தொலைபேசி
தொலைபேசி (Telephone) என்பது நேரடியாகப் பேசமுடியாத தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு தொலைதொடர்புக் கருவி. தொலைபேசி குரலைத் திறம்பட செலுத்தவல்ல வடத்திலோ பிற ஊடகத்திலோ, நெடுந்தொலைவுக்கு அனுப்பவல்ல மின்னனியல் குறிகைகளாக மாற்றி, அந்த குறிகைகளை மறுமுனையில் அதே நேரத்தில் பயனர் கேட்கும்படி மீளத் தருகிறது. இதில் பேசும்போது ஒலி அலைகள் ஒரு தகட்டினை அதிரச் செய்கிறது. அந்த அதிர்வுகள் மின் குறிப்பலைகளாக மாற்றப்பட்டதும் பின்னர் இம்மின்னலைகள் மின்கம்பியின் வழியே செலுத்தப்படுகின்றன. மறுமுனையில் மீண்டும் இவை ஒலியலைகளாக மாற்றப்படுவதால், ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்க முடிகிறது.
இக்கருவியைச் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) என்பவர் வடிவமைத்து பதிவுரிமம் பெற்றார் என்று பொதுவாகக் கூறப்படினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பலநாட்டு ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து தொலைபேசி தொடர்பான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர். தொலைபேசிகள் வணிக, அரசு, தொழிலக, வீட்டு பயன்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. இது இன்று மிகப் பரவலாக வழக்கில் உள்ள பொதுப்பயன்கருவி ஆகும். இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிகைகளைச் செலுத்தும்படி தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.[1]
தொலைபேசியின் அடிப்படை உறுப்புகளாக பேசும் ஒலியை வாங்கி செலுத்தவல்ல நுண்பேசி எனும் அலைசெலுத்தியும் மறுமுனையில் பேச்சை மீளாக்கம் செய்து கேட்க ஓர் அலைவாங்கியும் அமைகின்றன. மேலும் இவற்றோடு உள்வரும் அழைப்பை அறிவிக்க ஒலியெழுப்ப ஒலிப்பியும் அழைக்கும் தொலைபேசி எண்ணை உள்ளிட, சுழல்முகப்பு அல்லது அழுந்து பொத்தான்பலகமும் உறுப்புகளாக அமையும். அனைத்து தொலைபேசிகளும் 1970 கள் வரை சுழலும் முகப்பைப் பெற்றிருந்தன. இவை இப்போது இருகுரல் பல் அலைவெண் குறிகைப் பொத்தான்களால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன.
இம்முறை முதலில் பொதுமக்களுக்கு 1963 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] இந்த அலைசெலுத்தியும் அலைவாங்கியும் கையில் எடுத்து பேசும் முண்டகத்தில் பேசும்போது வாயிலும் கையிலும் அமையுமாறு பொருத்தப்படுகின்றன. முகப்பு முண்டகத்திலோ அதை வைக்கும் அடிஏந்தியிலோ அமையலாம். அலைசெலுத்தி பேச்சு ஒலியலைகளை மின்குறிகைகளாக மாற்றி தொலைபேசி வலையமைப்பு வழியாக கேட்கும் பேசிக்கு அனுப்புகிறது. கேட்கும் பேசி இந்த மின்குறிகையை கேட்க கூடிய ஒலியலைகளாக அலைசெலுத்தியில் அல்லது ஓர் ஒலிபெருக்கிவழி மாற்றுகிறது. தொலைபேசிகள் இருவழித் தொடர்பை நிகழவிடுகின்றன. இதன் பொருள், இருபுறமும் உள்ள மக்கள் தொடர்ந்து ஒருங்கே பேசவும் கேட்கவும் செய்யலாம்.
முதலில் தொலைபேசிகள் நேரடியாக ஒருவாடிக்கையாளர் வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து மற்றொரு வாடிக்கையாளரது இருப்பிடத்துக்கு இணைக்கப்பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கு மேல் இம்முறை நடைமுறையில் அரிதாக அமைந்ததால், மையப்படுத்திய நிலைமாற்றிப் பலகைகள் வழியாக உரிய இயக்குவோரால் இணைப்பு நல்கும் முறை வழக்கிற்கு வந்தது. இது கம்பிதொடர் தொலைபேசிச் சேவைக்கு வழிவகுத்தது. இதில் ஒவ்வொரு தொலைபேசியும் அதற்கே உரிய இரு கம்பிதொடரால் மைய நிலைமாற்றிப் பலகைகளுக்கு இணைக்கப்பட்டது. ���து பிறகு முழுமையாகத் தன்னியக்கம்வாய்ந்த சேவையாக 1900 களில் உருவாகியது.
20 ஆம் நூற்றாண்டின் நடுவில் கப்பல், தானூர்தி போன்ற இயங்கும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொள்ள வானொலிவகை அலைசெலுத்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1973 இல் இருந்து தனிப்பயனருக்கான கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1970 களின் இறுதிக்குள் உலக முழுவதும் பல நகர்பேசி வலையமைப்புகள் இயங்கலாயின. 1983 இல் மேம்பட்ட நகரும் தொலைபேசி அமைப்புகள் தொடங்கப்பட்டன. இவை அலுவலகம் அல்லது வீட்டுக்கு அப்பால் பயனர்கள் இருந்தாலும் தொடர்புகொள்ள ஏற்ற செந்தரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தின. இந்த ஒப்புமை கலப்பேசி அமைப்பு பின்னர் நல்ல பாதுகாப்பும் உயர் இயக்கத் திறமையும் மலிவு விலையில் வட்டாரம் முழுவதும் பரவிய இலக்கவியல் வலையமைப்புகளாக படிமலர்ந்தன. பல நிலைமாற்ற மையங்கள் படிநிலை அமைவில் இணைந்த பொது நிலைமாற்றல் தொலைபேசி அமைப்புகள், உலக முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் தொடர்பு கொள்ளும்படிஅனைவருக்கும் இணைப்புகளை வழங்குகின்றன. E.164 எனும் செந்தர அனைத்துலக எண் அமைப்புவழி, ஒவ்வொரு தொலைபேசியும் ஒரு அடையாளத் தொலைபேசி எண்ணால் வலையமைப்பில் உள்ள மற்றொரு தொலைபேசியுடன் தொடர்புகொள்ள முடிகிறது.
முதலில் பேசுவதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டாலும், பல தொழில்நுட்பங்களின் ஒருங்கு குவிதலால் நிகழ்காலக் கலப்பேசிகள் பல கூடுதல் பயன்களைத் தரவல்லனவாக வடிவமைக்கப்படலாயின. இன்று கலப்பேசிகள் பேச்சுத் தகவலைப் பதிகின்றன; பாடப் பகுதிகளை அனுப்பிடவும் பெறவும் செய்கின்றன; ஒளிப்படங்களைப் பிடித்து காட்சிப்படுத்துகின்றன; காணொலிக் காட்சிகளைப் படம்பிடிக்கின்றன; இசை மீட்டுகின்றன; காட்சி விளையாட்டுகளை விளையாட பயன்படுகின்றன; இணையத்தில் உலாவ விடுகின்றன; ஊர்தி ஒட்ட படிபடியாக வழியைக் காட்டுகின்றன. மெய்நிகர் உலகில் உலவ விடுகின்றன. 1999 அளவில் இருந்து கலப்பேசி துடியான பல செயல்பாடுகளைச்
அடிப்படை நெறிமுறைகள்
[தொகு]மரபான நிலத்தொடர் தொலைபேசி அமைப்பு, அதாவது பழைய எளிய தொலைபேசிச் சேவை,(POTS), வழக்கமாக, முறுக்கிய இரட்டைக் காப்பிட்ட கம்பித் தொடரிலேயே ( விளக்கப்படத்தில் C) கட்டுபாட்டுக் குறிகைகளையும் குரல்சார்ந்த குறிகைகளையும் அனுப்பிப் பெறுகிறது. இந்தத் தொடர் தொலைபேசித் தொடர் எனப்படுகிறது. இதில் அமைந்த கட்டுபாட்டு, குறிகை பரிமாற்ற அமைப்பு மூன்று உறுப்புகளைக் கொண்டுள்ளது அவை ஒலியெழுப்பி, இணைப்பு நிலைமாற்றி, முகப்புத் தட்டு என்பனவாகும். ஒலியெழுப்பி அல்லது மணியடிப்பி அல்லது ஒளிச்சுடர் அமைப்பு (A7), பயனருக்கு வரும் அழைப்புகளை உணர்த்துகின்றன. இணைப்பு நிலைமாற்றி மைய அலுவலகத்துக்கு பயனர் அழைப்பைக் கேட்கவோ அல்லது அழைக்கவோ தன் கைபேசியை எடுத்துவிட்டதைக் குறிகையால் அறிவிக்கின்றன. முகப்புத் தட்டு அழைப்பு தொடங்கும்போது, வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணை மைய அலுவலகத்துக்குச் செலுத்த பயன்படுகிறது. 1960 கள் வரை சுழல் முகப்புத் தட்டுகளே பயனில் இருந்தன. பின்னர் இவை இருகுரல் பல் அலைவெண் குறிகை முறையால் பதிலீடு செய்யப்பட்டன. இவற்றில் அழுந்து பொத்தான்களும் (A4) வழக்குக்கு வந்தன.
கம்பித் தொடர்த் தொலைபேசி சேவையின் பெரும்பாலான செலவு, இணைப்பகத்துக்கு வெளியிலேயே அமைகிறது. தொலைபேசிகள் உள்வரும்/வெளியேகும் பேச்சுக் குறிகைகளை ஒரே ஒற்றைக் கம்பியிணையில் மட்டுமே இருவழியிலும் செலுத்துகின்றன. முறுக்கிய இணைகம்பிகள் மின்காந்தக் குறுக்கீட்டையும் குறுக்குப் பேச்சையும் முறுக்காத இணைகம்பிகளைவிட திறம்பட தவிர்க்கின்றன. வலிமை மிகுந்த ஒலிபேசிச் செலுத்தியின் வெளியேகும் பேச்சுக் குறிகை, வலிவு குறைந்த ஒலிபெருக்கி வாங்கியின் குறிகையை மிகாமல் இருக்க, கலவைச் சுருள் (A3) பயனாகிறது. பிற உறுப்புகள் இரண்டுக்கும் இடையில் அமையும் சமனின்மையைச் சமன்செய்கின்றன. சந்திப் பெட்டி (B) மின்னலையை (B2) எதிர்கொண்டு தொடரின் நீளம் முழுவதற்கான தடையத்தை (B1) சரிசெய்து குறிகைத் திறனைப் பெருமம் ஆக்குகிறது. தொலைபேசிகள் இதேபோன்ற சரிசெய்தலை(A8) அகத் தொடரின் நீளத்துக்கும் பெற்றுள்ளன. தரையை ஒப்பிடும்போது தொடரின் மின்னழுத்தம் எதிர்மையதாக அமையும். இந்நிலை துத்தநாக்க் கரிப்பினைத் தவிர்க்கிறது. எதிர்மை மின்னழுத்தம் நேர்மின்னூட்ட பொன்ம மின்னணுக்களை கம்பியின்பால் ஈர்க்கிறது.
தொலைபேசியை தொலைபேசி வலையமைப்பில் இணைக்க நான்கு வழிமுறைகள் பயன்படுகின்றன. வழக்கமான ஓரிடத்தில் நிலையாக இருந்து இயங்கும் தொலைபேசியில் அதற்கெனவே மின்கம்பி இணைப்புகள் அமைந்திருக்கும். கம்பியில்லா தொலைபேசி மின்குறிப்பலைகளை 0,1 எனும் இரும எண்மக் ( இரும இலக்கவியல்) குறிப்பலை வடிவிலோ அல்லது ஒப்புமைக் குறிப்பலை வடிவிலோ பயன்படுத்தும். செயற்கைமதித் தொலைபேசிவழித் தொலைத் தொடர்பாடலும் . இணையத்தில் பயன்படும் குரல்வழித் தொலைபேசிகளும் அகல்பட்டை (அகன்ற அலைவரிசை) இணைய இணைப்புக்களைப் பயன்படுத்துகின்றன.
இயங்கும் வழிமுறை
[தொகு]நிலத்தொடர் தொலைபேசி, (A4) எனும் நிலைமாற்றும் இணைப்பையும் (A7 எனும் ஒலியெழுப்பி எச்சரிக்கும் அமைப்பையும்)பெற்றுள்ளது. இது பேசி இணைப்பில் உள்ளபோது பேசியின் தொடரில் இணைந்திருக்கும் நிலைமாற்றி (A4) திறந்திருக்கும். பேசி பிரிந்துள்ளபோது பிற உறுப்புகள் இணைக்கப்படுகின்றன. பிரிந்தநிலையில் இணையும் உறுப்புகளாக, ஒலிசெலுத்தியாக அமையும் நுண்பேசி A2, ஒலிவாங்கியாக செயல்படும் ஒலிபெருக்கி அல்லது கேட்பி A1, முகத்தல், வடித்தல், மிகைத்தலுக்கான சுற்றதர்கள் ஆகியவை அமைகின்றன.
ஒருவர், மற்ற ஒருவரோடு பேசக் கருதி அவரை அழைக்க, தொலைபேசியின் கைம்முண்டகத்தை எடுக்கும்போது, ஒரு நெம்பை இயக்கிட, அது (A4) எனும் இணைப்புதரும் கொக்கியை மூடுகிறது. இச்செயல் ஒலிசெலுத்தி (நுண்பேசி அல்லது பேசி), ஒலிவாங்கி (ஒலிபெருக்கி அல்லது கேட்பி), பிற பேச்சு சார்ந்த உறுப்புகளைத் தொலைபேசித் தொடரில் இணைத்து, தொலைபேசிக்கு மின் திறனைத் தருகிறது.பிரிநிலைச் சுற்றதர் 300 ஓமுக்கும் குறைவான மின் தடையே பெற்றுள்ளதால், தொலைபேசி இணைப்பகத்தில் இருந்து மின் தொடரூடாக(C) நேர்மின்னோட்டத்தைப் பெறுகிறது. இணைப்பகம் இந்த மின்னோட்டத்தைக் கண்டுபித்து, தொடரில் இலக்க ஒலிவாங்கிச் சுற்றதரை இணைக்கிறது; ஆயத்தநிலையைக் குறிப்பிட இணைப்பொலியை அனுப்புகிறது. நிகழ்கால அழுத்துகுமிழ் தொலைபேசியில், அழைப்பவர் என்குமிழ்களை அழுத்தி, அழைக்கப்படுபவரின் தொலைபேசி எண்ணைப் பதிவார். இக்குமிழ்கள் ஒரு குரலாக்கச் சுற்றதரைக் (காட்டப்படவில்லை) கட்டுபடுத்திட, அது DTMF குரல் ஒலிகளை இனைப்பகத்துக்கு அனுப்புகிறது. ஒரு சுழல்வலயத் தொலைபேசி துடிப்புவகை அழைப்பைப் பயன்படுத்துகிறது; இது மின் துடிப்புகளை அனூப்புகிறது; இந்த்த் துடிப்புகளை இணைப்பகம் எண்ணித் தொலைபேசி எண்ணைக் கணிக்கிறது ( 2010 வரையிலும் பல இணைப்பகங்கள் துடிப்பு வலய அழைப்புக் கருவியையே பயன்படுத்துகின்றன). அழைக்கப்படுபவரின் இணைப்பு கிடைத்தால், இணைப்பகம் இடைவிட்ட 75 அல்ல்து 60 வோல்ட் மாறுமின்னோட்ட அழைப்புக் குறிகையை அனுப்புகிறது. இது அழைக்கப்பட்டவரை அழைப்பு வருவதை அறிவிக்க எச்சரிக்கிறது. அழைக்கப்பட்ட்வர் தொடரிணைப்பு பயனில் இருந்தால், இணைப்பகம் அழைத்தவருக்குப் பயனில் இருப்புக் குறிகையைத் திரும்ப அனுப்புகிறது. அழைக்கப்பட்டவர் பயனில் இருந்தாலும் அழிப்பை நிலுவையில் வைத்து, இணைப்பகம் அழைக்கப்பட்டவருக்கு இடைவிட்ட கேட்புக் குரலை, உள்வரும் அழைப்பை அறிவிக்க, அனுப்புகிறது.
தொலைத்தொடர் தொழில்நுட்பரின் கைக்கருவி என்பது தொலைபேசி வலையமைப்பினை ஓர்வுசெய்ய வடிவமைக்கப்பட்ட தொலைபேசியாகும். இதை மேனிலைத் தொலைபேசித் தொடரிலோ மற்ற அகக்கட்டமைப்பு உறுப்புகளிலோ பொருத்தி ஆய்வை மேற்கொள்ளலாம் .
குறியீடுகள்
[தொகு]தொலைபேசி பழுதுபார்ப்புக்கும் பேசி சார்ந்த அச்சுத் தகவலுக்கும் பயன்படும் வரைபடக் குறியீடுகளில் ℡ (U+2121), ☎ (U+260E), ☏ (U+260F), ✆ (U+2706), and ⌕ (U+2315) ஆகியவை உள்ளடங்கும்.
பயன்பாடு
[தொகு]2009 ஆம் ஆண்டின் முடிவில், உலக அளவில் ஏறத்தாழ 6 பில்லியன் நகர்பேசிகளும் நிலத்தொடர் இணைந்த தொலைபேசிகளும் நடப்பில் இயங்குகின்றன. இவற்றில் 1.26 பில்லியன் நிலத்தொடர் இணைந்த தொலைபேசிகளும் 4.6 பில்லியன் நகர்பேசிகளும் அடங்குகின்றன.[3]
பதிப்புரிமங்கள்
[தொகு]- US 174,465 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Telegraphy (Bell's first telephone patent)—Alexander Graham Bell
- US 186,787 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Electric Telegraphy (permanent magnet receiver)—Alexander Graham Bell
- US 474,230 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Speaking Telegraph (graphite transmitter)—Thomas Edison
- US 203,016 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Speaking Telephone (carbon button transmitter)—Thomas Edison
- US 222,390 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Carbon Telephone (carbon granules transmitter)—Thomas Edison
- US 485,311—Telephone (solid back carbon transmitter)—Anthony C. White (Bell engineer) This design was used until 1925 and installed phones were used until the 1940s.
- US 3,449,750 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Duplex Radio Communication and Signalling Appartus—G. H. Sweigert
- US 3,663,762 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Cellular Mobile Communication System—Amos Edward Joel (Bell Labs)
- US 3,906,166 பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்—Radio Telephone System (DynaTAC cell phone)—Martin Cooper et al. (Motorola)
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தொலைபேசியின் வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2017.
- ↑ Dodd, Annabel Z., The Essential Guide to Telecommunications. Prentice Hall PTR, 2002, p. 183.
- ↑ Next-Generation Networks Set to Transform Communications, International Telecommunications Union website, 4 September 2007. Retrieved 5 July 2009.
மேலும் படிக்க
[தொகு]- Brooks, John (1976). Telephone: The first hundred years. HarperCollins.
- Bruce, Robert V. (1990). Bell: Alexander Graham Bell and the Conquest of Solitude. Cornell University Press.