழிக்கப்படுமென்பது திட்டம்). இவ்வகைத் தாக்குதல்கள் பொதுமக்கள் வாழுமிடங்கள், இராணுவத் தளங்கள், தொழிற்சாலைகள் என வேறுபடுத்திப் பாராமல் ஒரு குறிப்பிட்ட ஊர் அல்லது இடத்தை முழுவதும் அழிக்க முயன்றதால், ஜெர்மானியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் இவற்றில் கொல்லப்பட்டனர்.

ஹாம்பர்க் மீதான பகுதி குண்டுவீச்சு

ஜெர்மனியின் தொழில்மையமான ரூர் பகுதி மீது இவ்வாறு ஐந்து மாதங்கள் இடைவிடாது தாக்குதல் நடத்தப்பட்டது. (ரூர் சண்டை) இப்பகுதியில் ஜெர்மானியப் போர் முயற்சிக்கு இன்றியமையாத பல தொழிற்சாலைகள் இங்கு அமைந்திருந்தன. இடைவிடாத குண்டுவீச்சால் தொழிற்சாலைகள் மட்டுமின்றி தொழிலாளர்கள் வாழுமிடங்கள், போக்குவரத்து வசதிகள் போன்றவையும் சேதமடைந்தன. இதனால் தாதுப் பொருட்கள், உதிரி பாகங்கள், தளவாடங்கள், ஆயுதங்கள் என அனைத்து வகை தொழில் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இத்தாக்குதல்களிலிருந்து தொழில் மையங்களைப் பாதுகாக்க பிற களங்களில் பயன்பட்டிருக்கக் கூடிய படைவளங்களை ஜெர்மானியர்கள் இங்கு பயன்படுத்த வேண்டியதாயிற்று. இந்த குண்டு வீச்சுகளில் பிரிட்டானியத் தரப்புக்கும் பேரிழப்பு ஏற்பட்டது. இத்தாக்குதல்களின் போது வெற்றியடைய இரு தரப்பும் புதிய தொழில்நுட்பங்களையும் போர் உத்திகளையும் அறிமுகப்படுத்தின. இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டானிய குண்டுவீசிகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. லுஃப்ட்வாஃபேவின் சண்டை வானூர்திகளும் நூற்றுக்கணக்கில் நாசமாகின. ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த “பகுதி குண்டுவீச்சு” ஜெர்மானிய மக்களின் மன உறுதியைக் குலைத்து, உள்நாட்டுப் போரைத் தூண்டுவதற்காகவும், உற்பத்தித் திறனைக் குறைப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது முழுவதும் வெற்றி பெற வில்லை. ஜெர்மானிய போர் உற்பத்தி வெகுவாகக் குறைந்து, மக்களிடையே பயம் ஏற்பட்டாலும் அதனால் அவர்கள் தங்கள் ஆட்சியாளர்களை எதிர்க்க முயலவில்லை. இன்று வரை இப்படிப்பட்ட கண்மூடித்தனமான குண்டுவீச்சு தேவையான செயலா என்ற சர்ச்சை நீடிக்கிறது.

போரின் போக்கில் மாற்றம் (1944)

[தொகு]
மாரியன்பர்க் நகர் மீது அமெரிக்க 8வது வான்படையின் குண்டுவீச்சு

1944ல் அமெரிக்க குண்டுவீசிகளின் தாக்கெல்லை அதிகரிக்கத் தொடங்கியது. ஜெர்மனியின் உட்பகுதியில் பல புதிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனை எதிர்கொள்ள் லுஃப்ட்வாவேவின் சண்டை வானூர்திப் பிரிவு புனரமைக்கப்பட்டது. லுஃப்ட்வாவேவில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்க வான்படையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1942-43ல் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் ஜெனரல் கார்ல் ஸ்பாட்ஸ் ஐரோப்பிய களத்தின் அமெரிக்க வான்படை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த வான்படைப் பிரிவுகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. பகல் வெளிச்சத்தில் வான் ஆதிக்கம் பெற வேண்டுமெனில் லுஃப்ட்வாஃவேவின் சண்டை வானூர்திகளை நாய்ச்சண்டைகளில் அழிக்க வேண்டுமென்று ஸ்பாட்ஸ் முடிவு செய்தார். இதற்காக ஜெனரல் ஜேம்ஸ் டூலிட்டிலின் தலைமையிலான அமெரிக்க 8வது வான்படை ஆர்குயுமெண்ட் நடவடிக்கை என்ற தாக்குதலைத் தொடங்கியது. இதில் பிரிட்டானிய வான்படையும் கலந்து கொண்டது. ஒரே இலக்குகளைப் பகலில் அமெரிக்க குண்டுவீசிகளும் இரவில் பிரிட்டானிய குண்டுவீசிகளும் தாக்கின. எதிர்க்க அனுப்பபட்டும் லுஃப்ட்வாஃபே சண்டை வானூர்திகளை அழிக்க நேச நாட்டு வானூர்திகள் முயன்றன. பெப்ரவரி 20-24, 1944ல் நிகழந்த இச்சண்டையில் (பெரிய வாரம் - big week - என்பது இத்தாக்குதலின் மற்றொரு பெயர்) இரு தரப்பினருக்கும் பேரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் அரைப்பழிவுச் சண்டையில் ஏற்படும் இழப்புகளை நேச நாடுகளால் எளிதில் ஈடு செய்ய முடிந்ததால், ஜெர்மனியின் வான் பகுதியில் இதன் பின்னர் வான் ஆதிக்க நிலை அமெரிக்க வான்படைக்கு மாறியது.

பி-51 மஸ்டாங்க்

இவ்வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் பி-51 மஸ்டாங்க் ரக தொலைதூர வானூர்தியின் அறிமுகம. இதன் தாக்கெல்லையினையும் தாக்கு வன்மையினையும் எதிர்க்க லுஃப்டவாஃவேவிடம் தகுந்த வானூர்திகள் இல்லை. மார்ச்-ஏப்ரல் 1944ல் போர் மேலும் தீவிரமடைந்து லுஃப்ட்வாஃபே கடுமையான நெருக்கடிக்கு உள்ளானது . 1944ன் முதல் நாலு மாதங்களில் 1000 லுஃப்ட்வாஃபே விமானிகள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களுக்குப் பதிலாக புதிய விமானிகளுக்கு அதே அளவு தகுந்த பயிற்சி கொடுத்து தயார் செய்வது இயலாது போனது. பயிற்சியற்ற புதிய விமானிகள் இயக்கிய வானூர்திகள் இன்னும் அதிக அளவில் சுட்டு வீழ்த்தபப்ட்டன. இது ஒரு தீசுழற்சி (vicious cycle) ஆனது - இறக்கும் விமானிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, புதிய விமானிகளின் பயிற்சி காலம் குறைக்கப்படலானது. பயிற்சி குறையக் குறைய அவர்களது திறனின்மையால் அவர்கள் கொல்லப்படும் விகிதம் அதிகரித்தது. ஜனவரி-மே 1944 காலகட்டத்தில் லுஃப்ட்வாஃபே விமானி இழப்பு விகிதம் 99 சதவிகிதமாக இருந்தது. மே 1944ல் மட்டும் லுஃப்ட்வாவே சண்டை வானூர்திப் பிரிவில் 25% வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 1944ன் பிற்பகுதியில் சண்டை வானூர்திப் பிரிவின் தாக்குதிறன் தேய்ந்து, அமெரிக்க குண்டுவீசுகளை அழிப்பதில் விமான எதிர்ப்பு பீரங்கிகளுக்கு அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டது.

குண்டுவீசப்பட்ட ருமேனிய எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிகின்றன

பகலில் அமெரிக்கர்களிடம் வான் ஆதிக்கத்தை இழந்து தோற்றுக் கொண்டிருந்த அதே வேளை இரவு நேர வான்சண்டைகளிலும் லுஃப்ட்வாஃபே பிரிட்டானிய வான்படையுடன் ஈடுகொடுத்து மோதிக் கொண்டிருந்தது. நவம்பர் 1943 வரை பகுதி குண்டுவீச்சினை தொழில் மையங்களில் மேற்கொண்டு வந்த பிரிட்டானிய வான்படை அம்மாதம் ஜெர்மானிய நகரங்களைத் தாக்கத் தொடங்கியது. பெர்லின் முதலான ஜெர்மானியப் பெருநகரங்கள் மீண்டும் மீண்டும் நூற்றுக்கணக்கான குண்டுவீசிகளால் தாக்கப்பட்டன. இத்தகைய பெரும் குண்டுவீச்சுகளால் ஜெர்மனியின் போர் முயற்சியின் முதுகெலும்பை முறித்து விடலாம் என பிரிட்டானிய குண்டுவீசிப் பிரிவின் தளபதி ஆர்த்தர் ஹாரிஸ் கருதினார். ஆறு மாதங்கள் தொடர்ந்து நடந்த இந்த குண்டுவீச்சு அதன் இலக்குகளைப் பூர்த்தி செய்யவில்லை. இரு தரப்புகளும் பேரிழப்புகள் ஏற்பட்டாலும் ஜெர்மனி இத்தாக்குதல்களை சமாளித்து விட்டது. அடுத்த கட்டமாக மே-நவம்பர் 1944ல் நேச நாட்டு வான்படைகள் ஜெர்மனியின் எரிபொருள் கட்டமைப்பைக் குறி வைத்தன. எண்ணெய்க் கிணறுகள், சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள், செயற்கை எண்ணெய்த் தொழிற்சாலைகள் மற்றும் எண்ணெய்க் குழாய்கள் ஆகியவை இடைவிடாது தாக்கப்பட்டன. ஜெர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பாவிலிருந்த இலக்குகள் மட்டுமல்லாது, யுகோஸ்லாவியா, ருமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த இலக்குகளும் தாக்கப்பட்டன. இத்தாக்குதல் பெரும் வெற்றியடைந்தது. ஜெர்மனியின் எண்ணெய்க் கட்டமைப்பு சேதமடைந்து அந்நாட்டுப் படைகளுக்கு கடும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

வான்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது நேச நாட்டுப் படைகள் ஜெர்மனி ஆக்கிரமிப்பு ஐரோப்பா மீது ஜூன் 6, 1944ல் கடல்வழியாகப் படையெடுத்தன. பிரான்சில் தொடங்கிய இப்படையெடுப்பினால் ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பல மேற்கு ஐரோப்பியப் பகுதிகள் கைமாறின. இது ஜெர்மானிய வான்பாதுகாப்பு காம்ஹப்பர் கோட்டின் இயக்கத்தை வெகுவாகப் பாதித்தது. மேற்குப் போர்முனையில் நேச நாட்டுத் தரைப்படைகளின் முன்னேற்றம் அதிகரிக்க அதிகரிக்க, காம்ஹப்பர் கோடும் மெல்ல அழிந்தது. 1944ன் பிற்பகுதியில் நேச நாட்டு குண்டுவீசிகளின் இலக்கு ஜெர்மானியப் போக்குவரத்து கட்டமைப்புக்கு மாறியது. ரயில் நிலையங்கள், பல சாலைகள் சந்திக்கும் நகரங்கள், உள்நாட்டு நீர்நிலைகள் ஆகியவை தாக்கப்பட்டன. இவ்வாறாக 1944ல் நேச நாட்டு வான்படைத் தாக்குதல்கள் ஜெர்மனியைத் தோல்வியின் விளிம்புக்கு கொண்டுவந்தன.

லுஃப்ட்வாஃபேவின் அழிவு (1945)

[தொகு]
டிரெசுடன் நகரின் இடிபாடுகள்

1945ன் ஆரம்பத்தில் நேச நாட்டு தரைப்படைகள் ஜெர்மனியின் எல்லை வரை முன்னேறியிருந்தன. ஜெர்மனி ஆக்கிரமிப்புப் பகுதியின் எல்லை சுருங்கியதால், எல்லைப் போர்களத்தின் மீதான வான்சண்டைகளுக்கும் நாட்டின் மீது நடக்கும் குண்டுவீச்சினைத் தடுக்கும் வான்சண்டைகளுக்கு வெறுபாடு இல்லாது போனது. மேற்குப் போர்முனையில் வெற்றிபெற இறுதிகட்ட முயற்சியாக பல்ஜ் தாக்குதலை நிகழ்த்த இட்லர் உத்தரவிட்டார். இத்தாக்குதலுக்கு உதவி புரிய லுஃப்ட்வாஃபே ஜனவரி 1, 1945ல் போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது. எஞ்சியிருந்த சண்டை வானூர்திகளில் பெரும் பகுதியை ஒன்று திரட்டி மேற்குப் போர்முனையில் வான் ஆதிக்கத்தை அடைய முயன்றது. ஆனால் இம்முயற்சி தோற்றதுடன் அதில் பங்கெடுத்த 300 வானூர்திகள் நாசமாகின. இப்பெரும் இழப்பினால் லுஃப்ட்வாஃபேவின் தாக்கு திறன் அறவே அழிந்து விட்டது. இதன் பின்னால் அதனால் எந்த பெரிய தாக்குதலையும் மேற்கொள்ள முடியவில்லை.

பெப்ரவரி 1945ல் நேச நாட்டுப் படைகள் ஜெர்மனி மீது படையெடுத்தன. ரைன் பகுதியில் இருந்த பல லுஃப்ட்வாஃபே தளங்களும் தொழிற்சாலைகளும் அவற்றால் கைப்பற்றப்பட்டன. இந்நேரத்தில் எம்.ஈ. 262 என்ற புதிய வலிமை வாய்ந்த சண்டை வானூர்தியினை லுஃப்ட்வாவே அறிமுகப்படுத்தினாலும் போரின் போக்கினை மாற்ற இயலவில்லை. லுஃப்ட்வாஃவே வானூர்திகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போரின் இறுதி நாட்களில் தனிப்பட்ட படைப்பிரிவுகள் மட்டுமே ஆங்காங்கே செயல்பட்டன. நேச நாட்டு வான்படைகள் ஜெர்மானிய நகரங்கள் மீது தொடர்ந்து குண்டுவீசித் தாக்கி வந்தன. பெப்ரவரி மாதம் டிரெசுடன் நகர் மீதான குண்டுவீச்சில் சுமார் 25,000 ஜெர்மானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் இறுதி வாரத்தில் தான் இந்த குண்டுவீச்சு நிறுத்தப்பட்டது. மே 7ம் தேதி ஜெர்மனி சரணடைந்ததால் ரைக்கின் பாதுக்காப்புக்கான வான்போரும் முடிவுக்கு வந்தது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. The scope of the Defence of the Reich campaign grew over time. By July 1944, it included: ஜெர்மனி, East புருசியா, ஆஸ்திரியா, செக்கோசிலோவாக்கியா, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், central eastern, and north eastern பிரான்சு, போலந்து, அங்கேரி and லித்துவேனியா. Boog 2001, pp. 216-217. (German language version)
  2. Caldwell & Muller 2007, p. 9.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Beaumont 1987, p. 13.
  4. Boog 2001, p. 180 and Hooton 1997, p. 284. Figures are for 1943 and 1944 only. Boog gives the loss of "8,286 defensive aircraft" in 1943 and Hooton gives 3,706 day fighters and 664 night fighters for 1944. Added are 2,634 day and 142 night fighters lost in "Western Sorties" in 1944.
  5. MacIsaac 1976, p. 9.
  6. Frankland and Webster (Vol 3) 2006, p. 276.
  7. Frankland and Webster (Vol 3) 2006, p. 268. Figures for June to December 1944.
  8. Frankland and Webster (Vol 2) 1961, p. 253. Figure given in footnote: Period October 1943 to July 1944.
  9. 9.0 9.1 9.2 Cox 1998, p. 115

சான்றுகள்

[தொகு]