யானைத் திருவிழா
யானைத் திருவிழா (Elephant Festival) என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள செய்ப்பூர் நகரில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். பொதுவாக மார்கழி மாதத்தில் ஹோலி பண்டிகை நாளில் இது நடைபெறும். திருவிழாவில் யானை போலோ விளையாட்டும், யானை நடனமும் இடம்பெறும். யானைத் திருவிழாவானது யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், நாட்டுப்புற நடனக் கலைஞர்களின் அழகிய ஊர்வலத்துடன் தொடங்குகிறது. உரிமையாளர்கள் பெருமையுடன் தங்கள் யானைகளை துடிப்பான வண்ணங்கள், துணியாலான சேணம், கனமான நகைகள் ஆகியவற்றுடன் அழைத்து வருவார்கள். பெண் யானைகள் கணுக்காலில் சங்கிலி அணிந்து நடக்கும்போது சத்தமிடும். யானைகளின் மேல் அமர்ந்திருக்கும் மக்கள் வண்ணப் பொடிகளைத் தூவுவார்கள். மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைக்கு விருது வழங்கப்படுகிறது. யானை போலோ, யானைப் பந்தயம், யானைகளுக்கும் 19 ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் இடையேயான கயிறு இழுத்தல் விளையாட்டு ஆகியவை திருவிழாவின் சிறப்பு நிகழ்வுகளாகும். யானைகளின் காதுகள் பட்டுத் துணிகளாலும், தோடுகளாலும் மேலும் அழகுபடுத்தப்படும். யானைப்பாகன்கள், யானைகளின் நெற்றியை தலை தகடுகளால் அலங்கரிப்பதுடன், தங்கம், வெள்ளி வளையல்களாலும், மோதிரங்களாலும் தங்கள் யானைகளின் தந்தங்களை அலங்கரிக்கின்றனர். திருவிழாவின் போது நடைபெறும் மற்ற நிகழ்வுகளில் போலோ போட்டியும், கயிறு இழுக்கும் போட்டியும் ஆகியவை அடங்கும், இதில் பத்து பேர் கொண்ட குழுவிற்கு எதிராக போட்டியிட வலிமையான யானை தேர்வு செய்யப்படுகிறது.
இந்த திருவிழா முதன்மையாக யானைகளை அடிப்படையாகக் கொண்டாலும், ஒட்டகம், குதிரைகள் போன்ற பிற விலங்குகளும் பங்கேற்கின்றன.
வரலாறு
[தொகு]யானை திருவிழா செய்ப்பூர் நகரத்தில் மிகவும் பிரபலமான மற்றும் கொண்டாடப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த விழா பல்வேறு வெளிநாட்டினரை பண்டிகை நிகழ்வுக்கு ஈர்க்க முடிந்தது. யானைகள் ராஜஸ்தானின் மரபுகளின்படி அரச குடும்பத்தை அடையாளப்படுத்துகின்றன. யானை பௌத்தத்துடனும், சைன மதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. உண்மையில், இந்திய மரபுகளில் யானைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்திய புராணங்களின்படி, அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். நவரத்தினங்கள் என்றும் அழைக்கப்படும் ஒன்பது நகைகள் கடலில் இருந்து தோன்றியது. மீண்டும் தோன்றிய ஒன்பது நகைகளில் ஒன்று யானை. அப்போதிருந்து, யானை ஒரு விலையுயர்ந்த விலங்காக கருதப்படுகிறது.
ராஜஸ்தானின் ஆம்பர் அரண்மனைக்கு அந்த கால மன்னர்களும் இளவரசர்களும் யானையில் சென்றதால், ராஜஸ்தான் மாநிலம் பல அரச பிரமுகர்களுக்கு பிரபலமான இடமாக இருந்தது. மன்னராட்சியின் போது, அரச விருந்தினர்களை மகிழ்விக்க வலிமையான யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் நிகழ்வுகளை இந்தியாவின் அரச குடும்பம் நடத்தும். இப்போதெல்லாம், ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் சுற்றுலாக் குழுவால் சௌகான் மைதானத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவின் புகழ் அதிகரித்து வருவதால் அந்த இடம் ஜெய்ப்பூர் போலோ குழும மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
சர்ச்சை
[தொகு]இந்திய விலங்குகள் நல வாரியத்தின் எதிர்ப்பால், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, 2012, 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் யானைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. யானைகள் மீது ரசாயனம் கலந்த வண்ணம் கொட்டப்படுவதால், யானைகள் பாதிக்கப்படுமோ என, விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவை நடத்தும் ராஜஸ்தான் சுற்றுலா குழு, யானைகளை விலங்குகள் நல வாரியத்திடம் பதிவு செய்து உரிய ஆவணங்களை வழங்க தவறியது. இதன் விளைவாக, நிகழ்ச்சியை ஹோலி பண்டிகை என்று மறுபெயரிட ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (PETA) நடத்திய போராட்டங்களை அடுத்து சுற்றுலாத் துறையின் முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.[1][2][3][4][5][6][7][8][9]
சான்றுகள்
[தொகு]- ↑ V. Srinivasan, Amrutur (8 July 2011). Hinduism For Dummies. John Wiley & Sons. pp. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470878583.
- ↑ "Elephant Festival". jaipur.org.uk. பார்க்கப்பட்ட நாள் August 27, 2012.
- ↑ "Elephant Festival". பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.
- ↑ "Elephant Festival 2014". பார்க்கப்பட்ட நாள் 28 March 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Elephant Festival of Jaipur". பார்க்கப்பட்ட நாள் 28 March 2014.
- ↑ "Fairs & Festivals in India - Elephant Festival". Archived from the original on 14 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Elephant Festival Cancelled". Times of India. March 15, 2014. http://timesofindia.indiatimes.com/city/jaipur/Elephant-festival-cancelled/articleshow/32039002.cms. பார்த்த நாள்: 29 March 2014.
- ↑ "Rajasthan Cancels Elephant Festival". The Hindu. March 27, 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/rajasthan-cancels-elephant-festival/article4552933.ece. பார்த்த நாள்: 29 March 2014.
- ↑ "Charles Freger: Painted Elephants". Sgustok Magazine. September 2, 2015.