உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார். இந்நூல் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டிருந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப் பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். [1]

  • தொல்காப்பியர் அறிந்திருந்த ஐந்திரம் இந்திரன் என்பவனால் செய்யப்பட்ட தமிழ் நூல். இதற்குச் சான்றைத் திருக்குறளில் காணலாம். தொல்காப்பியர் நரம்பின் மறை பற்றிக் குறிப்பிடுகிறார். பண், திறம் என்பன இசையின் கூறுகள். ஒருவேளை இந்த ஐந்திரம் என்பதன் வடிவம் 'ஐந்திறம்' என இருந்திருக்குமாயின் அது இந்தப் பஞ்சமரபு நூலின் முந்துநூல் எனக் கருதலாம்.

நூலின் அமைப்பு

[தொகு]
  1. இசை மரபு
  2. வாக்கிய மரபு
  3. தாள மரபு
  4. நிருத்த மரபு
  5. அவிநய மரபு என ஐந்து மரபுகளைக் கூறுவதால், இது பஞ்ச மரபு எனப் பெயர் பெற்றது.

நூற்சிறப்புகள்

[தொகு]

மரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது.

தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார ��ூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன.

பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன. இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது.

சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ. வே. சாமிநாதையர் பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.[1] [2]

சிலம்பில் இடம்பெறும பஞ்சமரபு வெண்பாக்கள்

[தொகு]

சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர் பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது.

சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.

1. ஓங்கிய மூங்கில் ......(3 : 26 , 17 : .20)

2. சொல்லுமதிற்களவு...(3 : 26, 27 : 20)

3. இருவிரல்கள் நீக்கி....(3 : 26, 17 : 20)

4. வளைவாயரு...........(3 : 26, 17 : 20)

என்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.[1]

வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்

[தொகு]

யாழ்

[தொகு]
  • யாழ் நான்கு வகைப்படும்.
    • பேரியாழ்
    • மகரயாழ்
    • சகோடயாழ்
    • செங்கோட்டுயாழ் என்பன.
  • நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை
    • பேரியாழ் 21 நரம்புகள்
    • மகரயாழ் 19 நரம்புகள்
    • சகோடயாழ் 14 நரம்புகள்
    • செங்கோட்டியாழ் 7 நரம்புகள்

துளைக்கருவி

[தொகு]
  • வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
    • மூங்கில்
    • சந்தனம்
    • செங்காலி
    • கருங்காலி
    • உலோகம் (வெண்கலம்)
  • துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)
    • குழலின் முழுநீளம் 4+ 5=20 விரலம்.
    • குழல்வாயின் சுற்றளவு 4 1/2 விரலம்.
    • துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்

முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

  • துளைக்கருவியின் பகுப்பு

தும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)

  • ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.
    • இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
    • இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
    • இட மோதிர விரல் குரலுக்கு (ச)
    • வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)
    • வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)
    • வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)

வேறு

[தொகு]
  • ஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவில் செய்தி உள்ளது.
  • பத்து நாடிகள்
  • பூதங்களின் பரிணாமம்.
  • பண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்
  • பன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.
  • செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.
  • செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.
  • வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.[1]

நிறைவாக...

[தொகு]

சிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.[1]

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்". பார்க்கப்பட்ட நாள் 2024-11-12.
  2. "பஞ்சமரபு நூல் சிறப்பு". பார்க்கப்பட்ட நாள் 2024-11-12.

வெளி இணைப்புகள்

[தொகு]

பஞ்சமரபு (PDF வடிவிலும் உள்ளது)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சமரபு&oldid=4140564" இலிருந்து மீள்விக்கப்பட்டது