சொர்ணாம்பிகை அகத்தீஸ்வரர்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துவரங்குறிச்சிக்கு அருகில் அமைந்துள்ள ஊர் பழையபாளையம், செவல்பட்டி, மேலூர். இவ்வூருக்கு செல்லும் வழியில் சிதிலமடைந்த இரண்டு சிவன் கோயில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒரு கோயிலில் நாயக்கர் காலத்தைச் சார்ந்த மருங்காபுரி ஜமீன் கல்வெட்டுக்கள் உள்ளன. பிறிதொரு கோயில் முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இருப்பினும் இதன் கட்டடக்கலை அமைப்பு இக்கோயிலும் பழமை வாய்ந்த கோயிலாக முன்பு விளங்கி இருத்தல் வேண்டும். இவ்வூரின் வடக்கில் (மருங்கி)க்குளம் என்ற பெயரில் விளங்கும் ஏரியின் கரையில் கல்வெட்டுச் சிறப்புகளும் கோயில் கட்டடக் கலைச் சிறப்புக்களும் வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. இது இங்கு வாழ்கின்ற மக்களால் பனையடியான் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது இக்கோயிலின் அருகில் ஊர் காணப்படவில்லை, எனினும் பாண்டியர் காலத்தில் இக்கோயிலின் அருகில் ஊர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அவையாவும் கால வெள்ளத்தால் அழிக்கப்பட்டு இன்று வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. கட்ட்டக்கலை : இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஆகிய அங்கங்களைப்பெற்று விளங்குகிறது. தனியாக அம்மன் கோயில் வடக்கில் அமைந்துள்ளது. பிற்காலப் பாண்டியர் கட்ட்டக் கலை அமைப்புகளைப் பெற்று விளங்கும் இக்கோயிலின் நுழைவாயில் தென்பகுதியில் ஒரு முன் மண்டபத்துடன் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது கிழக்கு வாயில் ஒன்று காணப்படுகிறது. எனினும் இங்கு முன்பு கல்லால் செய்யப்பட்ட சாளரம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அதனை நீக்கிவிட்டு இப்பொழுது நுழைவாயில் ஒன்றை அமைத்துள்ளனர். இதன் எதிரில் நந்தி மண்டபமும் பலி பீடமும் காணப்படுகிறது. தரையில் பெயர்க்கப்பட்ட கல் சாளரம் இப்பொழுதும் காணப்படுகிறது. இக்கோயிலின் விமானம் அதிட்டானம், சுவர், கபோதம் ஆகியவற்றைப் பெற்று விளங்குகிறது. விமானத் தளங்கள் அற்ற இக்கோயிலின் அதிட்டானம் மற்றும் சுவர் பகுதிகளில் பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இக்கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு சீரும், சிறப்பும் பெற்று விளங்கியுள்ளமையைக் கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலின் மேற்கில் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்த திருமால், கொற்றவை (துர்க்கை) முருகன், மூத்த தேவி (ஜேஸ்டா) ஆகியோர் சிற்பங்கள் காணப்படுகின்றன. மாடக்குழிகளில் தெய்வங்கள் எவையும் காணப்படவில்லை. வடக்கில் சண்டிகேஸ்வரர் சிற்றாலயமும் கிழக்கு நோக்கிய நிலையில் அம்மன் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் கோயிலும் பிற்காலப் பாண்டியர் காலத்தவையாக இருக்கக் கூடும். கருவறையில் சிவன் லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். மகாமண்டபத்தை பிற்காலப் பாண்டியர் தூண்கள் தாங்குகின்றன.
கல்வெட்டுக்கள் : இக்கோயிலில் பாண்டியப் பேரரசர்கள் விக்கிரம பாண்டியன் (1186+2) 1188 ஆம் ஆண்டு கல்வெட்டு, குலசேகர பாண்டியன் கல்வெட்டுக்கள், மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள், சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள், மாறவர்மன் முதலாம் குலசேகரன் கல்வெட்டுக்கள், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டுக்கள், சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டுக்கள் மற்றும் விஜய நகரப் பேரரசர் மல்லிகார்ஜுணதேவர் கல்வெட்டுக்கள் போன்றவை காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 800 ஆண்டுகள் பழமை மிக்க கோயிலாக இக்கோயில் விளங்கியுள்ளமை புலப்படுகிறது.
விக்கிரம பாண்டியன் கல்வெட்டில் இப்பகுதியில் சிறப்பு பெற்று ஆட்சி புரிந்த துவராபதி வேளார் என்பார் இக்கோயிலுக்கு நிலங்கள் கொடையாக அளித்துள்ளார். இந்த நிலங்கள் அலவயல், காந்தகப்பாடி நிலம், தேவகச்சிப் பெருமங்கல நிலம் என மூன்று இடங்களில் இருந்துள்ளது. இந்த நிலங்களுக்கான வரிகள் நீக்கப்பட்ட செய்தியும் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
குலசேகர பாண்டியர் காலத்தில் துவராபதி வேளார் முதலி செல்வன் அவனி நாராயண தேவரின் பெண்டுகள் (பெண்கள்) இக்கோயிலுக்கு விளக்கெரிக்க பதினைந்து ஆடுகளை கொடையாக அளிக்கின்றனர். இக்கோயில் கல்வெட்டுக்களில் அகத்தீஸ்வரர் கோயில் என குறிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த கல்வெட்டுக்களில் இக்கோயில் இருந்த பகுதி மன்னுகுறிச்சி என்றும் மருங்கூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. செயங்கொண்ட சோழபுரம் என்றும் பிறிதொரு கல்வெட்டு இவ்வூரைக் குறிப்பிடுகின்றது. மருங்கூர் அக்காலத்தில் நாட்டின் தலைமையகமாகவும் செயல்பட்டுள்ளது. எனவே இக்கோயில் உள்ள பகுதி மருங்கூர் என்ற சிறந்த ஊர்ப்பகுதியாக இருந்து பிற்காலத்தில் அழிந்துள்ளமையை இக்கல்வெட்டுக்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது. இன்றைய மருங்காபுரி ஜமீன்களின் பூர்வீக ஊராக இது விளங்கியிருக்க வேண்டும். இக்கோயிலில் பல்வேறு பூஜைகள், விழாக்கள் நடந்துள்ளன. குறிப்பாக சிவராத்திரி என்னும் பெருவிழா நடப்பதற்கு பல்வேறு கொடைகள் அளிக்கப்பட்டுள்ளமையை கல்வெட்டுக்கள் தெறிவிக்கின்றன. இக்கோயிலைச் சார்ந்த கோசாலை ஒன்றும், மடம் ஒன்றும் இருந்துள்ளமையை கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது. கோயிலின் செலவிணங்களுக்கு பல்வேறு கால கட்டங்களில் நிலங்கள் கொடை���ாக அளிக்கப்பட்டுள்ளன. திரு அகத்தீஸ்வரர் கோயில் என கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் இக்கோயில் பாண்டியர் காலத்தில் பன்னிரெண்டாம் நூற்றாண்டளவில் சீரும் சிறப்பும் பெற்று விஜய நகர காலத்திலும் அரசர்களின் ஆதரவைப் பெற்று சிறந்து விளங்கியிருந்தமையை கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது.